8. ஆஹா! மாம்பழ சீஸன் வந்தாச்சு!

எங்கள் வீடுகளில் ஒவ்வொரு. மாம்பழ சீசனிலும் கண்டிப்பாக என் அம்மா  மாம்பழ புளிசேரி செய்து விடுவாள்.
 8. ஆஹா! மாம்பழ சீஸன் வந்தாச்சு!

எங்கள் வீடுகளில் ஒவ்வொரு. மாம்பழ சீசனிலும் கண்டிப்பாக என் அம்மா  மாம்பழ புளிசேரி செய்து விடுவாள். அன்று எல்லோரும் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடுவோம். ஒரு கரண்டி கூட மிச்சமின்றி புளிசேரி தீர்ந்திருக்கும். அத்தனை ருசியாக இருக்கும். பாலக்காட்டு ஐயர் வீடுகளில் எல்லாம் மாம்பழ சீசனில் இதைச் செய்யாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு ஐட்டம் இது. இனி இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

18) மாம்பழ புளிசேரி

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த இனிப்பான சிறிய அளவுள்ள நாட்டு மாம்பழங்கள் - மூன்று அல்லது நான்கு

தேங்காய் அரை மூடி துருவியது சிறிய தேங்காயாக இருந்தால் முழுவதுமே துருவிக் கொள்ளலாம்.

அதிகம் புளிக்காத மீடியமான புளிப்புள்ள கெட்டித் தயிர் – 300 gm (கட்டி இல்லாது நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும். மிக்சியிலும் ஒரு அடி அடித்து வைத்துக் கொள்ளலாம்)

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – 6

கடுகு – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெளிச்செண்ணெய் – நான்கு ஸ்பூன்

கறிவேப்பிலை  - ஒரு கொத்து

வெல்லம் – ஒரு சிறிய துண்டு

பெருங்காயத் தூள் – சிறிதளவு

செய்முறை.

என் அம்மா நன்கு பழுத்த நாட்டு மாம்பழங்களை நன்றாகக் கழுவி அதன் இரண்டு கதுப்புகளிலும் கொஞ்சமாக கீறி விடுவாள். ஒரு பக்கம் மேலிருந்து கீழாக லேசாக கீறினால், மறுபக்கம் கீழிருந்து மேலாக கீற வேண்டும். கதுப்புகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. கீற வேண்டும் அவ்வளவே. அல்லது மாம்பழத்தை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளலாம். தோல் பிடிக்காதவர்கள் தோலை உரித்து விட்டு துண்டாக்கிக் கொள்ளலாம். முழு மாம்பழமாகப் போடும் போது அது ஒரு தனி ருசிதான்.

இருபுறமும் லேசாக கதுப்பு கீறிய மாம்பழங்களை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு அரை அல்லது முக்கால் டம்ப்ளர் நீர் விட்டு, அதில் ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், வெல்லத் துண்டு, இரண்டாகக் கீறிய இரண்டு பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும். மாம்பழம் வெந்து தண்ணீர் வற்ற வேண்டும்.

இதற்குள் மிக்சியில், தேங்காய்த் துருவல், ஒரு ஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய் 4 (காரம் கூடுதலாக வேண்டும் என்பவர்கள் கூட ஒன்றோ இரண்டோ மிளகாய் சேர்த்து அரைக்கலாம்) இவற்றை மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு வெந்திருக்கும் மாம்பழக் கலவையில் இந்த அரைத்த விழுதையும், அதோடு கடைந்து வைத்திருக்கும் தயிரையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடுமாறு கிளறிக் கொடுக்கவும். இந்த கலவை லேசாக தளைத்தால் (கொதித்தால்) போதும். அடுப்பை அணைத்து விடலாம். அதிகம் கொதிக்கக் கூடாது. (தேங்காய் அரைத்து  சேர்த்த பிறகு எதையுமே அதிகம் கொதிக்க விடக் கூடாது.)

பிறகு தாளிப்புக் கரண்டியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் வெளிச்செண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளிப் போட்டு, அதிலேயே துளி பெருங்காயப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து சமைத்து வைத்திருப்பதில் தாளிப்பைக் கொட்டி விட்டு கப்பென மூடிவிட வேண்டும். அப்படி மூடி வைத்தால்தான் தாளிப்பு வாசம் புளிசேரியில் இறங்கும். மாம்பழக் காளன், மாம்பழக் கூட்டான் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.

இனி எதை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லும் கடமையும் எனக்கிருக்கிறது. இதற்கு தொட்டுக் கொள்ள பப்படம்தான் என் முதல் சாய்ஸ். எனவே முதலில் பப்படத்தை பொரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சுடச்சுட சாதத்தை தட்டில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மீது ரெண்டு ஸ்பூன் நல்ல வாசனையான உருக்கிய நெய் விட்டு பிசறிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பொரித்த பப்படங்களையும் நொறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது முழு மாம்பழத்தோடு  இரண்டு கரண்டி மாம்பழ புளிசேரியை தட்டின் ஒரு பக்கம் ஊற்றிக் கொள்ளுங்கள். மாம்பழத்தை ஒரு கையால் நன்கு பிழிந்தால் அதன் சாறு முழுக்க தட்டில் உள்ள புளிசேரியில் விழுந்து விடும். ,ஒரு உருண்டை பப்படம் நொறுக்கிப் போட்டிருக்கும் நெய்சாதக் கலவையுடன், இந்த மாம்பழப் புளிசேரியையும் தாராளமாகத் தொட்டுக் கொண்டு வாயில் போட்டுக் கொண்டால்.....ஆஹா ஆஹா என்பீர்கள். நடுநடுவே அந்த பிழிந்து விட்ட மாம்பழத்தையும் அப்படியே எடுத்து முழுவதும் சப்பி உறிஞ்சி சாப்பிட்டு கொட்டையைத் தூக்கிப் போடுங்கள். இந்த புளிசேரி  தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் அமிர்தமாயிருக்கும் என்பது இதன் கூடுதல் விசேஷம்.  என்ன......எங்கே கிளம்பிட்டீங்க? மாம்பழம் வாங்கவா?

19) மதுரப் பச்சடி

விருந்து என்றால் அதில் நிச்சயம் ஒரு பச்சடி இருக்கும். ஒன்று இனிப்பு, மற்றது புளிப்பு. பாலக்காட்டைப் பொறுத்தவரை, கொஞ்சம் இனிப்பானதை மதுரப் பச்சடி என்றும். (மதுரம் என்றால் இனிப்பு) மற்றதை கிச்சடி என்றும் சொல்வார்கள். முதலில் மதுரப் பச்சடி எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் – தோல் எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி போதும்

மஞ்சள் பூசணி – 200 கிராம்

தேங்காய் ஒரு மூடி

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் – 6

கடுகு – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

வெல்லம் – ஒரு சிறிய துண்டு.

தயிர் – ஒரு கப் (அதிகம் புளிப்பு இருக்கக் கூடாது.) மிக்சியில் போட்டு கட்டியின்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.)

இந்தப் பச்சடியை வெறும் பைனாப்பிள் துண்டுகளிலும் செய்யலாம். அல்லது பைனாப்பிளுடன் நேந்திரம் பழத் துண்டுகள், அல்லது தக்காளி துண்டுகள் இப்படி எது வேண்டுமானாலும் சேர்த்தும் செய்யலாம். நான் பைனாப்பிளுடன் மஞ்சள் பூசணி துண்டுகள் சேர்த்து செய்திருக்கிறேன். மஞ்சள் பூசணிக்கே ஒரு வித இனிப்பு சுவை இருக்கும் என்பதால் அதை சேர்த்துக் கொண்டேன். உங்களுக்கு அது வேண்டாம் என்றால் தனி பைனாப்பிள் மட்டும் வைத்து செய்து கொள்ளுங்கள்.

முதலில் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிய பைனாப்பிள் மற்றும் பறங்கித் துண்டுகளை கால் ஸ்பூன் மஞ்சள் தூளும் அரை ஸ்பூன் உப்பும் முக்கால் கோப்பை நீரும், இரண்டு பச்சை மிளகாய் கீறியதும் சேர்த்து நன்கு வேக விடுங்கள். இதில் ஒரு துண்டு வெல்லமும் போடலாம்.

தேங்காய்த் துருவலை மிக்சியில் போட்டு அதனோடு ஒரு ஸ்பூன் கடுகும், நான்கு பச்சை மிளகாயும், ஒரு ஸ்பூன் சீரகமும், கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து சிறிது நீர்  விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்ப மசிய வேண்டும் என்பதில்லை. நாலு திருப்பு திருப்பி சதைத்துக் கொண்டாலும் போதும். அடுப்பில் உள்ள பைனாப்பிள் கலவை நன்கு மசிந்து நீர் வற்றி வெந்ததும், அரைத்து வைத்த தேங்காயை அதில் போட்டு நன்கு கலந்து விட வேண்டும். இந்த கலவை ஒரு கொதி வந்து தேங்காயின் பச்சை வாசனை போனதும் தயிரை அதில் சேர்த்து நன்கு கிளறிக் கொடுத்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காயெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, காய்ந்த மிளகாய் இரண்டு, மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் போட்டு மூடி விடவும். சுவையான மதுரப் பச்சடி தயார்.

20) பழப் பச்சடி :

பலவகைப் பழங்களைக் கொண்டு செய்யப்படும் பச்சடி இது. விருந்தில் ஒரு ஐட்டமாகப் பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். சாதாரண நாட்களிலும் கூட பழங்கள் கேட்பாரற்று வீட்டில் நிறைந்திருந்தால் உடனே இப்படி செய்தால் காலியாகி விடும்.

தேவையானவை:

சர்க்கரை – ஒரு கோப்பை

தக்காளிப் பழம் – நான்கு

மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு சிறிய கப்

மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்

ஆப்பிள் துண்டுகள் – ஒரு கப்

ஆரஞ்சு பழம் உள்ளிருக்கும் சுளைப் பகுதி மட்டும் உரித்தது  - ஒரு சிறிய கப்

கருப்பு திராட்சை அல்லது பச்சை திராட்சை – ஒரு கப்

அன்னாசிப் பழத் துண்டுகள் – ஒரு சிறிய கப்

கொய்யா துண்டுகள் (நன்கு பழுத்தது) – ஒரு சிறிய கப்

வாழைப்பழம் நறுக்கியது – ஒரு கோப்பை

உடைத்த முந்திரி பருப்பு -  ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த திராட்சை – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை:

தக்காளியை முழுதாக வெந்நீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைத்து பிறகு தோலை நீக்கி மிக்சியில் .கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் வாணலியை அடுப்பில் வைத்து .அரை கிளாஸ் நீர் விட்டு அதில் சர்க்கரையைப் போட்டு கம்பிப் பாகு வைத்துக் கொண்டு  அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கிளறவும். அது ஜாம் மாதிரி இறுகி கெட்டியாகும் சமயத்தில் அடுப்பை அணைத்து விட்டு  நறுக்கி வைத்திருக்கும் பழங்களையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கலந்து விடவும் விருப்பப் படுகிறவர்கள் இரண்டு மூன்று சொட்டு ரோஸ் எசன்ஸ் கூட இதில் சேர்க்கலாம். வாசனையாக இருக்கும்.

21)  பீட்ரூட் கிச்சடி:

இதென்னடா ரவா கிச்சடி மாதிரியா என்று நினைத்து விட வேண்டாம். இதுவும் ஒருவகை பச்சடிதான். பச்சடிக்கும் கிச்சடிக்கும் என்ன வித்யாசம் என்றால் பச்சடிக்கு தேங்காய் அரைக்கும் போது கடுகு சேர்த்து அரைப்போம். இதில் கடுகு சேர்க்காமல் அரைப்போம் அவ்வளவுதான்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் மீடியம் சைஸ் – 1

தேங்காய் துருவல் - ஒரு சிறிய கோப்பை

அதிக புளிப்பில்லாத கட்டித் தயிர் கடைந்தது – ஒரு சிறிய கோப்பை.

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சீரகம் – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 அல்லது 3

கடுகு – 1 ஸ்பூன்

வர மிளகாய் – 2

தாளிக்க சிறிது தேங்காய் எண்ணெய்

செய்முறை:

பீட்ரூட்டை தோல்சீவி, மிகப் பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி, மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு, பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பீட்ரூட் நன்கு வெந்ததும் தேங்காய் விழுதை அதில் சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்த பிறகு கடைந்து வைத்திருக்கும் தயிரை அதில் ஊற்றி நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடலாம். பிறகு தேங்காய் எண்ணெயில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கலக்க வேண்டியதுதான். சுவையான பீட்ரூட் கிச்சடி ரெடி.

இதே போல வெண்டைக்காயிலும் செய்யலாம். வெண்டைகாயை நீளவாக்கில் நான்காக நறுக்கி நான்கையும் சேர்த்துப் பொடியாக அறிந்து அதன் பச்சை நிறம் மாறாமல் க்ரிஸ்பியாக வதக்கிக் கொண்டு இதேபோல் செய்யலாம். பிரியப்பட்டவர்கள் இதோடு வெங்காயமும் பொடியாக நறுக்கி வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

அதுசரி...நீங்கள் சக்கைப் பழத்தில் பச்சடி செய்து சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

சமைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com