39. சுமங்கலி பிரார்த்தனை

பாலக்காட்டு பிராமணர் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவோ அல்லது நடந்து முடிந்த பின்னரோ செய்யப்படுவதுதான் சுமங்கலி பிரார்த்தனை.
Palakkad Brahmin Recipes
Palakkad Brahmin Recipes

பாலக்காட்டு பிராமணர் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவோ அல்லது நடந்து முடிந்த பின்னரோ செய்யப்படுவதுதான் சுமங்கலி பிரார்த்தனை. வீட்டில் சுமங்கலிகளாக இறந்து போனவர்களை அழைத்து அவர்களது ஆசியைக் கேட்டுப் பெறுவதுதான் இதன் நோக்கம். மிகவும் சிரத்தையாகவும், சுத்தபத்தமாக மடியோடும் செய்யப்பட வேண்டிய பூஜை இது.

வீட்டுப் பெண்கள், மருமகள்கள் உட்பட சுமங்கலிப் பெண்களும் ஒரு கன்யா பெண்ணும் சேர்த்து ஒற்றைப் படையில் எண்ணிக்கை இருக்க வேண்டும்

இனி இந்த சுமங்கலி பிரார்த்தனையில் என்னென்ன ஐட்டங்கள் சமைப்பார்கள் என்று பார்ப்போம். இதில் கூறப்படும் வகைகள் எல்லாம் நான் ஏற்கனவே இந்த புத்தகத்தில் எழுதியுள்ளவைதான் என்பதால் அவற்றைத் திரும்பவும் எழுத வேண்டிய அவசியமில்லை என்பதால் அவை என்னென்ன என்று மட்டும் இங்கே கூறுகிறேன். இந்தச் சமையலில் துவரம்பருப்பு, மிளகாய் எல்லாம் சேர்க்கலாம். சமாராதனை சமையல் போல செய்யலாம்.  இந்தச் சமையலில் அப்பளம், பப்படம் போன்றவை கிடையாது.

  1. கலத்துப் பருப்பு (துவரம்பருப்பு)
  2. ஏதேனும் ஒரு பாயசம்
  3. தயிர்ப் பச்சடி அல்லது புளிப பச்சடி
  4. இனிப்பு பச்சடி (மாங்காய் வெல்லம் போட்டும் செய்யலாம், அல்லது பழ பச்சடியும் செய்யலாம்)
  5. இரண்டு கூட்டு வகைகள் (ஒன்று தேங்காய் அரைத்து விட்டு அதோடு வறுத்தும் போட்டது, மற்றது தேங்காய் அரைத்து விட்டது)
  6. இரண்டு கறி வகைகள்  (ஒன்று வாழைக்காய், மற்றது ஏதேனும் பச்சைக்கறி)
  7. சாம்பார் (பாகற்காய் அல்லது கத்திரிக்காய் பிட்லையும் வைக்கலாம் அல்லது பல காய்கள் போட்டு கதம்ப சாம்பாரும் வைக்கலாம்)
  8. வடை 
  9. போளி
  10. நெய்யப்பம்
  11. ஏதேனும் ஒரு இனிப்பு (மைசூர்பாகு, கேசரி, தேங்காய் பர்பி என்று எது வேண்டுமானாலும்)
  12. ஏதேனும் தொகையல் அல்லது ஊறுகாய்

நிறைவுரை:

ஆயகலைகளில் மிகவும் உன்னதமாக நான் நினைப்பது சமையல் கலையைத்தான். ஏனெனில் இதற்கு மட்டும்தான் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் அருங்குணம் உண்டு. எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் வயிற்றுப் பசியோடு தன் கலையில் ஈடுபட முடியாது. பசி தீர்க்கும் அன்னத்தில் ருசி கூட்டுவது அன்பென்பார்கள். கொடிதினும் கொடிது எது என்று ஔவை கூறுகிறார்

அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்

அதனினும் கொடிது

இன்புற அவர்கையில் உண்பது தானே

அதே ஔவை அன்பிலாத ஒரு பெண்ணின் கையால் ஒரு முறை உணவு உண்டதைப் பற்றி கூறுகையில்

           காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ

அன்பிலாள் இட்ட அமுது

அதாவது அன்பிலாதவள் இட்ட உணவால் என் எலும்பெல்லாம் பற்றி எரிகிறதே என்கிறாள். அவள் சொல்வது போல சமைப்பது முக்கியமல்ல. அதை அன்போடு செய்வதும் செய்ததை அன்போடு விருந்தினருக்கு அளிப்பதும்தான் அதைவிட முக்கியம். சமைக்கும் பொது நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்பார் என் அப்பா.  காலையில் குளித்து விட்டு,  அரிசி களைவதில் ஆரம்பித்து ஸ்லோகங்கள் சொல்லியபடிதான் ஒவ்வொரு வேலையும் செய்வாள் என் சின்ன மாமியார். 

அடுப்பு பற்ற வைத்து அக்னிக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் நமக்காக மட்டும் சமைப்பதில்லை. நம் கைப்பக்குவம் நம் வீட்டினர் உட்பட பலரது வயிற்றுப் பசி தீர்க்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.  அன்பிலாது அமிழ்தமே தந்தாலும் விஷமாகும், அன்போடு விஷம் தந்தாலும் அது அமிழ்தாகும் என்பார்கள். முற்காலத்தில் தலையைக் கண்டால் உலையை வை என்பதுதான் நமது பண்பாடாக இருந்தது. தொலைபேசி போன்ற எந்த தொடர்பு சாதனமும் இல்லாத காலம் அது. எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென விருந்தாளிகள் வீட்டிற்கு வருவார்கள். என்ன வேண்டுமென்றோ, சாப்பிடுகிறாயா என்றோ கேட்பது கூட பண்பாடில்லை என்று எண்ணிய காலம் அது. முகத்தை வைத்தே வாடிய வயிறை அறிந்து உணவிட்ட காலம். விருந்தோம்பல் என்பது மிகச் சிறந்த பண்பாடாக இருந்தது. விருந்தோம்பும் பண்பு நிறைந்த வீட்டினுள் நல்லதொரு அதிர்வலைகள் நிரம்பியிருக்கும்.  நல்ல அதிர்வலைகள் இல்லாததொரு வீட்டினுள் நம் உடம்பு இருப்பு கொள்ளாமல் தவிக்கும். எப்போது கிளம்புவோம் என்று தவிக்கும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சாரதா தேவியின் கையினால் மட்டுமே உணவுண்ணுவாராம் அதற்குக் காரணம் உணவு படைக்கும்போது சாரதா தேவியிடம் இருக்கும் அற்புதமான மனநிலை. உணவு உண்ணுகிறவருக்கும் அந்த மனநிலை கடத்தப்படுகிறது.  வேறு ஒரு மனநிலையோடு வேறொருவர் உணவு பரிமாறினால் தன் மனநிலையை அது மாற்றி விடும் என்பதால்தான் அவர் சாரதா தேவியின் கையால் மட்டுமே உணவு உண்ணுவாராம்,  எனவே சமைக்கும் போது மட்டுமல்ல, அதை மற்றவருக்குப் படைக்கும் பொது உயர்ந்த மனநிலையில் இருப்பது அவசியம். தெய்வத்திற்கு எப்படி நைவேத்யம் செய்வோமோ அது போலதான் விருந்தினருக்கும் அன்போடு அளிக்க வேண்டும்.

முக்கியமாக உணவை விற்கும் தொழிலில் இருப்பவர்கள் பற்றி கூற வேண்டும். சமீபத்தில் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று மெஸ் வைத்திருக்கும் ஒரு சமையற்கலைஞரிடம் சாதம் தவிர்த்த உணவு ஆர்டர் செய்தேன். படு கேவலமாக இருந்தது. சாம்பார், ரசம், கூட்டு, கறி என்று நாலே ஐட்டம்தான். சாம்பாரில் வெறும் உப்பும், அரிசி மாவு கரைத்து விட்ட கலவையும்தான் இருந்தது. புளிப்பு உரைப்பு எதுவுமில்லை. பெயருக்கு ஒரு பூசணிக்காய் கண்ணில் பட்டது. ரசம் வெந்நீர். பூசணிக்காய் கூட்டு என்ற பெயரில் ஒரு வஸ்து. அதிலும் தேங்காயைக் காணவில்லை. மாவைக் கரைத்து ஊற்றியிருந்தார்கள். பூசணிக்காய் அரைவேக்காடாக இருந்தது. கேரட் கறியும் பாதி வெந்தும் வேகாமலும். வெறும் நாலே ஐட்டங்களுக்கு அவர்கள் வாங்கியது 90 ரூபாய்.

என் அப்பாவிடம் எப்போதேனும் சிலர் அவசரம் என்று தங்கள் வீட்டு விசேஷத்திற்கு ஸ்பெஷலாக பிஸிபேளாவோ அல்லது டிபன் வகையறாக்களோ, வேறு ஏதேனுமோ செய்து தரச் சொல்லுவார்கள். என் அப்பா வெறும் கல்யாண பட்சணங்கள் மட்டுமே செய்பவர் என்றாலும் மறுக்காமல் அவர்கள் கேட்பதை சிலநேரம் செய்து கொடுப்பார். எங்கள் வீட்டிலேயே வைத்து அப்பா அனைத்தையும் செய்து வைக்க, அவர்கள் வந்து எடுத்துச் செல்வார்கள். அதிக பணமும் கேட்க மாட்டார். பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கும் போது அப்படி நெகிழ்ந்து போய்ப் பாராட்டுவார்கள். இப்டி ஒரு டேஸ்ட் இதுவரை சாப்பிட்டதேயில்லை என்பார்கள். "கம்மியா வாங்கியிருக்கா மாதிரி தோண்றதே, உங்களுக்கு கப்டுப்படியாறதா மாமா?" என்று கூட சிலர் கேட்டு அதிகப் பணமும் கொடுக்க முன்வருவார்கள். அப்பா மறுத்து விடுவார்.

நான் பிறகு அப்பாவிடம் கேட்பேன். ஏன் வேண்டாம்னு சொன்ன? விரும்பிதானே தரா. வாங்கிண்டு இருந்திருக்கலாமே என்று .

அதற்கு அப்பா சொல்வார், அன்னதானம் பண்றவா கூட சிரத்தையா அன்போட ருசியா பண்ணி,  சாப்பிடறவா வயறு நிறைய போடும்போது பணத்துக்காக அன்னத்தை விற்பனை பண்றவா அதைவிட அன்போட அவா மனசும் வயறும் நிறையறா மாதிரி பண்ண வேண்டாமா? பணமா முக்கியம்? சாப்பாட்டை விக்கறவன்கிட்டதான் அதிக தர்மம் இருக்கணும். எனக்கு இது போதும் என்பார்.

அந்த சாப்பாட்டை என் வயிறு வாழ்த்தவில்லை. சாப்பிடும் போது அப்பாவின் நினைவு வந்தது.  உணவை விற்பவர்களிடம் தர்மத்தை இனி எதிர்பார்க்க முடியாதெனத் தோன்றியது. ஹோட்டல் தொழிலில் இருப்பவர்கள் தர்மம் தவறிவிடக் கூடாது என்பதால்தான் இதை இங்கு எழுதுகிறேன். தர்மம் இருக்குமிடத்தில் அது வீடாயினும், ஹோட்டலாக இருந்தாலும் சரி, அங்கு நல்லதொரு அதிர்வலை நிரம்பி இருக்கும். மனிதர்களை மீண்டும் மீண்டும் அது காந்தம் மாதிரி தன்னை நோக்கி ஈர்க்கும். 

நிறைவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com