30. கோவில் பிரசாதங்கள் சுவையாக இருப்பதற்கு இதுதான் காரணம்

கோவில் பிரசாதங்களுக்கென்று ஒரு பிரத்யேக சுவை உண்டு.  
Temple prasadam
Temple prasadam

கோவில் பிரசாதங்களுக்கென்று ஒரு பிரத்யேக சுவை உண்டு. அதற்குக் காரணம் ஆச்சார அனுஷ்டானங்களுடன் அவை செய்யப்படுகின்றன என்பதோடு அவை ஆகம முறைப்படி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. தெய்வங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த பிரசாதங்கள் உண்ணுகிறவருக்கு மருந்தாவதோடு அதற்குப் பலமடங்கு சுவையும் கூடுகிறது. பிரசாதங்கள் தொண்டையோடு என்பார்கள். அதாவது மருந்தை எப்படி மிகச்சிறிய அளவு சாப்பிடுகிறோமோ அது போல பிரசாதங்களையும் குறைவாக உண்பது நல்லது. ஏனெனில் அவையும் மருந்து போல வீரியம் மிக்கதாக இருக்கக் கூடும் என்பதால் பெரியவர்கள் அப்படி சொல்லி வைத்தார்களோ என்னவோ.  இனி புகழ் பெற்ற சில கேரள கோவில் பிரசாதங்கள் சிலவற்றைப் பார்ப்போம்..

117) அம்பலப்புழ பால் பாயசம்

பொதுவாகக் கேரள கோவில்கள் என்றாலே பாயசங்களும் அப்பமும்தான் நினைவுக்கு வரும். அதிலும் பால் பாயசம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அம்பலப்புழைதான். குழந்தைகளைக் கூட அம்பலப்புழை பால்பாயசமே என்று கொஞ்சுவார்கள். அத்தனை மகத்தானது அந்தக் கோவிலில் செய்யப்படும் பால்பாயசம். அந்தக் கோவில் பல உன்னதங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் செம்பகச்சேரி என்றழைக்கப் பட்ட இடம் அது. செம்பகச்சேரி ராஜா தேவநாராயணன் என்பவன்தான் இந்தக் கோவிலைக் கட்டியது. கிருஷ்ணன் இங்கு பார்த்தசாரதியாக இருக்கிறான். ஏன் இங்கு மட்டும் பால் பாயசத்திற்கு அவ்வளவு விசேஷம்? நிச்சயம் இருக்கிறது. இந்த பால்பாயசம் குறித்து இருவேறு பழங்கதைகள் உலவுகிறது. இரண்டையுமே பார்ப்போம்.

செம்பகச்சேரி ராஜாவுக்கு சதுரங்கம் ஆடுவதில் பெரும் விருப்பம் உண்டு. சதுரங்கத்தில் தன்னை வெல்பவருக்கு பெரும் பரிசுகள் அளிப்பதாக சவால் விட்டழைப்பார். ஒரு முறை சாது ஒருவர் ராஜாவோடு சதுரங்கம் ஆடுவதற்கு விரும்பி வந்தார். ராஜா உற்சாகமாக அவரை வரவேற்று இப்போட்டியில் என்னை நீ ஜெயித்தால் உனக்கு என்ன பரிசு வேண்டும்? என்று கேட்கிறான். சாது தனக்கு நெல்மணிகள் போதும் என்கிறான். வெறும் நெல்மணிகளா என்று ராஜா அலட்சியமாகக் கேட்க,  சாது ராஜாவிடம், சதுரங்கக் கட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியும்,. அடுத்த கட்டத்தில் அதன் இரு மடங்கும், அதற்கடுத்ததில் இரண்டாவது கட்டத்தின் இருமடங்கும் என ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் இருமடங்கு நெல்மணிகள் என 64 கட்டங்களுக்கும் உரிய நெல்மணிகள் தந்தால் போதும் என்கிறார். ஒரு ராஜாவான தன்னிடம் இவ்வளவு அற்பமான பரிசைக் கேட்கிறாரே இவர் என்று ராஜா சற்றே மனம் வருந்தினாலும் போட்டிக்கு ஒப்புக் கொள்கிறான். இறுதியில் வென்றாது சாதுதான். ராஜா நெல்மணிகள் கணக்கிடுகிறான். கட்டத்திற்குக் கட்டம் இருமடங்காக, .ராஜா திகைக்கிறான். 6௦ வது கட்டம் வரும் போதே ராஜ்யத்தில் உள்ள நெல் அத்தனையும் கொடுத்தால் கூட பற்றாக்குறை ஆகும் என்பது ராஜாவுக்கு விளங்குகிறது. 64 வது கட்டத்தில் ராஜா கொடுக்க வேண்டிய நெல்லின் அளவு டிரில்லியன் கணக்கிற்குச் செல்கிறது. ராஜா தலைகுனிகிறான். என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்து நிற்கிறான். சாதுவாக வந்த கிருஷ்ணன் தன் ரூபத்தைக் காட்டி எனக்கு ஒரே நாளில் இத்தனை நெல் தர வேண்டாம், அதற்கு பதில் தினமும் எனக்கு பாயசம் செய்து சமர்ப்பணம் செய் என்று சொல்லி மறைகிறான். அன்றிலிருந்துதான் இங்கு பாயச நிவேதனம் ஆரம்பித்தது எனபது ஒரு கதை.

மற்றொரு கதை, சதுரங்க ஆட்டத்தில் விதை நெல்லைக்கூட இழந்த ராஜா அடுத்த அறுவடையின் போது திருப்பித் தருவதாகச் சொல்லி, பட்டமனை இல்லத்து நம்பூதிரியிடம், முப்பத்தி ஆறாயிரம் பரை நெல்லைக் கடனாக வாங்குகிறார். ஆனால் வாக்களித்தபடி அறுவடைக்குப் பிறகு பட்டமனைக்கு நெல்லைத் திருப்பியளிக்கவில்லை. ஒரு முறை உத்சவ சமயத்தில் ராஜா பகவானைத் தொழுவதற்கு வந்தபோது பட்டமனை திருமேனி  ராஜாவை வழிமறிக்கிறார். நீ சத்யசந்தனாக இருந்தால் என்னிடம் வாங்கிய நெல்லைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பகவானைத் தொழுவதற்குச் செல் என்கிறார். ராஜா திகைக்கிறார். உடனே ராஜாவின் மந்திரி ராஜாவின் சங்கடத்தைப் போக்க, ஊர்க்காரர்களிடம் ஆளுக்கு ஒரு மூட்டை என நெல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கிறான். ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் தங்களிடம் இருந்த நெல்லை எல்லாம் கொண்டு வந்து கோவிலில் கொட்டுகிறார்கள். உனக்கு சேர வேண்டிய நெல் இதோ. உச்சிக்கால பூஜை ஆரம்பிப்பதற்குள் நீ இவற்றைக் கொண்டு போகலாம் என்று பட்டமனையிடம் கூறிய மந்திரி, ஊர்க்காரர்கள் யாரும் அவர் அதை எடுத்துச் செல்வதற்கு உதவக் கூடாதென கட்டளை இடுகிறான். பட்டமனைக்குப் புரிகிறது. தனியொருவராக சில மணித்துளிகளில் அத்தனை நெல்லையும் சுமந்து செல்வது இயலாத காரியம் என்று. உச்சிக்கால பூஜைக்கு இன்னும் கொஞ்ச நேரமே உள்ள நிலையில் பட்டமனை தன் இரு கைகளாலும் கொஞ்சம் நெல்லை அள்ளியெடுத்து பகவானின் திருநடைக்குக் கொண்டு சென்று நடையில் வைத்து, கிருஷ்ணா இதை உனக்கு சாமர்ப்பிக்கிறேன். இந்த நெல் முழுவதையும் உனக்கே விட்டுச் செல்கிறேன். இவை தினமும் உனக்கு பாயசப் பிரசாதமாகட்டும் என்று சொல்லிவிட்டு நமஸ்கரிக்கிறார். 

எப்படிப் பார்த்தாலும் இரண்டு கதைகளுமே அம்பலப்புழை பால்பாயசத்தின் மகிமைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளன. இந்தப் பாயசத்தின் அபாரமான ருசிக்கு என்ன காரணம் என்ற கேள்வி இங்கு வரும் எல்லோருக்குமே உண்டு. பலருக்கும் இதில் வியப்புண்டு.

எதனால்? இந்தக் கேள்விக்கு அம்பலப்புழை கோவிலுடன் தொடர்புடைய எல்லோரும் கூறும் பதில், அங்குள்ள மணிக்கிணறு நீரையும், திடப்பள்ளி கிணற்றின் நீரையும் துல்லியமான அளவுகளில் கலந்து செய்யப்படுவதுதான் பாயசத்தின் அபார ருசிக்குக் காரணம் என்று. இங்குள்ள மணிக்கிணறு மிகவும் பவித்ரமானது. கீழ்சாந்தி எனப்படும் நம்பூதிரிகளைத் தவிர வேறு யாருக்கும் இதனுட்புறம் செல்ல அனுமதியில்லை. யாரும் இதனைக் காணவும் முடியாது. நித்ய பூஜைக்கும் இந்தக் கிணற்றின் நீர்தான் உபயோகிக்கப் படுகிறது.

எப்படி செய்கிறார்கள் இந்த பால் பாயசத்தை?. அதைக் கேட்கும்போதே சிலிர்த்துப் போகும் நமக்கு.  கோவிலில் பூஜைகளுக்கு உதவும் கீழ்சாந்தி எனப்படும் நம்பூதிரிகள்தான் பாயசம் தயாரிப்பார்கள். பாயசம் தயாரிக்கப்படும் திடப்பள்ளியில் பிரவேசிக்க வேறு யாருக்கும் அனுமதியில்லை. அதிகாலை மூன்று மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள மணிக் கிணற்றிலிருந்தும், திடப்பள்ளி கிணற்றிலிருந்தும் பாயசத்திற்குத் தேவையான நீரை இவர்கள் இறைத்துக் கொண்டு வருவார்கள். பாயசம் தாயாரிக்கவென்று மிகப் பெரிய வெண்கல உருளிகள் இருக்கும். ஒவ்வொரு உருளியும் முப்பத்திரண்டு இடங்கழி அதாவது 42 லிட்டர் பாயசம் தயாரிக்கும் அளவு மிகப்பெரியது.  இந்த உருளிகள் மிகத் தரமான வெண்கலம் கொண்டு சிறப்பான முறையில் வார்ப்பு செய்யப்பட்டவை. இந்த உருளியை அடுப்பிலேற்றி ஒரு லிட்டர் பாலுக்கு நாலு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் மணிக் கிணற்று நீரையும், திடப்பள்ளிக் கிணற்றின் நீரையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முதலில் உருளியில் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் பாதியாக வற்றும்போது, சரியாக காலை ஏழு மணிக்கு தேவையான பாலை அந்தக் கொதிநீரில் சேர்க்கிறார்கள். பாலும் நீரும் சேர்ந்து அவ்வளவு பெரிய உருளியில் அலையலையாக அசையும்போது பாற்கடலாகவே தெரியும். கைவிடாமல் மணிக்கணக்கில் மிகப்பெரிய துடுப்புக் கரண்டியால் இளக்கி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பால் கொதித்து கொதித்து குறுகிக்கொண்டு வருகிறது. வற்ற வற்ற அதன் நிறமும் மாறிக்கொண்டு வருகிறது. சரியாக பதினோரு மணிக்கு உணக்கலரி (கழுவி உலர்த்திய அரிசி) என்று மலையாளத்தில் சொல்லப்படும் பாயச அரிசி சேர்க்கப்படுகிறது.

இந்த அரிசி எப்படி பாயசத்திற்கு ஏற்றவாறு எப்படி தயாரிக்கப்படுகிறது என்று கேட்டால் பிரம்மிப்பு ஏற்படும். நெல்லிலிருந்து குத்தி எடுக்கப்படும் அரிசி ஒவ்வொன்றும் சரியாக நான்காய் உடைக்கப்படுமாம். மலைப்பாக இருந்தது. இப்படி நான்காக உடைக்கப்பட்ட அரிசியைக் கழுவி உலர்த்தி இந்த உணக்கலரியைத்தான் (உலர்ந்த அரிசி) தினமும் சரியாக பதினோரு மணிக்கு பாலில் சேர்க்கிறார்கள். அரிசி பாலில் வேகிறது. அதுவரை தொடர்ந்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கிறார்கள். சரியாக 12 மணிக்கு திடப்பள்ளியிலிருந்து (பாயசம் செய்யுமிடம்) ஒருவர் வெளியில் வருவார். அப்போது கோவில் முழுக்க நிசப்தமாகி விடும். அப்போது அவர் கருவறை இருக்கும் திசை நோக்கி கணீரென்ற குரலில், “வா.......சு....தேஏஏஏஏஏஏஏஏஏஏஏ..வ்வ்வ் என்று நாபிக்கமலத்திலிருந்து பகவானை அழைப்பார். வாசுதேவ் என்று அவர் நீளமாய் சொல்லி முடிக்க நிச்சயம் முப்பது நொடிகளாவது ஆகும். அந்த விளி கேட்கும் போதே உடல் சிலிர்க்கும். கண்ணீர் பொங்கும். சமர்ப்பணம் செய்கிறேன் என்று பகவானை இப்படி அழைத்த பிறகுதான் பாயசத்திற்குத் தேவையான சர்க்கரை (மலையாளத்தில் பஞ்சசாரை) மூட்டையை ஒருவர் தலையில் சுமந்து வருவார். பாயசத்தின் இறுதிக் கட்டத்தில் சர்க்கரை (பஞ்சசாரை) சேர்கிறார்கள். அது கரைந்தால் போதும் பாயசத் தயாரிப்பு நிறைவுறுகிறது.  வெண்ணிற பால், நிறமற்ற நீர், வெண்ணிற அரிசி, வெண்ணிற பஞ்சசாரை (சர்க்கரை) இந்த மூன்றே பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பால் பாயசம் இப்போது செண்பகப் பூவின் நிறத்தில் மாறியிருக்கிறது. இந்தப் பால்பாயசத்தில், ஏலக்காய், முந்திரி என்று எதுவும் சேர்ப்பதில்லை. இந்தப் பால்பாயசத் தயாரிப்பு முடிய தினமும் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரமாகிறது. தினமுமே இப்படி சரியாக கடிகார நேரப்படிதான் அடுப்பில் உருளியேற்றி, நீர் ஊற்றி, கொதிக்கவிட்டு, பால் கலந்து, அரிசி சேர்த்து, சர்க்கரை சேர்க்கிறார்கள். இந்தக் காலக்கணக்கு மாறுவதே இல்லை.

இனி பாயச நிவேதனம் தினமும் அங்கு எப்படி நடக்கிறதென்பதையும், அதோடு இந்த பால் பாயசம் எப்படி செய்வதென்பதையும் அறிந்து கொள்ள ஜஸ்ட் ஒரே ஒரு வாரம் காத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com