32. கொட்டாரக்கரா மகா கணபதி உண்ணியப்பம்

இனி அடுத்து நாம் பார்க்கப்போகும் பிரசாதம் உண்ணியப்பம். இங்கே எல்லோர் வீட்டிலும் செய்யும் இனிப்பு அப்பம்தான்
32. கொட்டாரக்கரா மகா கணபதி உண்ணியப்பம்

118)  கொட்டாரக்கரா மகா கணபதி உண்ணியப்பம்

இனி அடுத்து நாம் பார்க்கப்போகும் பிரசாதம் உண்ணியப்பம். இங்கே எல்லோர் வீட்டிலும் செய்யும் இனிப்பு அப்பம்தான் அங்கு உண்ணியப்பம் எனப்படுகிறது. இந்த உண்ணியப்பம் எங்கு புகழ் பெற்ற பிரசாதமாய் ருசிக்கிறது என்றால் கொட்டாரக்கரா மகா கணபதி கோவிலில்தான். வழக்கமாக மோதகப்ரியனாக இருக்கும் கணபதி இங்கே உண்ணியப்ப பிரியனாக இருக்கிறான். இவனுக்கு உண்ணியப்பம் படைத்து என்ன வேண்டிக் கொண்டாலும் அதை நிறைவேற்றித் தருவான் என்ற நம்பிக்கையில் இவனை நாடிச் செல்லும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கொட்டாரக்கரா கணபதியைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டு பிறகு உண்ணியப்பம் செய்யப் போகலாம்.

கொட்டாரக்கரா மகா கணபதியைப் பற்றி அறிவதற்கு முன் நாம் அறிய வேண்டியது பெருந்தச்சன் ராமன் நாராயணனைப் பற்றி. பெருந்தச்சன் என்றால் தலைமை சிற்பி என்று அர்த்தம் (Master of carpentar). தெய்வீக அம்சம் கொண்டவர் இவர். இவருடைய தந்தை வரருசி மகரிஷி, போஜராஜன் அரசவையில் மன்னனின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் சிறந்த கல்விமானாக இருந்தார். உயர்குல அந்தணரான இவருக்கும், ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பத்து ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. அனால் பிறந்தவுடன்  காட்டிலேயே அந்தக்  குழந்தையை விட்டுவிட்டு தன்னோடு வருமாறு மனைவியைப் பணிக்கிறார் மகரிஷி.. அப்படி அவர்கள் விட்டுச்சென்ற குழந்தைகள் எல்லாரும் ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்த தாய் தந்தையரால் எடுத்து வளர்க்கப்பட்டு தங்கள் குலத்தொழிலில் பெயரும் புகழும் பெற்று உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எல்லோருமே தெய்வீக அம்சம் நிறைந்தவர்கள். இவர்கள்  அனைவருக்குமே பாலக்காட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் கோவில்கள் உண்டு. மக்களால் தெய்வமாக வழிபடப்படுகின்றனர், நம்ம திருவள்ளுவரும், காரைக்காலம்மையும் கூட இவர்களுக்குப் பிறந்து, தெய்வீக நிலைக்கு உயர்ந்தவர்கள்தான் என்று மலையாள இலக்கியங்கள் கூறுகிறது.

இந்த பதினோரு பேரில் ஒருவர்தான் பெருந்தச்சன் ராமன் நாராயணன்.. தச்சுவேலை செய்யும் குலத்தினரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். கேரளத்தின் பல கோவில்களின் மூலஸ்தானம் உட்பட மரவேலைப்பாடுகளை அமைத்தவர். மூலவிக்ரகங்களை வடித்தவர். தெய்வீக சிற்பி என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர்.

இத்தகைய புகழ்வாய்ந்த பெருந்தச்சன் ஒருசமயம் கொட்டாரக்கரை சிவன் கோயில் வழியாகச் சென்று கொண்டிருந்தார். கிழக்கேக்கர சிவன் கோவில் என்றுதான் அதற்கு அப்போது பெயர். பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. அதன் பின் பகுதியில் மேற்குபார்த்து படிஞ்ஞாற பகவதி வீற்றிருக்கிறாள். படிஞ்ஞாற என்றால் மேற்கு திசை.  மிகச்சிறிய கோவில்தான். இவ்வழியாக வந்த பெருந்தச்சனின் கண்களில் படுகிறது கீழே சாய்ந்திருந்த ஒரு பலாமரம். அவர் அந்த மரத்தினால் கவரப்பட்டு அம்மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து அதில் ஒரு அழகிய கணபதியின் சிற்பத்தை வடித்தார். அந்த மகா கணபதியை கோவிலின் கருவறைக்கருகே தெற்கு நோக்கியவாறு பிரதிஷ்டை செய்தார்.

இதன் பின்னர் நாளடைவில் தகப்பனைவிட மகனின் புகழ் கூடியது. வேண்டியதை நடத்தித் தருபவன் இந்த கணபதி என்ற நம்பிக்கையோடு  குவிந்த பக்தர்களால் கிழக்கேக்கர சிவன் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம் கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் என்று பெயர் பெற ஆரம்பித்தது. மகா கணபதி பிரதான தெய்வமாகி விட்டார் இங்கு.

கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவர், மகாகணபதியை வழிபடும் பக்தராக இருந்தார். அவரது மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது மகளின் திருமண நாளில் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த விரும்பிய அவர், வடக்கு மலபார் பகுதியில் புகழ் பெற்றிருந்த ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்து வந்து ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார். 

மன்னர் அந்தக் குழுவினரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அந்தக் குழுவினர், ‘கொட்டாரக்கரா   பகுதியில் இருக்கும் மக்களுக்குச் சிறிது கூட கலையுணர்வோ,  அதை விரும்பும் தன்மையோ இருக்காது. எனவே, அங்கு  நிகழ்ச்சி நடத்த எங்களால், வர இயலாது’ என்று சொல்லி மறுத்து விட்டனர்.  

இதனால் வருத்தமுற்ற மன்னர், கொட்டாரக்கரா மகாகணபதியிடம் இது குறித்து முறையிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய விநாயகர்,  அவரை ‘ராமாயண காவியம்’ ஒன்றை எழுதச் சொன்னார். மன்னரும் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து எழுதி முடித்தார். அதற்கு ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை மகாகணபதி கோவிலில் வைத்து வழிபட்டார்.

அன்றிரவு மன்னருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவில், மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. மன்னர் அந்த உருவங்கள் அனைத்தையும் கொண்டு, புதியதாக ஒரு களியாட்டத்தைத் தொடங்கினார். அந்தக் களியாட்டத்திற்குக் ‘கதகளியாட்டம்’ என்று பெயர் ஏற்பட்டது. மகாகணபதியின் அருளால் இந்தக் ‘கதகளியாட்டம்’ என்ற அரியதொரு நடனக்கலை இங்குதான் தோற்றுவிக்கப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது.  

இத்தகைய மகத்துவம் பெற்ற கொட்டாரக்கரா கணபதியின்  கண்பார்வையில் அவன் சந்நிதிக்கு எதிரிலேயே அவருக்கு படைப்பதற்கான உண்ணியப்பங்கள் செய்யப்படுவதுதான் விசேஷம். காலையிலிருந்து இரவு வரை அப்பங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உண்ணியப்பங்களின் மற்றொரு விசேஷம் அப்பம் செய்து முடித்த பிறகு இவற்றின் மீது வெண்ணிற சர்க்கரைப் பொடி தூவப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் வேண்டிக் கொண்டுள்ள அப்பத்தின் எண்ணிக்கையைக் கூறி பணம் கட்டினால் நிவேதனம் செய்த பிறகு அப்பம் அவர்களிடம் கொடுக்கப்படுகிறது.

இனி பாரம்பரிய உண்ணியப்பம் செய்யும் முறையைப் பார்ப்போம்.

பச்சரிசி – ஒரு கோப்பை (கழுவி நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்)

வெல்லம் (பொடித்தது) அரிசி எடுத்துக் கொண்ட அதே கோப்பையால் இரண்டு கோப்பை (கரைத்து பாகு வைத்துக் கொள்ளவும்)

ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்

தேங்காய் பல்லு பல்லாக நறுக்கிறது – ஒரு டேபிள் ஸ்பூன்

சிறுவாழைப்பழம் – 1

நெய் – 100 gm

தேங்காய் எண்ணெய் – 300 gm

செய்முறை

ஊறிய அரிசி மற்றும், வெல்லப்பாகு வாழைப்பழம் மூன்றையும்  மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு கெட்டியான தோசைமாவு பதத்திற்கு மாவைத் தயாரித்துக் கொண்டு அதில் ஏலக்காய் பொடி மற்றும் அரை ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேங்காய் நறுக்கி வைத்ததை ஒரு ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்து மாவில் கலக்கவும். அப்பக்காரலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் அதில் நெய்யும் நாலைந்து ஸ்பூன் ஊற்றினால் வாசனையாக இருக்கும்.  அடுப்பை சிம்மில் வைத்து இனி கரண்டியால் குழிகளில் மாவை ஊற்றி, அது பாதி வேகும்போது அப்பக்குத்தியால் அதை மெல்ல திருப்பிவிட வேண்டும். இப்போது அடிப்பாகம் மேலே கிண்ணம் போல உப்பி மேற்புறம் வந்திருக்கும். அப்பம் இருபுறமும் வெந்ததும் எடுத்து விடலாம். கொட்டாரக்கரா அப்பம் போலவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சர்க்கரையை பொடியாக்கி அவற்றின் மீது தூவலாம். வேண்டாம் என நினைப்பவர்கள் அப்படியே விடலாம். இனி அப்பங்களை  கணபதியானுக்கு நிவேதனம் செய்து விட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை கூடியிருக்கும்.

                           ***********

119)  பம்பா கணபதி மோதகம்

கடந்த ஆண்டு நாங்கள் சிலர் சபரிமலை யாத்திரை சென்றிருந்தோம். மலை ஏறுவதற்கு முன் அடிவாரத்தில் உள்ள பம்பா கணபதியை தொழுதுவிட்டுத்தான் ஏற ஆரம்பித்தோம். கொட்டாரக்கராவில் நெய்யப்ப பிரியனாக இருப்பவர் பம்பாவில் மோதகப்பிரியனாக இருக்கிறார். மலையில் தரிசனம் முடித்து கீழே இறங்கி வந்து மீண்டுமொரு முறை பம்பா கணபதியை தரிசித்த பின்னர் என் உறவினர் பிரசாத கவுண்டருக்குச் சென்று கொஞ்சம் மோதகம் வாங்கி வந்தார். மலையிறங்கி களைத்துப் போயிருந்த உடலுக்கு அந்த சுவையான இனிப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. அதன் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

பச்சைப் பயறு – 1 கோப்பை

துருவிய தேங்காய் – 1.1/2 கோப்பை

வெல்லம் – 100 gm (இதிலிருந்து ஒன்றரை கோப்பை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்)

அரிசி மாவு – அரை கோப்பை

ஏலக்காய் - 5

முதலில் பச்சைப்பயறை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியே எடுத்து ஆற வைத்து விட்டு அதே வாணலியில் தேங்காய், மற்றும் ஏலக்காயைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும். (அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்) நன்கு சிவந்ததும் இதைத் தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.

பிறகு வறுத்த பச்சைப் பயறையும் தேங்காயையும் தனித்தனியே மிக்சியிலிட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். 

வெல்லத்தை தூள் செய்து ஒரு கோப்பை நீர் விட்டு கரைத்து வடிகட்டி வாணலியில் விட்டு பாகு பதம் வரும் வரை கொதிக்கவிட வேண்டும். பாகு நன்கு கொதிக்கும் போது பச்சைப் பயறு பொடித்ததையும், தேங்காய்ப் பொடித்ததையும் வெல்லப்பாகில் போட்டு கெட்டியாகும் வரை நன்கு கிளற வேண்டும். அடுப்பை அணைத்து விடலாம். சிறிது ஆறவிட்ட பிறகு கிளறி வைத்திருப்பதை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

பிறகு அரிசி மாவை ஒரு சிறிய கிண்ணத்திலிட்டு கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு போட்டு, அரை அல்லது முக்கால் கோப்பை நீர் ஊற்றி மாவாகக் கரைத்துக் கொள்ளவும்.(பஜ்ஜி மாவு போல) பிறகு அடுப்பில் வாணலி வைத்து அதில் பொறிப்பதற்கான எண்ணெய் வைத்து சூடானதும். உருண்டைகளை ஒவ்வொன்றாக அரிசி மாவுக் கலவையில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து வைத்தால் சுவையான மோதகம் ரெடி.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com