27. வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் வெல்ல தோசை

என் அத்தை அடிக்கடி செய்யும் சிற்றுண்டி இது. அத்தனை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இது
27. வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் வெல்ல தோசை

100)  வெல்ல தோசை:

என் அத்தை அடிக்கடி செய்யும் சிற்றுண்டி இது. அத்தனை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இது. 

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு – ஒரு கோப்பை 

அரிசி மாவு – கால் கோப்பை 

வெல்லம் – முக்கால் கோப்பை 

வாழைப் பழம் – 1 (கதலி, பூவன், நேந்திரம் என்று எது வேண்டுமானாலும் போடலாம். நன்கு கனிந்த வாழையாக இருக்க வேண்டும்.

தேங்காய் துருவல் – அரை கோப்பை (துருவல் நன்கு பூவாக இருக்க வேண்டும்) 

ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன் 

உப்பு – ஒரு சிட்டிகை 

செய்முறை:

வெல்லத்தை ஒரு மணி நேரம் முன்பே இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி வைத்து நன்கு கரைந்தபின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

பழத்தை உரித்து நறுக்கிக் கொண்டு கொஞ்சம் வெல்லக் கரைசல் விட்டு மிக்சியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும். 

கோதுமை மாவு அரிசிமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து வெல்லக்கரைசலை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதோடு அரைத்து வைத்திருக்கும் பழக்கூழையும் அதில் சேர்த்து, கடைசியாக துருவிய தேங்காயும், ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கலந்து மேலும் கொஞ்சம் தண்ணீர் தேவையென்றால் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 

தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடானதும் கரண்டியால் இந்த மாவை ஊற்றி மெலிதாக வார்க்கவும். உருக்கிய நெய் ஊற்றி இந்த தோசை வார்த்தால் சுவையும் மணமும் கூடும். வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம். அது கூட உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால்தான். இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள். 

                               ************

இனி தேநீர், மற்றும் காபி நேர தீனிகள் (இனிப்பு மற்றும் காரம்) பற்றி பார்ப்போம். 

101)  நேந்திரம் பழ பஜ்ஜி 

வாழைக்காய், உருளைக் கிழங்கு வெங்காயம் எல்லாவற்றிலும் பஜ்ஜி போட்டிருப்பீர்கள். அதேபோல்தான் நேந்திரம் பழத்தை நீளமாகவோ, வட்டத் துண்டுகளாகவோ நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கி எடுத்துப் போடலாம்.வெளியே காரம், உள்ளே பழத்தின் இனிப்பு என்று இதன் சுவை அபாரமாக இருக்கும். கடலைமாவில் பஜ்ஜி போடுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நான் இங்கு சொல்லப் போவது வேறொரு வகை. கேரளத்தில் பழம்பொரி என்று இதனைச் சொல்வார்கள். பழம் பொரியை இருவிதமாக செய்யலாம். 

102)  பழம்பொரி (முதல் வகை)

தேவையான பொருட்கள் 

நேந்திரம் பழம்  - 1

மைதாமாவு – அரை கோப்பை 

சர்க்கரை – இரண்டு ஸ்பூன் 

மஞ்சள் தூ;ள் – கால் ஸ்பூன் 

பொரிப்பதற்கு எண்ணெய் 

செய்முறை:

பழத்தை தோல் நீக்கி பாதியாக வெட்டி, வெட்டிய இரு பாதியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

மைதாமாவில் ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூளும், சர்க்கரையும் சேர்த்து சிறிது நீர் விட்டு பேஸ்ட் மாதிரி குழைத்துக் கொள்ளவும். 

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சுட்டதும் நறுக்கிய பழத்துண்டுகளை இந்தக் கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டியதுதான். இதை சூடாக  சாப்பிட வேண்டும்.  

103) இன்னொருவகை பழம்பொரி

இதற்குத் தேவையான பொருட்கள் 

நேந்திரம் பழம் - இரண்டு 

தேங்காய் துருவல் – அரை கப் 

சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன் 

மைதா -  கால் கப் 

உப்பு – ஒரு சிட்டிகை 

காய்ந்த திராட்சை – ஒரு டீஸ்பூன் 

நான்காக உடைத்த முந்திரி – ஒரு டீஸ்பூன் 

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை  

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

தேங்காய்த் துருவலில் திராட்சை முந்திரி, சர்க்கரை, ஏலக்காய்த் தூள்  எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். 

நேந்திரம்பழத்தின் தோலை நீக்கி பழத்தை நடுப்பகுதியில் மட்டும் மேலிருந்து கீழாக கீறி விடவும். கீறிய பகுதியை சற்றே விரித்து உள்ளே கருப்பான விதைப்பகுதி இருந்தால் நீக்கி விட்டு, தேங்காய்க் கலவையை பழத்திற்குள் அடைத்து வைக்கவும். 

மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு பேஸ்ட் மாதிரி குழைக்கவும். 

இந்த பேஸ்ட்டை தேங்காய் துருவல் அடைத்த பழத்தின் பகுதியில் ஒரு மூடி போல தடவி விடவும். பழத்தின் இதர பகுதிகளிலும் தடவி விடவும். ஒரு நான் ஸ்டிக் பேனில் கொஞ்சம் நெய் ஊற்றி இந்த மைதா தடவிய பழத்தை அதில் வைத்து அவ்வப்போது திருப்பிவிட்டு நெய்யில் பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பொரித்த பழத்தை இரண்டாக வெட்டி விருந்தினருக்குக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கும் இப்படி செய்து கொடுக்கலாம். 

104)  தேங்காய் பூரண சுகியன், மற்றும் நேந்திரம் பழ சுகியன் 

தேவையான பொருட்கள்:’

பச்சரிசி – கால் கோப்பை 

உளுந்து – ஒரு கோப்பை 

(இரண்டையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து அதிக நீர்விடாமல் கொஞ்சமாய் நீர்விட்டு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து போண்டா மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்)

தேங்காய் துருவல் அரை கப் 

கடலைப் பருப்பு அரை கப் 

வெல்லம் – முக்கால் கப் 

ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் 

பொரிப்பதற்கு எண்ணெய் 

செய்முறை:

கடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். 

வெல்லத்தைப பொடி செய்து கால் டம்ப்ளர் நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு நன்கு நுரைத்து வரும்போது அதில் தேங்காயைப் போட்டு கிளறவும். தேங்காய் நன்கு பாகில் வதங்கி வரும்போது ஏலப் பொடியும், மசித்து வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு நன்கு கிளறவும். அது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறி அடுப்பை அணைக்கவும். இதை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 

அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் நன்கு சுட்டதும். பூரண உருண்டைகளை, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவில் முக்கி மாவுடன் சேர்த்து உருண்டையாக எடுத்து எண்ணெயில் போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவும். 

105)  நேந்திரன் பழ சுகியன் 

மேற்படி அரைத்த உளுந்து மாவில் நேந்திரம் பழங்களையும் தோல் உரித்து வட்ட வட்டமாக சற்று தடியாக நறுக்கி மாவில் முக்கி உருண்டையாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பழ சுகியனும் தயார். 

106)  நேந்திரம்பழ கொழுக்கட்டை 

தேவையான பொருட்கள் 

கனிந்த நேந்திரம்பழம் – 2

கொழுக்கட்டை மாவு – இரண்டு கோப்பை 

வெல்லம் – ஒன்றரை கோப்பை

உப்பு – ஒரு சிட்டிகை  

ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன் 

துருவிய தேங்காய் – அரை கப்.

செய்முறை:

வெல்லத்தை இரண்டு கோப்பை நீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

நேந்திரம் பழங்களைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி பழத்துண்டுகளை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பழங்களை மசித்துக் கொள்ளவும். பழங்களை இரண்டாக நறுக்கி ஆவியில் வேக வைத்தும் மசித்துக் கொள்ளலாம். 

வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். கரைசல் கொதித்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் பழத்தையும் துருவிய தேங்காயும் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய்த் தூளும் சேர்த்து விடவும். பிறகு அரிசிமாவை மெதுவாக கொதிக்கும் வெல்ல கரைசலில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு அதை கொழுக்கட்டை மாவு கிண்டுவது போல கெட்டியாக நன்கு கிண்டவும். 

மேற்படி கொழுக்கட்டை மாவை பிடி கொழுக்கட்டை போலப் பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். நேந்திரம் பழ வாசனையுடன் இந்த இனிப்பு கொழுக்கட்டை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். சக்கைப்பழம் கொண்டும் இதே போல செய்யலாம். 

107)  சக்கைப்பழ பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 

சக்கைப்பழம் – பத்து (கொட்டை நீக்கிக் கொள்ளவும். 

வறுத்த அரிசி மாவு – ஒன்றரை கோப்பை 

தேங்காய் முதல் பால் – ஒரு கோப்பை 

இரண்டாம் பால் – ஒரு கோப்பை 

மூன்றாம் பால் – ஒரு கோப்பை  

ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் 

வெல்லம் – கால் கப் (சர்க்கரையும் உபயோகிக்கலாம். சர்க்கரை என்றால் இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பலாப்பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கி வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பழங்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பேசினில் வறுத்த அரிசிமாவைப் போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழத்தில் பாதியளவு சேர்த்து, ஏலக்காய் தூளும் போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பழத்தில் இருக்கும் நீரே போதும். தேவை என்றால் ஒரு கை தெளித்து பிசையலாம். அரிசி மாவு கூடுதலாக தேவை என்றாலும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 

அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது வாணலி வைத்து முதல் அல்லது இரண்டாம் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அது நன்கு கொதித்ததும் அதில் மீதமிருக்கும் பலாப்பழ கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும். வெல்லத்தையும் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்கவிடவும். (வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி நன்கு கொதிக்க விட்டும் தேங்காய்ப் பால் கொதிக்கும்போது சேர்க்கலாம்). தேங்காய்ப்பால் வெல்லக் கலவை நன்கு கொதிக்கும்போது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவேண்டும். அந்த சூட்டிலேயே உருண்டைகள் வெந்து மிதந்து வரும். எல்லா உருண்டைகளும் நன்கு வெந்ததும் மூன்றாம் பாலையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். மேலே ஒன்றிரண்டு இழை குங்குமப்பூவும் சேர்த்தால் வாசனை ஆளைத் தூக்கும். 

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com