Enable Javscript for better performance
தி.ஜ.ர.- Dinamani

சுடச்சுட

  

  தி.ஜ.ர.

  By சாரு நிவேதிதா  |   Published on : 05th April 2015 10:50 AM  |   அ+அ அ-   |    |  

  ரு கர்ம யோகி தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வதில்லை.  அதனாலேயே ஒரு சமூகம் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் அந்தச் சமூகம் பற்றி என்ன சொல்வது?  இங்கே நாம் பார்க்கப்போகும் அத்தகைய ஒரு கர்ம யோகி, தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்).

  1901-ல், திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறப்பு. பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரைதான். ஆனாலும், தன் சுய முயற்சியினால் உலக சரித்திரம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். ஒரு சமயம், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கம்கூட எழுதினார். 1974-ல், காலமாகும் வரை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் சுமார் 50 புத்தகங்கள் எழுதினார்.

  1938-ல் சந்தனக் காவடி என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. 1947-க்குள் நான்கு பதிப்புகள் வெளிவந்தது அத்தொகுப்பு.  பிறகு விசை வாத்து, மஞ்சள் துணி, காளி தரிசனம், நொண்டிக் கிளி என்று பல சிறுகதைத் தொகுப்புகள் வந்தன. சுமார் நூறு சிறுகதைகள் எழுதியிருப்பார்.

  thi.ja.ra-1.jpg 

  மொழிபெயர்ப்பில் முக்கியமானவை - லூயி பிஷர் எழுதிய மகாத்மா காந்தி (600 பக்கங்களுக்கு மேற்பட்டது), ஆலிஸின் அற்புத உலகம், Wendell Willkie எழுதிய புகழ் பெற்ற பயண நூலான One World (இதை ஒரே உலகம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்), ராஜாஜி சிறையில் இருக்கும்போது எழுதிய அபேதவாதம் என்ற ஆங்கில நூல், ஜிம் கார்பெட் எழுதிய குமாயுன் புலிகள்.

  தமிழில் கட்டுரை என்ற வடிவத்தின் பிதாமகர்களாக இருந்தவர்கள், இரட்டையர் என்று அழைக்கப்பட்ட வ.ரா.வும் தி.ஜ.ர.வும்தான். அந்த இருவரிலும் தி.ஜ.ர.வின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லலாம். காரணம், கண்ணதாசன் தன்னுடைய உரைநடைக்கு முன்னோடி என்று வனவாசத்தில் தி.ஜ.ர.வின் ஆஹா, ஊஹூ என்ற கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு வாங்கிய முன்னுரை தி.ஜ.ர.விடம் இருந்துதான்.

  இவை தவிர, தமிழ்ப் பத்திரிகைத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கத்தின் ஊழியனில் வ.ரா.வுடன் பணியாற்றினார். Time பத்திரிகையை மாதிரியாகக் கொண்டு, 1939-ல் வைகோ என்று அப்போது அழைக்கப்பட்ட வை.கோவிந்தன் துவக்கிய ‘சக்தி’ இதழின் ஆசிரியராக இருந்தார். திரு.வி.க.வின் நவசக்தி, ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, ஹனுமான், தமிழ்நாடு, சமரச போதினி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கங்கள், புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை. பின்னர் கடைசியாக, தமிழின் ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று கருதப்பட்ட மஞ்சரி பத்திரிகையில், 22 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்த 22 ஆண்டுகளிலும், மஞ்சரியின் ஒவ்வொரு இதழிலும் முக்கியமான புத்தகங்களின் சுருக்கத்தை “புத்தகச் சுருக்கம்” என்ற பகுதியாகக் கொண்டு வந்தார். (அதில் ஒன்று, நீட்ஷேவின் Thus Spake Zarathustra!).

  இது தவிர, பாப்பாவுக்கு காந்தி, பாப்பாவுக்கு பாரதி என்று பல நூல்களை எழுதி, குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். இதற்கிடையில், மகாத்மாவின் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கும் சென்று வந்தார். இப்படி 74 ஆண்டுகள் தன் வாழ்வை தமிழுக்காக அர்ப்பணித்துக்கொண்ட கர்மயோகியான தி.ஜ.ர. என்ற பெயர்கூட இன்று நம்மில் பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தி.ஜ.ர. என்றால் தி.ஜானகிராமனா என்று கேட்கிறார்கள் பலர். இதுபற்றி மிக வருந்தி எழுதியிருக்கிறார், தி.ஜ.ர.வின் நீண்ட நாள் நண்பரான மலர் மன்னன்.

  சுதந்தரப் போராட்ட தியாகிகளுக்குக் கொடுத்த நிலத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட தி.ஜ.ர.வின் கடைசிக் காலம், மிகவும் வறுமையில் கழிந்தது. நம்முடைய வரலாற்று உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், தனது 74 வயது வரை இந்த தேசத்துக்காகவும் மொழிக்காகவும் உழைத்த அந்தச் சாதனையாளரின் புகைப்படம் நம்மிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இன்னொரு புகைப்படம் 1973-ல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

  ஃப்ரான்ஸில் ஒவ்வொரு வீதியிலும் ‘எழுத்தாளர்களை வணங்குகிறோம்’ என்ற வாக்கியத்தை எழுதி வைத்திருப்பார்கள். அதுபோல், தி.ஜ.ர.வின் இலக்கிய சாதனையைக் கருதி அரசு எடுத்த புகைப்படமா அது? அல்ல. ஹிட்லரின் வதைமுகாம்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ அல்லது கைகளில் கைதி எண்ணை தெரிவிக்கும் சிலேட்டை பிடித்தபடி நிற்கும் கைதிகளின் புகைப்படங்களையோ பார்த்திருப்பீர்கள். அதே போன்றதொரு புகைப்படம் அது. வறுமையின் கோரம் தாங்கிய 73 வயது முதியவர் ஒருவர். அவரைச் சுற்றி அதே கோலத்துடன் அவரது உறவினர்கள். முதியவர் ஒரு சிலேட்டை இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்திருக்கிறார். அதில் ஆண்டிமான்ய தோட்டம் 98 என்றும், அடுத்த வரியில் 156698 என்றும் சாக்பீஸால் எழுதியிருக்கிறது. அரசின் அலுவலகக் கோப்புக்காக எடுத்த படம். அந்தப் புகைப்படத்தில் உள்ள முதியவர்தான் தி.ஜ.ர.

  thi-ja-ra_2.jpg 

  அந்தப் புகைப்படம் பற்றி தி.ஜ.ர.வின் பேத்தி கூறுகிறார் – ‘அவரோட கடைசிக் காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப, எங்க எல்லாரையும் நிக்கவெச்சி படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டை கொடுத்து, அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல, அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. எப்ப அந்த ஃபோட்டோவை பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டை தூக்கிப் பிடிச்சுகிட்டு...’

  பல்வேறு துறைகளில் சுமார் 60 ஆண்டுகள் எழுதிய (தி.ஜ.ர.வின் முதல் படைப்பு, அவரது 15-வது வயதிலேயே வந்துவிட்டது) ஒரு ஆளுமை பற்றி ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் எவ்வளவு எழுதிவிட முடியும் என்பதால், தி.ஜ.ர.வின் சிறுகதைகளில் மட்டும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

  தமிழ்ச் சிறுகதை என்றால் அதன் பட்டியல் மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. என்றுதான் போகுமே தவிர, ஒருபோதும் அதில் நான் தி.ஜ.ர.வின் பெயரைக் கண்டதில்லை. ஒரு சாதனையாளர், தன்னடக்கத்தின் காரணமாகத் தன்னை ஒரு சாதாரணன் என்று சொல்லிக்கொண்டால், நாமும் அவரை அப்படியே கருதி அவர் பெயரை அழித்துவிடல் தகுமா? அவர் கதைகளைப் படித்தபோது, அவை நம் சிறுகதைச் சிற்பிகளின் கதைகளுக்குக் கிஞ்சித்தும் குறைவானதாக இல்லை என்பதோடு, மரத்தடிக் கடவுள், பெட்டி வண்டி, பொம்மை யானை போன்ற கதைகள், உலகின் மிகச் சிறந்த கதைகளுக்கு நிகரானவையாகத் தெரிந்தன. மரத்தடிக் கடவுளின் கதாநாயகன் கடவுள்.  கடவுள், வழிப்போக்கன் ஒருவனிடம் ஒரு உதவி கேட்கிறார்.

  ‘’வா மகனே, இப்படி வா! அடடா! இந்த மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம், இதுதான் என்ன உக்கிரமான மழை! நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? மதுவுண்டு வெறிகொண்டு அடியற்று விழப்போகும் வீரர்கள், ரணகளத்திலே ஆடுவதுபோல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது? அல்லது பிரளயம்தானா? – இப்படியெல்லாம் நீ அஞ்சுகிறாய் அல்லவா? அல்ல மகனே, அல்ல; இதுதான் தேவர்கள் உலா வரும் நேரம்; விளையாடும் நேரம்; பேசும் நேரம். அதனால்தான், நான் உன்னோடு பேசுகிறேன். ஆம், நான் ஒரு தெய்வம்தான்.  தெய்வம்தான் உன்னோடு பேசுகிறேன். ஆனால் உலா வந்த தெய்வம் அல்ல; சிறைப்பட்ட தெய்வம்”.

  இப்படியாகத் தன் கதையைச் சொல்லத் துவங்குகிறது தெய்வம்.  இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பக்கத்தில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து அதற்கு வண்ணம் பூசி கடவுளாக்கிவிடுகின்றன. விளையாடி முடித்ததும், அந்தக் ‘கடவுளைத்’ தங்களோடு எடுத்துச் செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை.  சாலையோரத்தில் கிடந்த ‘செங்கல் கடவுளை’ நட்டுவைத்து உண்டியல் குலுக்குகிறான் பூசாரி. நல்ல கூட்டம். திருப்தியான வசூல். அப்போது கதையில் ஒரு திருப்பம்.

  தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் வருகிறார்கள். ரஸ்தாவில் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, கூட்டம் கலைய வேண்டும் என்று கட்டளை போடுகிறார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம். அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். ஜவான்கள் என்னைத் தூக்கி எறிந்தார்கள். அடப்பாவிகளா! அவர்களுக்குத்தான் என்ன துணிச்சல்! ஆனால், அவர்களை நான் என்ன செய்ய முடியும்? ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்தித்துக்கொண்டே ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் பறக்கவில்லை. ஜவான்களின் புஜபலம் எனக்குள் பொழிந்த சக்தியாலே பறந்தேன். மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது.  கணக்காய் அதைக் குறி பார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால், உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேனா! பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே!”

  “நான் பிறந்து ஐந்தாறு மாதகாலம் ஆகிவிட்டது. நான் எப்படிப் பிறந்தேன்? குழந்தைகளின் நிஷ்களங்கத்திலே பிறந்தேன். படைப்பின் ரகசியமே இதுதான். அறிவாராய்ச்சியிலே படைப்பு எதுவும் நிகழ்வதில்லை. அணுவைப் பிளக்கும் ஆயுதம், விஞ்ஞானியின் கற்பனையிலே பிறக்கிறது. கவிஞனின் கனவிலே பிறக்கிறது கவிதை. பிரம்மத்தின் மாயையிலே பிறக்கிறது பிரபஞ்சம். பக்தன் குழந்தையாகும்போது பிறக்கிறது தெய்வம். குழந்தையின் விளையாட்டே உன்னதமான பக்தி”.

  மரத்தடிக் கடவுளுக்குப் பூஜை நடக்கிறது. பூசாரியின் உண்டியலும் நிறைகிறது. சில மாதங்கள் கழித்து ஒருநாள், அந்தக் குழந்தைகள் தன் தகப்பனாரோடு அங்கே வரும்போது குழந்தை என் கல்லு, என் சாமி என்று ஓடி வருகிறது. ‘‘பூசாரி முரட்டுத்தனமாகக் குழந்தையைத் தள்ளிவிட்டான். குழந்தை மூர்ச்சித்துவிட்டாள். அந்த அதிர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை.

  அன்றொரு நாள் எனக்கு உயிர் கொடுத்து என்னை விளையாடிக் கொஞ்சிய என் தாய் அவள். அவளுக்கு இப்போது காலை மாலை இருவேளையும் உடுக்கடித்துத் ‘துண்ணூறு’ போட ஆரம்பித்துவிட்டான் பூசாரி. அவனிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும்? நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. இப்படியே என்னைப் பெயர்த்தெடு. நேரே கிழக்கே போ. அதோ பார், அங்கே ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து அலைவீசிக் கொண்டிருக்கிறதே ஆழங்காணாத கருங்கடல். அதன் நடுவே என்னை வீசியெறிந்து விடு. இதுதான் மகனே, நான் உன்னைக் கேட்கும் வரம்”.

  அடுத்து, பெட்டி வண்டி என்ற சிறுகதை. இதை முப்பதுகளில் எழுதியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். ஒரு மிராசுதார். படித்தவர். வேதாந்தி. அவருக்கு ரத்தினம் என்று ஒரு நண்பன். வாலிபன். டில்பஹார் தைலம் பூசி வருவான். முடி அதிகம் இல்லாவிட்டாலும், தளுக்காக முடிந்து கொண்டை ஊசி செருகிக்கொள்வான். சில சமயம், பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படியவைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும்.

  ஒருநாள், தான் செய்த புதிய பெட்டி வண்டியில் தன் மனைவியோடு ஒரு கல்யாணத்துக்குச் செல்கிறார் மிராசுதார். அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான். ஒரு குழந்தை என்றால் அந்தக் காலத்தில் மலடி என்றே சொல்வார்கள். மிராசுதாரின் மனைவி அழகி. பெண்களைப் பெட்டி வண்டியில் அனுப்பிவிட்டு தான் மட்டும் பின்னால் ஒரு வண்டியில் செல்கிறார் மிராசுதார். பெட்டி வண்டியை ஓட்டுவது ரத்தினம். திடீரென்று அவன் மீது ஒரு பெண்ணின் புஜம் இடிக்கிறது.  வண்டி ஓட்டத்தில் தொடர்ந்து இடிக்கிறது.

  அடுத்து, தி.ஜ.ர. எழுதியதைப்போல் உலக இலக்கியத்திலேயே யாரும் எழுதியதில்லை என்று எனக்குத் தோன்றியது. நான்கே வார்த்தைகள். “கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது”.

  கதையில் அடுத்து வருவது, கிரேக்கத் துன்பியல் நாடகங்களிலே நடப்பது. படித்துப் பாருங்கள். இப்பேர்ப்பட்ட எழுத்தை படைத்தவரின் பெயர்கூடத் தெரியாமல் இருப்பது நியாயமா? இதை வாசிக்கும் அன்பர்கள், தி.ஜ.ர.வின் நூல்களை வாங்கிப் படியுங்கள்; அன்பளிப்பாகக் கொடுங்கள்; கதை தவிர, நம் அறிவை வளர்த்துக்கொள்ளவும் எத்தனையோ எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். முக்கியமாக பதிப்பாளர்கள், தி.ஜ.ர.வின் அத்தனை எழுத்தையும் ஒன்று திரட்டிப் பிரசுரியுங்கள். நம் சமூகம் மேன்மையுறும்!  

  தி.ஜ.ர.வின் புகைப்படம் பற்றிய கட்டுரை:
  http://www.kalachuvadu.com/issue-88/katturai01.asp

  நன்றி: காலச்சுவடு, ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, திலகவதி.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp