எம்.வி. வெங்கட்ராம் (1920 – 2000)

என் கர்வம் அழிந்து விட்டது. ஆம், உலகிலேயே transgressive fiction எழுதிய இரண்டு மூன்று ஆட்களில் நானும்...

ன் கர்வம் அழிந்து விட்டது. ஆம், உலகிலேயே transgressive fiction எழுதிய இரண்டு மூன்று ஆட்களில் நானும் ஒருவன் என்ற என் கர்வம் என்னை விட்டு அகன்று விட்டது. இந்தப் பாணி (genre) எழுத்தின் விசேஷம் என்னவென்றால், இது மற்ற வகை எழுத்தைப் போல் ஒரு இலக்கியப் பாணி அல்ல என்பதுதான். எப்படி ஒரு ஆன்மீகவாதி காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை மட்டும் ஆன்மீகவாதியாக வாழ முடியாதோ அதேபோன்றதுதான் இதுவும்.  எழுத்தில் ரியலிஸம், நேச்சுரலிஸம், ரொமாண்டிசிஸம், மேஜிகல் ரியலிஸம், சர்ரியலிஸம் என்று பலவகை பாணிகள் உள்ளன. ஆனால், ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தை இலக்கியத்தின் ஒரு பாணியாக மட்டுமே கருதி ஒருவர் எழுதி விட முடியாது. ஏனென்றால், அது அவரது புகழையும் அந்தஸ்தையும் நற்பெயரையும் – ஏன், சொல்லப்போனால் மொத்த வாழ்க்கையையுமே பலியாகக் கேட்கும் தன்மை கொண்டது. உலக அளவிலேயே இவ்வகை எழுத்தில் ஈடுபட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்கி தெ சாத் (Marquis de Sade), அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), கேத்தி ஆக்கர் (Kathy Acker), சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, ஃப்ரான்ஸின் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) போன்ற ஒருசிலர் மட்டுமே இந்தப் பாணியில் எழுதியிருக்கின்றனர். என்னுடைய புனைவு எழுத்துக்களும் இவ்வகையிலேயே அடங்கும்.

எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் என்ற சிறிய நாவலை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்று நிச்சயமாகச் சொல்லலாம். ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்றால் என்ன என்று வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கியிருக்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால், சமூகம் எதையெல்லாம் பாவம் என்றும் குற்றம் என்றும் ஒதுக்கி வைக்கிறதோ, விவாதிப்பதற்குக் கூட அஞ்சுகிறதோ அதை எழுதுவதே ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து. காதுகள் அப்படிப்பட்ட நாவல்தான். இதில் வரும் கதை அவருடைய சுய சரித்திரத்தில் ஒரு பகுதி என்கிறார் எம்.வி.வி.

மகாலிங்கம் ஒரு எழுத்தாளன். கும்பகோணத்தில் செல்வச் செழிப்பான சௌராஷ்ட்ரா குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பெற்றோர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்கள்.  மின்சாரம் வந்திராத காலம். வீட்டில் எப்போதும் பூஜையும் பஜனையும் உபந்யாசமுமாகவே இருக்கும். பொய் பித்தலாட்டம் எதுவும் இல்லாமல் நேர்மையாக வியாபாரம் செய்ததால் நொடித்துப் போன மகாலிங்கத்தின் தந்தை அந்தக் கவலையிலேயே இறந்து போகிறார். இந்தப் பின்னணியில் வந்த மகாலிங்கமும் தந்தை வழியிலேயே நேர்மையாக வியாபாரத்தைத் தொடங்குகிறான். கத்திப் பேசினால் மற்றவர் செவிகள் துன்புறும் என்பதால் மெல்லப் பேசும் அளவுக்கு மென்மையான உள்ளம் படைத்தவன். எம்.வி. வெங்கட்ராமும் இப்படித்தான் இருந்திருக்கிறார் என்பதை கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையிலிருந்து அறிகிறோம்.

எண்பதுகளில் வத்ராயிருப்பிலிருந்து யாத்ரா என்ற சிறுபத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதன் தி.ஜானகிராமன் நினைவு மலரில் (1983) எம்.வி.வி. பற்றி கரிச்சான் குஞ்சு இவ்வாறு எழுதுகிறார்:

‘மணிக்கொடியின் கடைசி வாரிஸான ஸ்ரீ எம்.வி.வி. கும்பகோணம் காலேஜில் இறுதியாண்டு படித்தார். அப்போது ஓரிரு தடவை நானும் அவனும் (தி. ஜானகிராமன்) எம்.வி.வி.யைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததுண்டு. அவரை அப்போது பார்த்ததை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் இன்பமாய் இருக்கிறது. தூய வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை, முகத்தில் அமைதி நிறைந்த, அறிவும் சிந்தனையாழமும் சேர்ந்த கம்பீரமான இளைஞன் – நல்ல சிவப்பு நிறம். சௌராஷ்டிரர்கள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்களில் – மிகப் பெரிய பணக்காரர்களான புடவை உற்பத்தியாளர் – கோரா பட்டு வியாபாரிகள் ஒரு புறம் – நெசவு நெய்யும் தொழிலாளிகளான ஏழைகள் ஒரு புறம். எம்.வி.வி. அந்த நாளில் அந்த வகையிலும் அபூர்வமானவர். பிரக்ஞைமயமான வாழ்வில் இருந்தார்.’

மணிக்கொடி பத்திரிகையில் 1936-ம் ஆண்டு எம்.வி. வெங்கட்ராமின் முதல் சிறுகதை வெளிவந்தது. அப்போது அவர் வயது 16. அந்தக் காலத்தில் - அதாவது 1930-40களில் - எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளே தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். மட்டுமல்லாமல் அவரது மோகமுள் நாவலில் பாபுவின் கல்லூரித் தோழனாக வருவது எம்.வி. வெங்கட்ராம் தான். தி.ஜா. மோகமுள்ளில்:

‘பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ? யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை.’

(எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் ஆகிய மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றி காதுகள் முன்னுரையில் பிரபஞ்சன் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி. மூன்று பேரும் பல ஒற்றுமைகளை உடைய, ஒரு மையத்திலிருந்து உருவாகிப் பரந்த வெளிக்கு வந்து, மேகமாகவே பரந்த படைப்பாளிகள். இளமைக்கால நண்பர்கள். காவிரியின் மைந்தர்கள் என்றாலும் பொருந்தும். ஆற்றங்கரைக்காரர்களாகிய இவர்கள் மூவருமே ஒரு திக்காளர்கள்.’)

இப்போது காதுகளுக்கு வருவோம். தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் தொழிலை தந்தையின் பாணியிலேயே தொடர்கிறான் மகாலிங்கம். ஆரம்பத்தில் வியாபாரம் செழிக்கிறது. ஆனால் மத்திம வயதில் (36 அல்லது 37) அவன் காதுகளில் ஏதேதோ துர்சப்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன.  உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் குரல்கள். பின்னர் காட்சிகள். ஆனால் புத்தி பிசகவில்லை. அருவருப்பான உருவங்கள் – கபந்தங்களும் அடக்கம் – ஆபாசச் சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் தன் இஷ்ட தெய்வமான முருகனின் உருவப்படத்தின் முன் நின்று முறையிடுவதைத் தவிர வேறு எதுவும் அவனால் செய்ய முடியவில்லை. இது பற்றி எம்.வி.வி.யே சுருக்கமாகக் கூறுகிறார்:

‘தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக் கொண்டது. மகாலிங்கம் முருகனை வழிபடக் கூடாது; தன்னைத் தான் வழிபட வேண்டும் என்பது தாமசத்தின் கருத்து. இதை மகாலிங்கம் ஏற்க வேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பான பிரமைக் காட்சிகளை அலையலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

அதிசுந்தரமான, அதிபயங்கரமான இந்த அனுபவம் 20 ஆண்டுகள் நீடித்ததால் அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்து ஏழ்மையும் வறுமையும் அவன் குடும்பத்தைப் பீடித்தது. அமானுஷ்யமான தமஸ்ஸும், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்திய போராட்டத்தை உதாசீனம் செய்து கொண்டே அவன் சில நாவல்களும் குறுநாவல்களும் பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொது அறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த காதுகள் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடர்கிறது.

ஆம். தேடல் தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன? இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.’

மீண்டும் காதுகளுக்கு வருவோம். மகாலிங்கம் தன் காதுகளில் கேட்கும் துர்சப்தங்களுக்காக மனோதத்துவ நிபுணரையோ மந்திரவாதியையோ பார்ப்பதில் விருப்பம் இல்லாதிருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஒரே உபாயம், தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் முறையிடுவது. ஆனால் முருகனும் அவனுக்கு உதவி செய்வதாகத் தெரியவில்லை.  முழுசாகப் பைத்தியம் பிடிக்காமல் புத்தி மட்டும் சரியாக வேலை செய்து கொண்டிருந்தது. ஒரு துறவி ‘அது மட்டும்தான் முருகன் உனக்குச் செய்து கொண்டிருக்கும் உதவி’ என்று கூறுகிறார்.

கொஞ்ச நாளில் பல பூத கணங்கள் காதுகளில் பேச ஆரம்பிக்கின்றன. அவைகளின் பேச்சு வானொலி ஒலிச் சித்திரம் போல் அவனுக்குக் கேட்கின்றன. நாளடைவில் கேட்பது மட்டும் இல்லாமல் கண்களும் அந்தக் காட்சிகளைக் காண ஆரம்பிக்கின்றன.  புத்தியைத் தவிர மற்ற ஐந்து புலன்களும் அவனுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. அச்சிலேயே ஏற்ற முடியாத அளவுக்கு அசிங்கமாகப் பேசிக் கொள்கின்றன அந்த உருவங்கள். அதையே காட்சிகளாகவும் காணுகின்றான் மகாலிங்கம். ஒரு குரல் தன்னை யார் என்று இன்னொரு குரலிடம் கேட்கிறது. அதற்கு அந்தக் குரல், ‘நீ ஒரு காட்டுமிராண்டித்தனமான, புத்திவாடையே தெரியாத, கோரமான, குரூபியான பேய்ப்பிறவி’ என்கிறது. தொடர்ந்து ஒரு நாடகத்தைப் போல் அந்த இருவரின் உரையாடல்கள் அவனுக்குக் கேட்ட வண்ணம் இருக்கின்றன.

‘அளகா வருணிக்கிறியே, என்னை வருணிக்க எத்தனை வார்த்தை வேண்டியிருக்கு பாரு! நீ மாலியோட (மகாலிங்கத்தின்) ரசிகை. வார்த்தைகளெ அள்ளி எறிவே. நான் கு.ப.ரா.வோட ரசிகன். நாலே நாலு வார்த்தியிலே ஒன்னெ சுருக்கமா வருணிக்கிறேன், கேட்கறியா?’

‘நீ வருணிக்க வேண்டாம். நான் ஞானத்தின் மொத்த உருவம்.’

‘அதான் ஒங்கிட்டே வந்தாலே இப்பிடி நாத்தமா நாறுது! ஞானம் வந்துட்டா தூரமானாக் கூட குளிக்க வேணாம், இல்லே?’

பெண் குரல்: ‘வடிகட்டின முட்டாள்டா நீ. மாலி ரொம்ப sophisticated…  இல்லே, ரொம்ப cultured. அசிங்கமாப் பேசினா இவனுக்குப் பிடிக்காதுன்னு சொன்னேனே, மறந்துட்டியா?... சரி. நீ யாருன்னு மாலிக்குத் தெரிஞ்சுட்டுது. நான் யாருன்னு இவனுக்குத் தெரிய வேணாமா?’

ஆண் குரல்: ‘கட்டாயம் தெரியணும். அதுக்காகவே இவனோட படுக்கப் போறியா?’

‘மறுபடி அசிங்கமா…’

‘Sorry… யாரும் யாரோடவும் படுக்க வேணாம். ஆனா காரியம் நடந்துடும், ஞானம் பொறந்துடும்… டும்… டும்… திரை மேலே போகுது, நாடகம் ஆரம்பம் ஆகுது, ஆகுது! ஆத்தா நீ யாரு?’

‘நான் அகிலாண்ட கோடிக்கும் சக்கரவர்த்தினிகள். பேய், பூதம், பிசாசு, தேவதை, பிர்மா, விஷ்ணு, ருத்திரன் எல்லாம் நானே. நான் நாதம். நான் விந்து. நான் கலை. நான் அபரப்பிரும்மம். நான் சப்தப்பிரும்மம். நானே பரப்பிரும்மம். எல்லாம் நானே. அஹம் ப்ரஹ்மாஸ்மி.’

‘நீ நாதம் என்கிறே. ரொம்ப ரைட். நானும் நாதம்தானேடி? நீயும் நானும் சத்தத்திலே பொறந்து சத்தத்திலே வளர்ரவங்க. விந்து எங்கேடீ? மாலி கிட்டே நிறைய கிடைக்கும்னு ஆசை காட்டி, என்னெ இளுத்துக்கிட்டு வந்தே. சொட்டு சொட்டாக்கூட கிடைக்கல்லியே, எல்லாத்தியும் நீயே…’

‘இப்படி அநாகரிகமா பேசாதேன்னு…’

‘ஒனக்கென்ன பேசுவே, ஒன் காரியம் நடந்துடுதில்லே. எம்பசியும் தாகமும் எனக்கில்லே தெரியும்?’

‘வாயை மூடுடா கம்மனாட்டி. மாலி என்னெப் பத்தி தப்பா நினைச்சிடப் போறான்.’

‘கிரீன் ரூமிலே வந்து பேசறோம். அந்த செவிட்டுப் பொணத்தோட காதிலே ஒண்ணும் விளுகாது.’

‘மாலி என் லவ்வர். அவனை செவிட்டுப் பொணம்னா எனக்குக் கெட்ட கோபம் வந்துடும்.’

‘செவிடனை செவிடன்னு சொல்லாமே, குருடன்னா சொல்வாங்க? பொட்டைச்சி, பேச்சை மாத்தி என்னெ ஏமாத்தப் பார்க்கிறியா? எங்கேடி விந்து?’

‘ஐயோ, ஐயோ, விந்து விந்துன்னு சொன்னா மாலி அசிங்கப்படுவான்னு எத்தனெ தடவை சொல்றது? பாரு, அவன் முகத்தைப் பாரு, உமட்டுது…’

‘நாத விந்து கலாதீன்னு பாட்றானே, அசிங்கப்பட்டா பாட்றான்? அவனுக்கு விந்து பிடிக்காதுன்னா எங்கிட்டே குடுத்துட்டு போவட்டுமே. நான் தான் எப்போ, எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேனே… அடடே, நீ யாரு? கிரீன்ரூமிலே யாரைக் கேட்டுக் கிட்டு உள்ளே வந்தே?’

‘நான் ஒரு விமர்சகன்.’

அடுத்து விமர்சகனின் பேச்சும் கலந்து கொள்கிறது. இது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் மகாலிங்கம்.  இந்த சப்தப் பிரளயத்தில் உறக்கம் கூட வருவதில்லை. காளியின் உரையாடலில் குறுக்கே புகுந்த விமர்சகன் ‘இது ஒரு ஆபாச நாடகம்’ என்று கத்த ஆடவனும் காளியும் அவனோடு மல்லுக்கு நிற்க, ரசிகர் கூட்டமும் ரகளையில் சேர்கிறது. ஒரு ரசிகர் ‘ப்ளூ ஃபிலிம் கணக்கா நாடகம் எவ்வளவு ஜோரா இருக்கு… ஆபாசமாம் ஆபாசம்’ என்று விமர்சகரைத் தாக்குகிறார். பிறகு விமர்சகனுக்கு லஞ்சம் கொடுத்து அனுப்பி வைக்கிறான் காளியோடு வந்தவன். 

இந்த சப்த நரகம் தாங்காமல் முருகா முருகா என்று கதறுகிறான் மாலி.

‘ஐயோ அவன் முருகனை அழைக்கிறான்.’

‘எந்த முருகனெப் பத்திச் சொல்றே? தூக்கு மாட்டிக் கிட்ட முருகனா? ஆத்திலே விளுந்து உசிர விட்ட முருகனா? ரயில் ஆக்சிடெண்டிலே போனானே…’

‘நீ ரொம்ப thick-headed… என் பிள்ளை முருகனைப் பற்றிச் சொல்கிறேன்.’

‘புரிஞ்சிட்டுது, புரிஞ்சிட்டுது. சிவன் பயலோட கொஞ்சக் காலம் சுத்தினியே, அப்போ பொறந்த கொளந்தைதானே? எஸ். முருகன்னு நீ தெளிவா சொல்லியிருந்தா…’

இப்படியே 140 பக்கங்கள். ஒரு கட்டத்தில் காளி தன் புடவை, பாவாடை, பிரா, ஜட்டி எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு ‘I want to make love with you Maali’ என்கிறாள். 

ஐயோ முருகா என்று மகாலிங்கம் கதற, ‘டேய் லூசு, முருகனின் தந்தையான பரமசிவனையே அழித்து மண்டை ஓடாக அணிந்திருக்கிறேன் பார்… இப்படி ஓராயிரம் பரமசிவன்களை அழித்திருக்கிறேன். உனக்கு ஒரு பயலும் உதவ மாட்டான். என்னிடம் வா’ என்கிறாள் காளி.

உலக அளவில் Transgressive fiction இத்தனை உக்கிரமாக எங்கேயும் எந்த தேசத்திலும் வெளிப்பட்டதில்லை. அடுத்த வாரமும் காதுகள் பற்றிச் சிறிது பேசுவோம்.

***  

எம்.வி.வி. நூற்றுக் கணக்கான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் மூன்று சிறுகதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. வாஸந்தி இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அதில் தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகள் வாரம் தோறும் வந்து கொண்டிருந்தன. அப்போது வெளிவந்த எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை பைத்தியக்காரப் பிள்ளை. தாய்மை, அன்பு, பாசம், குடும்பம் என்றெல்லாம் வாழ்வில் எத்தனையோ உன்னதங்கள் உள்ளன. அதையெல்லாம் சின்னாபின்னமாக சிதைத்துச் செல்லும் சிறுகதை அது. எம்.வி. வெங்கட்ராமின் எழுத்துலகையே குரூரத்தின் அழகியல் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் கு. அழகிரிசாமி, ந. பிச்சமூர்த்தி ஆகியோரின் படைப்புலகுக்கு நேர் எதிரானது எம்.வி. வெங்கட்ராமின் எழுத்து.

பைத்தியக்காரப் பிள்ளை - http://bit.ly/1I7AzU3

அடுத்த வீடு - http://bit.ly/1TGm1yT

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை -  http://bit.ly/1J3SYlB

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com