Enable Javscript for better performance
அரு. ராமநாதன் (1924 – 1974)- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  அரு. ராமநாதன் (1924 – 1974)

  By சாரு நிவேதிதா  |   Published On : 07th June 2015 10:00 AM  |   Last Updated : 07th June 2015 10:15 AM  |  அ+அ அ-  |  


  னக்காக என் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் கொடுப்பேன் என்று காதலர்கள் சல்லாபித்துக் கொள்வதை நாம் அறிந்திருக்கிறோம்.  வெறும் பேச்சாக இல்லாமல் அவர்கள் அதை நடைமுறையிலும் செய்து விடுவது உண்டு.  அதேபோல் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக என் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்.  இதைக் கற்றுக் கொண்டதே நம் முன்னோடிகளிடமிருந்துதான்.  அவர்கள் இந்தச் சமூகத்துக்காகவும், மொழிக்காகவும் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தம் உடல், பொருள், ஆவியை தானம் செய்திருக்கிறார்கள்.  அவர்களுக்கான ஒரு சிறிய மரியாதையும் நன்றி கூறலும்தான் இந்தத் தொடர்.  ஐம்பது சதவிகிதம் மட்டுமே இயங்கக் கூடிய பழுது பட்ட இதயத்தோடு வாழும் எனக்கு தியானம், நடைப் பயிற்சி என ஒழுங்குபடுத்தியிருக்கிறார் மருத்துவர்.  ஆனாலும் கடந்த பத்து தினங்களாக அது எதையும் செய்யவில்லை.  காரணம், நமது எல்லா முன்னோடிகளையும் போலவே அரு. ராமநாதனும் 17 வயதிலிருந்து 50 வயது வரை எழுதிக் குவித்திருக்கிறார்.  அதில் பெரும்பாலானவை ஜனரஞ்சக எழுத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவரது முக்கியமான படைப்புகளில் மாதிரிக்கு ஒன்றை எடுத்துக் கொண்டாலும் 4000 பக்கங்கள் வந்தன.  அவரது மிக முக்கியமான வரலாற்று நாவல் வீரபாண்டியன் மனைவி, குண்டு மல்லிகை,  ராஜராஜ சோழன், நாயனம் சௌந்தரவடிவு, சில சிறுகதைத் தொகுப்புகள், வெற்றிவேல் வீரத்தேவன், மற்றும் ‘காதல்’ பத்திரிகையின் சில இதழ்கள் – இவை எல்லாம்தான் அந்த 4000 பக்கங்கள்.  (ஆனால் அவர் எழுதி இன்னும் தொகுக்கப்படாத நூல்களும் கட்டுரைகளும் ஏராளமாக இருக்கின்றன.) இவ்வளவு பக்கங்களையும் வாசித்து முடிக்க எனக்கு உரிய காலம் ஒரு வாரம் மட்டுமே.  ஏற்கெனவே படித்ததை வைத்து இந்தப் பக்கங்களை நான் எழுத முடியாது.  வீரபாண்டியன் மனைவியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்து தமிழின் முதல் Palimpsest நாவல் என்று ஒரு கட்டுரை எழுதினேன்.  இப்போது அந்தக் கட்டுரை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது என்று கூடத் தெரியாது.  எனவே மூலநூல்களில் சிலவற்றையாவது மீண்டும்தான் வாசிக்க வேண்டும்.  எனவே ஒரு வாரம் என்ற குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பக்கங்களையும் முடிப்பதற்காகத்தான் எனது அன்றாட வாழ்க்கைக் கடமைகளை உதறி எறிந்தேன். உயிரை உருக்கி நம் முன்னோடிகளுக்கு நிவேதனம் செய்யும் இந்த அற்புதமான பணியில் உங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.  சுமார் 40 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு பரவச உணர்வைத் தருகிறது.  இறை சக்தியின் முன்னே நின்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.  நிற்க.  இந்தத் தொடர், வாசகர்களுக்கு ஒரு திசைகாட்டி மட்டுமே.  இந்தத் திசையில் சென்றால் மாபெரும் தங்கச் சுரங்கத்தைக் காணலாம்.  தங்கச் சுரங்கம்தான் இலக்கே தவிர திசைகாட்டி அல்ல.  இந்தத் தொடரில் நான் சுட்டிக் காட்டும் நமது முன்னோடிகளின் நூல்களைப் பிடித்துக் கொள்ளுங்கள்;  பெரும்பாலானவர்களின் நூல்கள் இன்னும் தொகுக்கப்படவே இல்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொண்டு. போதும் இந்த இடைச் செருகல்.

   

  aru_ramanathan.jpeg

  இனி கட்டுரை.       

  நம்மைப் பற்றி நாமே உயர்வாகப் பேசிக் கொள்வது மரணத்துக்கு ஒப்பானது என்று மகாபாரதத்தில் ஒரு இடம் வரும்.  கர்ண பர்வம்.  ‘பேசாமல் உன் காண்டீபத்தை கேசவனிடம் கொடுத்து விட்டு அவனுக்குப் பதிலாக நீ தேரோட்டியாக இருந்திருந்தால் கேசவன் இந்நேரம் கர்ணனைக் கொன்றிருப்பான். ’  அர்ஜுனனை நோக்கிச் சொல்கிறான் யுதிஷ்டிரன்.  அர்ஜுனன் உடனே வாளை எடுத்து விட்டான்.  ஏனென்றால், ‘காண்டீபத்தை இன்னொருவரிடம் கொடு’ என்று யார் சொன்னாலும் அவர் தலையைக் கொய்து விடுவதாக அர்ஜுனன் ஒரு சபதம் போட்டிருக்கிறான்.  இப்போது என்ன செய்வது?  சபதம் நிறைவேறியாக வேண்டும்.  ஆனால் சகோதரர்களில் யாரும் சாகவும் கூடாது.  கேசவன் ஒரு உபாயம் சொல்கிறான்.  ‘அர்ஜுனா, யுதிர்ஷ்டிரனை இகழ்ந்து பேசு.  மூத்தோரை இகழ்தல் கொலைக்குச் சமம்.’  ‘சரி.  நான் இகழ்ந்ததற்கான தண்டனை?’  ‘உன்னையே நீ புகழ்ந்து கொள்.  தற்புகழ்ச்சி மரணத்துக்குச் சமானம்.’  இவ்வாறாக அர்ஜுனன் யுதிர்ஷ்டிரனை இகழ்ந்தும் தன்னைப் புகழ்ந்தும் பேசினான்.  ஒன்று கொலை; இன்னொன்று தற்கொலை.  தற்புகழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இந்தக் கதையிலிருந்து அறிகிறோம்.  ஆனால் நான் அறிந்தவரை இலக்கிய உலகில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத மேதைகள் யாவருமே விலாசம் இல்லாமல் காணாமல் போய் விடுகின்றனர்.  தி.ஜ.ர. ஒரு உதாரணம்.  இன்னொரு உதாரணம், அரு. ராமநாதன்.  27 ஆண்டுகள் ஒரு பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்தியுள்ள அவர் தன்னைப் பற்றி எங்குமே பேசவில்லை.  மற்றவர்களும் பேசவில்லை.  இலக்கியவாதிகளோ அவர் பெயரை உச்சரித்தது கூட இல்லை.  தமிழவன், சி. மோகன் ஆகிய இருவர் மட்டுமே அரு. ராமநாதன் பற்றிப் பேசியிருக்கின்றனர்.  ராமநாதனின் நூல்களிலும் அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.  இதுவரை நான் படித்த 4000 பக்கங்களிலும் அந்த விபரங்கள் இல்லை.  அவர் எங்கே பிறந்தார், என்ன படித்தார், அவரது பின்னணி என்ன?  இந்த வாக்கியத்தைத் தட்டச்சு செய்யும் வரை அவரது பிறந்த ஆண்டு கூடத் தெரியவில்லை.  (பின்னர் இணையதளத்தில்தான் ஒரு கட்டுரையில் அதையெல்லாம் கண்டு பிடித்தேன்.) ராமநாதன் எழுதிய எல்லா நாவல்களும் அவர் நடத்திய காதல் பத்திரிகையில் வெளிவந்தது போலவே குண்டு மல்லிகை என்ற அவருடைய நீண்ட நாவலும் அதில் தான் வெளிவந்தது என்று எண்ணினேன்.  ஆனால் அது கல்கியில் தொடராக வெளிவந்திருக்கிறது.  அந்த விபரம் கூட அந்த நாவலில் இல்லை.    

  அரு. ராமநாதன் எழுதிய முதல் புத்தகம் சம்சார சாகரம். பதினேழு வயதில் எழுதியிருக்கிறார்.  அதே வயதில்  பதிப்பகமும் துவங்கி (பிரேமா பிரசுரம்) அதைத் தன் மரணம் வரை நடத்தி வந்திருக்கிறார்.  அவருக்குப் பிறகு அவரது புதல்வர் ரவி ராமநாதன் அதன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.  1947-லிருந்து 1974 வரை – அதாவது அவரது மரணம் வரை 27 ஆண்டுகள் காதல் என்ற மாதப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.   படிக்கும் பழக்கமே இல்லாத என் குடும்பத்தில் அறுபதுகளின் இறுதியில் என் தாய் மாமா ஒருவரின் கையில்தான் காதல் பத்திரிகையை நான் பார்த்திருக்கிறேன்.  அதைக் கூட அவர் ஒளித்து வைத்துத்தான் படித்துக் கொண்டிருப்பார்.  அதன் காரணமாக ஏற்பட்ட ஆர்வத்தில் அவர் இல்லாத சமயத்தில் ஒருநாள் அதைத் திருடிப் படித்த போது நான் எதிர்பார்த்த எதுவுமே இல்லாமல் வழக்கமான ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக இருப்பதைக் கண்டு ஏமாந்து போனேன்.  வயது வந்தவர்களுக்கான பத்திரிகை என்று சொல்வதற்கென அதில் ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது.  தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை வராமல் நடந்து கொள்வது எப்படி, பெண்களுக்கான ஆலோசனைகள், மனைவிகளுக்கான ரகசியங்கள், மணமக்களுக்கு மருத்துவரின் ஆலோசனைகள் என்பது போன்ற விஷயங்கள். அதுவும் மூன்று பக்கங்கள் மட்டுமே.      

  1945-ம் ஆண்டு டி.கே. சண்முகம் சகோதரர்களின் நாடகக் குழு வைத்த நாடகப் போட்டியில் அரு. ராமநாதன் எழுதி அனுப்பிய ராஜராஜ சோழன் என்ற நாடகம் பரிசு பெற்று அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.  அப்போது ராமநாதன் கல்லூரி மாணவனாக இருந்தார்.  தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், வரலாறு, தத்துவம், உளவியல் போன்ற துறைகளை அவர் முறையாகக் கல்லூரியில் படித்ததில்லை என்றாலும் சுயவாசிப்பின் மூலம் அவற்றில் வியக்கத்தக்க ஞானத்தைப் பெற்றிருந்தார்.  கல்லூரியில் படிக்கும் போது அவர் வரலாற்றுப் பாடத்தில் தோல்வி அடைந்து மறு தேர்விலேயே தேற முடிந்தது பற்றி ராஜராஜ சோழன் நாடக முன்னுரையில் கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.

  மேலும், தமிழ் இலக்கியம் அவரது நாவல்களில் வரிக்கு வரி உபபிரதியாக ஊடாடியிருக்கிறது.  உதாரணமாக, வீரபாண்டியன் மனைவி கிட்டத்தட்ட கம்பராமாயணத்தின் மறு உருவாக்கம் போலவே அமைந்துள்ளது.  அந்த நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் கம்ப ராமாயணத்தை வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.  

  அரு. ராமநாதன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் என்ற ஊரில் 1924-ல் பிறந்தார்.  உயர்நிலைப்பள்ளிப் படிப்பை திருச்சியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தார்.  முழுதாக பட்டப் படிப்பை முடிக்கவில்லை.  இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய இண்டர்மீடியட் படிப்பின் முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்திக் கொண்டார்.   திருச்சியில் 1947-ல் காதல் பத்திரிகையைத் தொடங்கினார்.  பின்னர் 1949-ல் பதிப்பகத்தைச் சென்னைக்கு மாற்றிக் கொண்ட இவர் கலைமணி என்ற சினிமாப் பத்திரிகையும் தொடங்கினார்.  ஆனால் அது நீண்ட காலம் வெளிவரவில்லை.  1952-ல் பிரேமா பிரசுரத்தைத் தொடங்கினார்.  அது இன்றளவும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது.  பூலோக ரம்பை (1958), அமுதவல்லி (1959), தங்கப் பதுமை (1959) போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு ராமநாதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். 

  veerapandiyan manaivi.jpg 

   

  எழுதிய காலத்தில் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளராகவே அறியப்பட்ட அரு. ராமநாதன் ஏன் கல்கி அளவுக்குப் புகழ் பெறவில்லை என்பது இன்னமும் எனக்குப் புதிராகவே இருக்கிறது.  ஏனென்றால், ராமநாதனின் நாவல்களும் சிறுகதைகளும் கல்கி அளவுக்கு ஜனரஞ்சகத்தன்மையும், சுவாரசியமும் கொண்டதாக இருக்கின்றன.  மனோரஞ்சிதம் என்ற குறுநாவல் இரவில் படிக்க முடியாத அளவுக்குப் பீதியைத் தந்த ஒரு பேய்க்கதை.  இது பற்றிப் பலவாறாக யோசித்த போது ஒரு காரணம் தோன்றியது.  கல்கியிடம் இல்லாத ஒன்று அரு. ராமநாதனிடம் இருக்கிறது.  அது அவரது எழுத்தில் தெரியும் மெல்லிய transgressive தன்மை.  உதாரணமாக, ஐம்பதுகளில் காதல் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்?  இது தவிர, காதல் பத்திரிகையில் 1953-லிருந்து ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த வீரபாண்டியன் மனைவி (1700 பக்கங்கள்) எந்த வகையில் பார்த்தாலும் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு சரித்திர நாவல் என்பதில் சந்தேகம் இல்லை. வீரபாண்டியன் மனைவியை Palimpsest நாவல் என்று குறிப்பிட்டேன்.  Palimpsest என்றால் என்ன?  Something reused or altered but still bearing visible traces of its earlier form.  ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றின் மீது ஏற்கனவே எழுதப்பட்டது முற்றிலுமாக அழியாமல் இன்னொன்றை எழுதுவது.  அதாவது, தமிழக சரித்திரம் என்று நமக்குக் கல்விக்கூடங்களிலும் சரித்திரக் கதைகளிலும் என்னென்னவெல்லாம் கற்பிக்கப்பட்டதோ அதற்கு மேல் இன்னொரு கதையை superimpose செய்கிறார் ராமநாதன்.  பொன்னியின் செல்வனிலும் மற்ற எல்லா சரித்திர நாவல்களிலும் சொல்லப்படும் வரலாறு நம் மனதுக்கு இதமூட்டுவதாகவும், நமது ரொமாண்டிஸிஸக் கற்பனைகள் சிறகடித்துப் பறப்பதற்கு ஏதுவாகவும், கிளுகிளுப்பாகவும் இருப்பதையே கண்டு வந்திருக்கிறோம்.  ஆனால் வீரபாண்டியன் மனைவியில்தான் முதல் முதலாக ராமநாதன் ஒரு தேசத்தின் உண்மையான வரலாற்றை எழுதுகிறார்.  அநேகமாக உலகின் முதல் ஏகாதிபத்தியவாதிகளான (imperialists) சோழர்களின் வரலாறு நமக்குத் தெரியும்.  சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையேயும் குறுநில மன்னர்களுக்கு இடையேயும் நடந்த எண்ணிறந்த போர்களைப் பற்றியும் நமக்குத் தெரியும்.  ஆனால் அந்தப் போர்களில் கொல்லப்பட்டவர்கள் யார்?  அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?  இதைத்தான் மிக விளக்கமாகச் சொல்கிறது வீரபாண்டியன் மனைவி.  அதுதான் நமது subaltern வரலாறு.  அடிமைகளின் வரலாறு.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இந்த நாவல் தமிழின் மகத்தான Subaltern மற்றும் Palimpsest நாவலாகக் கொண்டாடப்படும்.  நாவலில் வரும் ஜனநாதக் கச்சிராயன் நம்மால் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம்.  பாரதத்தின் சகுனியைப் போன்றவன்.  துரியோதனனை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட சகுனியைப் போல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனை அழிப்பதற்காக அவனோடு சேர்ந்து அவனுடைய எதேச்சாதிகார வெறியாட்டங்கள் அனைத்தையும் தூபம் போட்டுக் கொண்டாடியவன்.  பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதா உபதேசம் செய்வது போல் ஜனநாதக் கச்சிராயன் தனது சீடனான வீரசேகரனுக்கு மொழி, தேசம், கலாசாரம் போன்ற விஷயங்களைக் குறித்து உபதேசம் செய்கிறான்:

  ‘தம்பி! தேசம் என்பது என்ன? மண் பரப்பா, மரமா, கல்லா, தேசக் கொடியா? அந்நாட்டிலுள்ள மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகளின் மீதும், மொழிவழிக் கலாசாரத்தின் மீதும் கருத்துச் செலுத்துவதுதான் தேச பக்தியாகும்.  அந்த முறையில் பார்த்தால் சாம்ராஜ்ய சக்தியும், ஆட்சி பீடத்தின் அதிகாரப் பெருக்கும் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு ஜனங்களின் உரிமைகளும் மொழிவழிக் கலாச்சார முன்னேற்றமும் செழித்தோங்கும். தம்பி, உன்னைப் போன்ற மூடத்தனமான தேசபக்தியானது ஏகாதிபத்திய வெறியர்களையும் கொடுங்கோலையும்தான் உண்டாக்கும்.  யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்து விட்டால் மக்கள் அனைவரும் அடிமைச் செக்குமாடுகளாகி விடுவார்கள்.  ஏகாதிபத்திய சர்வாதிகாரி எந்தக் காலத்திலும் தன் சுயநலத்துக்காகப் பாடுபட்டது உண்டே தவிர ஜனங்களுக்காகப் பாடுபட்டதாக எந்த நாட்டுச் சரித்திரமும் கிடையாது!’

  (இன்னும் வரும்)  


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp