ந. பிச்சமூர்த்தி (1900 - 1976)

கும்பகோணம் நடேச தீட்சிதர், காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்த ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் வேங்கட மகாலிங்கம்.

கு
ம்பகோணம் நடேச தீட்சிதர், காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்த ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் வேங்கட மகாலிங்கம்.  அவருக்கு முன் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்து விட்டதால் அந்தக் காலத்து வழக்கப்படி அவரை பிச்சை என்று அழைத்தனர்.  அதுவே பின்னர் பிச்சமூர்த்தி ஆனது.  தந்தை நடேசய்யர் தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சாகித்யங்கள் இயற்றி ஹரிகதா காலட்சேபங்களும் புராணப் பிரசங்கங்களும் செய்தவர்.  தாந்த்ரீக உபாசனை, ஆயுர்வேதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.   ஆனால் பிச்சமூர்த்திக்கு ஏழு வயது இருக்கும் போது தந்தை காலமாகி விட்டார்.  தாயாரின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் தத்துவம் படித்து விட்டு, சென்னை வந்து சட்டம் படித்தார்.  1925-ம் ஆண்டு சாரதா என்ற பெண்மணியோடு திருமணம்.  1924 முதல் கும்பகோணத்திலேயே வக்கீல் தொழில் செய்து வந்தவர் அந்த வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்று 1938-ல் விட்டு விட்டார். 

திருமணம் ஆனாலும் துறவு வாழ்வையே விரும்பிய பிச்சமூர்த்தி ஒரு ஆண்டுக் காலம் குடும்பத்திலேயே சேராமல் துறவியாகவே சுற்றியிருக்கிறார்.  அவருடைய குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் துறவியாக இருந்திருக்கிறார்கள்.  நடேசய்யர் தான் அந்த சந்நியாசப் பாரம்பரியத்திலிருந்து விலகியவர்.   பின்னர் 1935-ம் ஆண்டு திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு வாழ்வைத் தரும்படி  வேண்டியிருக்கிறார்.  ஆனால் அவர்கள் இருவரும் அவருக்கு மண வாழ்வே ஏற்றது எனக் கூறித் திருப்பி அனுப்பி விட்டனர்.  

ந. பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்க் கதை சயன்ஸுக்கு பலி கலைமகளில் பிரசுரமாகியது.  அதற்கு முன்பே அவர் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  பின்னர் 1933-ல் கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பிச்சமூர்த்தி எழுதிய முள்ளும் ரோஜாவும் ரூ. 15 பரிசு பெற்றது.  1938-ன் பிற்பகுதியில் ஹனுமான் பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணி.  ஏழு மாதத்துக்குப் பிறகு அங்கிருந்து விலகி அறநிலையத் துறையில் நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்து பல கோவில்களில் பணியாற்றி 1956-ல் ஓய்வு பெற்று நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்கிறார்.  இந்தக் கோவில் பணி காரணமாகப் பதினெட்டு ஆண்டுகள் எதுவுமே எழுதாமல் இருந்திருக்கிறார்.  இடையில் 1938-ம் ஆண்டு என். ராமரத்னத்தின் இயக்கத்தில் சங்கு சுப்ரமணியம், சீதாலட்சுமி ஆகியோர் நடித்து வெளிவந்த ஸ்ரீராமானுஜர் என்ற திரைப்படத்தில் ஆளவந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.  (அந்தப் படத்தைத் தயாரித்தவரும் சுதந்திரச் சங்கு பத்திரிகையின் ஆசிரியருமான சங்கு சுப்ரமணியம் பற்றித் தனிக் கட்டுரையில் பார்ப்போம்.)

***

40 ஆண்டுகளுக்கு முன்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தைப் பயில ஆரம்பித்த காலத்தில், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன் ஆகிய நால்வரையும் சிறுகதை இலக்கியத்தின் மூலவர்களாக மூத்த விமர்சகர்கள் சொல்லக் கேட்டு மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன்.  புதுமைப்பித்தன் என்னை அறவே ஈர்க்கவில்லை.  காதல் தோல்வி என்ற ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப முப்பது கதைகளாக எழுதிய மௌனியும் ஈர்க்கவில்லை; எனினும் அவரது மொழியின் கவித்துவம் என்னை அவரிடம் திரும்பத் திரும்பச் செல்ல வைத்தது. 

கு.ப.ரா.வைப் பயின்ற போது என் ஆசானே என வியந்து அவர் பாதம் பணிந்தேன்.  அடுத்து ந. பிச்சமூர்த்தி.  அவரை என்னால் ஞானி என வணங்கத் தோன்றியதே தவிர எழுத்தாளுமை என வாசிக்கத் தோன்றவில்லை.  விளக்குகிறேன்.  இருள், ஒளி என்ற இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.  பின்நவீனத்துவச் சிந்தனை இப்படியான binary opposition-ஐ மறுக்கிறது.  ஒரு விஷயத்தை கண்ணாடிச் சிதறல்களில் தெரியும் பலவித பிம்பங்களைப் போல் பார்க்கக் கோருகிறது பின்நவீனத்துவம்.  ஆனால் நாம் நவீனத்துவ காலகட்டத்தைப் பற்றிப் பேசுவதால் இங்கே இந்த இருமையை எடுத்துக் கொள்வோம். 

இருள் பற்றி எழுதிய மகத்தான இலக்கிய ஆளுமைகள் என ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Louis Ferdinand Celine (1894 – 1964), சாதத் ஹாசன் மாண்ட்டோ போன்றவர்களைச் சொல்லலாம்.  இந்த வரிசையில் வைக்கக் கூடிய ஆல்பெர் கம்யு, காஃப்கா போன்றவர்கள் என் உலகத்தில் இல்லை.  காரணம், அவர்களின் எழுத்தில் நம்பிக்கையின் ஒளிக் கீற்றோ, மனிதார்த்த அமிர்தத்தின் துளிச் சிதறலையோ காண முடியவில்லை.  ஒளி பற்றி எழுதியவர்களில் தல்ஸ்தோய், கஸான்ஸாகிஸ் போன்றவர்களைச் சொல்லலாம். 

இவர்களில் ஒருவராக பிச்சமூர்த்தியை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.  காஃப்காவிடமும், கம்யுவிடமும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் காண முடியாதது போல் பிச்சமூர்த்தியிடம் என்னால் துயரத்தின் ரேகையைக் காண முடியவில்லை.  அவரிடம் ஒரு ஞானியின் வெளிச்சத்தையே கண்டேன்.  பதற்றம், நம்பிக்கையின்மை, வன்மம், வன்முறை, அவலம், விரக்தி, கொடூரம் என்ற எதார்த்தங்களின் விம்மலை அவரிடம் என்னால் கேட்க முடியவில்லை.  ஒரு குழந்தையைப் போலவோ அல்லது ஒரு ஞானியைப் போலவோ பிச்சமூர்த்தி இவ்வாழ்வின் ஒளியை மட்டுமே பார்த்தார். 
 


நாற்பது-ஐம்பதுகளில் 18 ஆண்டுகள் கோவில்களில் அதிகாரியாக இருந்த பிச்சமூர்த்திக்கு அந்தக் கோவில்களில் நுழைந்து வழிபட உரிமையில்லாதவர்களாக இருந்த தலித்துகளைப் பற்றி எந்தத் துயரமும் பதற்றமும் ஏற்படவில்லையா என என் இளம் வயதில் கேட்டபடி அவரிடமிருந்து ஒதுங்கினேன்.   ஞானிகளால் எழுத்தாளனாக முடியாது.  ஏனென்றால், ஞானி மிகத் தெளிவான பதில்களோடு இருக்கிறான்.  அங்கே குழப்பமோ, பதற்றமோ, துயரமோ எதுவுமே இல்லை.  இலக்கியம், ஆன்மீகம் பற்றிய ந. பிச்சமூர்த்தியின் விளக்கம் இது:

‘இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால் என்னையும் மீறியே அவர்களுடன் கலந்து விடுவேன்.’

‘சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம்.’

‘சொல்லை மந்திரம் என்பார்கள். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயலுவதுதான் இலக்கியம். அந்த இடத்தில் உலகின் சிகரமும் ஆன்ம உலகின் சிகரமும் இணைகின்றன.’

ஒருமுறை ஷீர்டி பாபாவின்  நெருங்கிய சீடர் ஒருவரின் எட்டு வயதுப் பாலகன் ஒருவன் இறந்து போனான்.  மிகவும் துயரத்தில் இருந்த அவரிடம் பாபா சொன்னார்: ‘வருந்தாதே.  அவன் உன்னிடம் இருப்பதை விட வேறொரு பணக்கார இடத்தில் பிறந்து சீரோடும் சிறப்போடும் வாழப் போகிறான்.’  இப்படிப்பட்ட தெளிவு இருந்தால் அங்கே எப்படி இலக்கியம் பிறக்கும்?  தில்லியில் ஒரு பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து கொன்று சாலையில் விட்டெறிந்தார்கள்.  இருள்.  நம்பிக்கையின்மை.  பதற்றம்.  கொடூரம். வன்முறை. அந்தகாரம்.  ம்ஹும்.  இதெல்லாம் எதுவுமே இல்லை.  அந்தப் பெண்ணின் பூர்வ ஜென்மப் பலன்.  முடிந்தது கதை.  ஞானி மிகத் தெளிவாக இருக்கிறான்.  இதே தெளிவுதான் பிச்சமூர்த்தியிடமும் இருந்தது என்று நினைத்தேன்.  இந்தத் தெளிவு இல்லாத ஒருவர் பிச்சமூர்த்தியின் அடுத்த வீட்டுக்காரராக, நண்பராக இருந்திருக்கிறார்.  அவர் கு.ப.ராஜகோபாலன்.  அது பற்றி பிச்சமூர்த்தி சி.சு. செல்லப்பாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:

‘கும்பகோணத்தில் 3, பிள்ளையார் கோயில் தெரு.  எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். நான் காற்றாடி கட்டிவிட்ட நாள் முதல், அவன் தவளைக் குஞ்சுகளை நெருப்புப் பெட்டியில் போட்டு விளையாடின நாட்கள் முதல் இணைபிரியாத தோழர்கள்.”

இந்தப் பேட்டி எழுத்து பத்திரிகையில் 1960-ல் வெளிவந்தது.  அதன் இணைப்பு இக்கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.  பிச்சமூர்த்தியை விட செல்லப்பா 12 வயது இளையவர்.    பிச்சமூர்த்தியின் அப்போதைய வயது 60.  பேட்டியின் ஆரம்பத்தில் பிச்சமூர்த்தியின் தோற்றம் பற்றி செல்லப்பா விவரிப்பதை கவனிக்கவும்.  பிச்சமூர்த்தி கு.ப.ரா. பற்றிச் சொன்னதும் செல்லப்பா கு.ப.ரா. பற்றிக் கேட்கிறார்.  பேட்டியில் அந்தப் பகுதி:

சி.சு. செல்லப்பா: கு.ப.ரா வைப் பற்றி ஒரு கேள்வி. அவர் ஒரு மாதிரியான 'செக்ஸ்' கதைகள் மாப்பஸன் மாதிரி எழுதினதாக அபிப்பிராயம் கூறப்படுகிறதே. இந்த 'செக்ஸ்' விஷயத்தை ஒரு இலக்கிய பிரச்னையாக அவர் கையாண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்குத் தெரிந்தவரையில் ராஜகோபாலன் மாப்பஸன் அதிகம் படித்திருந்தான் என்று சொல்வதிற்கில்லை. அவன் கதைகள் பச்சையாக இருக்கின்றன என்று கூறுவதுபற்றி நான் ஒன்று சொல்வேன். வாழ்வு பச்சையாக இருந்தால் இலக்கிய ஆசிரியன் என்ன செய்வான்? அவைகளை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைக் கையாளக் கூடாதா என்று கேட்டால் அது அந்தந்த ஆசிரியரைப் பொறுத்த விஷயம். வேதனையைத் தாங்கும் சக்தி ராஜகோபாலனுக்கு கிடையாது. அவன் உடம்பு மிகவும் நோஞ்சல். பெண்கள் படும் வேதனை அவனால் தாங்க முடியாது. ஆகவே பெண்ணின் வேதனையே அவனுடைய இலக்கிய விஷயமாயிற்று.

நான் சொல்ல நினைத்ததை பிச்சமூர்த்தியே இன்னும் தெளிவாகச் சொல்லி விட்டார்.  வேதனை.  Angst.  இந்த வேதனை இல்லாதவர்களால் எழுத்தாளனாவது சிரமம்.  இந்த வேதனை பிச்சமூர்த்தியிடம் இல்லை.  அவர் ஓர் ஞானி.  சுமார் 30 ஆண்டுகளாக பிச்சமூர்த்தியை நான் அணுகாமல் இருந்ததற்கு இதுதான் காரணம்.    ஆனாலும் இந்தத் தொடருக்காக தமிழில் எழுதியுள்ள அத்தனை முன்னோடிகளையும் படித்து விட வேண்டும் என்று பிச்சமூர்த்தியைத் தொட்ட போது கிடைத்தது வேறோர் அனுபவம்.  ஞானத்தின் ஒளி மட்டும் அல்ல; அவரிடம் துயரத்தின் இருள் ரேகையும் படிந்திருந்தது என்பதை இவ்வளவு காலம் சென்று அறிந்து கொண்டேன்.  வானம்பாடி, காபூலிக் குழந்தைகள் போன்ற கதைகள் அதற்கு சாட்சி.  அடகு என்ற கதை பன்றி மேய்க்கும் மக்களைப் பற்றித் தமிழில் எழுதப் பட்ட முதல் தலித் கதையாக இருக்கலாம்.  குடியும் வறுமையும் சுரண்டலும் எப்படி ஒரு சாதியை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது பற்றிய கதை. 

பதினெட்டாம் பெருக்கு – முறை மீறிய காமத்தைப் பேசுகிறது. தாய் என்ற கதை மனைவி இல்லாமல் மூன்று குழந்தைகளை வளர்க்கும் ஓர் ஆடவன் கக்குவான் பிடித்து இருமும் குழந்தைகளுக்குப் பிராந்தி கொடுத்து உறங்கச் செய்யும் அவலத்தைச் சொல்கிறது. அரைப் பைத்தியம் என்ற கதையில் ஒரு குடிகாரக் கணவன், அவன் மனைவி, ஒரு பையன்.  மனைவி இன்னொருவனோடு உறவு வைத்திருக்கிறாள்.  இது தெரிந்து கணவன் அவளைக் கொன்று விடுகிறான்.  மருத்துவமனையில் சாகும் தறுவாயில் அவள் சொல்கிறாள்:

‘இத்தனை நாளா என் மவனையும் கூட்டிக் கிட்டு அவனோட ஓடாம ஒனக்கு சோறு சமைச்சுப் போட்டேனே, அது ஒண்ணு போதாதா – ஒன் கொணத்துக்கு.  நான் இல்லாட்டி நீ அப்போவே செத்து மண்ணாப் போயிருப்பே.’  இப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பதினைந்து வயதுப் பையன் அவனுக்குப் பிறந்ததல்ல என்றும் சொல்லி விட்டுச் சாகிறாள். பதினைந்து ஆண்டுகளாகத் தன் மகன் என நினைத்துக் கொண்டிருந்த பிள்ளை இன்னொருவனுக்குப் பிறந்தவன் என்ற திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்து போகும் கணவன் அந்தமானுக்கு அனுப்பப்படுகிறான். பிள்ளை அரைப் பைத்தியமாய் தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருக்கிறான்.  தன்னைக் கொன்று விட்ட அந்தக் குடிகாரனைப் பழி வாங்குவதற்காகவே அவள் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்ற சமிக்ஞை கதையில் இருக்கிறது. 

முதல் பிடில் என்ற கதையில் இரவு நேரத்தில் தன் ஜோடியோடு சத்தம் போட்டுக் குலவிக் கொண்டிருந்த ஒரு பூனை, மனிதர் ஒருவரால் அடித்துக் கொல்லப்படுகிறது.  பந்தயப் பித்து கொண்ட ஒருவன் பந்தயத்தில் தோற்று விட்ட தன் குதிரையைச் சுட்டு விடுகிறான்.  இறந்த பூனையும் இறந்த குதிரையும் அருகருகே கிடக்கின்றன.  கதை இப்படி முடிகிறது:

குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளை வால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடி மயிரை உருவி எடுத்துக் கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில்  நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்துப் பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாகப் பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்!

மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை 1959 ஜனவரியில் தொடங்கி 1970 ஜனவரியில் முடிவுக்கு வந்தது.  மொத்தம் 119 இதழ்கள்.  முதலில் மாதப் பத்திரிகை; பிறகு காலாண்டு.  முதல் இதழில் வெளிவந்த பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் தான் தமிழில் வெளிவந்த முதல் புதுக் கவிதை. இன்றைய தினம் புதுக்கவிதை எழுதுகின்ற அத்தனை பேரும் நன்றி கூற வேண்டியது ந. பிச்சமூர்த்திக்கு.  இவ்வளவுக்கும் அவர் தன்னை ஒரு எழுத்தாளன் என்றே சொல்லிக் கொள்ளத் தயங்குகிறார்.  பிச்சமூர்த்தியை முழுதாகப் படித்த போது இன்னொரு முக்கியமான விஷயத்தை அவதானித்தேன்.  அவருடைய கவிதை, சிறுகதை அனைத்தும் இன்று எழுதியது போல் அவ்வளவு சமகாலத் தன்மை கொண்டதாக இருக்கிறது.  சுதந்திர தின ஆர்ப்பாட்டங்களைக் கிண்டலடித்து எழுதிய வெள்ளி விழா என்ற கவிதை ஒரு உதாரணம். 

ந. பிச்சமூர்த்தியின் எழுத்தை எப்படி நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்?  ஆ. மாதவன் கதைகளுக்கான முன்னுரையில் சுந்தர ராமசாமி இவ்வாறு கூறுகிறார்: ‘உயிர்க் கூட்டத்தை – இயற்கை ஜீவராசிகள் உட்பட – கொழுந்து விட்டெரியும் ஒரே ஜுவாலையாகக் கண்டது பிச்சமூர்த்தியின் தரிசனம்.’  எல்லா உயிர்களும் என்னுடைய ‘நான்’-இன் தெறிப்புகளே என்று உணரும் இந்தியத் தத்துவ மரபின் இலக்கிய சாட்சியே ந. பிச்சமூர்த்தி.  இந்த தரிசனத்தை மேற்கத்திய இலக்கியப் பரிச்சயத்தின் மூலமாக சிறுகதையாகவும் புதுக்கவிதையாகவும் அவர் சாதித்தார்.  

இப்போது நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால், நம் முன்னோடிகளின் படைப்புகள் மீண்டும் பிரசுரம் பெற வேண்டும்.  இணையத்திலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.  பிச்சமூர்த்தியின் எழுத்து அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டதால் யார் வேண்டுமானாலும் யாருடைய அனுமதியும் இல்லாமல் பிரசுரிக்கலாம். உடனடியாகச் செய்ய வேண்டிய பணி இது.  

ந. பிச்சமூர்த்தியின் சில சிறுகதைகளுக்கு:

http://www.sirukathaigal.com/tag/%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

ந. பிச்சமூர்த்தியை எழுத்து பத்திரிகைக்காக சி.சு. செல்லப்பா எடுத்த பேட்டி:

http://azhiyasudargal.blogspot.in/2012/04/blog-post_21.html

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com