க.நா.சு. (1912 – 1988)

முழுப்பெயர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் க.நா.சு. நன்கு பிரபலமானவராகவே இருந்தார்.

முழுப்பெயர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் க.நா.சு. நன்கு பிரபலமானவராகவே இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவருமே அவரை ஒரு விமரிசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவுமே அறிந்திருந்தனர். ஆனால் க.நா.சு. இந்த இரண்டிலும் ஈடுபடுவதற்கு முன்பே நாவல்களும், சிறுகதைகளும் எழுத ஆரம்பித்து விட்டார். 76 ஆண்டுகள் வாழ்ந்து அதில் 60 ஆண்டுகள் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருந்த க.நா.சு.வின் அத்தனை எழுத்துக்களையும் தொகுப்பது கூட இப்போது சாத்தியமில்லை என்று தெரிகிறது.

சாகித்ய அகாதமிக்காக தஞ்சை ப்ரகாஷ் க.நா.சு. என்ற நூலை எழுதினார். அதில் க.நா.சு. எழுதிய நூல்களையெல்லாம் தொகுத்தால் மொத்தம் 20,000 பக்கங்கள் வரலாம் என்று எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். ஆனால் இது குறைவான மதிப்பீடாகவே இருக்கும் என்கிறார் பழ. அதியமான். உண்மைதான். ஏனென்றால், க.நா.சு. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுதினார். நான் எழுபதுகள், எண்பதுகளில் தில்லியில் இருந்தபோது ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ஆங்கில தினசரிகளிலும் வாரம் குறைந்த பட்சம் க.நா.சு.வின் இரண்டு கட்டுரைகளையாவது பார்த்து விடுவேன். இவ்வளவுக்கும் அவர் வயது அப்போது எழுபதுக்கு மேல். கண் பார்வையும் கம்மி. அவர் செய்த மொழிபெயர்ப்புகள் மட்டுமே 3000 பக்கங்கள் வரும். அது ஆங்கிலத்திலிருந்து தமிழில். சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களை தமிழிலிருந்தும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அநேகமாக இதுவரை தமிழில் எழுதியவர்களிலேயே அதிக அளவு எழுதியவர் க.நா.சு.வாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. ‘ஏறக்குறைய 107 நூல்கள் அவரது முழுமைபெறாத பட்டியலில் சேர்ந்துள்ளன. ஆறு மாத காலத்தில் கிடைத்த நேரத்தில் தேடியதில் கிடைத்ததன் இருப்புக் கணக்கு இவை’ என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் பழ. அதியமான். மேலும் அவர் கூறுகிறார்: ‘மணிக்கொடி, சூறாவளி, சந்திரோதயம், சரஸ்வதி, தேனி, இலக்கியவட்டம், எழுத்து இறுதியாக முன்றில் போன்ற இதழ்களுடன் தொடர்பு கொண்டும் நடத்தியும் இருந்த க. நா. சுப்ரமண்யத்தின் படைப்புகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னரே நூல்களாகியுள்ளன. ‘பெரிய மனிதன்’ சுதேசமித்திரனில் வந்தது. ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். ‘நளினி’ (1959) சந்திரோதயத்தில் தொடர்கதையாக சமூகச் சித்திரம் என்ற தலைப்பில் பிரசுரமானது. முதலில் எழுதிய நாவலான ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரன் (1946) வாரப்பதிப்பில் தொடராக வந்தது. சமூகச் சித்திரம், நல்லவர், ஆட்கொல்லி ஆகியவை வானொலியில் ஒலிபரப்பானவை. ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ இலக்கிய வட்டத்தில் பிரசுரமான கட்டுரைகள்.’

பழ. அதியமான் தனது கட்டுரையில் க.நா.சு. எழுதிய நாவல்களின் எண்ணிக்கை பற்றி இப்படிக் கூறுகிறார்: ‘சமூகச் சித்திரம்’ தொடங்கி ‘தந்தையும் மகளும்’ உள்ளிட்டு 17 நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘போன்ற 20 நாவல்கள்’ என்று க. நா. சு.வின் நாவல்களின் பட்டியலைத் தருகிறார் தஞ்சை ப்ரகாஷ். இவை தவிர அச்சில் வராமல் உள்ள நாவல்கள் என திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்டவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம். ஆக மொத்தம் 35 நாவல்கள் தேறுகின்றன. இவை நாவல்கள் மட்டும். பிரசுரமானவை, பிரசுரமாகாதவை என்ற வகையில் அடங்கும் இவை மட்டுமல்ல க.நா.சு. எழுதியவை. அழிந்து போனவை - மன்னிக்கவும் - கிழிந்துபோனவை என்ற ஒருவகையையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது.

1949-ம் ஆண்டு பேரன்பு என்னும் ஒரு நாடகக் காப்பியத்தைத் திருப்தி தராதபோது க.நா.சு.வே கிழித்து எறிந்திருக்கிறார் என்று ப்ரகாஷ் குறிப்பிடுகிறார் (க.நா.சுப்ரமண்யம், ப. 53).

க.நா.சு. இலக்கியத்தடம் (1991) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நேர் காணலில் க.நா.சு. (1984) சொல்வதை இவ்விடத்தில் பார்க்கலாம்:

‘ஏழுபேர் (நாவல்) உங்கள் [வாசகர்] கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குப் போயிருந்தேன். வீட்டுக்காரன் வாடகை பாக்கி என்று எல்லாப் புத்தகங்களையும் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டான்.’

க.நா.சு. குறிப்பிடும் ‘ஏழுபேர்’ நாவல் வெளிவந்ததோடு அவரது மூன்று நாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. எது எப்படியோ வீட்டுக்காரனுக்கு வாடகை பாக்கி வைத்து அவஸ்தைப்பட்டிருப்பார் என்பதும் அது புத்தகத்தோடு சம்பந்தப்பட்டது என்பதும் விளங்குகிறது.

க.நா.சுவின் மொத்த நாவல் எண்ணிக்கை 35 தானா என்பது தெரியவில்லை. ‘அவரது [க.நா.சுவின்] நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு. மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன்’ - இது சி. சு. செல்லப்பா (எழுத்து, ஜனவரி 1966) குறிப்பிடுவது.

***

இளம் வயதில் பல எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத ஒரு நல்வாய்ப்பு க.நா.சு.வுக்கு இருந்திருக்கிறது. என்னவெனில், அவரது தகப்பனாரே அவரை எழுதச் சொல்லி ஊக்குவித்திருக்கிறார்.

‘நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே எழுத்தாளனாகி விடுவது என்பது தீர்மானமாகி விட்ட விஷயம். இந்தத் தீர்மானத்தை என்னிடம் வளர்த்து விட்டவர் தகப்பனார்’ என்று ‘சர்மாவின் உயில்’ முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. இவருடைய தந்தைக்கே தான் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவரது தகப்பனார் – க.நா.சு.வின் தாத்தா – தன் மகனுக்கு மூன்று தம்பிகளையும் இரண்டு தங்கைகளையும் அவர் பொறுப்பில் விட்டு விட்டு இறந்து போனதால் அவர் மீது விழுந்த அதிகப்படியான குடும்ப பாரத்தின் காரணமாக அவரால் எழுத்தாளனாக முடியாமல் போனது. க.நா.சு.வின் தகப்பனாருக்கு போஸ்ட்மாஸ்டராக மாதம் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியாக வேண்டிய நிலை. அப்படியும் 1903-ம் ஆண்டு அவர் எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரையினால் அவருடைய இரண்டு மூன்று வருடத்திய வருடாந்திர சம்பள உயர்வு கிடைக்காமல் போயிருக்கிறது. (நானும் பத்தாண்டுக் காலம் அஞ்சல் துறையில் இருந்தேன். அப்போது ஒரு தினசரியில் நான் எழுதிய சிறுகதை ஒன்று மோசமாக இருப்பதாகச் சொல்லி என் வருடாந்திர உயர்வை ரத்து செய்தார் அப்போதைய போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்!) இப்படியாகத் தன் வாழ்வில் நிறைவேறாத லட்சியத்தைத் தன் புதல்வன் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் க.நா.சு.வின் தகப்பனார். ஆனால் அதற்காக அவர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக்கிறார். க.நா.சு. நாலாவது பாரம் (இப்போதைய ஒன்பதாம் வகுப்பு) படித்துக் கொண்டிருக்கும்போதே ஜாக் லண்டன் எழுதிய ‘மார்ட்டின் ஈடன்’ என்ற நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார் தகப்பனார். இந்தக் குறிப்பிட்ட நாவலைக் கொடுத்ததற்குக் காரணம், ஒரு ஏழை எழுத்தாளன் முன்னுக்கு வருவதற்காகப் படும் கஷ்டங்களைப் பேசுகிறது இந்நாவல். (கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறான் அந்த எழுத்தாளன்!) ஒரு எழுத்தாளனின் வாழ்வு பற்றிய தன் கருத்துகள் பலவும் அடிநாளில் படித்த இந்த நாவலால் ஏற்பட்டவைதான் என்கிறார் க.நா.சு.

கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்து விட்டார் க.நா.சு. அன்றாட வாழ்வுக்காக அவர் வேலைக்குப் போக அவசியமில்லாமல் பார்த்துக் கொண்டார் தகப்பனார். பிற்காலத்தில் தகப்பனாருக்கு குடும்ப பாரம் அதிகமில்லை. வருவாயும் தாராளமாக மாதம் இருநூறு முந்நூறு வந்தது. அவர் செலவோ சொல்பம்தான். மாதம் முப்பது நாற்பதுக்கு மேல் ஆகாது. பாக்கியை புதல்வனுக்குத் தந்து விடுவார். அந்தப் பணத்தை புஸ்தகங்கள் வாங்கிப் படிப்பதிலும் தன் லட்சியத்தை வளர்த்துத் திடப்படுத்திக் கொள்வதிலும் செலவிட்டார் க.நா.சு.

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு ஒரு டைப்ரைட்டருடன் சென்னை வந்து வாங்க முடியாத நூல்களை நூலகம் நூலகமாகத் தேடிப் படித்தார். படிக்கும் இன்பத்துக்காகவே பல மொழிகளையும் கற்றுக் கொண்டார். குறுகிய காலத்திலேயே ஆங்கிலத்திலும் எழுதி வெற்றி கண்டார். முக்கியமாக ஜான் ஹோம்ஸ் நடத்திய யூனிடி என்ற பத்திரிகையில் அவர் கட்டுரைகளும், அப்போது பிரசித்தமாக இருந்த கோல்டன் டிக் என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் சிறுகதைகளும் வெளிவந்தன. அப்போது அவர் எழுதிய ஆங்கிலச் சிறுகதைகளுக்கு நம்மவரின் பழக்கவழக்கங்களை விளக்கி ஏராளமான குறிப்புகள் எழுத வேண்டியிருந்ததால் தமிழிலேயே எழுதி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.  எவ்வளவு தவறான முடிவு அது என்று இப்போது தோன்றுகிறது எனக்கு. உதாரணமாக, க.நா.சு. 1963-ம் ஆண்டு இலக்கிய வட்டம் என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் அதில் அநுபந்தமாகச் சேர்க்க நடுத்தெரு என்ற நாவலை எழுதினார். (ஒவ்வொரு இதழுடன் எட்டு எட்டு பக்கங்களாக சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்ட இலவச இணைப்பு.) பிறகு அதையே இன்னும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதி ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினார். பரிசு பெறவில்லை எனினும் ஆயிரம் டாலர் அனுப்பி, கதையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் பதிப்பகத்தார். நாவலில் வரும் பல சம்பவங்கள் பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லை; மாற்ற வேண்டும், அல்லது எடுக்க வேண்டும் என்று பதிப்பகத்தார் சொன்னதை ஒத்துக் கொள்ளாமல் அதைப் பிரசுரிக்கவில்லை க.நா.சு. பின்னர் அவர் 1985-ல் சென்னைக்கு வந்து குடியேறிய சமயத்தில் லதா ராமகிருஷ்ணனிடம் கொடுத்து அதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து பிரசுரிக்கிறார். அதுதான் அவரது ‘அவதூதர்.’

க.நா.சு.வின் நாவல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படுவது ‘பொய்த் தேவு’ என்றாலும் அதைவிட சிறந்த படைப்பாகக் கருதத் தக்கது அவதூதர்.  ‘பொய்த் தேவு’ தமிழ் நாவலின் மரபான தன்மைகளைக் கொண்டிருப்பதே அதன் பிரபலத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சாத்தனூர் என்ற கிராமம், அங்கே வாழ்ந்த விளிம்புநிலை மனிதன் ஒருவனின் சரித்திரம் என்ற மரபான கதைத் தன்மையைக் கொண்டிருக்கிறது ‘பொய்த் தேவு.’ ஆனால் ‘அவதூதர்’ அப்படியல்ல. சாத்தனூர் கிராமத்துக்கு வந்த அவதூதர் என்ற மகாபுருஷன் ஒருவனின் கதையைச் சொல்லும் நிமித்தமாக அது 150 ஆண்டுகளின் சரித்திரத்தையும், ஒரு சமூகம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையிலிருந்து நவீன யுகத்துக்கு நகரும் மாற்றத்தையும் மரபை மீறிய முறையில் சொல்லுகிறது. க.நா.சு.வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. பொதுவாக தமிழ் இலக்கியத்தில் இது காணக் கிடைக்காத அம்சம். பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா.சு.வின் நாவல்கள். அந்த வகையில் க.நா.சு.வை ப்ரஸீலிய எழுத்தாளர் பாவ்லோ கொய்லோவுக்கு நிகராக வைக்கத் தோன்றுகிறது. உலகில் நாவல் வாசிக்கும் வழக்கம் உடைய அத்தனை பேரும் பாவ்லோ கொய்லோவின் ‘ரஸவாதி’ என்ற நாவலைப் படித்திருப்பார்கள். 67 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, ஆறரை கோடி பிரதிகள் விற்ற நாவல் அது. அதை விட செறிவாகவும் சுவாரசியமாகவும் உள்ள நாவல் ‘அவதூதர்.’

‘அவதூதர்’ ஆங்கிலத்திலேயே பிரசுரமாகியிருந்தால் இன்று பல கோடி வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் அது எழுதப்பட்டபோது சில நூறு பேராலும் இப்போது அதை விடக் கம்மியாகவும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்டேன், க.நா.சு. தமிழில் எழுதப் போவதாக எடுத்த முடிவு தவறானது என்று. அவர் தந்தையும் அப்படியே கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் தலைமுறைக் கருத்து அது என்று அதை மறுத்து விட்டுத் தமிழில் எழுதினார் க.நா.சு. ஆனால் பாவ்லோ கொய்லோவை ஆங்கிலத்தில் படித்த தமிழர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அந்த வகையில் க.நா.சு. ஆங்கிலத்திலேயே தனது சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருந்தால் அவரை வாசித்திருக்கக் கூடிய ‘தமிழர்கள்’ இப்போதைய எண்ணிக்கையை விட அதிக அளவில் இருந்திருப்பர்.

***

பொதுவாக தமிழின் சமகால இலக்கியத்தில் இரண்டு ‘பள்ளிகள்’ இருப்பதாகச் சொல்லலாம். ஒன்று, சி.சு.செல்லப்பா பள்ளி, இன்னொன்று, க.நா.சு. பள்ளி. சி.சு. செல்லப்பா பள்ளி சற்றே இறுக்கமானது; பாரம்பரிய மதிப்பீடுகளை வழியொற்றி நடப்பது. லட்சியவாதத்தையும் மரபு சார்ந்த மதிப்பீடுகளையும் போற்றுவது. மாறாக க.நா.சு. பள்ளியோ மேலை இலக்கியச் சார்பு கொண்டது. நகுலன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்களை இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என சொல்லலாம். தமிழ் இலக்கியம் சர்வதேச இலக்கியத்துக்கு நிகராக இருக்க வேண்டும் எனக் கருதியது இவர்களின் பொதுத் தன்மை. இந்தப் பள்ளியின் இன்னொரு முக்கியமான அம்சம், இவர்கள் தங்கள் படைப்பில் புனிதங்கள் யாவற்றையும் உடைத்து நொறுக்கினார்கள்.

க.நா.சு. இதை எப்படி ஆரம்பித்து வைக்கிறார் என்று பார்ப்போம். ‘அவரவர் பாடு’ என்பது அவர் எழுதிய ஒரு மர்ம நாவல். இதுவே மரபு மீறிய செயல். ஒரு இலக்கியவாதி மர்ம நாவல் எழுதலாமா? அதில் வரும் கதாபாத்திரங்கள் மதுபானம் அருந்துகிறார்கள். ஒருவன் தன் மனைவியை இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறான். ‘இரட்டையர் இருவரில் ஒருவருக்குப் பிறந்தவள் கமலம். யாருக்கு என்று அவள் தாயாருக்குக் கூடத் தெரியாது. இரட்டையர் இருவருக்குமே வைப்பாக இருந்தவள் கமலத்தின் தாயார்.’

அசுரகணம் நாவலின் முதல் வாக்கியமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது: ‘நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ? எனக்கு வருகிறதே! என்ன செய்ய?’

‘பொய்த் தேவு’ நாவலில் வரும் ரங்காச்சாரி கும்பகோணத்தின் பெரிய மனிதர்களில் ஒருவர். 1936-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட பார் அட்டாச்டு இந்து ஹோட்டல் அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் சந்தித்துக் குடித்து சீட்டு விளையாடி பொழுது கழிக்கும் இடம். அதன் முக்கியப் பிரமுகரான ரங்காச்சாரி அதிகம் குடிக்க மாட்டார். ரங்காச்சாரியின் மனைவி கோமளவல்லிக்கு இன்பமே வாழ்வின் லட்சியம். இன்பம் என்றால் சிற்றின்பம். பதிவிரத்யம், கற்பு என்பன எல்லாம் கதைக்கும் காவியத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட சரக்குகள். ரங்காச்சாரியோ இது போன்ற விஷயங்களில் சற்றுத் தாராள நோக்குடையவர். எதையும் கண்டு கொள்ள மாட்டார். கும்பகோணத்துப் பெரிய மனிதர்களுக்குப் பல்வேறு சமயங்களில் ‘வேண்டியவளாக’ இருந்தாள் கோமளம். இது விஷயமெல்லாம் ரங்காச்சாரிக்கும் தெரியும்.  தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு தெரியாதது போல் இருந்து விடுவதுதான் கெட்டிக்காரத்தனம் என்று அவர் உணர்ந்திருந்தார்.

ஒருநாள் இந்தக் கோமளவல்லியோடு சிநேகமாகிறார் நாவலின் நாயகரான சோமு முதலியார். கண்டதும் காதல். ரங்காச்சாரி சென்னைக்குப் போகும்போதெல்லாம் இரவிலும் பகலிலும் சோமுவின் ஆஸ்டின் கார் ரங்காச்சாரியின் வீட்டு வாசலிலேயே நிற்கத் தொடங்குகிறது. ஆனால் ஊராருக்கு ஒரு விஷயம்தான் புரியவே இல்லை. வீட்டிலே வளர்ந்த பிள்ளைக்குட்டிகளை வைத்துக் கொண்டு கோமளவல்லிக்கு இதெல்லாம் எப்படிச் சாத்தியமாக இருந்தது?

சோமு முதலியார் கும்பகோணத்தில் மூணு லட்சம் செலவில் (முப்பதுகளில்) ஒரு பங்களா கட்டுகிறார். கோமள விலாஸ் என்று அதற்குப் பெயரிடுகிறார். கிருஹப் பிரவேசத்துக்குத் தஞ்சாவூர் சகோதரிகள் பாலாம்பாள், கமலாம்பாளின் நாட்டியம்.  நாட்டியத்துக்கு வந்தவர்களை அதன் பிறகு தஞ்சைக்கே அனுப்பவில்லை முதலியார்.  கோமள விலாஸத்துக்குப் பக்கத்திலேயே தஞ்சை சகோதரிகளுக்கு ஒரு பங்களா ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார். முதலியாருக்கு நடராஜன் என்று ஒரு மகன். ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத குடிகாரன். அப்பன் இல்லாத நேரத்தில் தஞ்சை சகோதரிகளின் பங்களாவுக்குப் போய் வருகிறான். அவனுக்கு ஒரு தீராத கவலை. அதை இந்து பாரில் வைத்துத் தன் நண்பர்களிடம் கேட்கிறான். ‘ஏண்டா, இந்தக் கிழம் இன்னும் எவ்வளவு நாளடா இருந்து கொண்டு என்னை வதைக்கும்?’

நன்றி: க.நா.சு.வின் நாவல்களைக் கொடுத்து உதவிய நற்றிணை பதிப்பகம் யுகன் மற்றும் ஆய்வாளர் பழ. அதியமான்.

பழ. அதியமானின் ஆய்வுக் கட்டுரைக்கு: http://www.kalachuvadu.com/issue-144/page57.asp


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com