‘பிம்பங்களைச் சுமந்து கொண்டு வாழ்கிறோம்; நிஜமான மனிதனை எங்குமே காண முடியவில்லை’ என்ற பிரதான motif தவிர ஆதவன் கதைகளில் காணப்படும் மற்றொரு வலுவான motif வயது முதிர்ந்த பெண்களின்பால் ஏற்படும் பாலியல் உந்துதல் அல்லது கவர்ச்சி. சில இடங்களில் அது ‘இன்செஸ்ட்’ என்ற அளவுக்கும் போகிறது.
செல்லப்பா மூக்கைச் சிந்துவதைக் கேட்டுக்கொண்டே அம்மா வந்து விட்டாள். ‘என்னடா, நல்ல ஜலதோஷம் பிடிச்சிருக்கு போலிருக்கே!’ என்றாள். அவள் இப்போது கொண்டையை அவிழ்த்து விட்டிருந்தாள். தலைமயிர் அலை அலையாகத் தொங்கியது. இன்னமும் அவளுக்கு ஒரு நரைமயிர் கூடக் கிடையாது. அவனருகே கட்டிலிலே வந்து உட்கார்ந்தாள். இரவு நேரத்தில் அணியும் ரவிக்கையொன்றை அவள் அணிந்திருந்தாள். சில இடங்களில் பொத்தல்கள்; சில பித்தான்கள் வேறு இல்லை. செல்லப்பா அவள் பக்கம் பார்க்காமலிருக்க முயன்றான்.
விக்ஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தாள். ‘நான் வேணுமானால் தடவட்டுமா!’ அவனருகில் வந்து நின்றுகொண்டு அவனுடைய மார்பிலும் முதுகிலும் அந்தக் களிம்பை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினாள். அவளுடைய சேலைத் தலைப்பு கீழே நழுவியது. செல்லப்பாவுக்கு தீப்பற்றிக் கொண்டது போல உடலெங்கும் ஓர் ஆவேசம் ஏற்பட்டது. விக்கி விக்கி அழ வேண்டும் போலிருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
***
செல்லப்பாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது. கொஞ்ச நாள் படுக்கையில் கிடந்த பிறகு ஒருநாள் திடீரென்று உடல்நிலை சீராகி விடுகிறது. ஆனால் அப்படிச் சரியானதால் செல்லப்பா மிகுந்த ஏமாற்றம் அடைகிறான். ஏன்? அவனுடைய உணர்வுகளை, தூய தருணங்களை அவன் இழந்து விட்டான். அம்மாவுக்கு உடம்பு சரியாகி விட்டது. மறுபடி அவன் மனதில் கிலேசங்களும், சுத்தக் குறைவான எண்ணங்களும், ஆசைகளும் தோன்றத் தொடங்கி விட்டன.
***
செல்லப்பாவின் நண்பன் கணேசன் கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவன் வாழ்க்கையிலும் இன்செஸ்ட் குறுக்கிடுகிறது. செல்லப்பா தன் அம்மாவைப் பார்த்து கிளர்ச்சி அடைந்து அதனால் அழுகிறான் என்றால் கணேசனுக்கு அது அம்மாவிடமிருந்து வருகிறது. ‘கணேசன் பாண்ட்டைக் கழற்றத் தொடங்கினான். அதே சமயம் மூக்கில் வியர்த்தது போல அவனுடைய அம்மா அறை வாசலில் வந்து நின்றாள். அவன் உடைகளைக் கழற்றும் போதெல்லாம் அவளுக்கு எப்படியாவது, எங்கிருந்தாவது வந்து நின்று விட வேண்டும். கண்கொட்டாமல் அவனைப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டும். ‘உடம்பையே பார்த்துக்கறதில்லை, உடம்பு மோசமாயிட்டேயிருக்கு. சொன்னா கேக்கறானா’ என்று முணுமுணுத்து அவன் எரிச்சலைக் கிளப்பவேண்டும். தம்பி பிறந்து பத்து வருடங்களுக்கு மேலாகின்றன. ஒருவேளை, கணேசனுடைய இளம் ஆண் உடம்பு – அவளுடைய வார்ப்படத்தில் ஆனது - அவளிடம் பழைய நினைவுகளை, தாபத்தை, எழுப்புகிறதோ? அவனைப் பலஹீனனாக வர்ணனை செய்வதன் மூலம் தன் மடியில் இன்னமும் கிடப்பவனாக, அவள் அணைப்புக்குத் தவிப்பவனாக, அவனை உருவகப்படுத்திக் கொண்டு ஒரு வக்கிரமான இன்பம் அடைகிறாளோ?
- Mother, you make me feel lousy.
***
ஆதவனின் மற்றொரு நாவலான என் பெயர் ராமசேஷனில் ராமசேஷன் தன் நண்பன் ராவ் வீட்டுக்குப் போகும்போது ராவின் அம்மா அவனைப் பாலியல்ரீதியாகச் சீண்டுகிறாள். தன் அந்தரங்க அறையில் உடைகளை சரிசெய்து கொண்டிருக்கும் வேளைகளில் ராமசேஷனை அங்கே அழைத்து வைத்துப் பேசுவாள். ராமசேஷனுக்கு அவள் கழுத்தை நெறிக்க வேண்டும் போல் தோன்றும். அப்போது இப்படி நினைத்துப் பார்க்கிறான்:
அம்மா இதே போலத்தான் வெளியே கிளம்பும் தருணங்களில், தான் பாதி டிரஸ் செய்து கொள்ளும்போது என்னை (வேண்டுமென்றே?) கூப்பிட்டனுப்பி என்னிடம் ஏதாவது பேசத் தொடங்குவாள். கொக்கியை மாட்டியவாறு (அல்லது அவிழ்த்தவாறு), பட்டன்களைப் போட்டவாறு, கொசுவத்தைத் திரட்டிச் செருகியவாறு பேசுவாள்.
எனக்கு எரிச்சலாக இருக்கும். அதே சமயத்தில் அந்தக் கணத்தின் திருட்டுச் சுகத்தில் மனம் திளைக்கும், பார்வை அலையும், கால்கள் நகர மறுக்கும்.
இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரை ‘ஷேம்’ என்று நான் நம்பியவற்றை இப்போது அப்படி நம்ப முடியவில்லை.
There’s no shame.
There’s no sin.
There’s no nothing.
‘என் பெயர் ராமசேஷன்’ வித்தாலி ஃபூர்ணிகா (Vitali Fournika) என்பவரால் ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த நாவலுக்கு ஒரு விசேஷ தகுதி இருக்கிறது. என்னவென்றால், இதைப் போன்ற ஒரு நாவல் தமிழிலோ மற்ற உலக இலக்கியத்திலோ இல்லை. நான் படித்த வரையில், இந்த வகையில், இந்த genre-ல் ‘என் பெயர் ராமசேஷன்’ ஒன்று மட்டும்தான் கிடைக்கிறது.
ராமசேஷன் என்ற இளைஞனின் கல்லூரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. சம்பவங்களும் பெரிதாக ஒன்றுமில்லை. நாவலில் இரண்டு சரடுகள்: ஒன்று- அவன், அவனுடைய அப்பா, அம்மா, தங்கை, அத்தை ஆகியோரைக் கொண்ட நடுத்தர பிராமணக் குடும்பம் எத்தகைய வன்முறையை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்பது; இரண்டு: மாலா, பிரேமா மற்றும் அவன் வயதை விடவும் மூத்த மகனைக் கொண்ட ஒரு மாமி ஆகிய மூவர் மீது அவன் கொள்ளும் பாலியல் உறவு.
அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை. எனவே அப்பாவை எல்லோரும் பந்தாடினார்கள். பாட்டி இருந்தவரை இந்தப் பந்தாட்டம் மிக உக்கிரமானதாக இருந்தது. குழப்பமாக இருந்தது. முக்கோண ஆட்டம். பாட்டியும் அத்தையும் ஒரு பக்கம். அப்பா ஒரு பக்கம். அம்மா ஒரு பக்கம். பாட்டியின் அஸ்திரம் கடவுள். கடவுளுடைய பிரதிநிதியாகத் தன்னைக் காண்பித்துக்கொண்டு அவளை எதிர்த்துப் பேசினால் நரகத்துக்குப் போவோமோ என்று பயப்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டு ஒரு ‘டெமிகாட்’-ஆகத் திகழ்ந்தாள் பாட்டி. வாழ்க்கையின் எந்த அம்சமும் அவளுடைய ஆளுகைக்குத் தப்பவில்லை. சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. ‘விரலை ஆட்டாதேடா கடன்காரா… அடுத்த ஜென்மத்திலே …யாகப் பிறப்பாய்’ என்று ஏதாவது சொல்லுவாள்.
பாட்டியின் மரணத்துக்குப் பிறகு ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பிறகு ஏற்பட்ட பவர் ஸ்ட்ரகிளைப் போல் அம்மாவுக்கும் அத்தைக்கும் அதிகாரப் போட்டி ஏற்படுகிறது. அம்மாவே வெல்கிறாள். கடைசியில் அம்மா கையே ஓங்கியது. என்ன இருந்தாலும் அம்மா செய்த ஒரு காரியத்தை அத்தையால் செய்ய முடியவில்லை. ஆனால் அத்தையும் தன்னால் முடிந்தவரை எல்லோரையும் வதைக்கிறாள். தன் வாழ்க்கை எத்தனை சுகமற்ற வறண்ட பாலையாகிப் போனதை அடிக்கடி கூறி அப்படிப்பட்ட அவளை மனம் நோகச் செய்பவர்கள் ஈவிரக்கமற்ற கொடிய விலங்குகளைப் போல உணரச் செய்வாள்.
ஆதவனின் இரண்டு நாவல்களுமே மானுட உறவில் அன்பு என்பது அறவே இல்லாமல் போய் அதிகாரமும் வெளிவேஷமும் வன்முறையுமே ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மிக விரிவாகவும் வலுவாகவும் முன்வைக்கின்றன. காகித மலர்களில் ஓர் இடம்: செல்லப்பாவின் தாத்தாவுக்கு தில்லியில் டெபுடி செக்ரடரியாக இருக்கும் தன் மகனின் பெரிய பங்களாவில் பிரியமாகவும் அவருடைய விருப்பங்களுக்கு ஏதுவாகவும் சஹ்ருதயராகவும் உள்ள ஒரே ஒருவர் அந்த வீட்டின் சமையல்காரர் ராம்ஸிங். மற்றபடி அவருடைய மகன் பசுபதி, பாக்கியம், விசுவம், செல்லப்பா, பத்ரி ஆகிய ஐந்து பேரோடும் அவருக்குப் பகிர்ந்து கொள்ள எதுவுமே இருப்பதில்லை. ஆனால் ராம்ஸிங்கோடு ராமாயணம் தவிர இயற்கையோடு இயைந்த வாழ்முறையைப் பகிர்ந்து கொண்டவர் அவர். பண்டிகைகளின்போது அவர் பூஜை செய்யும்போது அவன் மட்டும்தான் கையைக் கட்டிக்கொண்டு ஓரமாக உட்காருவான். கடைசியில் கற்பூரம் காட்டும்போது பயபக்தியோடு ஒற்றிக் கொள்வான், மலர்களை எடுத்து சுவாமி மேல் போடுவான். மலர்களிலும், பறவைகளிலும், பருவ மாற்றங்களிலும் தாத்தாவைப் போலவே ராம்ஸிங்குக்கும் நுட்பமான ஈடுபாடு இருந்தது.
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் அவன் சமையல் செய்து வருகிறான். ஆனால் தாத்தாவின் சிரார்த்த தினத்தன்று - என்றைக்கு அவன் விசேஷமாக சமையல் செய்ய விரும்புவானோ அன்றைக்கு – அந்த உரிமை அவனுக்கு மறுக்கப்பட்டது. அவன்தான் அன்றைய சிரார்த்தத்துக்குக் கறிகாய் வாங்கி வந்திருக்கவேண்டும். சமைத்திருக்கவேண்டும். அதுவே தாத்தாவின் ஆத்மாவுக்குச் சாந்தியை அளித்திருக்கும். ஆனால் வெவ்வேறு வீடுகளில் சமையல் செய்து பிழைக்கும் ஒரு பிராமண சமையல்காரர் அந்த சிரார்த்த தினத்தன்று அவர்கள் வீட்டில் சமைப்பதும், மக்களின் மூட நம்பிக்கையையும் உணர்ச்சிவசப்பட்ட குலப்பெருமையையும் சார்ந்து பிழைக்கும் வைதிக பிராமணர்கள் சில மந்திரங்களையும் சடங்குகளையும் ஒப்பேற்றிவிட்டு, அந்த சமையலைச் சாப்பிட்டு விட்டுச் செல்வதும் – அதுவா தாத்தாவுக்குத் திருப்தியளிக்கப் போகிறது? அவரைக் கடைத்தேற்றப் போகிறது?
ஆத்மாவினால் வழிபட வேண்டியவரை, பின்பற்றப்பட வேண்டியவரை வெறும் சடங்குகளினால் தொழுவது அவரை அவமதிப்பதாகும். ஆதவனின் இரண்டு நாவல்களின் அடிச்சரடு இதுதான்.
குடும்ப வன்முறையைக் கட்டுடைப்பதில் காகித மலர்களை விட என் பெயர் ராமசேஷன் கூடுதல் கவனம் செலுத்துகிறது. கல்லூரி விடுதியில் ஹாஸ்டலில் தங்கி விட்டு முதல்முறையாக விடுமுறையில் வீட்டுக்கு வருகிறான் ராமசேஷன். உடம்பு கருத்துப் போய் இளைத்துப் போய்… என்னடா இது… என்று பிடித்துக் கொள்கிறாள் அம்மா. நீண்ட நேரப் புலம்பலால் எரிச்சலடையும் ராமசேஷன் கத்துகிறான். அவன் கூச்சலிடும்போது அப்பாவும் அங்கேதான் இருக்கிறார். எதுவுமே நடக்காதது போல் பூணூலால் முதுகைச் சொறிந்து கொண்டு எதிரே இருந்த காலண்டரை உற்றுப் பார்க்கத் தொடங்குகிறார். உடனே, ‘ எப்படிச் சத்தம் போடறான் பார்த்தேளா? காலேஜுக்குப் போகிறானோல்லியா… என்னையும் உங்களையும் மாதிரியா…?’ என்று சுருதியை மாற்றிக்கொண்டு அம்மா தன் கோட்டைக்குள் (சமையல் – கம் – பூஜையறை) நுழைந்தாள். அதாவது, இண்டலெக்சுவல் ரீதியாக, அப்பாவும் அவளும் ஒன்றாம்! அப்பாவுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்? காலேஜுக்குப் போயிராதவரை இவ்வாறு நுட்பமாக அவமதித்ததன் மூலம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளிப்பதிலும் அவள் வெற்றியடைந்து விட்டாள். ஒரு பாவமுமறியாத அப்பா எங்கள் போரில் காயமடைய நேர்ந்ததே என்ற குற்ற உணர்ச்சி. அம்மாவின் வஞ்சகமும் விஷமும் இந்த ஓரிரு மாதங்களில், இலேசான ஞாபகமாகத் தேய்ந்து போயிருந்தன. இப்போது அந்த ஞாபகமெல்லாம் குப்பென்று மீண்டும் முளைத்து என்னைத் தாக்கின.’
அம்மா பற்றிய வர்ணனை இது:
அம்மா ஒருநாள் தீவிர பக்தையாக இருப்பாள். வேதாந்தியாக இருப்பாள். ஒருநாள் இகலோகவாதியாக, லௌகீகப் பித்தாக இருப்பாள். ஒருநாள் உலகத்துகே தலைவி போல அகங்காரியாக இருப்பாள். ஒருநாள் புழுப் போல உணருவாள். (‘ இந்த உலகத்திலே நாயாகவேனும் பிறக்கலாமே தவிர, பொம்மனாட்டியாகப் பொறக்கக் கூடாது.’) ஒருநாள் இண்டலெக்சுவலாக இருப்பாள். ஒருநாள் அ-இண்டலெக்சுவலாக இருப்பாள். எல்லாம் முந்தின தினம் அவள் சந்தித்த நபரைப் பொறுத்தது. முந்தின தினம் அவள் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசரின் ‘ராங்கி பிடித்த’ (அவளுக்குப் புலப்பட்டது போல) போஸ்ட்கிராஜுவேட் மனைவியைச் சந்தித்திருந்தால், அதற்கடுத்த நாள் அவள் ஒரு அ-இண்டலெக்சுவலாக, பால்காரி, வேலைக்காரியாக, படிப்பினால் களங்கப்படாத தூய பிறவியாக விளங்குவாள். முந்தின தினம் தன்னை விட நகைகளும் புடவைகளும் அதிகமுள்ளவளும், அவற்றைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பவளுமான ஒரு மாமியைச் சந்தித்திருந்தால், அடுத்த நாள் அவள் இண்டலெக்சுவலாக மாறி நகை, புடவை என்ற மாயைகளில் உழலும் கிணற்றுத்தவளைகளை விளாசுவாள்.
இந்த நாவலில் ராமசேஷனின் அப்பா பேசுவது கொஞ்சம். ஆனால் மறக்க முடியாத பாத்திரம் அவர். மனைவி, தமக்கை ஆகியோரின் குடும்ப வன்முறைக்கு ஆளான அவர் கடைசியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுகிறார். அவருடைய வேலைக்கான இறுதித் தொகையை அரசு அலுவலகத்திலிருந்து வாங்குவதற்காக ராமசேஷன் நாயாய் அலைவதாக நாவல் முடிகிறது.
இந்த நாவலின் மிக முக்கியமான motif பதின்பருவ இளைஞனின் பாலியல் வேட்கை. ராமசேஷனின் நண்பன் ராவின் தங்கை மாலாவுக்கும் (மாலா பள்ளி மாணவி) ராமசேஷனுக்குமான முதல் சந்திப்பு இப்படித் தொடங்குகிறது:
‘ஐ ஆம் மாலா, ஹிஸ் ஸிஸ்டர்’ என்று என்னெதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தாள் அவள்.
நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.
அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு… oops!
அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே – இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு, அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது.
எனக்கு என்னவோ என்னவோ என்னவோ செய்தது.
பிறகு அவள் வீட்டுக்கு அடிக்கடி செல்கிறான் ராமசேஷன். அப்படி ஒரு சந்திப்பின் போது…
அவள் சிரித்தாள். அவளுள் பொங்கி வழிந்த இளமையின், திமிரின், நுணுக்கமான விஷமத்தனங்களின் நுரையாக அந்தச் சிரிப்பு தோன்றியது. நுரையை ஒதுக்கித் தள்ளி விட்டு ருசி பார்க்கத் தொடங்குவதெப்படி என்று என் அடிமனம் திட்டமிடத் தொடங்கியது…
இப்படி முடியும் முதல் அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயம் இவ்வாறாகத் துவங்குகிறது.
இப்போது நீங்கள் அநேகமாக எதிர்பார்க்கிறீர்கள், எனக்கும் மாலாவுக்குமிடையே பரிச்சயம் படிப்படியாக வளர்ந்துகொண்டே போயிற்றென்று.
இல்லை.
பிறகு?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.