ந. முத்துசாமி - பகுதி 4

தமிழ்நாட்டில் வசிக்கும் நமக்கு நாடகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது, சிரிப்பு நாடகங்கள். கலை, கலாசாரம் பற்றி அக்கறை கொள்ளும்

தமிழ்நாட்டில் வசிக்கும் நமக்கு நாடகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது, சிரிப்பு நாடகங்கள். கலை, கலாசாரம் பற்றி அக்கறை கொள்ளும் நாளிதழ்களில் கூட நாடகம் என்றால் சபா நாடகங்களை மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நான் சபா நாடகங்களுக்கு எதிரி அல்ல; எல்லா மொழிகளிலும் இது போன்ற சிரிப்பு நாடகங்கள் உண்டு. ஆனால் அது ஒன்று மட்டுமே நாடகம் என்று நம்பி வாழும் ஒரு சமூகம் வேறு எங்கும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலைநாடுகளில் நாடகங்களுக்கு 3000 ஆண்டு பாரம்பரியம் உண்டு. கிரேக்க நாடகாசிரியரான சோஃபாக்ளிஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். 120 நாடகங்களை எழுதியவர். யூரிப்பிடஸும் சோஃபாக்ளிஸின் சமகாலத்தவர்தான். யூரிப்பிடஸின் ‘மெடியா’ என்ற நாடகத்தை தில்லியில் பார்த்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாடகம் A Dream of Passion என்ற சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. அந்த நாடகத்தின் இறுதியில் வரும் கோரஸைக் கேட்டவர்களால் அதை அவர்களது வாழ்வின் இறுதி வரை மறக்க முடியாது. அந்த அளவுக்கு வலுவானவை கிரேக்க நாடகங்கள். மேற்குலகில் இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட நாடகக் கலைக்கு இருபதாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்கள் என ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அந்தோனின் ஆர்த்தோ (Antonin Artaud), பெர்ட்டோல்ட் ப்ரெக்‌ஷ்ட், க்ரொட்டோவ்ஸ்கி, சாமுவல் பெக்கெட் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களது நாடகக் கோட்பாடுகள் அனைத்தும் தனித்தனி சிந்தனைப் பள்ளிகள் என்று சொல்லத்தக்கவை.

ஆனால் தமிழில் நாடகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று நினைத்தால் சகிக்கவொண்ணாத் துயரம் கவிகிறது. முதலில் இங்கே நாடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் முதல்முதலாக நவீன நாடகத்தை ஒரு கலையாக அறிமுகப்படுத்தியவர் ந. முத்துசாமி. இதற்கும் அவர் சி.சு. செல்லப்பாவுக்கே நன்றி சொல்கிறார். முத்துசாமி சொல்கிறார்: ‘டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் இருந்துதான் இந்தியா முழுதும் நாடக இயக்கம் தொடங்குகிறது. ஆனால் கூத்துப் பட்டறை தேசிய நாடகப் பள்ளியின் உந்துதலால் உண்டான ஒன்றில்லை. அது ‘எழுத்து’விலிருந்து தோன்றுகிறது.’

ந. முத்துசாமியையும் நவீன நாடகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் உடனடியாகச் செய்ய வேண்டியது அவரது நாடகங்களைப் படிப்பதாகும். நாடகம் மட்டுமே இரண்டு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கலையாக இருக்கிறது. ஒன்று, வாசிப்பு; இரண்டாவது, நிகழ்த்துதல். முத்துசாமியின் முதல் நாடகமான ‘காலம் காலமாக’ 1968-ல் ‘நடை’ இதழில் வெளிவந்தது. (‘நடை’, ‘எழுத்து’வின் தொடர்ச்சி.) இந்த நாடகம்தான் நவீன நாடகத்தின் தொடக்கம் என்கிறார் செ. ரவீந்திரன்.

(இங்கே செ. ரவீந்திரன் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி விட்டு, தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார். உலக இலக்கியம், இசை, நாடகம், சினிமா போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி கொண்டவர். நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய்வதிலும் தேர்ந்தவர். நான் தில்லியில் இருந்தபோது அவர் வீட்டுக்கு வாரந்தோறும் போவது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் கரோல்பாகில் உள்ள அவர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடுவோம். அவர்களில் முக்கியமானவர் வெங்கட் சாமிநாதன். செ. ரவீந்திரனுடன் பேசும்போதெல்லாம் ஒரு பெரிய நூலகத்தினுள் சென்று வந்தது போல் இருக்கும். அவரைத் தமிழ் இலக்கிய உலகம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முத்துசாமியின் நாடகங்களை முழுவதுமாக கே.எஸ். கருணா பிரசாத் தொகுத்திருக்கிறார். 1060 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் முத்துசாமியின் 21 நாடகங்கள் இருக்கின்றன. 1968-லிருந்து எழுதப்பட்டு வந்த முத்துசாமியின் நாடகங்கள் எதுவும் உடனடியாக மேடை ஏறவில்லை. அதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆயின. 1977-ல் கூத்துப் பட்டறை தொடங்கப்பட்ட பிறகு 1981-ல் முத்துசாமியின் ‘உந்திச் சுழி’ என்ற நாடகம் சென்னை மியூசியம் தியேட்டரில் மேடையேறியது.)

‘காலம் காலமாக’ நாடகம் 1968-ல் எழுதப்பட்டதன் பின்னணியை முன்னுரையில் விவரிக்கிறார் முத்துசாமி. சி. மணி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படித்துக் கொண்டிருந்தபோது அங்கே இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்த முத்துசாமிக்கு அவருடன் பரிச்சயம் ஏற்படுகிறது. பிறகு முத்துசாமி படிப்பைத் தொடராமல் சென்னை வந்து விடுகிறார். அப்போது தற்செயலாக திருவல்லிக்கேணி தபால் நிலையத்துக்கு அருகில் சி. மணியைச் சந்திக்கிறார். அப்போது சி. மணி விக்டோரியா ஹாஸ்டலிலும், முத்துசாமி அதற்கு அருகிலிருந்த வெங்கடரங்கம் பிள்ளை தெருவின் பக்கத்திலிருந்த மீனவக் குப்பத்திலும் தங்கியிருக்கின்றனர். சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’வில் பிரசுரமாகின்றன. பிறகு மணி மேல்படிப்புக்கு செகந்திராபாத் போய் விடுகிறார். அதனால் முத்துசாமி தனது மற்ற நண்பர்களான வி.து. சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோரைப் பார்க்க சைதாப்பேட்டை போய் வந்து கொண்டிருக்கிறார். 1958-ல் முத்துசாமிக்குத் திருமணம் ஆகிறது. இளம் மனைவியையும் விட்டு விட்டு சைதாப்பேட்டையில் இலக்கிய விவாதம் செய்து கொண்டிருக்கிறார் முத்துசாமி. (இலக்கியத்துக்காக ஒவ்வொரு கலைஞனும் அவனது குடும்பத்தினரும் எத்தனை பெரிய தியாகத்தைச் செய்திருக்கின்றனர் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.) சைதாப்பேட்டையில் நடந்தது வெட்டி அரட்டை அல்ல. மணியிடமிருந்து கவிதைகள் வரும். அவற்றைப் பற்றிய விவாதம் மணிக்கணக்கில் தொடரும். அதெல்லாம் தனக்குப் பெரிய பயிற்சியாக இருந்ததாக நாடகத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் முத்துசாமி. சி. மணி செகந்திராபாதிலிருந்து வந்து குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்கிறார். முத்துசாமி சென்னையிலிருந்து அடிக்கடி சேலம் போகிறார். குமாரபாளையத்துக்கு அருகிலுள்ள பவானியில், காவிரியின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு ந. முத்துசாமியும், சி. மணியும் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதாக முடிவு செய்கிறார்கள். அதுதான் ‘நடை’. ‘எழுத்து’ பத்திரிகையிலேயே தமிழில் நாடக இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டுமென்று எழுதிய செல்லப்பா, அமெரிக்க நாடகாசிரியர் வில்லியம் சரோயனின் ‘ஹலோ யாரங்கே?’ என்ற நாடகத்தை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சி. மணி குமாரபாளையம் போன பிறகு அவர் நண்பர் எம். பழனிச்சாமியோடு (பிரசிடென்ஸி மாணவர்) விக்டோரியா ஹாஸ்டலின் புல் தரையில் அமர்ந்து ஐரிஷ் நாடகாசிரியரான ஜான் மிலிங்க்டன் சின்ஞ்சின் (John Millington Synge) Riders to the Sea என்ற நாடகத்தை மொழிபெயர்க்கிறார் முத்துசாமி.

இதெல்லாம்தான் ‘காலம் காலமாக’ என்ற தமிழின் முதல் நவீன நாடகம் எழுதப்பட்டதன் பின்னணி. நவீன நாடகம் புரியவில்லை என்பது ஒரு பொதுவான புகாராக இருந்து வருகிறது. ஆனால் சில நாடகக் குழுக்களின் stylized acting-ஐப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்குமே தவிர நாடகப் பிரதிகள் புரியாமல் போக வாய்ப்பே இல்லை. ‘காலம் காலமாக’ நாடகத்தில் வைத்தியநாதன், கந்தப்பன் என்ற இரண்டு பேர் ஒரு நோயாளியை ஆளுக்கொரு பக்கம் கை போட்டுத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு நோயாளி அவர்கள் பின்னே நடந்து வருகிறான். பிறகு வைத்தியநாதனும் கந்தப்பனும் அந்த நோயாளியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்ததற்காகத் தங்களைப் பாராட்டிக் கொள்கிறார்கள்.

‘அப்பாடா’

‘அவங்க முட்டாளுங்க’

‘நல்லவேளை. இவனெ சமயத்திலே காப்பாத்திட்டோம். அவனெப் போல இல்லே. இவன் பிழைச்சுக்குவான்’

‘ஆமா. இவனெ இவ்வளவு தூரம் காப்பாத்திக் கொண்டாந்துட்டோம். இவன் நம்மகிட்டே பிழைச்சுக்குவான். அவங்க முட்டாளுங்க’

காலம் நகர்ந்து கொண்டே போகிறது. நோயாளி நோய்ப் படுக்கையிலேயே கிடக்கிறான். வைத்தியநாதனுக்கும் கந்தப்பனுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. ஆனாலும் நோயாளிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே போகிறார்கள்.

நோயாளி சொல்கிறான்: நான் பொழச்சிக்குவேனான்னு பாக்கறேன். அதுக்குச் சூழ்நிலை இங்கே இருக்கான்னு பாக்கறேன். ஒங்க சக்தியெ மிகைப்படுத்தாமே உணர்ந்தாதான் என்னெ உங்களால காப்பாத்த முடியும். அவன் சாகறதெ என் கண்ணால பாத்துக்கிட்டிருந்தேன். நீங்களும் பாத்துக்கிட்டிருந்தீங்க. அவங்க குறைகளெயெல்லாம் இத்தனை நாள் நீங்க தெரிஞ்சுக்கிட்டிருக்கணுமில்லியா? அவங்க கொறைகளையும் ஒங்க சக்தியையும் உணர்ந்து என் வியாதியெ குணப்படுத்தி என்னெத் தெளிவிக்கப் போறீங்கன்னு நம்பிக்கிட்டிருக்கேன். அவங்க கையிலே அவனெப்போல இல்லாம ஒங்க கையிலே நான் பிழைச்சுக்கணும். பழகிப் போனதாலே அவன் நோய் குணமானா அவங்களால சகிச்சுக்க முடியாதுன்னு கடைசியிலே தோண ஆரம்பிச்சுட்டது. குணமாறதெ நோய்ப்படரதுன்னு அவங்க உணர ஆரம்பிச்சுட்டாங்க போலிருந்துது. மதிப்பும் பொழைப்பும் அவன் நோயிலேதான் இருக்குன்னு அவங்க எண்ணினாங்களோன்னு தோணிச்சு. பழகிப் போன பொய் உண்மையாயிடுது. அதனாலே உண்மை பொய்யாயிடுது. என்ன வேடிக்கை! என்னெ நீங்க காப்பாத்தணும்.

அதற்கு வைத்தியநாதன் இப்படிச் சொல்கிறான்: ‘கவலெப்படாதே. ஒன்னையும் காப்பாத்துவோம். (‘ஒங்கப்பனையும் காப்பாத்துவோம்’ என்று அறையிலிருந்து தலையை நீட்டி ரமேஷ் கோபுவிடம் அடங்கிய குரலில் சொல்கிறான்) சாகவிட மாட்டோம். நாங்க இருக்கற வரைக்கும் இவனெச் சாக விட மாட்டோம். எங்களெ மீறி இவன் செத்தா எங்களாலே சும்மா இருக்க முடியாது. எதையானும் காப்பாத்திக் காப்பாத்திப் பழக்கமாயிட்டுது. அது மரபாவே ஆயிட்டுது. இவனுக்குப் பின்னாலே ஒன்னெப் புடுச்சுக்குவோம். ஒன்னையும் காப்பாத்துவோம். கவலெப்படாதே.’

இதற்கு இரண்டாவது நோயாளி சொல்கிறான்: ‘ரொம்ப சந்தோஷம். அதான் எனக்கு வேண்டியது. இந்த உறுதியெ நீங்க கொடுத்தாப் போதும். எத்தனை நாள் வேணும்னாலும் ஒங்களுக்காக உசிரைக் கையில் புடுச்சுகிட்டு காத்துக்கிட்டிருக்க தயார்.

கந்தப்பன்: உறுதிமொழிக்கென்ன? எத்தனை உறுதிமொழி வேணும்?

நோயாளி 2: அது போதும் எனக்கு. உறுதிமொழி கூட வேண்டாம். உறுதிமொழி ஒங்களாலே தர முடியும்னாலே போதும். எனக்குத் திருப்தி. கையிலே புடுச்சுகிட்டு காத்திருப்பேன்.

இப்படியே உறுதிமொழிகளும் காத்திருப்புகளும் காலம் காலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது. கடைசியில் முதல் நோயாளி செத்து விடுகிறான். ஒரு பணியாளனுக்குச் சந்தேகம், நோயாளி உறங்குகிறானா செத்து விட்டானா என்று. சுவாசம் இருக்கிறதா இல்லையா என்று சோதிக்கிறார்கள். நோய் வெளியே பரவி விடக் கூடாது என்று கதவுகளைச் சாத்துகிறார்கள். இல்லை, இல்லை, நோய் அறையிலேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று கதவுகளைத் திறக்கிறார்கள். நோயாளி செத்து விட்டானா இல்லையா? ஒருத்தன் அவன் காலைத் தொட்டுப் பார்க்கிறான். ஒருவன் மார்பில் காதை வைத்துப் பார்க்கிறான். கடைசியில் ‘நின்னு போச்சு, நின்னு போச்சு’ என்று எல்லோரும் ஏக காலத்தில் கத்துகிறார்கள்.

இப்போது இரண்டாவது நோயாளியை, ஆரம்பத்தில் முதல் நோயாளியைத் தூக்கியது போலவே வைத்தியநாதனும் கந்தப்பனும் தூக்கிக் கொண்டு வந்து மேஜையில் கிடத்துகிறார்கள்.

திரும்பவும் நாடகத்தின் ஆரம்ப வசனங்கள். அவங்க முட்டாளுங்க; அவனெக் காப்பாத்தத் தெரியலே.

நோயாளி 2: (தலையைத் தூக்கி) என்னெ டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போங்க

பணியாளன்: கவலெப்படாதே. அவங்க முட்டாளுங்க, நாங்க உன்னெ காப்பாத்திடுவோம்

(மேடையில் ஒளி மங்குகிறது. 25, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மேடையில் இடப்புறத்திலிருந்து நுழைகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நோயாளி ஒருவன் தள்ளாடிக் கொண்டே போய் வலப்புற நாற்காலியில் உட்கார்கிறான்)

இந்த நாடகத்தில் நோயாளிகள் யார், வைத்தியநாதனும் கந்தப்பனும் யார், பணியாளர்கள் யார் என்றெல்லாம் நமக்குத் தெரியாதா? இந்த நாடகத்தில் எது புரியவில்லை? விஷயம் என்னவென்றால், நாம் இன்னும் ந. முத்துசாமியைப் படிக்கவில்லை. அவ்வளவுதான். படித்திருந்தால் ‘கோதோவுக்காகக் காத்திருத்தல்...’ என்ற நாடகத்தை எழுதிய சாமுவெல் பெக்கட்டை உலகம் எந்த அளவு கொண்டாடுகிறதோ அதே அளவு முத்துசாமியையும் கொண்டாடியிருப்போம். அவர் பெயரும் தமிழ்நாட்டைத் தாண்டித் தெரிந்திருக்கும்.

‘ந. முத்துசாமி நாடகங்கள்’ தொகுப்பு கிடைக்குமிடம்: போதிவனம், அகமது வணிக வளாகம், தரைத் தளம், 12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14.

*

என் நீண்ட நாள் நண்பர் R.P. ராஜநாயஹெமின் இயக்கத்தில் ந. முத்துசாமியின் வண்டிச் சோடை என்ற நாடகம் சென்னை மியூசியம் தியேட்டரில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற இருக்கிறது. விபரங்கள் மற்றும் டிக்கட் முன்பதிவு செய்ய: https://pay.hindu.com/eventpay/chtf2016.html

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com