ஆதவன் – பகுதி 4

வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க ராமசேஷனுக்கும் மாலாவுக்கும் பரிச்சயம் ஏற்படவில்லை. மாறாக, மாலாவின் அம்மாவுக்கும் ராமசேஷனுக்கும்

வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க ராமசேஷனுக்கும் மாலாவுக்கும் பரிச்சயம் ஏற்படவில்லை. மாறாக, மாலாவின் அம்மாவுக்கும் ராமசேஷனுக்கும் பரிச்சயம் ஏற்படுகிறது. மாலாவின் அம்மா ராமசேஷனிடம் பல சேட்டைகள் செய்து கவர்ந்து இழுத்து, அவன் அவளை அணைக்க முயலும் போது ‘சே, இத்தனை அயோக்கியனா நீ, இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே’ என்று சொல்லித் துரத்தி அடித்து விடுகிறாள். அப்போது அவள் அடிக்கும் லெக்சர் காவிய ரசம் ததும்பக் கூடியது.

அதில் ஒரு பகுதி: ‘இதோ பார், எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும். உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டு விட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. அந்த இல்லாமைக்கெல்லாம் அவசர அவசரமாக ஈடு செய்யும் பரபரப்பும் பெரிய மனிதனாகும் ஆசையும் எழுதி ஒட்டியிருக்கிறது. இந்த posh பங்களாவும் high living-ம் உன் கற்பனைகளைத் தட்டியெழுப்புகிறது. இதெல்லாம் பெர்மிஸிவ்நெஸ்ஸின் குறியீடாக வேட்கை நிரம்பிய உன் மனதுக்குத் தோன்றுகிறது. நாமும் அதில் கொஞ்சம் புரண்டு விட்டுப் போகலாம் என்று நினைக்கிறாய். வீட்டுக்குப் போய் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகப் போய் விடுகிறது. நோ ப்ராப்ளம். உன் வீட்டின் புனிதத்தன்மை ‘இண்டாக்ட்’ஆக இருக்கும். நீ ஏழை. அறியாமையாலும் தேவையாலும் பிழை செய்கிறவன். அனுதாபத்துக்குரியவன். நாங்கள் பணக்காரர்கள். கெட்டதிலேயே ஊறிக் கிடப்பவர்கள். நாமிருவருமாகச் சேர்ந்து தப்பு செய்தால் உனக்கும் சரி, எனக்கும் சரி, எந்த நஷ்டமுமில்லை, இல்லையா? பையா, நான் ஒரு பத்தினியல்ல என்றே வைத்துக் கொள்வோம். என் கணவனல்லாத ஆண்களுடனும் குலாபுவளென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் உன்னுடன் – போயும் போயும் உன்னுடன் – எதற்காக நான் அதைச் செய்ய வேண்டும்?’

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் ராமசேஷன் மாலாவின் வீட்டுக்குப் போகிறான். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாலாதான் அவனை வரவழைக்கிறாள். அந்த வீட்டிலேயே இருவரும் உடலைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மாலா பள்ளி மாணவி என்பதை மறந்து விடக் கூடாது. உறவுக்குத் தேவையான ஆணுறையை வாங்க ராமசேஷன் கூச்சப்படும் போது அம்மாவின் ‘விக்’கை அணிந்து கொண்டு போய் மாலாவே அதை வாங்கி வருகிறாள். கணினியும் இணையமும் வராத காலம் என்பதை நினைவில் கொள்க. கடைசியில் மாலா அவளுடைய அம்மாவைப் போலவே ராமசேஷனை உதாசீனப்படுத்துகிறாள். அவனுடைய வர்க்கப் பின்னணியே அதற்குக் காரணமாக இருக்கும் போது அவன் அவளை விட்டு விலகுகிறான்.

பிறகு அவனுக்கு பிரேமா என்ற அழகில்லாத, ஒரு புத்திஜீவிப் பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. சில காலம் இருவரும் உடலைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமானாலும் அவன் அவள்பால் ஈர்க்கப்படுவதில்லை. அவளுடைய இண்டலெக்சுவல் பாசாங்குகளைப் பார்த்து எரிச்சலடைந்து அவளிடமிருந்தும் விலகுகிறான்.

கடைசியில் அவனுக்குத் தன்னை விட வயதில் மூத்த ஒரு மாமியின் மீதுதான் காதலும் கவர்ச்சியும் ஏற்படுகிறது. அவளுக்கு ராமசேஷனை விட வயதான ஒரு மகன் இருக்கிறான். கணவனால் புறக்கணிக்கப்பட்ட அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கிறான். ஆனால் அவன் தந்தை சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிய பிறகு அவன் தோளில் விழுந்த குடும்பப் பொறுப்புகளால் மாமியிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான். இறுதியில் ஒரு திரையரங்கில் தன் தங்கை யாரோ ஒருவனுடன் சேர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவன் அவள் தோள் மீது வேறு அட்டகாசமாகக் கை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ராமசேஷனுக்கு இருவர் கழுத்தையும் நெரிக்க வேண்டும் போல் இருக்கிறது. பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், தங்கை வீட்டுக்கு வந்தவுடன் அவளை எப்படியெல்லாம் சண்டை பிடிக்க வேண்டும், அவளுக்கு என்னவெல்லாம் புத்தி சொல்ல வேண்டும் என்று யோசித்தவாறே வருகிறான். ஏனென்றால்,

‘அந்தத் தடியன்களை எனக்குத் தெரியும். இவன்களுடைய கீழான எண்ணங்களும், வழிமுறைகளும் தெரியும்.

ஆனால் என் தங்கையிடம் நீங்கள் வாலாட்ட முயல வேண்டியதில்லை.

பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன், ஜாக்கிரதை.

-இப்படி முடிகிறது ’என் பெயர் ராமசேஷன்’ நாவல்.

***

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருக்கிறேன். மூன்று மலையாள இலக்கிய வார இதழ்களில் என்னுடைய தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. கலாகௌமுதியில் ’ராஸ லீலா’ நாவல்; மாத்யமம் இதழில் ’தப்புத் தாளங்கள்’ என்ற தலைப்பில் உலக சினிமா, அரபி இலக்கியம், மாத்ரு பூமி என்ற இதழில் ‘கலகம், காதல், இசை’ என்ற தொடர். மூன்றையும் வாராவாரம் அனுப்ப வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அவற்றை மொழிபெயர்த்து அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி விடுவார். என் கைக்கொண்டு எழுத முடியாத நிலையில் டிக்டேட் செய்தேன். ‘சரியாக அனுப்ப வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லுங்கள்; பத்திரிகைகளுக்கு மாறி மாறிப் போய் விடப் போகிறது’ என்றேன் நண்பரிடம். நண்பர் சொன்னார், மாறினாலும் பாதகமில்லை, நீங்கள் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதெல்லாம் ஒன்றே போல் தான் இருக்கிறது.

என்னிடம் ஆதவனின் பாதிப்பு அதிகம் இருப்பதாக நான் உணர்வதற்குக் காரணங்களில் இதுவும் ஒன்று. ஆதவன் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அதெல்லாம் அவருடைய நாவல்களின் சில அத்தியாயங்கள் போலவேதான் இருக்கின்றன. அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் மகத்தான சிறுகதைகளைப் போல் ஆதவனின் சிறுகதைகள் இல்லை; ஆனால் அந்தச் சிறுகதைகள் எல்லாமே ஆதவனின் வாழ்க்கை, ஆதவனின் நாவலிலிருந்து விடுபட்ட அத்தியாயங்கள்.

‘நான் பர்ஸ் திருடிய நாள்’ என்று ஒரு சிறுகதை. கதை இப்படித் தொடங்குகிறது. எனக்கு அது கல்லூரியின் கடைசி வருடம். அல்லது கடைசிக்கு முந்தின வருடமாகவும் இருக்கலாம்; அது முக்கியமில்லை.

கல்லூரியில் அந்த தினத்தை, வேறு தினங்களைப் போல, நான் காபி ஹவுஸில் தொடங்கினேன். நான் ஜீனியஸாக இருக்க வேண்டுமென்ற சந்தேகம் எனக்கு ஏற்படத் தொடங்கியிருந்த காலம் அது. ஜீனியஸ்கள் வகுப்புகளுக்குச் செல்வது அனாவசியம். லெக்சர்களைக் கேட்பது அனாவசியம். ஜீனியஸ்கள் சிகரெட் குடித்தவாறு, காப்பி அருந்தியவாறு, காபி ஹவுஸில் இதர ஜீனியஸ்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலைமயிர் கலைந்திருக்கும். முகத்தில் ஓர் அசாதாரண பாவமும் கையில் விஷய கனம் மிக்க ஒரு புத்தகமும் இருக்கும். இந்தப் புத்தகத்தை அவர்கள் படித்தாக வேண்டுமென்பதில்லை. உண்மையில் சிகரெட்டும் புத்தகமும் எங்களுள் குமுறிக் கொண்டிருந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகள்; எவ்வளவுக்கெவ்வளவு காரமான சிகரெட்டோ, அனாசாரமான புத்தகமோ, அவ்வளவுக்கவ்வளவு இமேஜுக்கு நல்லது. அப்போதெல்லாம் பனாமா மூணு காசு, சார்மினார் இரண்டு காசு, இரண்டுமே எங்களிடையே பாப்புலராக இருந்தன. புத்தகங்களைப் பொறுத்தவரையில் Francois Mauriac, Andre Gide, James Joyce, William Faulker போன்றோரின் புத்தகங்களை நான் சுமந்து அலைந்து கொண்டிருந்தது நினைவு வருகிறது. விஞ்ஞானப் பிரிவு மாணவனாக இருந்த போதிலும், ரூதர்ஃபோர்டும் லேவோஷியரும் அல்ல, ஜாய்ஸும் ஹெமிங்வேயும்தான் என் ஹீரோக்களாகத் திகழ்ந்தனர். ஃப்ரான்ஸ்வா மரியாக் அந்தப் பிராயத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஓர் எழுத்தாளர். மிகத் தற்செயலாகத்தான் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. The Stuff of Youth என்ற அவருடைய நாவலை ஷெல்ஃபில் பார்த்தேன். கையில், பிறர் பார்வையில் சுமந்து செல்வதற்கேற்ற கவர்ச்சிகரமான தலைப்பாக என்னைப் பற்றிய அழகியதொரு பிம்பத்தினுள் பொருந்துவதாக அது தோன்றியது. எடுத்து வந்தேன். பிறகு அதிர்ஷ்டவசமாக அதைப் படிக்கவும் செய்தேன். எனக்கு நியாயம் செய்து கொள்ளும் முறையில், வேரு சில மாணவர்களைப் போல அன்றி, சுமந்து சென்ற பல புத்தகங்களைப் பல தடவைகளில் நான் நிஜமாகவே படித்தேனென்று சொல்ல வேண்டும்.

இலக்கியத்தைப் போலவே அந்த இளைஞனைக் கவர்ந்த இன்னொரு விஷயம், பெண்கள். அந்தக் காலத்து (அறுபதுகளின் முற்பகுதி) இளைஞர்களைப் போலவே அவன் தன் இருபது வயதில் எந்தப் பெண்ணுடனும் சில நிமிடங்கள் கூடப் பேசியிருக்கவில்லை, நடந்திருக்கவில்லை, காபி ஹவுஸுக்கு அழைத்துப் போய்க் காப்பி வாங்கிக் கொடுத்திருக்கவில்லை. இப்படிச் செய்ய முடிந்த மாணவர்களை ஏக்கத்துடனும் பொறாமையுடனும் பார்க்கிறான். அவனுடைய சொற்களில்:

பெண்களுக்கு இணக்கமான பிரியத்துக்குரிய கோமாளி அல்லது முரட்டு முட்டாள் வேஷத்தை – அவர்கள் pet செய்யக் கூடிய வேஷத்தை – எனக்கு அணியத் தெரியவில்லை. நான் இலக்கியக் கதாநாயகர்களுடன், மேல்நாட்டு சினிமாக் கதாநாயகர்களுடன், என்னை உக்கிரமாக identify செய்து கொண்டு என் முகத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஈகோவை வளர்த்துக் கொண்டிருந்தேன்….

இவ்விதமாக நான் ஒரு கனவுலகில் வாழ்ந்தேன். மேனாட்டு இலக்கியங்கள், திரைப்படங்களைச் சார்ந்து உருவான கனவுகள். என்னைச் சூழ்ந்திருந்த நிஜ உலகுக்கும் அதனுடன் நான் கொள்ள வேண்டியிருந்த பல மட்டத்து உறவுகளுக்கும் நான் எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. இந்த உலகை நேருக்கு நேர் சந்திக்க முயலவில்லை. மாறாக இந்த உலகில் தோல்வி அடையும் போதெல்லாம் மேலும் மேலும் கனவுலகினுள் பதுங்கிக் கொண்டேன்.

யுனிவர்சிடிக்கு வந்ததும் எங்களில் பெரும்பாலோர் செய்கிற முதல் வேலை காபி ஹவுஸ் வாசலில் உள்ள பீடாக் கடையில் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொள்வது. சிகரெட்டை உறிஞ்சி உறிஞ்சிப் புகையை ஊதி ஊதி… அப்பா! ஒரு புதிய ஜன்மம் எடுத்தது போலிருக்கும். எங்கள் மூதாதையருடன் தொடர்பு அறுந்து, ஊறுகாய், அப்பளம் பிம்பம் கரைந்து, நாங்கள் நவீன யுகத்துப் பிரஜைகளாவோம்…

இந்த இளைஞனின் நண்பர்கள் ஸூத், சர்மா. சராசரிப் பையன்கள். இந்தப் படிப்பாளியின் சேர்க்கை அவர்களுக்கு ஒரு இண்டலெக்சுவல் பரிமாணத்தை அளிக்கிறது. இவனுக்கும் அவர்களுடைய சேர்க்கை ஒரு முரட்டு இளைஞன் என்ற பிம்பத்தை அளிக்கிறது.

‘அந்த பிம்பத்தின் போதை கசப்பான உண்மைகளிலிருந்து – என் மென்மை, என் கையாலாகாத்தனம் – என்னைக் காப்பாற்றியது. அவர்களுடன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேசிக் கொண்டு, சிகரெட் பிடித்துக் கொண்டு, உரக்கச் சிரித்துக் கொண்டு இருக்கிற வரையில் ஒரு பண்பட்ட மனிதனின் பொறுப்புகளிலிருந்து நான் விடுபட்டவனானேன். என் அன்புக்குரியவளுக்கு இவ்வாறு என்னை அருகதையற்றவனாகச் செய்து கொண்ட கணத்திலேயே ஒருவிதத்தில் நான் அவளுக்கு மிகவும் ப்ரியமுள்ளவனாக, அனுதாபக்கரம் நீட்டி அணைத்துக்கொள்ளப்பட வேண்டிய, காப்பாற்றப்பட வேண்டிய, poor creature ஆகவும் ஆனேன். கிறுக்கு மேதை. Artist in gutter.

இந்தக் கிறுக்கு மேதை யுனிவர்சிடியில் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது இவனுடைய சராசரி நண்பர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் பர்ஸைத் திருடுகிறான். ஏன்?

நாங்கள் பெண்களுக்கும் சுவருக்குமிடையில், பக்கவாட்டில் நின்று கொண்டு அந்தப் பெண்களைச் சிறிது நேரம், கிரிக்கெட் ஆட்டத்தைச் சிறிது நேரம் என்று மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றோம். அந்தப் பெண்களின் கவனத்தை முழுமையாகத் தன்பால் ஈர்த்திருந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது எங்களுக்குப் பொறாமையாக இருந்தது. அந்தப் பெண்கள் மீதோ எரிச்சலாக இருந்தது. அவர்கள் ஒரு தடவையாவது எங்கள் திசையில் பார்வையைச் செலுத்தினால்தானே!

இந்தப் பெண்களைத் தண்டிக்க வேண்டும். கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு நாங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்…

திருடிய பர்ஸில் வெறும் நாலே அணாதான் இருந்தது. மற்ற ஐடி கார்டு, லைப்ரரி கார்டு போன்றவற்றை மறுநாள் யுனிவர்ஸிடி ஆபீஸில் கொடுத்து விடுகிறார்கள். அதன் பிறகு அவன் எந்தப் பெண்ணின் பர்ஸையும் திருடவில்லை.

***

தமிழர்களுக்கு மறதி அதிகம். ஜூலியஸ் சீஸர் எப்படி இருந்தார் என்று கிரேக்கர்கள் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். சாக்ரடீஸின் உருவம் நமக்குத் தெரிகிறது. ஆனால் எழுபதுகளின் ஆதவனின் பெயர் தமிழனுக்குத் தெரியவில்லை. தமிழனை விடுங்கள்; தமிழ் இலக்கிய வாசகனுக்குக் கூடத் தெரியவில்லை.

ஆதவனே தன் எழுத்து பற்றிச் சொல்வது போல், நம்முடைய தனிப்பட்ட, சமூக வாழ்வின் போலித்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க வைப்பவை. அவருடைய வார்த்தைகளில்:

காலமும் அதனுடன் இணைந்த வாழ்வியக்கமும் உங்களை வேகமாக முன்னால் இழுத்துச் சென்றவாறிருக்க, நான் ஒருவன் இங்கே சொற்களைக் கொண்டு கூடாரங்கள் அமைத்து ‘சற்றே அமருங்களேன்’ என்கிறேன்.

ஆமாம். கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும் வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவேதான் இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்வின் சந்தோஷங்களையும் சோர்வுகளையும் சேர்த்து அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com