சி.சு. செல்லப்பா – பகுதி 7

செல்லப்பா பற்றி அதிகபட்சம் இரண்டு வாரம் எழுதலாம் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஏனென்றால், அந்த அளவுக்கு அவரது புனைவிலக்கியம் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் நிலவிக்கொண்டிருந்தன. ‘எழுத்து’ பத்திரிகையை

செல்லப்பா பற்றி அதிகபட்சம் இரண்டு வாரம் எழுதலாம் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஏனென்றால், அந்த அளவுக்கு அவரது புனைவிலக்கியம் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் நிலவிக்கொண்டிருந்தன. ‘எழுத்து’ பத்திரிகையை நடத்திய ஒரு தியாகி என்பதற்கு மேல் அவரது சிறுகதைகள், நாவல்கள் பற்றிய கருத்து இங்கே எதுவும் இல்லை. போனால் போகிறதென்று அவருடைய ‘வாடிவாசலை’க் குறிப்பிடுவார்கள். அவ்வளவுதான். மேலும், அவர் சக எழுத்தாளர்களைக் குறித்துத் தாறுமாறாகத் திட்டி அவரது சீடர் தர்மு சிவராமுவைப் போலவே பெரும் கெட்ட பெயரைச் சம்பாதித்திருந்தார். எனக்கே அவர் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அசோகமித்திரனையே எழுத்தாளராக ஏற்காத ஒருவரால் என்ன எழுதி விட முடியும் என்ற அசட்டை. அதனால்தான் ஜனவரி 1985-ம் ஆண்டு வாங்கிய ‘ஜீவனாம்சம்’ என்ற அவருடைய நாவலை சென்ற மாதம் வரை – 31 ஆண்டுகளாக முதுகில் சுமந்து திரிந்திருக்கிறேன். தூக்கிப் போடவில்லை; ஆனால் படிக்கவும் இல்லை.

அறுபதுகள், எழுபதுகளில் செல்லப்பாவின் ‘எழுத்து’ பிரசுரமே அவருடைய சிறுகதைகள், நாவல்கள் எல்லாவற்றையும் பிரசுரித்து வந்தது. புத்தக அட்டையில் சுற்றி வர சிவப்புக் கோடு; பச்சை நிறத்தில் புத்தகத் தலைப்பு; மத்தியில் சிவப்பு நிறத்தில் ஒரு நட்சத்திரம்; கீழே பச்சை நிறத்தில் சி.சு. செல்லப்பா என்ற பெயர். அட்டையில் வேறு எதுவும் இருக்காது. பின்னட்டையிலும் ஒன்றும் இருக்காது. ஆனால் புத்தகத்தில் அச்சுப் பிழையையே பார்க்க முடியாது. இருந்தால் அதிக பட்சம் ஒன்றோ இரண்டோ இருக்கும். செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்புகளும் இவ்வாறே வெளிவந்தன. சுற்றிலும் பச்சைக் கோடு. மஞ்சள் அட்டை. மேலே சிவப்பு நிறத்தில் செல்லப்பா; கீழே அதே வண்ணத்தில் சிறுகதைகள். நடுவிலே தொகுதி எண்ணைக் குறிக்கும் 1, 2, 3 என்று இருக்கும். என்னிடம் இப்படி ஐந்து தொகுதிகள் உள்ளன. விலை ஐந்து அல்லது ஆறு ரூபாய். விலாசம்: எழுத்து பிரசுரம், 19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5.

***

‘ஜீவனாம்சம்’ உலக இலக்கிய வரிசையில் வைக்கப்பட வேண்டிய நாவல் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இதை இருபது ஆண்டுகள் செல்லப்பா தன் மனதில் கருவாகச் சுமந்திருக்கிறார். கதை எப்படி இருக்கவேண்டும் என்று இரண்டொரு பக்கங்களில் கதைச் சுருக்கமெல்லாம் எழுதி வைத்திருந்திருக்கிறார். இந்த நாவலுக்கு மூலமாக செல்லப்பா குடும்பத்தில் 1920களில் நடந்த ஒரு சம்பவம். சாந்தி கல்யாணம் ஆகி, ஆறு மாதத்தில் கணவன் காலராவில் இறந்து விட, தகப்பனார் வீட்டில் இருந்து வந்த விதவைப் பெண்ணுக்காக ஜீவனாம்சம் வழக்குத் தொடரப்பட்டதும், கேஸ் சில வருஷங்கள் இழுபட்டு நடைபெறும்போது தீர்ப்புக்குக் கொஞ்சம் முந்தி அந்தப் பெண் இறந்துவிட்டதும், கேஸ் ஒன்றுமில்லாமல் போனதும்தான் நடப்பு. இதுதான் ‘ஜீவனாம்சம்’ என்ற மகத்தான படைப்பாக மாறியிருக்கிறது. ‘எழுத்து’ பத்திரிகையில் 1959-60-ல் தொடராக வெளிவந்த நாவல் இது.

தாசில்தார் விஸ்வநாதய்யர் மகனான வெங்கடேஸ்வரன், அவன் மனைவி அலமேலு. நாலைந்து குழந்தைகள். வெங்கடேஸ்வரனின் விதவைத் தங்கை சாவித்திரி. சாவித்திரிக்கு பன்னிரண்டு வயதில் கல்யாணம் நடக்கிறது. அப்போது அவளுக்கு அது ஒரு விளையாட்டாகத்தான் இருந்தது. பிறகு நாலே மாதங்களில் கணவன் கிருஷ்ணமூர்த்தியை இழந்து தமையன் வீட்டில் இருக்கும்போதும் கூட அப்படித்தான் தோன்றியது. மணையில் உட்கார்ந்து கிருஷ்ணமூர்த்தி முகத்தை அவள் ஒரு தடவை கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. கள்ளத்தனமாகவும் பார்க்கவில்லை. அவ்வளவு கூச்சம். அப்புறம் அம்மா செத்துப் போகிறாள். அப்போது அவள் வயது பதினைந்து. அம்மாவின் சாவில்தான் துக்கம் என்பது என்ன என்று தெரிந்து கொள்கிறாள்.

அம்மாவின் வருஷம் முடிவதற்குள் சோபன முகூர்த்தத்துக்கு நாள் வைத்து கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனார் மிராசுதார் ராமசாமி அய்யரிடமிருந்து கடுதாசி வருகிறது. கட்டுக்குடுமியும், வைரக் கடுக்கனும், பட்டுக்கரை வேஷ்டியும், தங்க அரைஞாணுமாக கிருஷ்ணமூர்த்தி அவளிடம் மற்றவர் முன்னிலையில் ஒரு வார்த்தை பேசியதில்லை. ‘ஜலம் ஒரு டம்ளர் கொடு’ என்று கூடக் கேட்டதில்லை. அப்பாவோடும் அம்பியோடும் சாப்பிடும்போது கூட ‘போடு, வேண்டாம்’ என்று சொன்னதில்லை.

சாவித்திரி புக்ககம் போகும்போது கணபதிக்கு ஐந்து வயது. கிருஷ்ணமூர்த்திக்கு அப்புறம் ரொம்ப தள்ளிப் பிறந்தவன். குழந்தை, சாவித்திரியோடு ரொம்பவே ஒட்டிக் கொள்கிறான். புக்ககத்தில் சாவித்திரியை வேற்று மனுஷியாகவே பார்க்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் தாயும் தகப்பனும் அவளைத் தங்கள் மகளைப் போலவே பாவிக்கின்றனர். அங்கே போய் சில தினங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவள் ரசம் பண்ணும்போது அய்யர் ‘இன்றைக்கு சாவித்திரி சமையலா?’ என்று கேட்டு விடுகிறார். அந்த அளவுக்கு ருசி தூக்கி அடிக்கிறது.

‘சாவித்திரிக்கு இதெல்லாம் தாங்கவே முடியவில்லை. அப்பா ஆத்திலும் இப்படிக் கேலி பேசி இருக்கிறார்கள். ஆனால் இது மாதிரியா? அவளுக்குப் பரிமாறக் கூட ஓடவில்லை. புகழ்ச்சி அவளை அவ்வளவு பதட்டப்படுத்தி விட்டது. அப்புறம் சுந்தரம் மாமாவும் சாப்பிட்டு விட்டு, ‘பேஷ், பேஷ்’ என்று ரசத்தை கையில் வாங்கிக் குடித்த போது – தன்னை இப்படிப் பைத்தியமாக அடிக்கிறார்களே என்று உணர்ச்சியால் கண்களில் நீர் பெருகி விட்டது. அன்றைய தினம் அம்மாவுக்கு ரசமே மிஞ்சவில்லை.’

நான்கே மாதங்களில் குடும்பத்தின் பொறுப்பையே அந்த அம்மாள் சாவித்திரியிடம் கொடுத்து விடுகிறாள். ‘மருதா, இனிமேல் இந்த வீட்டுக்கு சின்னம்மாதான் எல்லாம், தெரியுமா? என்ன வேணுமோ அவளைக் கேட்டுக் கொள்.’ வேலைக்காரி மூக்காயிக்கும் அதே உத்தரவு. கணபதிக்கும் அதே. எல்லாம் உங்க மன்னிகிட்ட செய்து கொள். அப்பா ஏதாவது கேட்டாலும் ‘சாவித்திரியைக் கேட்டுச் சொல்கிறேன்’ என்று பதில். நாலு மாதத்துக்குள்ளேயே இப்படி. அவளுக்கு அது புகுந்த வீடாகவே படவில்லை. பிறந்த வீட்டு அதிகாரம் கிடைத்த மாதிரிதான் இருந்தது. இதெல்லாம் நடக்கும்போது சாவித்திரியின் வயது பதினாறு. நாலு மாதம் கழித்து சாவித்திரியைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே போய் எந்நேரமும் புக்ககத்தின் பெருமைதான். மாமனாருக்குப் பூஜைக்குச் சாமான்களைப் பளபளவென்று தேய்த்து எடுத்து வைப்பது, தோட்டத்திலே இருந்து பூக்குடலை நிறைய அப்பா விடியற்காலமே போய் ஆய்ந்து கொண்டு வருகிற நந்தியாவட்டை, மஞ்சலரளி, பவளமல்லி, துளசி, வில்வம் எல்லாம் தனித்தனியாக தட்டிலே பிரித்து வைத்து, மல்லிகையை மாலையாகக் கட்டி, கோலம் போட்டு, ஆசனப் பலகையை அலம்பி… இன்னும் எத்தனையோ விஷயங்கள். புக்காத்தில் அவள் வீட்டைப் போல் வேலைக்காரி கிடையாது. ஒரு சூளை பத்துப் பாத்திரத்தையும் போட்டுக்கொண்டு அம்மாதான் தேய்ப்பார். இவளைத் தேய்க்க விடவே மாட்டார். கைகாப்பு, கொலுசு, பாட்டில் (இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) எல்லாம் தேய்ந்து போய்விடுமாம். அதெல்லாம் ஒதுக்கிக்கொண்டு தேய்க்கிறேன் அம்மா என்று மன்றாடுவாள். அப்படியாவது நீ செய்து எனக்கு ஆக வேண்டாம் என்று விரட்டிவிடுவாள் அம்மா.

நாவல் முழுவதுமே நனவோடை உத்தியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. தன் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் வைத்து நினைத்துப் பார்க்கிறாள் சாவித்திரி. காலம் ஒன்றும் அதிகம் கடந்து விடவில்லை. ஐந்து ஆண்டுகளாக தமையன் வீட்டில் விதவை வாழ்க்கை. புக்ககம் போய் நான்கு மாதங்களில் முதல் முதலாகப் பெற்றோர் வீட்டுக்குப் போகும் போது நடந்ததெல்லாம் ஒரு சித்திரமாகவே அவள் மனதில் பதிந்துபோகிறது. அதுதான் சுமங்கலியாக அவளுடைய கடைசிப் பயணம். பெற்றோர் வீட்டுக்கு வந்து பதினைந்து நாள் கழிந்த நிலையில் ‘இன்னும் மாமனாரிடமிருந்து வரச் சொல்லி கடிதம் வரவில்லையே?’ என ஆவலுடன் அவள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது கணவனின் மரணச் செய்திதான் வருகிறது. வயக்காட்டுக்குப் போனவன் கிணற்றில் தவறி விழுந்து செத்துவிட்டான். காட்டில் செத்த பிணத்தை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது என்ற சாஸ்திரப்படி அப்படியே கொண்டு போய் எரித்து விடுகிறார்கள். அம்மா அவன் பிணத்தைக் கூடப் பார்க்கவில்லை. சாவித்திரிக்கோ மறுநாள்தான் தந்தியே கிடைக்கிறது.

முதல்முறையாகப் புக்ககத்திலிருந்து பிறந்த வீட்டுக்குச் சென்றபோது கிருஷ்ணமூர்த்தி வண்டிக்குள்ளிருக்கும் அவளை எட்டிப் பார்க்கிறான். அந்தக் கணம் சாவித்திரியும் முழுக்க விரித்த கண்களுடன் அவனை நிலைத்துப் பார்க்கிறாள். அவளுக்குப் பளிச்சென கண்களில் நீர் துளிர்த்துவிடுகிறது. அப்பாவும் சுந்தர மாமாவும் பார்த்து விடாதிருக்க, குனிந்து புடவையால் கண்களைத் துடைத்துக் கொண்டு வண்டி போகிற திசைப்பக்கம் உற்றுப் பார்க்கிறாள். அதுதான் கிருஷ்ணமூர்த்தியை அவள் கடைசியாகப் பார்த்தது.

கிருஷ்ணமூர்த்தியின் மரணத்துக்குப் பிறகு சாவித்திரியின் தகப்பனார் இறந்து போகிறார். தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் அவளுடைய வாழ்க்கையை வெங்கடேஸ்வரனே தீர்மானிப்பவனாக மாறுகிறான். வாஸ்தவத்தில் அப்படித் தீர்மானிப்பது அவள் மன்னி. அவளுடைய யோசனையின் பேரில் சாவித்திரியின் மாமனாரிடம் ஜீவனாம்சம் வழக்குப் போடுகிறான் தமையன். வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், அவளுடைய மாமியாருக்குக் கண் பார்வை போய் விடுகிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் வெங்கடேஸ்வரன் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அவனுடைய நோக்கமெல்லாம் சாவித்திரியை வைத்து அவள் புக்ககத்திலிருந்து பணம் வாங்குவது மட்டுமாகத்தான் இருக்கிறது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவரிடம் மனிதாபிமானமே இல்லாமல் பேசுகிறான். ‘இதோ பாருங்கோ, பெரியவாள்!’ என்று இடைமறித்து, ‘இதெல்லாம் யாருக்குத் தெரிந்து என்ன ஆகணும், அவரவர் அனுபவம் அது. இப்போது நடக்கிற விஷயத்தை ஏதாவது சொல்லுங்கோ.’ வெங்கடேஸ்வரன் குறிப்பிடுவது பண விஷயம். ஆனால் அவன் பேசியதை விட இன்னும் நிஷ்டூரமாகப் பேசுகிறாள் மன்னி. ‘தர்மம் நியாயம் பார்க்காதவர்களுக்கு இன்னும் என்னெல்லாம் ஏற்பட இருக்கோ?’ என்று சாவித்திரியின் காது படவே கூறிவிட்டு சாவித்திரியும் அப்படி ஏதாவது சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் அவளைப் பார்க்கிறாள்.

மாமியாருக்குக் கண் பார்வை போய் விட்ட செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து சாவித்திரியின் துக்கம் அதிகரிக்கிறது. தன்னைப் பெற்ற மகளாக நினைத்தவர் அவர். கிருஷ்ணமூர்த்தியின் தம்பி கணபதியோ அவள் பெறாத பிள்ளை. அவள் மீது உயிரையே வைத்திருந்தான். ஆனால் சாவித்திரியால் தன் தமையனை எதிர்த்து எதுவுமே சொல்ல இயலவில்லை. அதற்கான இடமே அந்தக் கால பிராமண குடும்பங்களில் கிடையாது. (அசோகமித்திரனின் ‘இருவர்’ என்ற கதையை நினைவு கூருங்கள். வீட்டுக்கு விலக்காக இருந்த தன் விதவைத் தங்கையை மாட்டை அடிப்பது போல் அடிக்கிறான் சகோதரன். அதன் காரணமாகவே அவள் ஜன்னி வந்து இறந்துபோகிறாள்.)

ஜீவனாம்சம் பற்றி இரண்டு குடும்பங்களும் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி யோசனை சொல்கிறது கோர்ட். சாவித்திரியின் மாமனாரும் அதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இல்லாவிட்டால் சாவித்திரி எங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்கிறார். ஆனால் வெங்கடேஸ்வரன் இது எதையும் கேட்பதாக இல்லை.

நாவலின் இறுதிப் பகுதியான அறுபது பக்கங்கள் பேரிலக்கியங்களில் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது. உரலில் மாவு அரைத்துக்கொண்டிருக்கும் சாவித்திரியிடம் முதல்முதலாக வெங்கடேஸ்வரன் கேஸ் பற்றி அவள் கருத்தைக் கேட்கிறான். ‘நீ என்ன சொல்றே?’ மூன்றே வார்த்தைகள்.

சாவித்திரி பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் பத்துப் பதினைந்து பக்கங்களில் நனவோடை உத்தியிலேயே நகர்ந்து செல்கிறது.

‘அண்ணாவுக்கு என்ன பதில் சொல்கிறது. இதை அவள் அந்த இமைக்கிற பொழுதிலே தீர்மானிக்க வேண்டி இருந்தது. அண்ணா கேள்வியின் கடைசி அட்சரம் ஓய்ந்த உடனே தன் பதிலும் வந்திருக்கணும்னு தானே அண்ணா எதிர்பார்த்திருப்பான். அண்ணாவுக்கு பதில் தன் வாயிலே வந்து விட்ட மாதிரியும் அவளுக்கு பிரமை தோன்றியது. பதில் என்ன, நினைத்து சாவகாசமாக வருகிறதா? கேள்வியோட ஓய்வோடயே தானே பதிலினுடைய உயிர்ப்பும் விழிக்கிறது. தனக்கு இந்த விழிப்பு தான் எப்பவோ வந்து விட்டதே. அண்ணா, மன்னி, தான் என்கிற வித்யாசம் ஏற்பட்ட அந்த க்ஷணமே வந்ததுதானே இந்த விழிப்பு. ஆனால் இதை விழிப்புன்னுதான் எப்படிச் சொல்றது. நடக்கிறதெல்லாம் தனக்கு இன்னும் கனவாகத்தானே இருக்கு. அண்ணா தன்னைக் கேட்கிற கேள்வியே கனாவிலே உருவம் இல்லாமல் குரல் இல்லாமல் கேட்கிற மாதிரிதானே இருக்கு தன் நெஞ்சுக்கு. காதுக்கு வார்த்தை தெரிகிறது. நெஞ்சுக்கு? இப்போது எந்த வசத்திலே இருக்கு. அண்ணா கேள்வி அதோட காதிலே புரியும்படியாகப் பட்டதா?’

இப்படியே ஏழெட்டு பக்கங்கள்… அடுத்து தொடர்வது இது:

‘அண்ணா போய்க் கொண்டிருப்பதைத்தான் அவள் கண்டாள். அவளுக்கு சுரீரிட்டது. அண்ணா கேட்ட கேள்வி, அதுக்கு பதில்? அண்ணா தன் முன் வந்து நின்றானா, எவ்வளவு நேரம் நின்றிருப்பான். அவனை நிற்கச் செய்து விட்டு தான் எங்கோ மன சஞ்சாரம் தன்னை அறியாமலே செய்து கொண்டிருந்து விட்டாளோ. தான் அண்ணாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறாளா, இல்லை பார்க்கவே இல்லையா? அப்படியானால் தனக்குள் இவ்வளவும் சுழன்று கொண்டிருந்தபோது, அண்ணா? தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் – உண்மையில், அவை அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததா – அது அவளுக்கே ஞாபகம் இல்லை. அண்ணாவை அவள் பார்த்ததாகவே பிரக்ஞை இல்லை. ஒருவேளை பதிலுக்குக் காத்திருந்து விட்டு தான் எதுவும் வாயசைக்காது இருக்கவே, போய்க் கொண்டிருக்கிறானா. அப்படியானால் அண்ணா எவ்வளவு நேரம் தன் கேள்விக்குப் பதில் எதிர்பார்த்து நின்றிருக்கிறான். தான் எவ்வளவு நேரம் தானறியாமல் ஸ்மரணை இல்லாமல் இருந்திருக்கிறாள். ஸ்மரணை இல்லாமல் என்று கூடச் சொல்வதற்கில்லை. தனக்கு ஸ்மரணை இருக்கக் கண்டுதானே இத்தனையும் தனக்குள் ஓடி இருக்கிறது. இத்தனை என்று இப்போது என்னால் மொத்தமாக ஏதோ சொல்லமுடிகிறதே தவிர இப்போது வக்கணையாக கோர்வையாக எனக்குத் திருப்பிச் சொல்ல வராதே. ஏன், நினைக்கவே வராதே. நான் என்ன நினைத்தேன். வசமிழந்த ஒரு நிலையிலிருந்து வசப்பட்ட மற்றொரு நிலைக்கு நான் போயிருக்கிறேனா. அண்ணா ஏன் போய்க் கொண்டிருக்கிறான்.’

இப்படியே மீண்டும் பத்து பக்கங்கள்…

இந்த நிலையில்தான் சாவித்திரி கணைவனை இழந்த ஏழாவது வருஷத்தில் அவள் வாழ்வைத் திசையையே மாற்றக் கூடிய ஒரு சம்பவம் நடக்கிறது. ஒருநாள் வழக்கம் போல் கோர்ட்டுக்குப் போகிறான் வெங்கடேஸ்வரன். திரும்பி வந்து சாவித்திரியின் மாமனார் மரணமடைந்த செய்தியைச் சொல்கிறான். அப்போது அவன் பேசி முடிக்கும் போது, ‘போனது இன்னிக்கும் வெட்டி ஜோலியாப் போச்சு’ என்கிறான்.

அவள் எதிர்கொள்ளும் நான்காவது மரணச் செய்தி அது. முதல் மூன்று மரணங்கள் – சாவித்திரியின் கணவன் கிருஷ்ணமூர்த்தி, சாவித்திரியின் அம்மா, அப்பா. இப்போது மாமனார்.

சாவித்திரிக்கு துக்கத்துக்கு நடுவிலேயும் தமையனின் அந்த வார்த்தை தாங்கமாட்டாமல் பொருமிக் கொண்டு வருகிறது. மனசுக்குள்ளே கத்திக் கொண்டாள். ‘அண்ணா, வெட்டி ஜோலியாகப் போச்சு என்று சொல்ல உனக்கு எப்படி வாய் வந்தது. நீ போனது வெட்டி ஜோலியாச்சுன்னு கவலைப்படுகிறாயே. அவர் வந்த ஜோலி முடிஞ்சு போச்சு. போய் விட்டார். உன் ஜோலியை விட அந்த ஜோலி எவ்வளவு முக்கியம் என்று படவில்லையா. உன் ஜோலி இன்றைக்கு முடியாவிட்டாலும் நாளைக்கு முடியலாம். மனுஷன் ஜோலி முடிகிறது ஒரே தடவைதான் அண்ணா. அதுக்கு மதிப்பு வை. பணத்தைத்தான் நிறுத்துப் பேசுகிறேன். ஜோலியையும் நிறுத்துப் பார்க்கிறாயே. உன் ஜோலி காக்கலாம். அந்த ஜோலி காக்காது…

ஆனால் அண்ணாவுக்கு இப்படி ஒரு வார்த்தையாகக் கூட பதில் சொல்லிப் பழக்கப்பட்டவள் இல்லையே. அண்ணாவைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பார்க்கவே விரும்பவில்லை.’

இறுதியாக சாவித்திரி தன் அண்ணாவிடம் பேசுகிறாள். அவள் அப்படிப் பேசுவாள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் அப்படிப் பேசியதற்குக் காரணம் மாமனார் இறந்ததால் சாவித்திரிக்கு ஏற்பட்ட தீண்டல். பத்து நாட்களுக்கு அவள் யாரையும் எதையும் தொடக் கூடாது. தொட்டால் தீட்டு.

‘ராஜா, அத்தை கிட்ட போகாதே. சட்டையைப் போட்டுக் கொண்டு.’ மன்னி கூடத்திலிருந்து அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்து குழந்தையைத் தூக்குகிறாள். ‘அத்தைக்குத் தீண்டல். சாவித்திரி, கிணற்றடிக்குப் போய் ஒரு முங்கு போட்டுட்டு வா. ஒரு பத்துநாள் போது போகணும். இன்றைக்கு மூணுநாள் தானே.’

இந்தத் தீண்டல் பிரச்சினைதான் சாவித்திரியின் அந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகிறது. கிருஷ்ணமூர்த்தி இறந்து போனாலும் அவனுடைய உறவு அவளுக்கு இன்னமும் இருப்பதால்தானே இந்தத் தீண்டல் விவகாரம் மன்னிக்குத் தலையாய பிரச்சினையாக இருக்கிறது? அதனால் கடைசியில் அவள் தமையன் வீட்டு வாழ்வை நிராகரித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கே போய் விடுகிறாள். மேற்கோள் காட்ட வேண்டுமானால் அந்தக் கடைசி இருபது பக்கங்களையும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும். மகத்தான பகுதி அது. எத்தனை நூற்றாண்டுகளாக பிராமண விதவைப் பெண்கள் அப்படி இருந்தார்களோ தெரியவில்லை. சாவித்திரியும் ஒன்றும் புரட்சி செய்து விடவில்லை. தமையன் வீட்டிலிருந்து புக்ககம்தான் போகிறாள். ஆனாலும் அதற்கே அவள் மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. வார்த்தைகளே மறுக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு வார்த்தை பேசுவதே புரட்சிகர நடவடிக்கை போல் தோன்றுகிறது.

பெண்களின் வாழ்வை இலக்கியமாக்கியதில் தி. ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரைப் போலவே சிகர சாதனை செய்திருக்கிறார் சி.சு. செல்லப்பா. தமிழ் தெரிந்த அத்தனை பெண்களும் படித்தே ஆக வேண்டிய ஒரு நவீன காவியம் ‘ஜீவனாம்சம்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com