முதல் குழந்தைப்பேறு தற்செயலாக இருக்கலாம் ஆனால் இரண்டாவது திட்டமிடப்பட்டதாக இருப்பதே சிறந்தது!

வயது வித்யாசம் காரணமாக மூத்த குழந்தை, சதா தங்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும் தன் அம்மாவிடம் சென்று, ‘பாப்பா பிறந்ததுல இருந்து நீங்க என்னைக் கவனிக்கறதே இல்லை... என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்லை....
முதல் குழந்தைப்பேறு தற்செயலாக இருக்கலாம் ஆனால் இரண்டாவது திட்டமிடப்பட்டதாக இருப்பதே சிறந்தது!

8 வது படிக்கும் மூத்த மகளோடும்... யூகேஜி படிக்கும் சின்ன மகளோடும் கடைகளுக்கோ, மருத்துவமனைக்கோ, நீண்ட நாட்கள் கழித்து சொந்த ஊருக்கோ, உல்லாசப் பயணங்களுக்கோ எங்கே செல்வதாக இருந்தாலும் பொதுவாக நான் மட்டுமல்ல அல்லது என்னைப் போன்ற பெற்றோர்கள் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான கேள்வியைப் பற்றி இன்று பேசலாம்.

உங்க பொண்ணாங்க இது?

ஆமாங்க...

அப்போ இது யார் உங்க தங்கை பெண்ணா?

இல்லைங்க இவளும் எம்பொண்ணு தான்...

ரெண்டு பேருக்கும் நடுவுல வயசு வித்யாசம் கொஞ்சம் ஜாஸ்தி தான் இல்லையா? என்று நமட்டுச் சிரிப்புடன் கடக்கும் எத்தனையோ நபர்களைக் கண்டிருக்கிறேன்.

இந்தத் தொடர் எழுதத் தொடங்கும் போதே மறக்காமல் நிச்சயம் இதைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று முன்னமே தீர்மானித்திருந்தது தான். ஏனெனில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்குமான வயது வித்யாசமென்பது பல குடும்பங்களிலும்  இப்போது அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது. உடனே சிலர் கேட்கலாம்... ஹே... அந்தக்காலத்தில் கூடத்தான் முதல் குழந்தைக்கும், கடைசிக் குழந்தைக்கும் நடுவில் அதிகமான வயது வித்யாசம் இருந்ததே என்று. ஒப்புக் கொள்கிறேன்... ஆனால் நீங்கள் சொல்லும் அந்தப் பழைய காலங்களில் முதல் குழந்தைக்கும் கடைசிக் குழந்தைக்கும் நடுவில் நிச்சயம் இரண்டோ, மூன்றோ குழந்தைகள் இருந்து தலைக்கும், வாலுக்குமான வயது வித்யாசங்களை கொஞ்சம் இட்டு நிரப்புவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லையே. முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது. அது தான் சில உளவியல் பிரச்னைகளுக்கும் காரணமாகி விடுகிறது. இரண்டு குழந்தைகளுக்குமிடையில் அதிக வயது வித்யாசம் இருக்கும் பட்சத்தில் அம்மாக்களின் பெரும்பான்மை நேரங்கள் வயதில் இளைய குழந்தையுடனே கழிய நேரிடுகிறது. இதனால் மூத்தவர்களின் மனம் மிகச் சோர்வாகி விடும். இதைத் தவிர்த்து இரு குழந்தைகளிடமும் பேலன்ஸ்டாகப் பாசம் காண்பிப்பதும், அதை உள்ளது உள்ளபடி அவர்களை உணர வைப்பதும் எப்படி எனத் திட்டமிட்டு செயல்படுவதில் தான் இருக்கிறது அம்மாக்களின் சாமர்த்தியம்.

முதலில் இந்த வயது வித்யாசத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? என ஒரு அலசு அலசி விடுவோம். அப்போது தான் அதிலுள்ள சிரமங்களைத் தீர்ப்பது எப்படி என்றும் ஒரு முடிவுக்கு வர முடியும்.

முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையில் மிகப்பெரிய வயது வித்யாசம் ஏன் வருகிறது என்றால், சிலர் முதல் குழந்தை பிறந்ததுமே... இந்த ஒரு குழந்தை போதும் வாழ்க்கை மொத்தத்திற்கும் என்று தீர்மானித்து விடுகிறார்கள்... பிறகு முதல்குழந்தை வளர...வளர திடீரென்று உதயமாகும் ஞானோதயத்தால் அடடா... இன்னொரு குழந்தை இருந்தால் அல்லவா ‘பகிர்தல்’ என்ற ஒரு விசயத்தை இந்த மூத்த குழந்தை கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றத் தொடங்கி அடுத்த குழந்தைக்காக திட்டமிடும் மனப்பானமை வரும். இப்படித் தான் பலர் இரண்டாவது குழந்தையை தாமதமாகத் திட்டமிடத் தொடங்கி அதிக வயது வித்யாசத்தில் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

சிலருக்கு திட்டமிடுதல் எதுவுமின்றி இயற்கையாகவே முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்குமான இடைவெளி என்பது தானாக அமைந்து விடும். இதை அவர்களது குடும்ப மரபு என்று எளிதாக நம்மால் ஒதுக்கி விட முடியும். 

சிலருக்கோ முதல் குழந்தை பெண் குழந்தை எனும் பட்சத்தில் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்து விடுமோ என்ற பயத்தில் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போய் கடைசியில் ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எதுவானாலும் சரி முதல் குழந்தைக்கு உடன் பிறந்தோர் என்று பேச்சுத் துணைக்காவது அடுத்ததாக ஒரு குழந்தை வேண்டும் என்ற முடிவுக்கு இறங்கி வருவார்கள். அதற்குள் அவர்களுக்கும் சரி... முதல் குழந்தைக்கும் சரி வயது ஏறிக்கொண்டே போய் இரண்டாவது குழந்தைக்கும், முதல் குழந்தைக்கும் இடையிலான வயது வித்யாசம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

சிலருக்கு மருத்துவக் காரணங்கள் காரணமாகவும் முதல், குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையில் அதிக வயது வேறுபாடு நிலவக் காரணமாகி விடும்.

மேற்கண்ட காரணங்களை எல்லாம் தாண்டி; இந்தியாவில் கர்ப்பம் என்பது தற்செயலான ஒரு விசயமாகவே இப்போதும் கருதப்படுவதும் கூட இதற்கொரு காரணமென்றால் அது மிகையில்லை. திருமணமானால் நான்கைந்து மாதங்களிலோ, அல்லது முதல் திருமண நாள் வருவதற்குள்ளாகவோ நிச்சயம் பெண் கருவுற்றே ஆக வேண்டும் என்பது இங்கே நமது சமூகத்தில் எழுதப் படாத விதி. அதனால் பெரும்பான்மையான திருமண உறவுகளில் முதல் குழந்தைப்பேறு என்பது பெரும்பாலானோருக்கு போகிற போக்கில் தன்னிச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்து விடக் கூடும். அப்படி அமையவில்லை என்றால் ”வீட்ல விசேஷமா? என்ன கல்யாணமாகி 6 மாசமாகப் போகுது இன்னும் ஒரு நல்ல செய்தி சொல்ல மாட்டேங்கறியே” என்பதான உற்றார், உறவினர்களின் வீணான விசாரணைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாகி விடும். இம்மாதிரியான பதட்டங்களால் தான் முதல் குழந்தைப் பேறு எனும் அருமையான, அற்புதமான விசயத்தை அவசர, அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமாகி விடுகிறது. முதல் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாகக் கருவுற்ற பெண்கல் மகப்பேறு மருத்துவரிடம் செக் அப்புக்குச் செல்லும் போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே... இந்தக் குழந்தைக்காக நீங்கள் திட்டமிட்டீர்களா? அல்லது தற்செயலானதா? என்பதாகவே இருக்கும். ஏனெனில் இரண்டாவது குழந்தைப்பேற்றின் போது பெற்றோர்கள் என்பவர்கள் தங்களது அறியாமையின் எல்லையைத் தாண்டி வெளியில் வந்து விடுகிறார்களில்லையா? ஆகவே குழந்தை வளர்ப்பில் இன்னும் வேறு என்ன என்ன புதுமைகளைக் கண்டறிய முடியும் என்றெல்லாம் கணவனும், மனைவியும், முதல் குழந்தையுமாக உட்கார்ந்து ஆலோசிக்க, ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள தேவையான அவகாசம் எடுத்துக் கொண்டு முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்குமான பந்தத்தின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியை அப்போதே தொடங்கி விடலாம்.

இப்படிச் செய்வதால்;

வயது வித்யாசம் காரணமாக மூத்த குழந்தை, சதா தங்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும் தன் அம்மாவிடம் சென்று, ‘பாப்பா பிறந்ததுல இருந்து நீங்க என்னைக் கவனிக்கறதே இல்லை... என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்லை.... ஐ ஹேட் யூம்மா என்றோ ஹேட் யூப்பா என்று சொல்லக் கூடிய நிலையை வர விடாமல் தடுக்கலாம்.

அது மட்டுமல்ல இரண்டாவதாகப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி முதல் குழந்தையிடம் விவரித்துப் பேசுவதின் மூலம் பிறப்பதற்கு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இனம் புரியாத ஒரு பாச வெம்மையை இரு குழந்தைகளுக்குமிடையில் பெற்றோரால் தங்களது குழந்தைகளிடம் கட்டமைக்க முடியும். பாசம் எப்போதுமே பிரயத்தனத்தால் வரவழைக்கப் படுவதில்லை. அது தானே பீறிட்டு வெளிவரக்கூடியதே... அப்படி வரும் அளவுக்கதிகமான பாசமும் கூட சில சமயங்களில் பொசஸிவ்னெஸ் காரணமாக திரிந்து விடக் கூடும். இரு குழந்தைகளுக்குமிடையே அதைத் தவிர்த்து அந்தப் பாசத்தின் பரிசுத்தத்தை நீடிக்கச் செய்யும் பொறுப்பு பெற்றோர்களுடையதாதாலால் இரு குழந்தைகளுக்கிடையே சரிசமமானதொரு அன்பைப் பகிர்ந்தளுக்கும் பொறுப்பும் அவர்களுடைதாகிறது.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம்... மூத்த குழந்தை டீன் ஏஜ் பருவத்திலும், இரண்டாவது குழந்தை கிண்டர் கார்டன் பருவத்திலும் இருந்தால்... இவர்களுக்கிடையிலான உறவைப் பெற்றோர்களான நாம் மிகச் சரியாகக் கையாளும் பட்சத்தில் நாம் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்தவர்களாவோம். தங்கைக்கு அக்கா மட்டுமல்ல அம்மா அருகில் இல்லாத நேரங்களில் எல்லாம் அவளுக்கொரு இரண்டாம் தாயாகவும் அக்காவே செயல்படும் அதிசயமும் நடக்கும்.

அடுத்த வாரம் இதைப் பற்றி  மேலும் பேசலாம்...

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com