8.  கொடுமணிக்குரல்

போன வாரம் சவுதி அரேபியாவில்இருந்தேன்.“அஞ்சுவருஷமாகுடும்பத்தோட இங்க இருந்தோம் சார்.
8.  கொடுமணிக்குரல்



போன வாரம் சவுதி அரேபியாவில் இருந்தேன்.“அஞ்சு வருஷமா குடும்பத்தோட இங்க இருந்தோம் சார். இப்ப wife, ஒரே பொண்ணு, இரண்டு பேரையும் ஊர்லே வீடு பாத்துவச்சுட்டு, நானும் என்ன மாதிரி இன்னும் நாலு பேரும் சேர்ந்து ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்து தனிமைலே இருக்கோம்..” சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், சரவண பவன் வெய்ட்டர் ஒருவர் குரல் உடையப் பேசினார். 

“தனியாய் இருக்கலாம்.. ஆனால் தனிமையாயிருத்தல்.. அப்பா! பயங்கரத்தில் அவன் சிலிர்த்துக் கொண்டான்” என்பார் லா.சா.ரா.  நாலு பேர் கூட இருந்தும், தனிமையிலே இருக்கோம் என்று சொன்ன அந்த வெய்ட்டர், தன் கண் கலங்குவதை மறைக்க, நான் கேட்காமலேயே “காபி எடுத்துட்டு வரேன் சார்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார். 

சவுதி அரசாங்கத்தின் புதுக் குடும்ப வரி (dependenttax) மற்றும் வேலைகளில் அரேபியர்களையே நியமிக்க வேண்டும் என்ற ஆணைகளினால், இருபது லட்சம் இந்தியர்கள் வெளியேறி விட்டனர். இதில் பிரிந்த குடும்பங்கள் ஏராளம். இந்தியர்கள் மட்டுமே வரும் சரவண பவன் இருந்த மால் வெறிச்சோடி இருக்கிறது. 

நாம் ஒரு கூட்டத்தின் நடுவில் இருந்தாலும், நமக்கு வேண்டியவர்கள் நம்மோடு இல்லை என்றால் தனிமைதான். அப்படி ஒரு தனிமையில் இருக்கும் போது, நல்ல சங்கீதம் கூட தலைவலியைக் கொடுக்கும். சிறிய சத்தங்கள் கூட இடி போல் ஒலிக்கும். தேவையே இல்லாமல் எரிந்து விழுவோம். 

இத்தனை மணிக்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு நம் துணைவரோ, துணைவியோ நேரம் கழித்தும் வராமல் இருந்து விட்டாலே, அவர்கள் மீதே கோபம் வரும். 

எந்த விதப் பொழுது போக்கும் இல்லாத, கொடும் வெயில் தகிக்கும், பாலைவனத்தில், பொருள் சேர்ப்பது மட்டுமே குறியாகிப் போன வாழ்வில், தனிமை எவ்வளவு கொடுமை! அப்படி வீட்டுக்காரர் கஷ்டப்படும் போது, அவரைப் பிரிந்து வாழும் மனைவியின் மனது என்ன பாடு படும்? 

இந்தப் பெண்ணைப் பாருங்கள். கூடி மகிழ்ந்து இருந்து விட்டு, வந்து விடுவேன் என்று சொல்லிப் பிரிந்து போய் விட்ட கணவனை எண்ணி உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு தவிக்கிறாள். சம்பாதிக்க ரியாதுக்கோ, துபாய்க்கோ, அமெரிக்காவுக்கோ சென்றிருக்கலாம். 

சிறை பனி உடைந்தசேயரி மழைக் கண்
பொறைஅருநோயொடு புலம்பு அலைக்கலங்கிப்
பிறரும்கேட்குநர்உளர் கொல், உறை சிறந்து
ஊதை தூற்றம்கூதிர்யாமத்து,
ஆன்நுளம்புஉலம்புதொறுஉளம்பும்,  
நா நவில் கொடு மணி நல்கூர்குரலே

– குறுந்தொகை 86 வெண்கொற்றனார்


கண்களில் நீர் தேம்பி இருக்கிறது. தனிமையில் புலம்புகிறாள். பொறுக்க முடியாத தனிமை நோய் அவளை வாட்டுகிறது. மழை வேறு. குளிர்க் காற்று. அணைத்து, அமைதிப் படுத்த கணவன் அருகினில் இல்லை. 

தொழுவத்தில் கட்டி இருக்கும் காளை மாடு. அழகான, கம்பீரமான எருது. அதனைச் சுற்றிலும் துன்புறுத்தும் ஈக்கள். எருது தன் தலையை அசைத்து அந்த நுளம்புகளை விரட்டுகிறது. அப்போது அதன் கழுத்தின் மணி சத்தமிடும். 

“அந்த கொடுமையான ஒலி என்னைத் தவிர இந்த ஊரில் வேறு யாருக்கும்  கேட்கவில்லையா?” என்று அரற்றுகிறாள். ஈக்கள் எருதை துன்புறுத்துகின்றன. சவுதியிலோ, சிங்கையிலோ  சம்பாதிக்கச்  சென்றிருக்கும் கணவனுக்கும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கலாம். அதை இவளிடம் போனில் சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் சமாளித்து வர வேண்டுமே என்ற கவலை கூட தூக்கத்தைத் தடுக்கலாம். 

புலம் பெயர்ந்த கணவனைப் பிரிந்து,  மனதாலும், உடலாலும் துன்பப்படும் பெண்களைப் பற்றித் தமிழில் இப்போது அதிகம் எழுதப்படுவதில்லை என்பது என் கருத்து.  அவர்களில் வெகு சிலரின், தவறான நடத்தைகளின் செய்திகளை மட்டுமே நாம் படிக்க முடிகிறது.  

ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்த இன்னொரு பெண்ணைப் பார்ப்போம். இவளுக்கும் அதே நிலைதான். அதே தொழுவம், மாடு, கழுத்து மணி. இருளில் தூக்கமின்றி தவிக்கும் போது, தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும், எருதின் கழுத்து மணி அசையும் ஓசை, இடி போல் கேட்கிறது. 

ஒரு சிறிய திணை அளவு கூட இடம் வைக்கமால், இவளையும் காமம் தீ போல் சுடுகிறது. புல்லாணியில் இருக்கும் பெருமாளை நினைக்கிறாள். அங்கு இருக்கும் கடலின் அலைகளும்  கூட, அவள் மேல் தீயாய் வீசுகிறது. நீரும் தீயாய் சுடும் தனிமை.
 
கனைஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல்
தினையேனும்நில்லாதுதீயில்கொடிதாலோ 
புனை ஆர் மணி மாடப்புல்லாணிகைதொழுதேன் 
வினையேன் மேல்வேலையும்வெம்தழலேவீசுமே – 

- திருமங்கையாழ்வார். 

அங்கே பாலைவன வெயிலின் கொடுமை. இங்கே நீரும் சுடும் பிரிவுத் துயரம். கணவன் வெளி நாட்டில் வேலையில் இருக்க, இங்கு பிரிவில் வாடும் மனைவியர் இந்த பாசுரங்களைப் படித்தால், இறைவனை கூட வைத்துக் கொண்டால், மனம் ஆறுதல் அடையலாம். பாரதியின் பெண்ணுக்கும் இதே நிலைதான். அதே தீ. அதில் வாடும் புழுவைப் போல் அவள் நிலை. 

தூண்டிற்புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல், 
நீண்ட பொழுதாக - எனது 
நெஞ்சந்துடித்ததடீ! 
கூண்டுக்கிளியினைப் போல் - தனிமை 
கொண்டு மிகவும் நொந்தேன்; 
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது 
வெறுத்து விட்டதடீ!

‘என்ன சம்பாசிச்சு.. என்ன பிரயோஜனம்.., குடும்பத்தோட வாழ முடியலன்னா” என்று தோன்றத் தொடங்கி விடுமல்லவா? 

கடவுளைக் காதலனாகப் பார்த்து, அவனுடன் சேர முடியாத பிரிவில் வாடுவதாக ஆழ்வார்கள் எழுதிய பாடல்கள் அற்புதமானவை. தமிழ் இலக்கியம், வாழ்வையும், இறை வணக்கத்தையும் ஒன்றுக்கொன்று இணைத்து பக்தி இயக்கம் பெருக உதவியது. காதல் ரசம் சொட்டும் இந்தப் பாசுரங்களுக்குள் விசிட்டாத்வைதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல ஆச்சார்யார்கள் அருமையான விளக்கங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தின் தடங்களை, பல பாசுரங்களில் காணலாம். பாசுரங்களின் தாக்கங்களைப் பாரதியில் பார்க்கலாம். பாரதி வரவில்லை என்றால், தமிழ் எங்கோ தடைப்பட்டு நின்றிருக்கும்.

தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப்பாடும் வரிகளை,  மேலும்   தேடுவோம்.  ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com