Enable Javscript for better performance
glimpse to sangam literature | 1. தேன் தடவிய இள மூங்கில்- Dinamani

சுடச்சுட

  
  krishna

   

  சங்க இலக்கியத்தின் தாக்கத்தைக் காப்பியங்களிலும், பக்தி இலக்கியத்திலும், கம்பனிலும், பாரதியிலும் பார்க்க முடியும். அந்த தடங்களின் வழியே நடை போடுவது ஒரு சந்தோஷமான அனுபவம்.  அப்படி ஒரு தேடல், இந்தக் கட்டுரைகள். 

  ***

  சங்க இலக்கிய காலம் 300BC-200AD என்று பலரால் ஆராயப்பட்டு இருக்கிறது. பாசுரங்களும், பதிகங்களும், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்டன. கம்பர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவ்வளவு இடைவெளிகள் இருந்தும், சங்க கால உவமைகளையும், கற்பனைகளையும், பிற்கால இலக்கியங்களில் காண முடிகிறது. இவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. எளிய தமிழில் சங்க இலக்கியத்தின் தடங்களை, தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை சில ஆயிரம்  ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளைத், தேடும் ஒரு சிறிய முயற்சி. ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே. 

  ***

  யமுனை நதிக்கரையில், குளித்துக் கொண்டிருந்த பெண்களின் உடைகளை எடுத்துக் கொண்டு, மரத்தின் மீது ஏறி  கண்ணன் செய்த குறும்பு - நமக்கெல்லாம் தெரிந்த கதை. இதை ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் அழகாகச் சொல்லுவார்.  

  'நாங்க அரக்கபரக்க திரு திருன்னு பாத்துண்டு நிக்கறோம். நிறைய பேர் குளிக்க வர நேரம். அழுகை அழுகையா வருது. கண்ணுலே எவ்வளவு தண்ணி வருது பாத்தியா? உனக்கு இரக்கமே இல்லையா..? குரங்குப் படைகளின் ராசாதான் நீன்னு எங்களுக்கு தெரியாதா.? அப்படிதானே இலங்கையை அழிச்சே! எங்க துணிகளைக் குடுத்துடேன்.' 

  பரக்கவிழித்தெங்கும் நோக்கிப்
  பலர் குடைந்தாடும்சுனையில்
  அரக்கநில்லாகண்ணநீர்கள்
  அலமருகின்ற வா பாராய்
  இரக்கமேலொன்றுமிலாதாய்
  இலங்கை யழித்தபிரானே
  குரக்கரசாவதறிந்தோம்
  குருந்திடைக்கூறைபணியாய்

  – நாச்சியார் திருமொழி

  ஆண்டாள் கிராமத்தில் வளர்ந்த வெகு சூட்டிகையான பெண் என்பது இந்த பாடலில் தெரியும். மரத்தின்  மேலே ஏறி உட்கார்ந்து இருக்கிற கண்ணனை, 'குரங்குக்கு அரசனே'  என்று சொல்கிறார்.   'லூசாடா நீ' அப்படின்னு இப்போது காதலிகள் செல்லமா திட்டற மாதிரி 'குரங்காடா நீ' அப்படின்னு மறைமுகமா கண்ணனைத் திட்டுகிற அந்த துடுக்கு அற்புதம். 

  அழுகை வருது, ஆனா, கண்ணன் முன்னாடி அழ மனமில்லாமல் அதை அடக்கிக், கண்களில் கண்ணீர் தேங்கித்ததும்புது. 'குரங்கே! துணியைக் குடுறா..' அப்படின்னு உரிமையோட கேட்கிறார் கோதை. 

  இதே காட்சியை, வேறொரு மாதிரி, ஒரு சங்கப் புலவர் அகநானூறில் பாடுகிறார். 'தமிழ்த் தெய்வம் முருகன் மட்டும்தான், பழந்தமிழர் முன்னோர்களை மட்டுமே வணங்கினர்' என்றெல்லாம் கதைப்போர் அவசியம் படிக்க வேண்டிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இந்தப் பாடலில் பெருமாளும் இருக்கிறார்,  திருப்பரங்குன்றத்து முருகனும் வருகிறார். 

                                  வடாஅது
  வண் புனல் தொழுநைவார் மணல் அகன்துறை
  அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
  மரம் செலமிதித்தமாஅல்போலப்

  பாடல் 59 – மருதம் இளநாகனார்

  வடக்கே, வற்றாத நீர் ஓடும் யமுனை நதி. மணல் நிரம்பிய நீண்ட நதிக்கரை. அங்கே ஆயர் குலப் பெண்கள் குளித்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்ணன் மரத்தின் மீது உட்கார்ந்து இருக்கிறான். அங்கு வேறு யாரோ வருவது தெரிகிறது. உடனே கண்ணன் அந்த மரக் கிளையை மிதித்து தாழ்த்திக் கொடுக்கிறான். அந்த இலைகள் பெண்களை மறைத்துக்கொள்கின்றன. அந்த இலைகளை அவர்கள் பறித்து ஆடைகளாக அணிந்து கொள்கின்றனர்.

  'மாஅல்' – திருமாலைப் பாடும் பழைய தமிழ்ப் பாடல். இந்தப் பாடல் முருகனையும்வாழ்த்துகிறது.

  சூர்மருங்குஅறுத்த சுடர் இலை நெடுவேல்,
  சினம்மிகு முருகன் தண்பரங்குன்றத்து
  அந்துவன்பாடிய சந்து கெழுநெடுவரை,

  முருகன் அசுரனை அவன் கூட்டத்தோடு அழித்தான். சுடர் விடும் பெரிய வேலை உடையவன். கோபம் கொண்ட முருகன், அமைதி அடைய அமர்ந்த, குளிர்ந்த திருப்பரங்குன்றம். நல்லாந்துவனார் பாடிய சந்தன மரங்கள் நிரம்பிய அழகிய மலை.

  இந்த சங்கப் பாடல்களின் காலம், 200BC-300AD என்று ஆராயப்பட்டுள்ளது. கண்ணனைப் பற்றியும், வடநாட்டில் உள்ள ஒரு ஆற்றின் பெயரும், திருப்பரங்குன்றம் வர்ணனையும் வரும் இந்த சங்கப் பாடல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

  இந்தக் கண்ணன் கதை, தமிழ்க் காப்பிய காலத்திலும்  தொடர்கிறது. சீவக சிந்தாமணியில் வரும் பாடல் ஓன்று, பலராமர் வருவதைப் பார்த்து கண்ணன் அப்படிச் செய்ததாகச் சொல்கிறது. 

    நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன்
  பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
    வேல் நிறத்தானை வேந்தே விரி புனல் தொழுனைஆற்றுள்
  கோல் நிற வளையினார்க்குக்குருந்து அவன் ஒசித்தது

  என்றான். சரி, இதற்கும் மூங்கிலுக்கும் என்ன சம்பந்தம்? அதைத் தெரிந்து கொள்ளுவதற்கு முன், முதலில் யானைகளைப் பற்றி கொஞ்சம் படித்து  விடுவோம். 

  யானைகள் அறிவுள்ளவை. அவ்வளவு பலம் கொண்ட ஒரு மிருகம் எவ்வளவு அடக்கத்துடனும், அன்புடனும் நடந்து கொள்கிறது என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விட்டன. மனிதரைப் போலவே கூட்டமாக வாழ்வதும், குடும்ப நலன் விழைவதும், இறந்தோருக்கு துக்கம் காப்பதும், அபாரமான ஞாபக சக்தியும் உடைய அற்புதப் பிறவி யானை. தமிழர் நாகரீகம் யானையைக் கொண்டாடி இருக்கிறது. யானை சங்க இலக்கிய பாடல்களில் பலவற்றில் வருகிறது. 

  ஒரு பெண் யானை, பசியோடு இருக்கிறது. ஓடி வருகின்ற ஆண் யானை, பெண் யானைக்கு நிழல் தரும்படி நின்று கொள்கிறது. தன் மனைவியை வேலை செய்ய விடாமல் கிளையைத் தாழ்த்திக் கொடுத்து, அவளைச் சாப்பிடச் செய்கிறது. கண்ணன் கிளைகளை தாழ்த்திக், குளித்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு ஆடை கொடுத்தது போல, இந்த யானை தன் மனைவிக்கு உணவு கொடுக்கிறது என்று வர்ணிக்கிறார் கவிஞர். 

  வடாஅதுவண்புனல்தொழுநைவார் மணல் அகன்துறை
        அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
        மரம் செலமிதித்தமாஅல்போலப்,
    புன்தலைமடப்பிடிஉணீஇயர், அம் குழை
    நெடுநிலையாஅம் ஒற்றி நனை கவுள்
        படி ஞிமிறுகடியும்களிறே தோழி,
        புன் தலை மடப் பிடி –

  மெல்லிய தலையை உடைய மென்மையான பெண் யானைக்கு, பசுமையான ஆச்சா மரத்தின் குழைகளை உடைத்துக் கொடுக்கிறது. சுற்றி வரும் வண்டுகளையும் விரட்டுகிறது. 

  குடும்பத்தைப் பிரிந்து பொருள் தேட வேறு ஊர்களில் அலையும் அப்பா, அம்மாக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு சிறு குழந்தை, பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது என்றால், பிரிவில் வாடும் அம்மாக்கள் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சாமல் போக மாட்டார்கள். அப்பாக்கள் தொலைவில் நின்று சிறிது நேரம் ரசித்து விட்டு, தன் குழந்தையின் நினைவு மோத, நகருவார்கள். 

  இளம் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, விமானத்தில் பயணம் செய்யும் தாய்மார்களை, விமானத்தில் வீறிட்டு அழும் குழந்தைகளின் குரல்கள் எரிச்சல் மூட்டுவதோ, கோபப்படுத்துவதோ இல்லை. 

  கை கோர்த்து, தோள் சாய்த்து போகும் தம்பதிகள் யாரேனும் அருகில் வந்தால், பிரிவின் துயரத்தில் இருக்கும் ஆணோ, பெண்ணோ கொஞ்சம் ஏக்கத்துடன் முறைத்துப் பார்த்து விட்டுத் தலையை மறு பக்கம் திருப்பிக் கொள்வார்கள்.  இந்தக் கணவன், மனைவியர் சங்க காலத்திலும் உண்டு. 

  வேலை பார்க்க வெளிநாட்டுக்குப்  பிரிந்து சென்ற கணவருக்கு, மனைவி மேல் அளவு கடந்த அன்பு. அவர் வழியில், பெண் யானையின் பசி தீர, மெல்லிய தளைகளை வளைத்துக் கொடுக்கும் அன்பான ஆண் யானை இருக்கும் காட்சிகளைப் பார்ப்பார் என்று தோழி மனைவியிடம் சொல்லி, 'அவர் உன்னை மறக்க மாட்டார், திரும்பி வந்து விடுவார்', என்று சொல்லுகிறாள். 

  நசை பெரிது உடையர், நல்கலுநல்குவர்,
    பிடி பசி களைஇயபெருங்கை வேழம்
       மென் சினை யாஅம்பொளிக்கும்
  அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.

  - குறுந்தொகை – 37 சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ

  இந்த வர்ணனை நிறைய புலவர்களைப் பாதித்து இருக்கிறது. பிரிந்து சென்ற கணவனோ, காதலனோ, துணைவியை  மறந்து விட மாட்டான் என்று எடுத்துக் கூற இந்தக் காட்சிப் பல இடங்களில் வரையப்படுகிறது. கலித்தொகையிலும்  இதே வர்ணனை இருக்கிறது. 

  ஐநூறு ஆண்டுகள் கழித்து முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார், இதை இன்னும் கொஞ்சம் இனிப்பாகச் சொல்லுகிறார். 

    பெருகு மத வேழம்  மாப்பிடிக்கு முன் நின்று
  இரு கண் இள மூங்கில் வாங்கி, - அருகு இருந்த-
    தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்,
                       வான் கலந்த வண்ணன் வரை.

  இந்த ஆண் யானை திருவேங்கடத்தில்வசித்த யானை. நல்ல இளமையான மூங்கிலை உடைத்து, அருகில் இருந்த தேனில் முக்கி மனைவிக்குக்  கொடுக்கிறது. 

  எனக்கு மிகவும் பிடிக்கும் பலாச்சுளையை, தேனில் போட்டு என் மனைவி கொடுத்து நான் சாப்பிட்டது உண்டு.  

  இந்த யானையை, முதல் ஆழ்வார்களுக்குப் பின் வந்த திருமங்கையாழ்வாரும் ரசித்து இருக்கிறார். திருப்பிரிதிவட நாட்டில் உள்ள திருத்தலம். இந்த தலத்தில் இருந்துதான் தன் மங்களா சாசனங்களைத் துவக்குகிறார் கலியன். இது எந்த இடத்தில் இருக்கிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஜோஷி மடம் என்பார் சிலர். 

  கரை செய் மாக்கடல்கிடந்தவன் கனை கழல் அமரர்கள்

                                        தொழுது ஏத்த

    அரை செய் மேகலையலர் மகள் அவளோடும்

                                   அமர்ந்த நல்லிமயத்து

    வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர் முளை அளை மிகு

                                     தேன் தோய்த்து
        பிரச வாரி தன்னிளம்பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று

                                       அடை நெஞ்சே

  பிரசவாரி என்றால் தேன் வெள்ளம். இந்த யானை இன்னும் பாசமான ஓரு கணவன்.  இளம் மூங்கிலைத் தேனில் தோய்த்தது மட்டும் அல்லாமல், அதைக் கொண்டு தேனை வாரி தன் மனைவிக்கு கொடுக்கிறது. 

  ‘இள வெதிர், வளர் முளை, அளை மிகு தேன்' எப்படி இனிக்கிறது கலியனின் தமிழ்! 

  ஆழ்வார்களின் தொடர்ச்சியாக கம்பனும் இந்த யானையைப் பாடத் தவறவில்லை. ஆனால் கம்பன் இதை வழக்கம் போல் வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்று விடுகிறார். 

  சித்திரக்கூடத்தில் ராமர் சீதைக்கு காட்டும் இந்தக் காட்சியில், சந்திரப்பிறை போல வளைந்த தந்தங்களை உடைய ஆண் யானை, ஒரு தேனடையை எடுத்து, வண்டுகளைத் தழைகளால் விரட்டி விட்டு, சூல் கொண்ட தன் மனைவிக்கு, தேனை வாயிலேயே ஊட்டி விடுகிறதாம். 

    உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி
  முருகு காதலின் செந்தேனினைமுழைநின்றும் வாங்கி
  பெருகு சூழ் இளம் பிடிக்கு ஒரு பிறை மறுப்பு யானை
   பருகவாயினில்கையின் நின்று அளிப்பது – பாராய்

  சங்ககாலத்தில் யானை வெறுமனே கிளையை வளைத்துக் கொடுத்தது. பூதத்தாழ்வாரின் யானையோ, மூங்கிலை தேனில் தொட்டுக் கொடுத்தது. திருமங்கையாழ்வார் கண்ட யானை மூங்கிலோடு சேர்த்து தேனை வாரிக் கொடுத்தது. கம்பரின் யானைக்கு காதல் அதிகம் – ‘உருகு காதல்’.காதலில் உருகும் யானை. அது தேனை மட்டுமே எடுத்து தன் கர்ப்பவதியான மனைவிக்கு வாயில் நேராக ஊட்டி விடுகிறது. 

  ஐம்பது வயதுக்கு மேல் தமிழை இப்படிப் படிக்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம்.. 'ஐயோ.. சின்ன வயதிலேயே இதெல்லாம் படிக்காம போனோமே. படிச்சு இருந்தா அலுவலகம் சென்று, களைத்து வந்த மனைவிக்கு அவள் கேட்காமலேயே,  டீ போட்டு, சூடு போக ஆத்தி, அவள் கையிலேயே கொடுத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கூட ரொமாண்டிக் காதலனாக, அன்பான கணவனாக இருந்திருக்கலாமே' என்று தோன்றுகிறது. 

  சங்க இலக்கியத்தின் தாக்கத்தைக் காப்பியங்களிலும், பக்தி இலக்கியத்திலும், கம்பனிலும், பாரதியிலும் பார்க்க முடியும். அந்த தடங்களின் வழியே நடை போடுவது ஒரு சந்தோஷமான அனுபவம். 

  மேலும் தேடுவோம்  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai