3. லோகாயதமும் வைதீகமும்

பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் ஆகிய இரண்டின் அடிப்படையில் தத்துவங்கள் ஜனித்தன.

பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் ஆகிய இரண்டின் அடிப்படையில் தத்துவங்கள் ஜனித்தன. இதில் பொருள் முதல் வாதம் சார்ந்தவையே லோகாயதம், ஆசீவகம் (அஜீவகம்) ஆகியவை. வைதீக (வேத நெறியிலான) ஷட்தரிசனங்களில் (ஆறு கண்ணோட்டங்களில்) ஓரளவு வைசேஷிகமும், பூர்வ மீமாம்சையும் பொருள் முதல் வாதத்தை ஒப்புக்கொள்கின்றன.

பிற்காலத்தில் வைதீக முறையைக் கடுமையாக எதிர்த்த லோகாயதம், தொடக்கத்தில் பிராமணர்களால் ஆதரிக்கப்பட்டதாக உபநிஷதங்களும், பண்டைய பௌத்த, சமண இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. பிராமண ரிஷிகளில் முக்கியமானவர் பிருகஸ்பதி. தேவர்களின் (அமரர்களின்) குல குருவாகவும் ஒரு பிருகஸ்பதி சுட்டப்படுகிறார். வேதங்களில் வழிபடப்படும் தெய்வ வடிவங்களில் பிருகஸ்பதி, பிராமணஸ்பதி என்று போற்றப்படுகிறார். பிராமணஸ்பதி என்றால் பிராமணர்களின் தலைவர் என்று பொருள். (பிராமணம் என்றால் பிரும்ம சக்தி, தத்துவக் கோட்பாடு என்றும் பொருள் உள்ளதால், தத்துவக் கோட்பாட்டைத் தந்தவர்களில் உயர்ந்த தலைவர் என்றும் பொருள் கொள்ளலாம்).

பொருள்களால்தான் உலகம் தோன்றியது என்ற கொள்கையை வலியுறுத்தும் லோகாயதக் கொள்கையைப் படைத்தவர் பிருகஸ்பதி என்று கூறப்படுகிறது. லோகாயதம் பற்றி எடுத்துரைக்கும் நூல், அவரது பெயரால் பாருஹஸ்பத்ய சூத்திரம் (பிருகஸ்பதியால் செய்விக்கப்பட்ட கோட்பாட்டு நூல்) என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இந்நூலின் முழுமையான மூலவடிவம் தற்போது கிடைக்கப் பெறவில்லை. பிற சமய, தத்துவ நூல்களின் விமர்சனங்கள் மூலமாகவே இதனை பெரும்பாலும் அறிய நேர்கிறது.

ரிக் வேதத்திலேயே லோகாயதக் கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேதங்களிலும் முற்கால உபநிஷதங்களிலும் குறிப்பிடப்படும் ஸ்வபாவ வாதம் (இயற்கைக் கோட்பாடு) என்ற தத்துவமே பிற்காலத்தில் லோகாயதமாக மலர்ச்சி பெற்றது என்றும் கூறப்படுகிறது.

மைத்ரேயனீய உபநிஷதம், பிருகஸ்பதியால்தான் லோகாயதக் கொள்கை படைக்கப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் அதற்கான காரணத்தை வேறுவிதமாகக் குறிப்பிடுகிறது. தேவர்களின் குருவாகிய பிருகஸ்பதி, அசுரர்களை மயக்குவதற்காக அசுர குருவான சுக்ராசார்யரின் வேடம் பூண்டு உபதேசித்ததே லோகாயதம் என்கிறது மைத்ரேயனீய உபநிஷதம்.

(தேவ குரு பிருகஸ்பதியைப்போல, அசுர குரு சுக்ரரும் பிராமணரே. இதில் நாம் அறிய வேண்டிய முக்கிய விஷயம், தற்போது உள்ளதைப்போல பிறப்பின் அடிப்படையில் அன்றி, அக்காலத்தில் கற்றறிந்த அறிஞர்களே பிராமணர்கள் எனப்பட்டனர். யார் வேண்டுமானாலும் பிராமணர் ஆகலாம்; அது அடையக்கூடிய தகுதிதான் என்று முற்காலத்தில் இருந்த நிலை, பிற்காலத்தில் மெல்ல மெல்ல அழிந்து, பிறப்பின் அடிப்படையிலாக மாறிவிட்டது).

உயிர்களைப் படைத்த பிரஜாபதியால் (பிரும்மன் என்றும் பொருள் கூறுவர். வேறு சிலர், மக்கள் குழுவின் தலைவர் என்றும் பொருள் சொல்லுவர்), விரோசனன் என்ற அசுர குல அரசனுக்கு உபதேசிக்கப்பட்டதுதான் லோகாயதம் என்றும், அவன் மூலம் அவனது சந்ததியினர் இந்தத் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் சாந்தோக்ய உபநிஷதம் தெரிவிக்கிறது.

ராமாயண காவியத்தில், தந்தை தசரதனின் ஆணையை ஏற்று கானகம் செல்லும் ராமரைச் சந்திக்கும் ஜாபாலி என்ற முனிவர், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதே வாழ்க்கை என்றும், ஆகையால் அரச பதவியைத் துறந்து கானகம் செல்வது சரியல்ல என்றும் வாதிடுவதாகவும், முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல் போன்ற வைதீகச் செயல்களில் அர்த்தம் இல்லை என்று போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாபாலி முனிவர், லோகாயதவாதி என்று கூறப்படுகிறது.

கன்வ மகரிஷியின் ஆசிரமத்தில், மற்ற தத்துவங்களைவிட லோகாயதம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதப் போருக்குப் பின்னர், வேள்வி ஒன்றை நடத்திய தர்மரைச் சந்தித்த சாருவாகன் என்ற பிராமணத் துறவி ஒருவர் (பிராமணர் தோற்றத்தில் வந்த அசுரன் என்றும் விமர்சிக்கப்படுகிறது), போரினால் ஏற்பட்ட அழிவுக்காக பாண்டவர்களைச் சாடுவதுடன், வேள்விச் சடங்குகளால் ஒரு பயனும் இல்லை என்று வாதிடுவதாகவும், மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காவதார சூத்திரம் என்ற பௌத்த இலக்கியம், மஹாமதி என்ற லோகாயத பிராமணன், கௌதம புத்தரிடம் விவாதம் செய்ததாகக் கூறுகிறது. இதேபோல், சம்யுக்த நிகாய, அங்குத்தர நிகாய ஆகிய இரு பௌத்த நூல்களில், கௌதம புத்தருடன் இரண்டு லோகாயத பிராமணர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

இயற்கை வாதம் பேசும் லோகாயதம், பிராமணர்களின் தத்துவங்களில் ஒன்றாகவே மதிக்கப்பட்டது என்பதை கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த ஞானி புத்தகோசர் குறிப்பிடுகிறார். வானவியல், பிரபஞ்சவியல், உலோகவியல், உடல்கூறு ஆகியவற்றை உள்ளடக்கிய லோகாயதம், பிராமணர்களின் ஒரு பிரிவினர் இடையே வழிவழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதையும், இதனை பிராமணர்கள் கற்பது வேதக் கல்விக்கு ஒவ்வாதது இல்லை என்று கருதப்பட்டதாகவும் புத்தகோசரின் வாயிலாக அறிய முடிகிறது. “லோகாயதம் உச்சதி விதண்டாவாத சத்தம்” என்கிறார் புத்தகோசர். லோகாயதம் என்பது வாக்குவாதத்தில் நிபுணர்களது நூல் என்று இதற்குப் பொருள். (தற்போது விதண்டாவாதம் என்பது தேவையற்ற வாதம் புரிவதாக பொருள் திரிவுபட்டுள்ளது).

இதேபோல், கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரமும், ஆன்வீக்ஸி என்ற பெயரில் லோகாயதத்தையும் பிராமணர்கள் கற்றறிந்தார்கள் என்று குறிப்பிடுகிறது.

(நாத்திகம் பேசும் லோகாயதத்தை பிராமணர்கள் ஆதரித்தார்களா என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு ஒரு விஷயம், பொருள் முதல் வாதத்தோடு நாத்திகம் பேசுகின்ற இன்றைய கம்யூனிஸத்தின் முக்கியத் தலைவர்களான பி. ராமமூர்த்தி, இ.எத்.எஸ். நம்பூதிரி பாடு, சோமநாத் சாட்டர்ஜி, புத்ததேவ் பட்டாசார்யா உள்ளிட்டோர் பிராமண வகுப்பினரே).

கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண (ஜைன) தத்துவ ஞானி ஹரிபத்ரர் என்வர் இயற்றிய ஷட்தர்சன சமுச்சய என்ற நூலில், லோகாயதம் - சார்வாகம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில், கி.பி. 15-ம் நூற்றாண்டில் இந்த நூலுக்கு உரை எழுதிய சமண உரையாசிரியர் குணரத்ன, சார்வாகத்தைப் பின்பற்றும் நாத்திகர்களில் பிராமணர்களும் அடங்குவர் என்று கூறுவதுடன், தாந்திரீகத்தில் ஈடுபாடுடைய காபாலிகர்களோடு அவர்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிறார்.

கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அத்வைத தத்துவ ஞானி சாயன மாதவர், தனது சர்வதர்சன சங்கிரஹ என்ற நூலில், சார்வாகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்நூலில், சார்வாகர்களின் நாத்திக வாதம் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது...

சொர்க்கமோ, நரகமோ, ஆன்மாவோ, முக்தியோ எதுவும் இல்லை. வேள்விச் சடங்குகள், ஒரு சிலரின் பிழைப்புக்கான உபாயம் அன்றி வேறில்லை. இறந்தபின் எரிந்து சாம்பலாகும் உடம்பு, மறுபடி எப்படிப் பிறக்கும். இறந்தவன் வேறு உலகுக்குச் செல்வான் என்றால், ஏன் அவன் தனது நேசத்துக்குரியவர்களைக் காண்பதற்கு மறுபடி பூமிக்கு வரக்கூடாது. மறைந்த தந்தைக்கு ஹோமத்தீயில் மகன் கொடுக்கும் திதிப் பொருட்கள் அவரைப் போய்ச் சேரும் என்றால், ஏன் மகனே அந்தத் தீயில் குதித்து நேரடியாகத் தந்தையிடம் போய்ச் சேரக்கூடாது என்றெல்லாம் அக்காலத்திலேயே வினவியிருக்கிறது லோகாயதம் எனப்படும் சார்வாகம்.

(இது அறிதலின் ஒரு தொடக்கம் மாத்திரமே. இதற்கான பதில்களைப் பிற தத்துவங்கள் தருவதுடன், மேற்கொண்டு ஆய்வுகளை முன்னகர்த்திச் செல்வதைப் பின்னர் காண்போம்).

லோகாயத தத்துவம் பற்றி சுருக்கமாகக் கூறுகின்ற ஸ்லோகம் இதோ -

அததோ தத்வம் வ்யாக்யஸாம:

ப்ருத்வியாப்தேஜோ வாயுர் இதிதத்வானி

தேப்யாஸ சைதன்யம் சின்வதிப்யோ மதசக்திவத்.

இதன் பொருள்

லோகாயதம் என்ற கோட்பாட்டை விளக்குவோமேயானால், நிலம் (ப்ருத்வி), நீர் (ஆபஹ்), தீ (தேஜ), வளி அதாவது காற்று (வாயு) ஆகியவையே உலகத் தோற்றத்துக்கான நான்கு அடிப்படைக் காரணிகள். இவற்றின் சேர்க்கையால், புளிப்புப் பொருட்களின் கலப்பால் போதை தோன்றுவதுபோல அறிவு (சைதன்யம்) தோன்றியது.

லோகாயதம் சார்ந்த கருத்துகள் அதர்வண வேதத்தில் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேத நெறியில் யாகம் எனப்படும் வேள்விச் சடங்குகள் மட்டுமின்றி, மந்திர வழிபாடுகள் அடங்கிய தாந்திரீக (தந்திர முறையிலான) சடங்குகளும் அடங்கும். இந்தத் தாந்திரீக முறையிலான சடங்குகளும் தத்துவங்களும் நிறைந்ததாகவே அதர்வண வேதம் கருதப்படுகிறது.

தற்காலத்தில், கேரளத்தில் பில்லி சூனியம் போன்ற மாய மந்திரங்கள் செய்பவர்கள், இந்த அதர்வண வேத வித்தைகளைக் கற்றவர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிரஸ ரிஷியின் வழிவந்தவர்கள், அதர்வண வேதத்தை ஆதரித்து வந்ததாகக் கருதப்படுகிறது. பிரபஞ்சவியல், வானவியல், உலோகவியல், மருத்துவம் ஆகிய பல்வேறு விஷயங்கள் அதர்வண வேதத்தில் கூறப்படுகின்றன.

(வேதம் என்றால் அறிவு என்று பொருள். நான்கு வேதங்களில் வேள்விச் சடங்குகளும், மந்திரச் சடங்குகளும் இடம் பெற்றுள்ளதைப்போலவே தத்துவ ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன. வேள்விச் சடங்குகளை மீமாம்சை வலியுறுத்துகிறது என்றால், மற்றொரு தரிசனமான சாங்கியம் அதனை எதிர்க்கிறது. ஆண்டவனைப் பற்றி இந்த இரண்டு தத்துவங்களுமே அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், யோகமும் வேதாந்தமும் ஆண்டவனை வலியுறுத்துகின்றன. வேதத்துக்குள் பல்வேறு சிந்தனைகளுக்கும் கருத்தாக்கங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளதை இவை உணர்த்துகின்றன. ஆகையால், நாத்திகம் பேசுகின்ற லோகாயதர்களோடு, பிற்காலத்தில் தாந்திரீக வழிபாட்டினர் கலந்திருக்க வாய்ப்புள்ளது. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண அறிஞரான குணரத்ன, லோகாயதர்களை தாந்திரீகர்களான காபாலிகர்களோடு தொடர்புபடுத்திப் பேசுவதன் மூலம் இதனை அறியமுடிகிறது).

மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் போன்ற தமிழில் எழுந்த சமய இலக்கியங்களிலும் லோகாயதக் கருத்துகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மற்றவர் கருத்துகளை ஒரேயடியாக அழுத்துகின்ற, அழிக்க முயலுகின்ற தற்காலத் தந்திரங்களும், தடாலடிகளும் அக்காலத்தில் இல்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இந்தத் தமிழ் இலக்கியங்கள்.

அவைபற்றி அடுத்த வாரம் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com