அத்வைதத்தை ஸ்தாபித்த ஆதிசங்கர ஆசார்யர், நிர்குண பிரும்மத்தை வலியுறுத்தியபோதிலும், தனியொரு பக்தனின் வழிபாட்டுக்கான சகுண பிரும்மம் சிவனோ, நாராயணனோ, சக்தியோ எதுவாகவும் இருக்கலாம் என்று பொதுவாகக் கூறிவிட்டார். ஆனால், பின்னர் வந்த ஆசார்யர்களான விசிஷ்டாத்வைதம் வளர்த்த ராமானுஜர், துவைதம் போதித்த மத்வர் போன்றோர், விஷ்ணு எனப்படும் நாராயணரே பிரும்மம் என்று வலியுறுத்தினர். இதற்கு வேதத்தின் ஆதாரம் இருப்பதாகவும் வாதிட்டனர். இதே வேதத்தின் உட்பொருளாய் பிரும்மம் என்று சுட்டிக்காட்டப்படுவது சிவம்தான் என்று வாதிட்டு தத்துவம் மொழிந்தவர்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீகண்டரும், பசவண்ணரும். இவர்கள் இருவருமே ராமானுஜரைப் போலவே விசிஷ்டாத்வைத தத்துவத்தின் துணைகொண்டே சிவ பரத்துவத்தை (சிவமே மேலான பரமாத்மா என்பதை) நிறுவினர்.
ஸ்ரீகண்டரின் சைவ விசிஷ்டாத்வைதம்
இதில் முதலாமவரான ஸ்ரீகண்டர், ராமானுஜர் வாழ்ந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். (சில ஆய்வாளர்கள், இவர் மத்வர் வாழ்ந்த 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்). ஆனால், இவர் எங்கு பிறந்தார், இவரது வாழ்க்கை வரலாறு என்ன என்பது அறியமுடியாத மர்மமாகவே உள்ளது. அதேநேரத்தில், இவர் சங்கரர், ராமானுஜரைப் போலவே சிறந்த தத்துவஞானியாகவும், வாதிடும் கலையில் வல்லவராகவும் கருதப்படுகிறார். வேத, வேதாந்தக் கருத்துகளை பின்புலமாகக் கொண்டு விஷ்ணு வழிபாடு உச்சம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், அதே வேத, வேதாந்தக் கருத்துகளின் அடிப்படையில் சிவ வழிபாட்டை முன்னிறுத்தி வெற்றிகண்டவர் ஸ்ரீகண்டர்.
பாரதத்தின் மிகத் தொன்மையான இறைவடிவம் சிவபெருமான். சிந்துச் சமவெளி முத்திரைகளில் காணப்படும் யோகி போன்ற தோற்றம், பசுபதியாகிய சிவபெருமான் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேதத்தில் ருத்ரன் என்றும் மருத் என்றும் கூறப்படும் தெய்வங்கள் சிவபெருமானோடு தொடர்புடையவை. வேள்விச் சடங்குகளில் முக்கியமான அக்னியும் சிவபெருமானாக வர்ணிக்கப்படுவதுண்டு. சங்கத் தமிழ் இலக்கியங்களில் பழையோன், ஆதிரை முதல்வன், முது முதல்வன், மணிமிடற்றோன் (நீலகண்டன்), பிறவா யாக்கைப் பெரியோன் என்றெல்லாம் சிவபெருமான் போற்றப்படுகிறார். வேத இலக்கியங்களில் அயோனிஜன் (யோனியில் பிறவாதவன், அதாவது தானே உருவானவன்) என்று போற்றப்படுவதுதான் சங்கத் தமிழ் இலக்கியங்களில் பிறவா யாக்கைப் பெரியோன் என்று சுட்டப்படுகிறது. இந்தப் பெரியோன் என்ற சொல்லுக்கு இணையாக சம்ஸ்கிருதத்தில் மகாதேவன் என்றும் துதிக்கப்படுகிறார். ஈஸ்வரன் என்ற சொல் கடவுள் என்ற பொருள் தந்து, பொதுவாக எந்தக் கடவுளையும் குறிக்கப் பயன்பட்டாலும், சிறப்பாக சிவபெருமானையே சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் பரம (உயர்ந்தபட்ச) என்ற முன்னொட்டுடன் சேர்த்து பரமேஸ்வரனாகவும், மஹத் (மிகப் பெரிய) என்ற முன்னொட்டுடன் சேர்த்து மஹேஸ்வரனாகவும் அழைக்கப்படுவது சிவமே பரமாத்மா என்பதைக் குறிக்கும் வகையில் உள்ளது.
மகாபாரதம் அனுசாசன பர்வத்தில், ஸ்ரீகிருஷ்ணர், உபமன்யு என்ற மகரிஷியிடம் பாசுபத தீட்சை (சைவ மதங்களில் ஒன்றாகிய பாசுபதத்தின் அடிப்படையிலான உபதேசம்) பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசுபதம் தவிர காளாமுகம், திரிகம், காபாலிகம் போன்ற சைவ மதப் பிரிவுகள் பழங்காலந்தொட்டே இருந்து வருகின்றன. அதேநேரத்தில் பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூன்றும் இணைந்ததே பிரும்மமாகவும், சிவமாகவும் (அதன் உருவகம்தான் சிவலிங்க வடிவம்) கருதி வணங்குவதும் தொன்றுதொட்டே வழங்கிவருகிறது. இருப்பினும், பிற்காலத்தில் விஷ்ணு ரூபம் மாத்திரமே உயர்வானது, அதுவே பிரும்மம் என்பதான தத்துவங்களும் வழிபாட்டு முறைகளும் வளரத் தொடங்கின. அந்தச் சமயத்தில், சிவமே பிரும்மம், சிவமே மேலான தெய்வம் என்று வலியுறுத்தும் தத்துவங்களும், புதிய மதப் பிரிவுகளும் எழுந்தன.
அத்தகைய காலகட்டத்தில், பிரும்ம சூத்திரத்துக்குப் புதிய பாஷ்யம் (விளக்கவுரை) எழுதி, சிவமே பிரும்மம் என்று சிறப்புற விளக்கம் தந்துள்ளார் ஸ்ரீகண்டர். ஆதிசங்கரரைப்போல சிவனையும் பிரும்மமாகக் கருதலாம் என்பது இவரது கருத்தல்ல, சிவமேதான் பரப்ரும்மம். இவரது தத்துவத்தைக் காண்போம் - சிவன் தனது விருப்பத்தின் பேரில் நடத்துகின்ற திருவிளையாடலே இந்த உலகம். சிவன் தனது சக்தியின் (ஆற்றலின்) மூலம் இதனைப் படைத்த (செயல்படுத்திய) காரணமாகத் திகழ்கிறார். அவரே இதன் பொருள் சார்ந்த காரணமாகவும் விளங்குகிறார்.
சிவன் நேரடியாக அன்றி, தனது சக்தியின் மூலமாகப் பரந்து நிற்கும் இந்த உலகமாக வடிவெடுத்துள்ளார். ஆகையால், தனது படைப்பினால் எவ்வித மாற்றமும் பெறாதவராக, அதில் இருந்து மேம்பட்ட மகத்துவமாக சிவன் திகழ்கிறார். சிவன் கோடி சூர்யப் பிரகாசம் கொண்ட சிவலோகத்தில் (மேலுலகில்) பரமாத்ம வடிவமாக உறைகிறார். அவருலகை, முக்தி அடைந்த ஆத்மாக்கள் மட்டுமே அடைய முடியும்.
சிவன் தனது எளிய சங்கல்பத்தின் (முடிவின்) படி, தனது சக்தியால் இந்தப் படைப்பை (பிரபஞ்சத்தை) உருவாக்கிய பிறகு, தனது வீர்யத்தை (சுயதன்மையை) கொண்டே இதில் உள்ள சேதன (அறிவுள்ள) உயிரினங்களையும், அசேதன (அறிவற்ற) உயிரினங்களையும், பொருள்களையும் படைத்தார்.
[ரிக்வேதத்தின் புருஷ சூக்தத்தில் புருஷ ஏவ இதம் ஸர்வம் எனத் தொடங்கும் 2-வது செய்யுளில், புருஷன் மாத்திரமே இங்குள்ள அனைத்தும், அதாவது அனைத்தின் சாரமும் என்று கூறியிருப்பதையும், யத்புருஷேண ஹவிஸா என்று தொடங்கும் அதன் 6-வது செய்யுளில் படைப்பின் நோக்கத்துக்கு அந்த ஆதி ஆற்றலாகிய புருஷனே வேள்வியாக அமைகிறார் என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கே ஒப்புநோக்க வேண்டும்].
சிவன் தனது இச்சா சக்தி (விருப்ப ஆற்றல்), ஞான சக்தி (அறிவு ஆற்றல்), கிரியா சக்தி (செயல் ஆற்றல்) ஆகிய மூன்று சக்திகளைக் கொண்டு, தானே காரணராக இருந்து, அதன் விளைவாகிய இந்தப் பிரபஞ்சமாக வடிவெடுத்துள்ளார். படைப்பாற்றல், காக்கும் ஆற்றல், மீண்டும் உள்ளிழுக்கும் ஆற்றல் ஆகிய மூன்றின் வடிவங்களாகிய பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகவும் சிவனே திகழ்கிறார். அனைத்தையும் அறிந்தவரான அவரது மகத்துவத்தை யாரால்தான் முழுமையாக அறிய இயலும் என்கிறார் ஸ்ரீகண்டர்.
அவர் மேலும் கூறுவதாவது - ஜீவாத்மாக்கள் பல படிநிலைகளைக் கடந்து மனிதராகப் பிறப்பெடுக்கின்றன. மனிதர் தம் இச்சைப்படி செயல்பட சுதந்தரம் அளிக்கப்பட்டுள்ளபோதிலும், அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பாவார். அவரவர் கர்மாக்களின்படி (செயல்களைப் பொருத்து), அவரவர் தேவைகளை பரமாத்மாவாகிய சிவபெருமான் நிறைவேற்றுகிறார். வினைகளின் அடிப்படையில் ஜீவாத்மா மீண்டும் பிறவிச் சுழலில் கட்டுறுகிறது. நெறிமுறைகளால் தூய்மைப்படுத்துதல், பக்தி, தியானம் ஆகியவற்றின் மூலம் இந்தக் கட்டுகளை அறுத்தெறிந்து விடுதலை (முக்தி) பெறுவதற்கான தெய்வீகப் பாதையில் ஆத்மா செல்கிறது. தியானத்தின் மூலமான உள்ளமைதி, சஞ்சலமற்ற இறை நம்பிக்கை, பற்றின்மை ஆகியவற்றின் மூலமும் பரமாத்மாவான சிவத்தோடு ஜீவாத்மா தன்னை ஐக்கியப்படுத்திப் பார்க்கும் தொடர் பாவனை மூலமும் இந்தக் கட்டுகள் அறுத்தெறியப்படுகின்றன. இறுதியில், சிவத்தின் கருணையால் முக்தி கிடைக்கிறது.
மரணத்துக்குப் பின்னர் முக்தியடைகின்ற ஜீவாத்மாக்கள், சிவத்தைச் சென்றடைகின்றன. சிவத்தை அறிந்துகொண்ட பேரானந்தத்தில், உலகைப் படைக்கும் ஆற்றலைத் தவிர்த்து, சிவனின் அனைத்து ஆற்றல்களையும் அனுபவங்களையும் முக்தியடைந்த ஜீவாத்மாக்களும் அடைகின்றன. அதேநேரத்தில், முக்தியடைந்த ஜீவாத்மாக்கள் தாமே பிரும்மமாக, அதாவது சிவமாக ஆகிவிடுவதில்லை, ஆனால், அவரோடு இணைந்திருந்து அவரது குணங்களையும் தன்மைகளையும் பகிரந்துகொள்கின்றன என்கிறார் ஸ்ரீகண்டர்.
ஆக, முக்தியடையும் ஜீவாத்மாக்கள் ஒருவகையில் சிவத்தோடு ஒன்றிணைகின்றபோதிலும், சிவம் அவற்றிலிருந்து மேம்பட்டதாக தனித்து விளங்குகிறார் என்பதே ஸ்ரீகண்டரின் தத்துவம். ஆகையால், இது சைவ விசிஷ்டாத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.
அப்பைய தீக்ஷிதரின் சிவாத்வைதம்
அதேநேரத்தில், இந்த சைவ விசிஷ்டாத்வைதத்தைப் பெரிதும் தழுவி, சிவத்தோடு ஜீவாத்மா பேதமற ஒன்றிணைவதாக 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவ ஞானியும், ஆன்மிகக் கவிஞருமான அப்பைய தீக்ஷிதர் கூறுகிறார். இதற்கு சிவாத்வைதம் என்று பெயர். இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன் காலத்தில் வைணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதைப்போல, விஜயநகர மன்னன் ராமராயன் காலத்தில் சைவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்தகைய காலகட்டத்தில் சிவ பக்தியையும், அதற்கான வழிபாட்டு முறையையும் வளர்த்து, ஒழுங்குபடுத்தினார், வேலூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியில் பிறந்தவரான அப்பைய தீக்ஷிதர். அதேநேரத்தில், மற்ற தத்துவ, பக்தி சம்பிரதாயங்களுடனும் இவர் நட்புறவு பூண்டு வாழ்ந்தார். ஸ்ரீகண்டரின் பிரும்மசூத்திர பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ள இவர், மத்வரின் துவைதம் உள்பட இதர தத்துவங்களுக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார். சிவகர்ணாம்ருதம், சிவார்க்கமணிதீபிகா உள்ளிட்ட 104 நூல்களை இயற்றியுள்ளார்.
தத்துவ நோக்கில் ஆதிசங்கரரின் அத்வைதத்தைச் சார்ந்த அப்பையர், சிவமே பரம்பொருள் என்ற தனது கொள்கைக்கு ஸ்ரீகண்டரின் சிவ விசிஷ்டாத்வைதத்தை ஊன்றுகோலாகக் கொண்டார். நிர்குண பிரும்மத்தைவிட நற்குணங்கள் நிரம்பிய சிவன் என்ற சகுண பிரும்மத்தின் வழிபாட்டை ஸ்ரீகண்டர் வலியுறுத்துவது, பக்தர்களிடம் தொடக்க நிலையில் பக்தியை வளர்க்க சிறந்த சாதனமாகத் திகழ்ந்து, அதன்மூலம் பரப்ரும்மமாகிய பரமசிவம் குறித்த ஞானத்தையும் நல்கும் என்பது அப்பையரின் வாதம். ஸ்ரீகண்டரின் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் உள்ளிட்ட அனைத்து தத்துவங்களுமே இறுதி உண்மையாகிய அத்வைதத்தை அறிந்துகொள்வதற்கான படிக்கட்டுகள் என்கிறார் அப்பைய தீக்ஷிதர். இதேபோல் ஆந்திரத்தைச் சேர்ந்த ஆராத்ய சம்பிரதாய சைவமும், திரிகம், கௌலம் ஆகிய சம்பிரதாயங்களை உள்ளடக்கிய காஷ்மீர சைவமும் சிவ அத்வைதமாகவே உள்ளன. அதேநேரத்தில், இந்த உலகம் மாயை என்று ஆதிசங்கரர் கூறுவதை மறுக்கின்ற காஷ்மீர சைவம், உலகம் உண்மையானதே என்றும், அது சிவனின் பேரறிவில் (சித்) வெளிப்பட்டது என்றும் கூறுகிறது.
பசவண்ணரின் சக்தி விசிஷ்டாத்வைத சைவம்
சைவ விசிஷ்டாத்வைதம் மொழிந்த ஸ்ரீகண்டர், ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைதம் தந்த ராமானுஜரைப்போல இயக்கத்தை உருவாக்கியவர் அல்லர். அதேநேரத்தில், சைவ விசிஷ்டாத்வைதத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்த பெருமை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, வீரசவை மரபை உருவாக்கிய பசவண்ணரையே சாரும். இவரும் ராமானுஜரைப்போல 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரே. ஹிந்து சமுதாயத்துக்குள் உண்மையான சாதி மறுப்பு பக்தி மார்க்கத்தை முதன்முறையாக ஏற்படுத்திய பெருமைக்கு உரியவர் பசவண்ணர்.
கி.பி. 1105-ல் வைதீக அந்தணர் குலத்தில் பிறந்த பசவண்ணர், தனது 16-வது வயதில் தனது பூணூலை கழற்றி எறிந்துவிட்டு, ஞானம் தேடி சைவ ஞானிகள் வாழ்ந்த கூடல சங்கமம் என்ற இடத்துக்குச் சென்றார். அங்கு காளாமுக சைவ மரபைச் சேர்ந்த ஈஸான குருவிடம் 12 ஆண்டுகாலம் ஆன்மிகக் கல்வி பயின்ற பசவண்ணர், தமது 28-வது வயதில், இந்த உடலே ஈசன் வாழும் நடமாடும் கோவில் என்ற ஞானத்தைப் பெற்றார். மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க, இஷ்டலிங்க வழிபாட்டு முறையை அவர் தேர்ந்தெடுத்தார். பசவண்ணரைப் பின்பற்றும் அனைவரும் ஆண், பெண் பேதமின்றி தங்களது கழுத்தில் இஷ்டலிங்கத்தை அணிந்திருப்பது அவசியம். ஆகையால், இந்தச் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் லிங்காயத்துகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மங்களவேதி என்ற இடத்துக்கு வருகைபுரிந்த பசவண்ணர், அந்த சமஸ்தானத்தை ஆட்சி செய்த பிஜ்ஜாலர் என்ற மன்னரிடம் அமைச்சராகச் சேர்ந்து, இல்லற வாழ்க்கை அமைத்துக்கொண்டு, தனது இறைப் பணியைத் தொடர்ந்தார். கர்நாடகத்தில் பௌத்தமும், சமணமும் ஆதிக்கம் செலுத்திய அக்காலகட்டத்தில், பசவண்ணரின் புரட்சிகரமான சிந்தனைகள், மக்களிடையே செல்வாக்கு பெறத் தொடங்கின. வேத, வேதாந்தத்தின் உட்கருத்துகளை பசவண்ணர் ஏற்றுக்கொண்டபோதிலும், தேவையற்ற வைதீகச் சடங்குகளைப் புறந்தள்ளினார். மூடப்பழக்கங்களைக் கடுமையாகக் கண்டித்தார். வேதத்தின் மீது பிராமணர்களுக்கு இருக்கும் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். கோவில் வழிபாட்டுக்கு மாற்றாக இஷ்டலிங்க வழிபாட்டையும், பெரியவர்கள் மற்றும் சக சரணர்களுடனான தத்துவ விவாதங்களையும், கூட்டு வழிபாட்டையும் முன்னிறுத்தினார். அவரது பக்தி மார்க்கத்தில் அனைத்து சாதியினருக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. பசவண்ணரோடு சேர்ந்து வீரசவைம் வளர்த்தவர்களில் அக்காமகாதேவி (அக்கமாதேவி) என்ற பெண் துறவிக்கும் முக்கியப் பங்கு உண்டு.
மங்களவேதியில் சுமார் 20 ஆண்டுகள் வீரசைவ வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட பசவண்ணர், பின்னர் மன்னர் பிஜ்ஜாலருடன் கல்யாண நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்குதான் அல்லமபிரபு எனப்படும் மற்றொரு சைவத் துறவியின் நட்பு பசவண்ணருக்குக் கிடைத்தது. பசவண்ணர், அக்கமாதேவி, அல்லமபிரபு ஆகிய மூவரும் இணைந்து, அனுபவ மண்டபம் என்ற இறையியல் விவாத மேடை அமைப்பை உருவாக்கினர். அங்கு பல்வேறு தத்துவங்கள் குறித்தும், முக்கியமாக சைவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மூவருமே சிறந்த கவிஞர்கள். அவர்களது தத்துவக் கவிதைகள் பாமரர்களுக்கு எளிமையாகப் புரியும்வகையில் இருந்தன. அவை வசனங்கள் என்றே அழைக்கப்பட்டன. சைவனுக்கு சாதி இல்லை என்று கூறி, சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்த பசவண்ணர், தனது 62-வது வயதில், கூடல சங்கமத்தில் முக்தி அடைந்தார். பசவண்ணருக்கு முன்பே சிவனை தீவிரமாக வழிபடும் சிவசரணர்கள் (சிவனிடம் சரண் புகுந்தவர்கள்) என்ற மரபினர் இருந்தார்கள் என்றும், அவர்களையும் மற்றவர்களையும் ஒருங்கிணைத்தே தமது வீரசைவ மரபை பசவண்ணர் உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது.
தத்துவ நோக்கில் பசவண்ணரின் தத்துவம், சக்தி விசிஷ்டாத்வைத சைவம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தத்துவம் கூறுவதாவது - சிவ பரமாத்மாதான் தனது சக்தியால் இந்த உலகமாகவும், ஜீவாத்மாக்களாகவும் உருவெடுக்கிறார். ஆக, இந்த உலகமும், ஜீவாத்மாக்களும் சிவத்தன்மை கொண்டவை, உண்மையானவை. அதேநேரத்தில், ஜீவாத்மாக்களில் இருந்து மேம்பட்டவராகவே சிவன் திகழ்கிறார். அதற்கு அவரது விசேஷ அம்சமான சக்தியே (பேராற்றலே) காரணம். (இவ்வாறு கூறுவதால் இதற்கு சக்தி விசிஷ்டாத்வைதம் என்று பெயர் வந்தது).
ஜீவாத்மாக்கள் ஒவ்வொன்றும் தனக்குள் இருக்கும் சிவத்தை அறிந்துகொண்டு அவருடன் ஒன்றிணைவதே வாழ்வின் இலக்கு. சிவமும் (லிங்கமும்) ஆத்மாவும் (அங்கமும்) ஒன்றிணைவதற்கு சூன்யம் என்று பெயர். இதற்கு எதுவும் இல்லாதது என்று பொருள் அல்ல, தான் என்பது ஏதுமில்லை என்ற வகையில், சிவத்தில் கலப்பதே ஆகும். தீயுடன் சேரும் தீப்பொறி, நீருடன் சேரும் நீர்த்துளி ஆகியவற்றுக்குத் தனித்த அடையாளம் இல்லாது போவதைப்போல, சிவத்துடன் இணைந்து தான் இல்லாமல் போவதே முக்தி. இந்த முக்தியை அடைய ஷட்ஸ்தலங்கள் எனப்படும் 6 படிநிலைகள் அவசியம். அவை – பக்தி, மஹேசம் (சுயநலமற்ற சேவை), பிரசாதம் (இறைவனின் கருணையை ஆவலோடு எதிர்நோக்குதல்), பிராணலிங்கம் (அனைத்தையும் சிவமாகக் காணும் அனுபவம்), சரணம் (அகங்காரமின்றி சிவனைச் சரணடைதல்), ஐக்கியம் (சிவனுடன் ஒன்றிணைதல்). இவ்வாறு பக்தியில் தொடங்கி ஒவ்வொரு படிநிலையிலும் ஆத்ம சாதகன் மேம்பட்டு, இறுதியில் ஆத்மாவுக்கும் சிவ பரமாத்மாவுக்கும் பேதமற்ற நிலையை, அதாவது பெருங்கடலுடன் கலந்த ஆற்றைப் போன்ற நிலையை அடைகிறார்.
இந்த சக்தி விசிஷ்டாத்வை சைவமாகிய வீர சைவத்தைப் பின்பற்றுவோருக்கு பஞ்சாசாரம் எனப்படும் 5 ஒழுக்க நடைமுறைகள் அவசியம். அவையாவன - லிங்காசாரம் (சிவலிங்கத்தை தினந்தோறும் வழிபடுதல்), சதாசாரம் (தனது தொழிலிலும், கடமையிலும் கவனம் மற்றும் நன்னடத்தை), சிவாசாரம் (சிவனே ஏக இறைவன் என்பதையும், மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் ஏற்றல்), பிருத்யாசாரம் (அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை கொள்ளுதல்), கணாசாரம் (தனது சமுதாயத்தையும், மதத்தையும் பாதுகாத்தல்). இதேபோல் வீரசைவர்களுக்கு அஷ்டாவரணம் எனப்படும் 8 கவசங்களும் அவசியம். அவையாவன - குரு (குரு, ஆசார்யர்களைப் பணிதல்), லிங்கம் (எப்போதும் உடலில் இஷ்டலிங்கத்தை அணிந்திருத்தல்), ஜங்கமர் (சுற்றித் திரியும் சிவ யோகிகளை வணங்குதல்), பாதோதகம் (லிங்க அபிஷேக நீரை அருந்துதல்), பிரசாதம் (இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல்), விபூதி (தினமும் திருநீறு பூசுதல்), ருத்ராக்ஷம் (ருத்திராட்சங்களை அணிந்துகொள்ளுதல்), மந்திரம் (நமசிவாய என்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்தல்).
தற்போது லிங்காயத்துகள் எனப்படும் வீரசைவர்கள், கர்நாடகத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகம் உள்ளனர். பசவண்ணர் கண்ட சாதி மறுப்பு சமுதாயம், பிற்காலத்தில் லிங்காயத்துகள் என்ற தனிச் சாதியாக உருவெடுத்தது காலத்தின் கோலம். இருப்பினும் வேதச் சடங்குகளை எதிர்த்து, மாபெரும் சமய, சமூகப் புரட்சியை முன்னெடுத்தது வீரசைவம் எனப்படும் சக்தி விசிஷ்டாத்வைத சைவம்.
அதேநேரத்தில், வேதங்களோடு ஆகமங்களையும் ஏற்றுக்கொண்டு, வேறு வகையிலான சைவ விசிஷ்டாத்வைதம் கண்டது தமிழகத்தின் சித்தாந்த சைவம். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.