40. நீயே அது

அத்வைதத்தின் ஆதாரம், ரிக் வேதத்திலேயே வேர் கொண்டுள்ளது. ரிக் வேதத்தின் நாஸதீய சூக்தம் சுட்டிக்காட்டும் இல்லாமைக்குள் இருக்கும் இருப்பு,

அத்வைதத்தின் ஆதாரம், ரிக் வேதத்திலேயே வேர் கொண்டுள்ளது. ரிக் வேதத்தின் நாஸதீய சூக்தம் சுட்டிக்காட்டும் இல்லாமைக்குள் இருக்கும் இருப்பு, அந்தப் பிரும்மம்தான். இதேபோல், புருஷ சூக்தத்தில் குறிப்பிடப்படும் புருஷன் என்ற பதமும், பிரும்மத்தைக் குறிப்பதே. புருஷன் மாத்திரமே இங்குள்ள அனைத்தும் (புருஷ ஏவேதம் ஸர்வம்), இதுவே முற்காலத்தில் இருந்ததும் இனி வருங்காலத்தில் இருக்கப்போவதும் (யத்பூதம் யச்ச பவ்யம்), இறவாத்தன்மை கொண்ட ஈசனாகிய அந்தப் புருஷன்தான் உலகில் அனைத்துமாக ஆகி நிற்கிறது – அதாவது, உலகில் தோன்றிய அனைத்திலும் அந்த இறவாத் தன்மையே ஈசனாக உறைகிறது (உத அம்ருதத்வஸ்யே ஈஸானோ), அதுவே உணவாகவும் விளங்கி உயிர்களை வளர்க்கிறது (யத் அன்னேன அதி ரோஹதி) என்கிறது புருஷ சூக்தம்.

அதாவது, ஒற்றை இறை சக்தியே அனைத்திலும் வியாபித்து நிற்கிறது; காலங்களைக் கடந்து அதுவே இருக்கிறது என்பதை புருஷ சூக்தம் அழகாக எடுத்துரைத்திருக்கிறது. அந்த ஒற்றை ஆற்றலைத்தான், இருப்பைத்தான் பிரும்மம் என்கிறது அத்வைதம். யஜுர் வேதத்தில் உள்ள மற்றொரு வாக்கியம் இதனைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஈஸா வாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் – ‘உலகில் உள்ள அனைத்திலும் அந்த இறையே உறைகிறது, அதுவே உள்ளீடாய் உலகம் அனைத்திலும் பரந்திருக்கிறது’. ஆக, பரமாத்மா அல்லது பிரும்மம் எனப்படும் இறையாற்றல், ஜீவாத்மாவில் இருந்து வேறுபட்டதல்ல. அதுவும் இதுவும் ஒன்றே. பிரும்மமே அனைத்துமாய் ஆகி நிற்கிறது என்கிறது அத்வைதம்.

வேதங்களைப் போலவே உபநிஷதங்களும் அனைத்தும் பிரும்மமே என்ற ஒற்றை இருப்பை பறைசாற்றுகின்றன. சர்வம் கல்விதம் பிரும்ம (அனைத்துமாய் இருப்பது பிரும்மமே), நேஹ நானாஸ்தி கிஞ்சன (பிரும்மத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை) என்று உபநிஷதங்கள் உயர்வாக எடுத்துரைக்கின்றன. என் கடவுள்தான் உண்மை, மற்ற கடவுள்கள் பொய் என்ற அகந்தையோ, அறியாமையோ அத்வைதத்தில் அகப்படவில்லை. பிரித்துப் பார்க்கும் வேற்றுமை உணர்வோ, பகைமையோ இதில் தென்படவில்லை. மாறாக, அனைத்துமே அந்த ஒற்றை இறையாற்றலைத் தவிர வேறில்லை என்ற ஒற்றுமை உணர்வே மேலோங்கி நிற்கிறது.

‘கடவுள் தன்னிலிருந்து இந்த உலகைப் படைத்தாரா?; இல்லையேல் தான் அல்லாத வேறொன்றில் இருந்து இந்த உலகைப் படைத்தாரா?’ என்று நுட்பமான கேள்வியை புத்தர் எழுப்பினார். ‘கடவுள், தான் அல்லாத வேறொன்றில் இருந்து உலகைப் படைத்தாராயின், அவர் இல்லாத வேறொன்றும் உலகில் இருப்பது நிரூபணமாகிறது. ஆகையால், ஆண்டவன் சர்வ வல்லமை பொருந்தியவர் என்பது தவறாகிறது. இல்லையேல், கடவுள் தன்னில் இருந்துதான் உலகைப் படைத்தார் என்றால், இங்கு காணப்படும் தீமைகள், துயரங்கள் ஆகியவற்றுக்கும் அவரே காரணமாகிறார்’ என்று அதிநுட்பமான கடும் விமரிசனத்தையும் புத்தர் முன்னிறுத்தியுள்ளார். இதற்கு ஓரளவு விடையாக, ‘அறிவற்ற ஆனால் செயல்படக்கூடிய பிரகிருதி மற்றும் அறிவுள்ள ஆனால், செயல்படாத புருஷன் ஆகியவற்றின் கூட்டுதான் பிரபஞ்சத் தொடக்கத்துக்குக் காரணம்’ என்று புத்தருக்கு முன்தோன்றிய கபிலர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இதில்கூட பிரகிருதி, புருஷன் ஆகிய இருமை இருக்கிறது.

அதேநேரத்தில், புத்தரின் கேள்விக்கு முழுமையான விடையாய், அத்வைதத்தின் மூலம் பதிலளிக்கிறார் ஆதிசங்கரர். அதில்கூட பௌத்தத்தின் தத்துவமாகிய மாயாவாதத்தையே, பௌத்தக் கருத்தை முறியடிக்கப் பயன்படுத்தியுள்ளார். பிரும்மம் ஸத், ஜகத் மித்யா என்பதே சங்கரர் வாக்கு. அதாவது, பிரும்மம் மாத்திரமே உண்மையானது, உலகம் ஒரு மாயத் தோற்றம் என்கிறார். எது மாறுபடாமல் நிலையாக இருக்கிறதோ அதுதானே உண்மை. எனவே, நிலையாக இருக்கக்கூடிய பிரும்மம் மாத்திரமே உண்மை. அதாவது, அது மட்டுமே இருப்பாக உள்ளது. அதேநேரத்தில், மாறிக்கொண்டே இருக்கக்கூடிய உலகத் தோற்றங்கள் ஒரு மாயையே. அதாவது, குறிப்பிட்ட காலம்வரை உண்மைபோல் இருக்கக்கூடிய வெறும் தோற்ற மயக்கங்கள் மாத்திரமே. மாறுபாடாகத் தோன்றுகின்ற இந்தத் தோற்றங்களுக்குள்ளும் மாறாமல் பிரும்மமே வீற்றிருக்கிறது. அந்தப் பிரும்மத்தின் (பரமாத்மாவின்) பிரதிபலிப்பே மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களில் ஜீவாத்மாவாகத் தோற்றம் கொடுக்கிறது. ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும் ஒன்றே. இதனை உணரவிடாமல், அறியவிடாமல் மயக்குவதே அவித்தை எனப்படுகின்ற அறியாமை. இந்த மாயத்திரையை ஞானத்தாலும், பயிற்சிகளாலும் விலக்கினால், எந்தவொரு மனிதனும் வேறுபாடற்ற ஒருமையில் - அதாவது அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது, அனுபவம் ஆகிய பேதமற்ற பரமானந்தத்தில் - திளைக்கலாம் என்கிறார் ஆதிசங்கரர்.

தூய இருப்பாகிய அறிவு மாத்திரமே, அதாவது பிரும்மம் மட்டுமே உண்மை என்பதே சங்கரரின் அத்வைதம். இதையேதான் அனுபவம் மட்டுமே உள்ளது, அனுபவிப்பர் இல்லை என்று பௌத்தம் வேறு வார்த்தைகளில் கூறுகிறது. (சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ என்று மகாகவி பாரதி வினவியதும் இந்த அத்வைத அனுபவத்தின் அடிப்படையில்தான்). தியானத்தை வலியுறுத்தும் புத்தர், தான் என்ற எதுவுமில்லை (அனத்தா) என்பதை உணர்ந்து, இறுதி நிலையாகிய ஏதுமற்ற சூனியத்தில் திளைப்பதே முக்தி என்கிறார். ஆனால், ஆதிசங்கரரோ, தான் என்று தனியாக ஏதுமில்லை, தான் என்று கருதுவதும் அந்தப் பிரும்மமே (அஹம் பிரும்மாஸ்மி) என்பதை அறிந்து, யாதுமாகி நிற்கும் அந்தப் பூரணத்தில் திளைப்பதே முக்தி என்கிறார். ஆக, புத்தர் எழுப்பிய தத்துவார்த்த வினாக்களுக்கு, வேதங்கள், உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள அத்வைதம் சார்ந்த கருத்துகளின் அடிப்படையில் பதிலளித்து, தத்துவ தரிசனத்தில் அடுத்த நகர்வை ஏற்படுத்தியுள்ளார் ஆதிசங்கரர்.

அந்தவகையில், ஆதிசங்கரரின் கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள வேறு சில உபநிஷதக் கருத்துகளையும், சங்கரருக்கு முந்தைய ரிஷிகள், அறிஞர்களின் கூற்றுகளையும் சற்று காண்போம்.

அத்வைதத்தின் அடிப்படையான மகாவாக்கியங்கள் நான்கு. அவை, முண்டக உபநிஷதத்தில் இடம் பெற்றுள்ள அயமாத்மா பிரும்ம (இந்த ஆன்மாவே பிரும்மம்), சாந்தோக்ய உபநிஷதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தத்வமஸி (நீயே அது), பிருஹதாரண்யக உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ள அஹம் பிரும்மாஸ்மி (நானே பிரும்மம் – நான் கடவுள்), ஐதரேய உபநிஷதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரக்ஞானம் பிரும்ம (பிரக்ஞையே பிரும்மம் – தூய அறிவே கடவுள்).

இந்த உபநிஷத மகாவாக்கியங்களில் ஒரு படிநிலையைக் காணலாம். அத்வைதத்தை அறிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை சாதகனிடம், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் (உயிரினத்துக்குள்ளும்) உறைகின்ற ஜீவாத்மாதான் கடவுள் என்று முதலில் தெரியப்படுத்தி, முனைப்பைத் தூண்டுகிறது முதல் மகாவாக்கியம். பின்னர் ஓரளவு பக்குவம் பெற்றதும், கடவுளை (பிரும்மத்தை) வெளியில் தேடாதே, உனக்குள்ளே அது உறைகிறது பார் என்று உள்முக தியானத்துக்குத் தயார்படுத்துகிறது இரண்டாவது மகாவாக்கியம். இப்போது சிறந்த பக்குவம் அடைந்த நிலையில், படர்க்கையில் (மூன்றாம் நபராக) சுட்டப்படும் இது, முன்னிலையில் (இரண்டாவது நபராக) கூறப்படும் நீ ஆகியவற்றைக் கடந்து தன்மையில் (முதல் நபர்) உணரப்படும் நானே கடவுள் என்பதை உபதேசிக்கிறது மூன்றாவது மகாவாக்கியம். வெளியில் தொடங்கி, முன்னிலைப்படுத்தி, தன்மையில் உணர்ந்துகொண்ட ஒருமை சாத்தியப்பட்ட பிறகு ஏற்படும் பரிபக்குவ நிலையில், இது, நீ, நான் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த நான்காவது நிலையாகப் பேதம் ஏதுமற்ற ஒற்றை இருப்பாகிய தூய அறிவைத் தெளிவுபடுத்துகிறது நான்காவது மகாவாக்கியம்.

சங்கரருக்கு முன்தோன்றிய அத்வைத ஞானிகளில் குறிப்பிடத்தகுந்தவர், தத்வமஸி என்ற மகாவாக்கியத்தை தந்தருளிய ஆருணி என்ற மகரிஷி. இவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்குக் கூறிய உபதேசங்களே, சாந்தோக்ய உபநிஷதமாகும். ஸ்வேதகேதுவிடம் “இந்த உலகம் முழுவதும் ஒரே தத்துவத்தால், ஒரே உண்மையால் ஆகியிருக்கிறது” என்கிறார் ஆருணி. மேலும், “இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் அந்த ஒற்றை உண்மையில் இருந்தே தோன்றியுள்ளன. அந்த உயிரினங்களுக்கு உதவியாக இருப்பதும் அந்த உண்மையே. இவையெல்லாம் நிலைத்திருப்பதும் அந்த உண்மையில்தான்” (ஸோம்யேமா ஸர்வா ப்ரஜா ஸதாயதனா ஸத்ப்ரதிஷ்டா) என்கிறார்.

அத்துடன், அனைத்துப் பொருள்கள், உயிரினங்களின் சாரமாக உள்ள அந்த நுண்ணிய தத்துவத்தின் ஒட்டுமொத்தமே இந்த உலகம் முழுவதற்கும் ஆன்மா. அதுவே உண்மை. அதுவே ஆன்மா. அதுவேதான் நீ என்பதை அறி ஸ்வேதகேது (ஸ ச ஏஷோஅணி மைததாத்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேதகேதோ இதி) என்கிறார்.

குறிப்பிடத்தக்க மற்றொரு முற்கால அத்வைத ஞானி, சுக்ல யஜுர்வேதம் என்ற பிரிவை உருவாக்கியவரும், அஹம் பிரும்மாஸ்மி என்ற மகா வாக்கியத்தை அருளியவருமான யாக்ஞவல்கிய ரிஷி. துறவியாக முடிவெடுத்த யாக்ஞவல்கியர், தனது இரண்டாவது மனைவியும் சிறந்த அறிவாளியுமான மைத்ரேயிக்கு உபதேசித்ததே பிருஹதாரண்யக உபநிஷதம். “ஒரே ஆன்மாதான் எங்கும் வியாபித்திருக்கிறது. ஆகையால் எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் அந்த ஒரே ஆன்மாவையே நாம் காண வேண்டும். துவைதபாவம் (இரண்டு என்ற மனப்பான்மை) இருக்கும்வரையில்தான் தகராறுகள் எல்லாம். ஒன்று என்றானதும், அனைத்து சச்சரவுகளும் தீர்ந்துபோகின்றன” என்கிறார் யாக்ஞவல்கியர்.

மேலும்,

ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ
மந்தவ்யோ நிதித்யாஸிரவ்யோ மைத்ரேய்யா
த்மனோ வா அரே தர்சனேன ச்ரவணேன மத்யா
விஞ்ஞானேனேதம் ஸர்வம் விதிதம்

என்று மைத்ரேயியிடம் கூறுகிறார்.

இதன் பொருள் – “ஏ மைத்ரேயீ, இந்த ஆன்மாவையே (உள்ளிருப்பையே) தரிசித்தும், இது சொல்வதையே கேட்டும், இதுபற்றியே சிந்தித்தும், இதுபற்றியே தியானம் செய்தும்வந்து அதன்மூலமாக இதை நன்கு அறிந்துகொண்டுவிட்டால், உலகில் உள்ள அனைத்தைப் பற்றியும் அறிந்துகொண்டுவிட முடியும்” என்பதே. ஆகையால், உள்முக ஆய்வின் மூலம் சுயத்தை அறிந்துகொண்டு, அதன்மூலமாக அனைத்தின் உள்ளம்சமாக இருக்கக்கூடிய ஒற்றை இருப்பை (பிரும்மத்தை) உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார் யாக்ஞவல்கியர்.

இதேபோல் ஸ்வேதாச்வதர உபநிஷதத்தின் கருத்தும் முக்கியமானது.

ஏகோ தேவ ஸர்வபூதேஷு கூட
ஸர்வவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மா
கர்மாத்யக்ஷ ஸர்வபூகாதிவாஸ
ஸாக்ஷ சேதோகேவலோ நிர்குணச்ச

இதன் பொருள் – “அந்த ஒற்றைத் தெய்வமே அனைத்து உயிரினங்களின் உள்ளும் உறைந்துள்ளது. எங்கும் நிறைந்துள்ளது. எல்லாவற்றின் உள்ளிருப்பாக இருப்பது அதுவே. அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் அதுவேதான் தலைவன், அதுவே அனைத்துக்கும் சாட்சியாக உள்ளது. அதுவே அனைத்தின் அறிவாகவும் விளங்குகிறது. தனித்திருக்கும் அது எவ்வித குணங்களும் (மாறுபாடுகளும்) அற்றதாய் உள்ளது”.

ஏகோ வசீ ஸர்வபூதாந்தராத்மா
ஏகம் ரூபம் பஹுதா யஹ் கரோதி
தமாத்மஸ்தம் யேணுபச்யந்தி தீரா
ஸ்தேஷாம்ஸுகம் சாஸ்வதம் நேதரேஷாம்

என்கிறது கடோபநிஷதம்.

இதன் பொருள் – “அந்த ஒரே பரமாத்மா எல்லாவற்றின் உள்ளிருப்பாக (அந்தராத்மா) இருக்கிறார். ஒருவராக உள்ள அவரே பலவித உருவங்களைத் தாங்குகிறார். தனது ஆன்மாவுக்குள்ளே அந்தப் பரமாத்மாவைக் காணும் தீரமுள்ள புத்திசாலி யாரோ, அவருக்கே நிலைத்த இன்பம் கிடைக்கிறது, வேறு எவருக்கும் அல்ல”.

இவ்வாறான அத்வைத ரிஷிகளின் வரிசையில், பிரும்மசூத்திரத்தை இயற்றிய பாதராயணர் குறிப்பிடத்தக்கவர். இவர் மகாபாரதம் எழுதிய வியாசர்தான் என்று சிலர் கூற, வேறு சிலர் மறுக்கின்றனர். பாதராயணர் வாழ்ந்த காலம் கி.மு. 5-ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. கி.பி. 2-ம் நூற்றாண்டு என்று கூறுவாரும் உண்டு. பாதராயணரின் பிரும்மசூத்திரத்துக்கும், பகவத் கீதைக்கும் பாஷ்யம் (விளக்கவுரை) எழுதிய ஆதிசங்கரர், அவை இரண்டும் அத்வைதம் சார்ந்தவை என்று நிறுவியுள்ளார். ஆனால், பாதராயணரின் பிரும்ம சூத்திரமும், பகவத் கீதையும் தங்கள் கருத்துகளைச் சார்ந்ததே என்று விசிஷ்டாத்வைதிகள், துவைதிகள் உள்ளிட்ட இதர வேதாந்தப் பிரிவினரும் உரிமை கொண்டாடுகின்றனர். அதற்குரிய வகையில், அவர்கள் வேறு விளக்கங்கள் அளிக்கின்றனர். எனினும் சாந்தோக்ய, பிருஹதாரண்யக, கட, தைத்திரீய, முண்டக, பிரஸ்ன, கௌஸீதகி, ஸ்வேதாஸ்வதர, ஐதரேய மற்றும் ஜாபால ஆகிய 10 உபநிஷதங்களும் அத்வைதம் சார்ந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பராசர ரிஷி, அவரது சீடரான மைத்ரேய ரிஷி, ரிபு கீதை இயற்றிய ரிபு ரிஷி, அஷ்டவக்ர கீதை எழுதிய அஷ்டவக்ர ரிஷி ஆகியோரும் அத்வைத ஞானிகளாகப் போற்றப்படுகின்றனர். பிரும்மசூத்திரத்துக்கும் பகவத் கீதைக்கும் விருத்திகளை (விரிவுரைகளை) எழுதிய உபவர்ஷ ரிஷியும் அத்வைதியே. ஆனால், இவரது நூல்கள் தற்போது கிடைக்கப்பெறவில்லை. இதேபோல், உபவர்ஷ ரிஷியின் விருத்திகளுக்கு வார்த்திகா எனப்படும் பொழிப்புரைகளை எழுதிய சுந்தரபாண்டியர், சாந்தோக்ய உபநிஷத வாக்யம் இயற்றிய பிரும்மானந்தி, அதற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசார்யர் ஆகியோரும் அத்வைதிகளே. இவர்களது நூல்களும் தற்போது கிடைக்கப்பெறவில்லை. இலக்கண அறிஞரான காஸக்ருத்ஸ்னர், மற்றோர் இலக்கண அறிஞரும் தத்துவவாதியும் வைராக்ய சதகம் இயற்றியவருமான பர்த்ருஹரி ஆகியோரும் அத்வைத ஞானிகளாக மதிக்கப்படுகின்றனர். இதில் பர்த்ருஹரிதான் பத்திரகிரி எனப்படும் சித்தர் என்று கூறுவாரும் உண்டு.

அத்வைத ரிஷி பரம்பரையினரில் கௌடபாதரின் சீடராக கோவிந்தபாதரும், அவரது சீடராக ஆதிசங்கரரும் வந்தனர். ஆதிசங்கரரால் பாரதத்தின் நான்கு திசைகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி, பத்ரிநாத், துவாரகா, புரி ஆகிய அத்வைத சங்கர மடங்களில், வழிவழியாக அத்வைத ஆசார்யர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடம், ஆதிசங்கரர் ஸ்தாபித்த சர்வக்ஞ பீடம் என்று கூறுவார் உண்டு. ஆயினும், அதை மறுத்து சர்வக்ஞ பீடம் காஷ்மீரில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், காஞ்சி சங்கர மடம் உண்மையில் சிருங்கேரி மடத்தின் கிளை என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

சங்கர மடங்களின் பீடாதிபதிகளாக விளங்கும் அத்வைத சன்யாசிகள் தசநாமிகள் எனப்படுகின்றனர். அதாவது, 10 சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் சன்யாசிகள் இவர்கள். பிரக்ஞானம் பிரும்ம என்ற மகாவாக்கியத்தையும் ரிக் வேதப் பிரிவையும் சார்ந்த, பத்மபாதர் வழிவந்த புரி கோவர்த்தன பீடத்தைச் சேர்ந்த அத்வைத சன்யாசிகளுக்கு வனர், அரண்யர் என்ற சிறப்புப் பெயர்கள் அவர்களது சன்யாசப் பெயரோடு இணைந்திருக்கும். அஹம் பிரும்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தையும் யஜுர் வேதத்தையும் சார்ந்த, சுரேஷ்வரர் வழிவந்த சிருங்கேரி சாரதா பீடத்தின் அத்வைத சன்யாசிகளின் பெயர்களோடு சரஸ்வதி, புரி, பாரதி ஆகிய பெயர்கள் இணைந்திருக்கும். (காஞ்சி மட சன்யாசிகளின் பெயர்களோடு சரஸ்வதி இணைந்திருக்கும். உதாரணத்துக்கு, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜயேந்திர சரஸ்வதி). தத்வமஸி என்ற மகாவாக்கியத்தையும் சாம வேதத்தையும் சார்ந்த, ஹஸ்தாமலகரின் வழிவந்த துவாரகை பீட சன்யாசிகளின் பெயர்களோடு தீர்த்தர், ஆஸ்ரமர் ஆகிய பெயர்கள் சேர்ந்திருக்கும். அயமாத்மா பிரும்ம என்ற மகாவாக்கியத்தையும், அதர்வண வேதத்தையும் சார்ந்த தோடகரின் வழிவந்த பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர்மட பீடத்தின் சன்யாசிகளின் பெயர்களோடு கிரி, பர்வதர், சாகரர் ஆகிய பெயர்கள் இணைந்திருக்கும்.

இந்த சன்யாசிகள் தவிர, மிஸ்ரர் (மிஸ்ர), தீட்சிதர் (தீட்சித்), உபாத்யாயர் (உபாத்யாய்) ஆகிய சிறப்புப் பெயர்களை பின்னொட்டாகக் கொண்டுள்ள, இல்லறம் வாழ் அத்வைத அறிஞர்களும் அதிகம் பேர் உள்ளனர். இவர்களில், கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாசஸ்பதி மிஸ்ர குறிப்பிடத்தகுந்தவர். ஆதிசங்கரின் பிரும்மசூத்திர பாஷ்யத்துக்கு பாமதி என்ற பெயரில் இவர் விளக்கவுரை எழுதியுள்ளார். அத்வைதியாக இருந்தபோதிலும், நியாய-வைசேஷிகம், சாங்கியம், மீமாம்சை ஆகிய இதர தத்துவங்களுக்கும் விளக்கவுரை எழுதி, பலதுறை அறிஞர்களால் மதிக்கப்படும் பேரறிஞராகத் திகழ்கிறார் வாசஸ்பதி மிஸ்ர. பத்மபாதரின் பஞ்சபதிகாவுக்கு விவரணம் இயற்றிய பிரகாஷாத்மன் (கி.பி. 10-ம் நூற்றாண்டு), நியாயம் உள்ளிட்ட இதர தரிசனங்களுக்கு மறுப்புரையாகக் கண்டன கண்டகாத்யம் இயற்றிய ஸ்ரீஹர்ஷர் (கி.பி. 12-ம் நூற்றாண்டு), தமிழகத்தின் திருவிடைமருதூரில் பிறந்தவரும் அதர்வண வேத உபநிஷதங்களுக்கு தீபிகை எனப்படும் விளக்கவுரைகளை எழுதியவருமான சங்கரானந்தர் (கி.பி. 14-ம் நூற்றாண்டு) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

இந்த சங்கரானந்தருக்கும், பின்னர் சிருங்கேரி மடத்தின் சங்கராசார்யரான வித்யதீர்த்தருக்கும் சீடராக இருந்த வித்யாரண்யர் என்ற சன்யாசி மிகவும் முக்கியமானவர். இந்த வித்யாரண்யர்தான் அந்நியர்கள் மற்றும் மாற்று மதத்தினரின் படையெடுப்புகளில் இருந்து ஹிந்து மதத்தைக் காப்பாற்ற, ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவரைக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர். இதேபோல், கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுசூதன சரஸ்வதி என்ற வங்காளத்தைச் சேர்ந்த அத்வைத சன்யாசிதான், முகலாய அரசர்களின் கொடுங்கோன்மையை எதிர்க்கவும், ஹிந்து மதத்தைக் காக்கவும் போரிடுகின்ற பிறந்தமேனியாகத் திரிகின்ற நாகர்கள் எனப்படும் சன்யாசப் பிரிவை ஏற்படுத்தியவர். நக்க என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஆடையற்ற, அம்மணமான என்ற பொருள் உண்டு. இந்த நக்க என்ற சொல்தான் மருவி நாக என்றாகிவிட்டது.

கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட இந்த மதுசூதன சரஸ்வதி இயற்றிய அத்வைத சித்தி என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது. பஞ்சராத்ர வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களை அத்வைத தத்துவத்தின்கீழ் கொண்டுவந்தவரும் இவரே. இதேபோல், கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பைய தீட்சிதர், சைவர்களுக்கும் அத்வைதிகளுக்கும் பாலமாகத் திகழ்ந்தார். சிவபெருமானை இஷ்ட தெய்வமாகக் கொண்ட இவர், சித்தாந்தலேஷ சங்கிரஹ, துவைதத்தை விமரிசிக்கும் மத்வ தந்திர முக மர்த்தனம் உள்ளிட்ட நூல்களையும், மார்க்கபந்து ஸ்தோத்திரம் உள்ளிட்ட பக்தி கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.

வேதாந்த சித்தாந்த முக்தாவலீ இயற்றிய கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரகாசானந்த சரஸ்வதி, ஆத்ம வித்யாவிலாஸம் இயற்றியவரும் நெரூரில் ஜீவசமாதி அடைந்தவருமான 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதாசிவ பிரும்மேந்திரர், ஆர்யமத சம்வர்த்தினி என்ற பத்திரிகையை நடத்திவந்த 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கடலங்குடி நடேச சாஸ்திரிகள், சங்கர குருகுலம் தொடங்கிய தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆகியோரும் குறிப்பிடத்தக்க அத்வைதிகளாவர்.

பொதுவாக, ஆதிசங்கரர் வழிவந்த அத்வைதிகளுக்கு, வழிபடு கடவுளில் எந்த வேறுபாடும் இல்லை. நிர்குண பிரும்மத்தை, அவரவர் தங்களுக்குப் பிடித்த சுகுண பிரும்மமாக, அதாவது பிடித்தமான எந்தவொரு வடிவிலான கடவுளாகவும் வழிபடலாம். கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட ஆதிசங்கரர், சிவன், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமண்யர் (அல்லது சூரியன்) ஆகிய 5 தெய்வங்களையும் வழிபடும் பஞ்சாயதன வழிபாட்டு முறையை ஆதரித்தார். அத்வைதிகளில் பெரும்பாலானோர் சைவர்களைப்போல நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வர். சங்கர மடங்களின் சங்கராசார்யர்களும் நெற்றியில் விபூதி பூசுபவர்களே. அதேநேரத்தில், பட்டை நாமமும், கீற்று நாமமும், கோபி சந்தனமும் இட்டுக்கொள்கின்ற, அதற்கேற்ப வழிபாட்டு முறைகளில் வேறுபடுகின்ற அத்வைதிகளும் உண்டு. வழிபாட்டு முறைகள் மாறினாலும், பூஜிக்கும் தெய்வ உருவங்கள் வேறாக இருந்தாலும், அவை அனைத்தும் அந்த ஒற்றைப் பரம்பொருளே என்பதில் அத்வைதிகளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

இன்றைய ஹிந்துக்களின் பொதுவான வடிவமாக அத்வைதிகள் திகழ்கின்றனர். அதேநேரத்தில், தத்துவ ரீதியில் அத்வைதத்தோடு மாறுபடுவதுடன், எந்த வடிவில் வேண்டுமானாலும் பிரும்மத்தை வணங்கலாம் என்பதற்குப் பதில், விஷ்ணு ரூபத்தில் மட்டுமே பரம்பொருளை வணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வேதாந்திகளும் உள்ளனர்.

விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய இருவகையான அந்த வேதாந்தப் பிரிவுகளில், விசிஷ்டாத்வைதம் குறித்து அடுத்த வாரம் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com