காலம்: கி பி1322ஆம் ஆண்டு ஒரு வெயில் அதிகமில்லாத பகல் நேரம்.
”வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
துன்பமிகு துயர் அகல அயர்வு ஒன்றில்லாச்
சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப்பள்ளி கொள்ளும்
அணியரங்கன்…….”
திவ்யப்ரபந்தம் சொல்லும் எட்டு வயது நாதமுனிக்கு அப்படி ஒன்றும் படிப்பில்லாததால் அர்த்தம் புரியவில்லை. அவன் பாட்டுக்கு ஒரு வித தலைவலிக்கும் ஸ்வரத்தில் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே கோவில் உள் வாசலைப் பெருக்கினான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலேருந்து அந்தப் பாட்டைத்தான் பாடிக்கொண்டே வேலை செய்வான். குலசேகர ஆழ்வார் அருளிச்சென்ற திருவாய்மொழிப்பற்றியெல்லாம் அவனுக்குச் சொல்லப்படவில்லை.
“நாதமுனி! ஒழுங்க வேலை செய்யணும். வேல செஞ்சா ரெண்டு கை முழுக்கவும் அக்கார அடிசில் ததியோனம் ரெண்டு வேளையும் கெடைக்கும்,என்ன”
”செய்யறேன்பா!”
”எம்புள்ள சமத்துடி கோதை! எனக்கப்றம் அவனுக்குத்தான் கோவில் வேல!”
”ஆமா, பெரிய ஆஸ்தான வேல! வாசப்பெருக்கற வேல! நாலெழுத்து படிச்சிருக்கப்படாதோ, வேதமாவது சொல்லி கௌரவமா பொழக்கலாம், இப்ப பாருங்கோ, தொடப்பத்த வெச்சுண்டு..நீங்கதான்னா, நம்ம புள்ளைக்கும் அதேதானா..?”
”போடி அபஸ்சரித்து! வேளா வேளக்கு நன்னா நெய்யை வழிச்சிண்டு சாப்பிடறயோன்னோ அது எங்கேர்ந்து வரதாம்? நா குனியக்குனிய பெருக்கற குப்பைலேர்ந்து..! ஸ்வாமியோட குப்பைடீ! அது வெல மதிப்பு இல்லாதது!”
“ஆமா, பேசுங்கோ நன்னா!”
“வழக்கத்தில் உள்ள இந்து சமய ஆலயங்களில் உலகத்திலேயெ மிகப்பெரியதாகக் கருதப்படுவது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில்தான். அங்கோர்வாட் இதைவிடப்பெரிசாக இருந்தாலும் புழக்கத்தில் இல்லாததால் இந்தப்பெருமை ஸ்ரீரங்நாதர் கோவிலுக்கே உரியது.”
நாதமுனிக்குத்தெரிஞ்சதெல்லாம் கோவில் வாசல், கோவில் உட்புறம் தென்னந்தொடப்பத்தை வைத்துக்கொண்டு ”கர்ரக் கர்ரக்” என்று இடுப்பொடிய பெருக்குவது, மணிக்கொருதரம் கிணற்றடியில் போய் தண்ணீரைக்குடிப்பது, மதிய பூஜை மணிச்சத்தம் கேட்டவுடனே சன்னதிக்கிப்போய் மறுபடி ”வன்பெரு வானகம் உய்ய..” வென்று வாய் உரக்கப் பாடுவது, நைவேத்யம் ஆனவுடனே பெரிய பட்டர், நாதமுனி! என்று வாத்சல்யமாகக்கூப்பிடும் குரலுக்காகக்காத்திருப்பது.
“நாதமுனி! வா வா! பிள்ளைப்பெருமாள்! பாத்தீரா? என்னமா பெருக்கியிருக்கான் குழந்த? டெல்லி சுல்தான் அரமண மாதிரின்னா ஜொலிக்கரது”
”ஓய்! என்னங்காணும் உதாரணம் இது?”
“என்ன நெனச்சிண்டு இருக்கீர்? நம்மளவா அங்க போய் வித்வத்தெல்லாம் காட்டி பெருமாள் செலயத்திரும்பி வாங்கிண்டு வந்தாளே, அப்போ அவாள அழச்சிண்டு போய் சுத்திக்காமிச்சாளாமே, அங்க இப்படித்தான் ஜொலிச்சிதாம். தண்ணில மாதிரி தரைய்ல முகந்தெரியறதாமய்யா!”
“அதெல்லாம் விட்டுட்டுதானேய்யா பாதுஷாவோட பொண்ணு சுரதாணி இஞ்ச ஓடி வந்துட்டா! நம்ம அரங்கன் கோவிலாட்டமா உண்டா? அத விட்டுட்டு இதுக்குப்போய் அந்த அரமணை உதாரணம் சொல்றேளே. நன்னாவா இருக்கு?”
“சொல்லாதீயும் ஓய்! எனக்கான வயத்தக்கலக்கறது! பாதுஷாவுக்கு அவன் பொண்ண மயக்கி சுவாமி பேரால இஞ்ச கூட்டிண்டு வந்துட்டோம்னு கோவமாமே! மறுபடி படையோட வராம இருக்கணும்!”
”அவாளேதானே வந்தா! நம்ம ஸ்ரீரங்கநாதனோட அருள்! நாம என்ன பண்ண முடியும்?”
”ஒய்! அதெல்லாம் பேசறதுக்கு இடம் கொடுத்தாதானே நீர் உம்ம கதையெல்லாம் சொல்லுவீர்! அவன் பாட்டுக்கு குதிரய்ல கூட்டமா வந்து சூழ்ந்துண்டானா , என்ன பண்ண முடியும் நாம, சொல்லும்?”
”அது சரி, ரங்கநாதர் இன்னொரு தரம் நம்மள அந்தக்கதிக்கு ஆளாக்க மாட்டர்!”
பிள்ளைப்பெருமாள் பட்டருக்கு வருங்காலத்தை அறியும் சக்தி இல்லை!
”மாமா கூப்டேளா?”
நாதமுனி ஓடி வந்தான்.
”எங்கேடா உங்கப்பன்? ஒன்ன வேல செய்யச்சொல்லிட்டு இவன் எங்க போய் போதோட்டிண்டு இருக்கான்?”
”அப்பாக்கு உடம்பு சரியில்ல மாமா. ஆத்துல இருக்கா?”
” நாதமுனி! அடுத்த வருஷம் ஒனக்கு ஒரு தம்பிப்பாப்பா வருண்டா!”
“ஓய்! கொழந்தையாண்ட போய் இதெல்லாம் பேசிண்டு…, வாடா குழந்த! இந்தா இன்னிக்கு உனக்கு ப்ரசாதம்!”
தாமரை இலையில் சுடச்சுட தரப்பட்ட அக்கார அடிசிலயும் ததியோன்னத்தையும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு நாதமுனி சித்திரை வீதிக்கு ஓட்டமும் நடையுமாக போய்ச்சேர்ந்தான்.
ஸ்ரீரங்கம் கோவிலைப்பொறுத்தவரை சோழர்கள். பாண்டியர்கள், ஹொய்சலர்கள். மற்றும் நாயக்கர்களுமே பாதுகாப்பும் பராமரிப்பிலும் எந்தக்குறையும் வைக்காதவர்களாகவே இருந்தனர். அவர்களுக்குள் சண்டை வந்தபோதும்கூட கோவில் சம்பிரதாயங்களில் எந்தவித வில்லங்கமும் வராமல் பார்த்துக்கொண்டனர்.
நாதமுனியின் தாத்தா மணவாள பட்டர் வேத விற்பன்னர். திருவாய்மொழி அத்தனைக்கும் பொருளோடு வ்யாக்கியானம் செய்யக்கூடிய சம்பத்து பெற்றவர். கோவிலில் அவருக்கென்று தனி மரியாதை உண்டு, அப்பொதைய ஸ்ரீரங்கத்து குழந்தைகள் அவரிடம் பாடம் பயின்றனர். ஆனால் வீர நாராயணனுக்கு படிப்பு சொல்லித்தரப்படவே இல்லை பூஞ்சையான உடம்பு. பொறந்த குழந்தை முதல் மாசத்துலயே ஜன்னி கண்டு விட்டது. தூக்கித்தூக்கிப்போட, மணவாள பட்டர் ஸ்ரீரங்கத்து எல்லா வைத்தியர்களையும் அழைத்துக்கொண்டு வந்து பார்க்க வைத்தார். ஒண்ணும் ப்ரயோஜனப்படவில்லை.
உள்ளே குழந்தை முனகிண்டு இருக்கும்போது, இவர் வேதனை தாளாமல் வாசல் திண்ணையில் வந்து மேல் துண்டால் வாயைப்பொத்திக்கொண்டு விக்கினார்.” ரங்கநாதா சோதிக்கறயா” என்று புலம்பினார். குழந்தய உசிரோடு கொடுத்துடு, என்ன வேணா பண்றேன்” என்று வாக்குக்கொடுத்தார்.
இரண்டே நாழிகையில் முனகல் நின்றது. குழந்தை தூங்கினான். அடுத்த நாள் காலை பூவாய்ச்சிரித்தான். மணவாள பட்டர் ஆனந்தத்தோடு சன்னதிக்கு ஓடி வாய் ஓயாமல் திருவாய்மொழி சொல்லி சொல்லி நன்றி சொன்னார்.
“பட்டரே! அதான் கொழந்த நன்னாயிட்டானே! போம், போய் ஆத்துல ஏதானும் ஒரு வா சாப்பிடும்! நேத்திலேர்ந்து கொலப்பட்னியாயிருக்கீர்!”
கோவில் வாசலுக்கு வந்தார். காற்று வீசியடித்தது. பொல பொலவென அரச, மர இலை கொட்டின. வெளிப்ராகாரம் இலைக் குப்பையால் நிறைந்தது. ப்ராகாரக் கடைசியில் திரும்பின போது அவனைப்பார்த்தார்.
அழுக்கு துண்டுடன், முழங்கால் வரை கட்டின வேஷ்டி. அதுவும் அழுக்குதான். முகம், வாய் மறைத்த மேல் துணி. கண்கள் இடுங்கி ஆனால் கூர்ப்பார்வை. தூசுக்காய் கைகளால் மறைத்த படி “ஓய் மணவாள பட்டரே!”
பட்டர் நின்றார்.
“ஆரு நீங்க?”
”விஜாரிப்பு இருக்கட்டும் ஓய்! என்ன கோவில வெச்சுண்டிருக்கீர்? இவ்ளோ குப்பை! மூச்சுத்திணர்றது எனக்கு! உள்ளேயே அப்படீன்ன , வெளில சேவிக்க வரவாளுக்கு எப்படி இருக்கும்!”
”நாளைக்கு ரண்டு தரம் பெருக்குவா. ஆனா போறலை!”
”அது சரி, நீர் என்ன பண்றீர்? ப்ரசாதம் சாதிச்ச உடனே வீட்டுக்குப்போய்டறீர்?”
”நானா?”
”ஆமா, நீரேதான்! வேதம் சொல்றது வாய்தானே! கை என்ன பண்றது?”
”என்ன பண்ணனும்?”
”என்னது பண்ணனுமா? பெருக்கும் ஓய்! ரெண்டு தலைமுறையாய் பெருக்கும்! ஜென்மாந்தரக்கடன் கழிய வாண்டாமா?”
கிழம் மெதுவாக நடக்க ஆரமித்தது. மணவாள பட்டருக்கு கொஞ்சம் ப்ரமிப்பு, கோபம், ஆதங்கம், கொஞ்சம் வியப்பு!
கிழம் அழுக்குத்துண்டால் இன்னும் வாயைப்பொத்தியபடி சன்னதி இருக்கும் திருப்பத்தில் சற்றே நின்றது.
“என்ன ஸ்தம்பிச்சு நிற்கிறீர்? இன்னும் ரண்டு தலைமுறை பெருக்கணும், சரியா? வெறும “என்ன வேணாப்பண்றேன்”னு வாக்கு குடுத்தீரே! காப்பாத்த வேணாமா?”
சன்னதித் திருப்பத்தில் திரும்பி மறைந்தது.
மணவாள பட்டருக்கு சம்மட்டி அடி விழுந்தாற்போல் உதறிப்போட்டது.
”ரங்கா” என்று கத்திக்கொண்டே சன்னதிக்கு ஓடி வந்தார்.
“பட்டரே என்ன ஆச்சு? கொழந்தைக்கு மறுபடி ஏதானுமா?”
பேச்சின்றி விடு விடுவிடுவெனக் கர்ப்பக்கிருகத்துக்கு அருகில் போனார். அனந்த சயன ஸ்ரீரங்கன் ராயசமாக வைரக்கண்களால் எப்போதும் போல சலனமற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, ஈசானிய மூலையில் சுருட்டிக்கிடந்தது ஒரு அழுக்குத்துண்டு!
“செய்யறேன் ரங்கா, செய்யறேன்” அரற்றினார்.
பொழுது சாயும்போது மனைவி சகிதம் கோவிலுக்கு வந்தார். சன்னதிக்கெல்லாம் போகவே இல்லை. யார் சொல்லியும் கேட்கவில்லை. துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வெளிவாசலில் கூட்ட ஆரம்பித்தார். கூடவே மனைவியும்.
”பட்டரே! என்ன காரியம் பண்றீர்? வேதஞ்சொல்ற வாய், ரங்கனுக்கு மாலை போடற கைங்காணும் இது! இதால துடப்பத்தை வெச்சிண்டு..? என்ன ஆச்சு உமக்கு?”
“போறுஞ்சாமி! ஒரு நாள் பண்ணிட்டீங்க! இனிமே எங்க வேல இது! எங்க வர்ணமே இதுக்குத்தானே சாமி!
உசிர் போகிற வரைக்கும் வாயில் திருவாய்மொழி, கையில் துடைப்பமாகவே காலத்தை ஓட்டினார்.
”வீர நாராயணா! இதுதான் உனக்கு வேலை!”
”சரிப்பா!”
“வீராணத்துக்கு பாட்டு சொல்லித்தரப்டாதா? அவன் வெறும குப்பைய பெருக்கிண்டே காலம் போய்டப்போறது!”
“அப்படித்தாண்டி போகணும்! அவனுக்கும் சரி அவனோட அடுத்த வாரிசுக்கும் சரி, இதான் வேல!”
”ஆரும் மதிக்க மாட்டான்னா1 உங்க காலம் வரைக்கும் பரவால்ல. அப்புறம் குப்பை பெருக்கியா போய்டுமே நம்ம சந்ததி!”
”அதாண்டி நாம! அவனே சொல்லிக் காண்பிச்சுட்டான்!”
1310-11இல் மாலிக் காஃபூர் படையெடுத்து வந்து கோவிலில் அழிச்சாட்டியம் பண்ணி ரங்கநாதர் சிலையை டெல்லிக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டான். வெகு அதிசயமாக ஒரு பக்தர் குழாம் டெல்லி வரை போய் தங்கள் வித்வத்தைக்காட்டி டெல்லி பாதுஷாவைக்குளிர வைத்து , என்ன பரிசு வேண்டும் என்று கேட்கப்போய், ரங்கநாதரைக்கேட்டு வாங்கி வந்து விட்டனர்.
வீரநாராயணன் படிப்பின்றி கோவில் பெருக்குவதையே தொழிலாக்கிக்கொண்டான். அவன் பிள்ளையும் அப்படித்தான் செய்யவேண்டும் என்று மனவாள பட்டர் பிள்ளையிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டுதான் செத்துப்போனார். ஒரு மாதிரி வீராணனுக்கு இந்த வேலை பிடித்துப்போய் விட்டது. காலை சுருக்க எழுந்து குளித்து ” வன்பெரு வானகம் உய்ய“ சொல்லி – அது ஒன்றுதான் அவனுக்கு நெட்ரு ஆகியிருந்தது – அப்படியே கோவிலுக்குப்போய் பெருக்குவான். நாளாக நாளாக சுற்று வட்டாரத்துக்கு மணவாள பட்டரின் பெருமைகள் மறந்து போய் வீராணனே அடையாளமாகிப்போனான். ஆனால் மணவாள பட்டரின் குடும்பத்துக்கு மதிப்புக்குறையா வண்ணம் எல்லோரும் அவனை நடத்துவது அவனுக்கு உவப்பாகவே இருந்தது. பெருக்கும் வேலை அவனுக்கு எந்தவித சிறுமையையும் தரவில்லை. சுகமான ஒரு தொழிலாக தினப்படி வாழ்க்கையைக் கரைக்க ஆரமித்தான்.
அவனுடைய திருமணத்தில்தான் கொஞ்சம் கிட்டி முட்டியது.
“வீராணனுக்கா? நம்ம கோதையை கொடுக்கறதா? வேண்டாம்னா! அவன் வேல…….”
“என்னடி வேல? மணவாள பட்டர் கடவுள் சங்கல்பத்துல எடுத்துண்ட வேலடி அது! ரங்கனே அவனுக்கு ஆணை குடுத்ததா சொல்றா?”
“ என்ன இருந்தாலும் குப்பை பெருக்கற….”
”இதப்பார்! இனிமே அப்படிச்சொல்லாத! நானும் அவனும் ரெண்டு பேருமே ரங்கனுக்கு சேவை செய்யறோம் அவ்ளவுதான்!”
கோதைக்கு எந்த குறையும் வைக்கவில்லை வீராணன். அப்பா வைத்துவிட்டுப்போன ரெண்டு கட்டு வீடு. நாள்தோறும் கோவில் ப்ரசாதம். முதல்லில் அவளுக்கு கொடுத்துவிட்டுத்தான் இவனே சாப்பிடுவான். மாலைகளில் வேலை முடிந்து வீடு வந்து திண்ணையில் அவளோடு சிரித்துப்பேசுவான். வாசலுக்கே வராத பெண்கள் காலத்தில் இந்த முற்போக்கு கோதைக்கு ஊரில் தனி மரியாதையைகொடுத்தது. அவ்வப்போது அலுத்துக்கொள்வாள்.
“வேதம் படிக்கப்டாதான்னா? கனம் சொல்லி நெஞ்சு நிமிர்த்தி தெருவுல போலமோன்னோ?”
”இப்ப மட்டும் என்னடி? நான் எங்க குப்பை பெருக்கறேன்! ரங்கனுக்குடி! நம்ம குல தெய்வத்துக்கு!”
நாதமுனி பிறந்த போதும் பிடிவாத மாக இதுதான் வேலை என்று ஸ்தபித்துவிட்டான்.
”அப்பாகிட்ட வாக்கு குடுத்துட்டேன்! அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்”
குழந்தை நாதமுனியை எல்லொருக்கும் பிடித்தது. அவன் அப்பா சொல்லும் வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய, மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய..மழலைக்குரலில் வசீகரிக்கும். சின்னத் துடப்பத்தை வைத்துக்கொண்டு பாடிக்கொண்டே பெருக்குவான். தாண்டிப்போகும் பெண்கள் அவனைத் தொடாமல் நெட்டி முறித்து திருஷ்டி கழித்து விட்டுப்போவார்கள். போக வர தேங்காய், பழம் என்று ப்ராசதக்குணுக்குகள் வேறு அவனுக்கு!
“நாத முனி! இஞ்ச வாயேன்! கொஞ்சம் சன்னதிக்கிப்போய் மாமாட்ட இதக்குடுத்துடேன்”
ஓடுவான்.
”குழந்த! எனக்கு நடக்க முடியலைடா! செத்த கிணத்துலேர்ந்து இந்த போசில தேர்த்தம் எடுத்துண்டு வரயா?”
”இதோ வரேன் பாட்டி!”
”ஐயோ! கிருஷ்ணனேதான்! கண்ணா கண்ணா!”
ஸ்ரீஜெயந்தி அன்று யாரோ பக்தர் கொடுத்த வெண்ணைக்கட்டியை வாய் கொள்ளாமல் முழுங்கித்தின்று கொண்டிருந்த நாதமுனி கொஞ்சப்பட்டான்.
“கோதை! கொழந்தைக்கு சுத்திப்போடுடி! எங்கண்ணே பட்டுடப்போறது!”
சில காலமே டெல்லியில் வசித்த ரங்கநாதரின் சிலையின் மேல் மாறாத காதலும் பக்தியும் கொண்டு பக்தர்களுடன் அவர் ஸ்ரீரங்கம் திரும்பியபோது கூடவே வந்துவிட்டாள் பாதுஷாவின் மகளான சுரதாணி. இன்னொரு ஆண்டாளாய் ஸ்ரீரங்கத்தில் மறைந்து விட்ட இந்த துலுக்க நாச்சியாருக்கும் ரங்கநாதருக்கும் இன்றளவில் கல்யாணோத்சவம் நடக்கிறது.
”இந்துக்கள் என் பரம வைரிகள். என் பெண்னைக்கொன்ற மாபாவிகள். விட மாட்டேன்!”
”பாதுஷா! ஸ்ரீரங்கமா? இன்னும் செல்வம் அங்கே யே இருக்கிறதாமே?”
”ஆமாம் உலுக் கான்! என்னால் அத்தனை தூரம் இனி குதிரையில் பயணிக்க முடியாது. ஆனாலும் எனக்கு சுரதாணியின் முகம் கண்களை விட்டு அகலவில்லை.”
”எல்லாம் அந்த சிலையினால் வந்த வினை!”
”உலுக்! நீ போ! மாபெரும் படையுடன் போ! அங்கே ஒரு இந்து உயிருடன் இருக்கக்கூடாது. கொண்டா அந்தச்சிலையை! நானே என் கையால் உருக்குகிறேன் அந்த கடவுளை!”
பத்து மாதம் கழிந்த 1323ஆம் ஆண்டு மேக மூட்டம் நிறைந்த ஒரு காலை
”என்னடி பண்றது? தல சுத்தறதா?”
”ஆமாம்னா! என்னமோ பயமா இருக்கு! நீங்க இன்னிக்கு கோவிலுக்குப்போகவேண்டாமே! நாதமுனி போய்ட்டு வரட்டம்!”
”குழந்த! அம்மாக்கு இன்னிக்கு உடம்பு சரியில்ல. நா தொணையா இருக்கேன். நீ போய் கோவில் பெருக்கிட்டு ப்ரசாதம் வாங்கிண்டு வரயா?”
”சரிப்பா!”
சூரியன் மேலெழுந்து விட்டான். புழுதி அடங்கின மதியம். பூஜைகள் முடியும் நேரம். எல்லோருக்கும் வயிற்றில் பசி அமிலம்.
சன்னமாகத்தான் அந்த சத்தம் கேட்டது. ”தப் தப்”பென்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, கோவிலில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
பச்சை வாசனை, இல்லை நாற்றம். குப்பென்ற மூச்சடைக்கும் புழுதி கிளம்பின வாசம். இப்போது ”தப் தப்” இன்னும் அருகாமையில். குளறின மாதிரி மனுஷக்குரல்கள். ”ணங் ணங்” என்னும் உலோக ஒலி. குதிரைச்சாண வேகம் மூக்கில். கனைப்பு சத்தம் குழப்படியாக. தெருக்களில் பரபரப்பு. பதட்டம்
”மறுபடி வந்துட்டா! மறுபடி வந்துட்டா! ரங்கா! காப்பாத்து!”
கூக்குரல்கள்.
முதலில் பத்துக் குதிரைகள் மின்னல் வேகத்தில் நுழைந்தன. புழுதி பறந்தது. முகந்தெரியா மனித ராட்சர்களின் ”கொல்லு கொல்லு”. பின்னாலேயே இன்னும் இன்னும் குதிரைகள். இன்னும் இன்னும் ”கொல்லு கொல்லு”. வாளும் ஈட்டியும் சுழற்றும் காற்றின் ”விஷ் விஷ்” மனிதக்குரல் ஓலங்கள். பெண்ணின் அலறல். கிழவனின் முனகல். கைக்குழந்தையின் வீறல்.
உலுக்கானின் இரண்டாவது வெற்றிகரமான ஸ்ரீரங்கத்துப்படையெடுப்பு ஆரம்பித்து விட்டது.
உலுக்கானின் படையெடுப்பிலிருந்து கறுத்த மேனி கொண்ட அரங்கனை சுவரை எழுப்பி மறைத்துக்காத்த வேதாந்த தேசிகரின் இணையில்லாத செயலும், அழகிய மணவாளரைக்காப்பாற்ற பிள்ளை லோகாச்சர் பட்ட பாடும், அந்த வெங்கலச்சிலயைத் தூக்கிகொண்டு காவிரியைக்கடந்து ஓடிய பிள்ளை லோகாச்சரியாரும் அழியாச்சரித்திரத்தில் இடம் பெற்றனர் .
பன்னிரெண்டாயிரம் பேருக்கு மேல் கொன்று குவிக்கப்பட்டு மதில் சுவர்களிலும் தரையிலுமாய் உடல்கள் தாறுமாறாய் வீசப்பட்டு ரத்தமும் வலியும் அரற்றலும் முனகலுமாய்க்கடந்த தினத்தில் அந்த உடல் குப்பல்களுக்கு நடுவில் கழுத்து துண்டிக்கப்பட்டு, ஆனால் கையில் இன்னும் ஏந்திய தாமரை இலையில் அக்காரவடிசில் நெய்யும் ரத்தமுமாய் ஒழுகின பாலகன் கடைசியாக முணு முணுத்த….
துன்பமிகு துயர் அகல அயர்வு ஒன்றில்லாச்
சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ……..
சரித்திரமாம் சரித்திரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.