கீழடி ஸ்பெஷல் : ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியம்

சென்னைக்கு மிக அருகில் ஆதி மனிதர்கள் வாழ உகந்த இடங்கள் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் குடியம் குகைகள். இங்கிருந்து சுமார் அறுபது கி.மீ. தூரத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.
ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியம்
ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியம்


சென்னைக்கு மிக அருகில் ஆதி மனிதர்கள் வாழ உகந்த இடங்கள் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் குடியம் குகைகள். இங்கிருந்து சுமார் அறுபது கி.மீ. தூரத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.

குடியம் குகை (Gudiyam caves)
1863-1866  ஆண்டுகளில் குடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர்.

குடியம் குகை பூண்டிக்கு மேற்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. புவியியல் அமைப்பின்படி, குடியம் குகையில் உள்ள பாறைகள் உருவாகி சுமார் 13 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று, இந்திய புவியியல் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்பட்ட படிவங்கள் இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன.

இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை “மண்ணச்சம்மன்“ குகை எனப்படும். இது சுமார் 100 அடி உயரமுடையதாகும். இக்குகை சுமார் 100 பேர் தங்கக் கூடிய அளவு பரப்பளவினை உடையதாக காணப்படுகின்றது. இப்போதும் இப்பகுதி கிராம மக்கள் பௌர்ணமி நாளில் இங்குள்ள மண்ணச்சம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

பழங்கற்கால மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக அமைந்துள்ள குகைகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறப்பான சான்றாகும். இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. அச்சூலியன் காலத்திற்குப் பிந்தைய (இடைப் பழங்கற்காலம்) காலக் கருவிகள் நுண்கருவி தொழிற்கூடமாக மாறுவதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

1962 முதல் 1964 வரை,  மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர்.டி.பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன. அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, ‘இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்’ என்பதை உறுதி செய்தது மத்தியத் தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் ‘சென்னைக் கோடரிகள்’ (Madras Ox) என்று வகைப்படுத்தப்பட்டன.

சாந்திபப்பு குடியம் குகையின் அருகில் உள்ள அத்திரம்பாக்கம் என்ற ஆற்றுப்படுகையில் 2011இல் நடத்திய ஆய்வின்போது எடுக்கப்பட்ட கற்கள் பிரான்ஸ் நாட்டுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி செய்ததில், அந்தக் கற்கள் சுமார் 15 லட்ச ஆண்டுகள் பழமையானவை எனத் தெரிவித்தனர். இதை பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக அமெரிக்காவில் உள்ள அறிவியியல் இதழில்(science Magazine) பதிவு செய்தனர்.

தொல்பழங்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றதைத் தெளிவாக அறியமுடிகிறது. கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் ஆகியவை இங்கு கிடைத்துள்ளன.

ஆனால், குகையைக் கைவிட்டுவிட்டது மத்தியத் தொல்லியல் துறை. மாநில அரசும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் இருக்கும் 14 குகைகளைக் கண்டறிவதும் அவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதும் மனிதகுல வரலாற்றை அறியவும் மனிதன் தோன்றிய இடம் என்பதற்கான ஆதாரத்தை உறுதிப்படுத்தவும் இயலும்.

இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு அருகில், தலைநகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச் சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதோடு, வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய பணியை முன்னெடுக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் விருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com