Enable Javscript for better performance
கீழடி-கொடுமணல் தொடர்புகள்| keezhadi Special: Keezhadi - Kodumanal- Dinamani

சுடச்சுட

  

  கீழடி ஸ்பெஷல்:  கீழடி-கொடுமணல் தொடர்புகள்

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 14th November 2019 06:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  keezhadi

  கீழடி அகழ்வாராய்ச்சி

  கொடுமணல் (Kodumanal)
  கிமு 500 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள் கொடுமணலில் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். சேரநாட்டின் இந்த கிராமம் பெரும் வணிக நகரமாக இருந்ததை, முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ.இராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோர் கடந்த 1961ம் ஆண்டில் கண்டுபிடித்தனர்.

  அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. 1979-ல் தமிழக அரசின் தொல்லியல் துறை, மாதிரி அகழாய்வுக் குழியைக் கொடுமணலில் தோண்டியது. அதில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. பின்னர், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

  மேலும் படிக்க.. கீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம்  

  1997 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மீண்டும் அகழாய்வை இரு பருவங்களாக மேற்கொண்டது. இதற்காக 15 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் செலசனக்காடு, தோரணக்காடு என இரு இடங்களில் தோண்டிய குழிகளில் தொல்பொருட்கள், மட்கலங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட மண் அடுக்குகளின் அடிப்படையில் இரண்டு பண்பாட்டுக் காலங்களில் மக்கள் வாழ்ந்தது தெரியவந்தது.

  அமைவிடம்
  பண்டைய கொங்கு நாட்டில் இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இவ்வூர் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  ஊர்ச்சிறப்பு
  இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.

  “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
  பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” என, கபிலரும் கொடுமணம் பட்ட வினைமான்' என, அரிசில் கிழாரும் என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர். சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது.

  அகழாய்வுச் சிறப்பு
  மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation) மற்றும் ஈமக்குழி (Burial Complex) என இரண்டு வகையான இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்களாயினும் பெரிய கற்பலகைகள் மற்றும் பெரிய கற்களைப் பெருமளவில் பயன்படுத்தியமையால் இவர்களைத் தொல்லியலாளர்கள் பெருங்கற்படை (megalithic) பண்பாட்டுக்குரிய மக்கள் எனக் கருதுகின்றனர். இந்த அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse - stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன. 

  குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper) பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapius Lajuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது. 

  அக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் அவர்தம் நூலில் (warmington, E.H., The commerce between the Roman Empire and India, 1948) குறிப்பிட்டுள்ளவையாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடு கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது. 

  கருப்பு - சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானைகளில் பல்வேறு வகையான குறியீடுகள் (graffiti) காணப்படுகின்றன. இக்குறியீடுகள் எதற்காகப் பானைகளில் கீறப்பட்டன என்பதும், இக்குறியீடுகள் குழுக்குறியீடுகளா அல்லது எழுத்துகளின் தோற்ற நிலைகளின் முதல் கட்டமா? போன்றவை குறித்து ஆய்வாளர்களிடையே இன்று வரை விவாதங்கள் தொடர்கின்றன. மேற்சுட்டிய கருப்பு-சிவப்பு, கருப்பு நிற மற்றும் வண்ணப்பூச்சு (russet quated) கொண்ட மண்கலங்கலில் எழுத்துப் ( தமிழ் பிராமி/தமிழி/ தமிழ்) பொறிப்புகள் காணப்படுகின்றன. இது கொடுமணல் அகழாய்வுச் சிறப்புகளில் ஒன்றாகும். 

  அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட மண்கலச் சில்லுகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மண்கலச் சில்லுகளில் பழம் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது பெருமைக்குரியதாகும். 

  அணிகலன்கள்
   24 காரட் மற்றும் 22 காரட் மதிப்புடனான பொன் ஆபரணங்கள், வெள்ளி மோதிரங்கள், ஈயத்தாலான வளையல்கள், வளையங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் (காட்டாக: அரிய கற்கள் பதிக்கப்பட்ட வெண்கலத்தாலான புலி), விளையாட்டுப் பொருள்கள், மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் ஈமக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள், உலைகள் (furnace), மரக்குச்சிகள் பூமியில் நடப்பட்டதற்கான அடையாளங்கள் என அக்காலப் பண்பாட்டு நாகரிகம் சார்ந்த எச்சங்கள் கொடுமணல் அகழாய்வில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

  நகரம் மற்றும் தொழிற்சாலை
  இரும்பு ஆலை செயல்பட்டு வந்ததும், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வில் 50 ஹெக்டேர் பரப்பளவில் நகரமும் 10 ஹெக்டேர் பரப்பளவில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் பெங்களுருவை சேர்ந்த இந்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழ்வாராட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் இதுவரை 38 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.

  கரூர் மற்றும் முசிறி தொடர்புகள்
  கொடுமணல் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், மேலை கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்து இருந்தது. 50 ஏக்கர் பரப்பில் ஒன்பது அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில், ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர், ராஜன் தலைமையில், செல்வகுமார், ரமேஷ், பாலமுருகன், பால்துரை, யதீஷ்குமார் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த இரண்டு மாதங்களாக, அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டும், இதே போன்ற அகழாய்வில் ஈடுபட்ட போது, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகப் பெரிய வணிக நகரம் இப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த நகரம் இருந்த கால கட்டத்தை, அமெரிக்காவில் உள்ள, காலக்கணிப்பு ஆய்வுக்கூடம், அங்கு கிடைத்த ஆதாரங்களின் பரிசோதனைக்கு பிறகு, உறுதி செய்தது. 

  இந்த இடம் நகை தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட நகைகளை பெறுவதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வணிகர்கள் வந்துள்ளனர்.

  இந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபார தளமாக விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், இவ்வூர், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கிறது. 

  எழுத்தறிவு
  மண்கலங்களில் காணப்படும் பெயர்கள் பல ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன் அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், சந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன. 

  கீழடி மற்றும் கொடுமணல் நகரங்களில் கிடைத்த பொருள்கள் காலம் ஒப்பிடும் நிலையில் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுத்து ஒப்பீட்டு அறிக்கை வெளியிட்டால் வரலாற்றை மாற்ற முடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai