கீழடி ஸ்பெஷல்: சிவகங்கை மாவட்டம் கீழடி அறிமுகம்!

அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன்.
கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொழில்கூடச் சுவர்.
கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொழில்கூடச் சுவர்.

தமிழ்ப் பாரம்பரியம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே  ஆற்றிய உரையில், "இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை.

அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்" என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார். அந்த பாரம்பரியங்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகின்றன.

கீழடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இதற்குப் பிறகு சமீபகாலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கை இன்னும் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.

கீழடி திட்ட  இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று "இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது" என்று வெற்றிக்கு வழிகாட்டியவர். 

அறிமுகம் அமைவிடம்
கீழடி நிலவியலமைப்பில் 9°51´ 18.385´´ வடக்கு அட்சரேகையிலும் 78°11´45.132´´ கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள தென்னந்தோப்பிற்குள் 100 ஏக்கருக்கு மேற்பட்ட விரிந்த பரப்பில் பண்டைய குடியிருப்பு புதையுண்ட மேட்டுப்பகுதி ஒன்று காணப்படுகிறது. தமிழகத்தில் கோயில் நகரம் என்றழைக்கப்படும் மதுரையிலிருந்து கிழக்கு - தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரின் வடதிசையில் 2 கி.மீ தொலைவில் வைகை நதி அமையப்பெற்றுள்ளது. இவ்வூரின் கிழக்கே மணலூர் என்கிற ஊரும் அவ்வூரின் கண்மாய் வடகிழக்கெல்லையாகவும், தென்கிழக்கெல்லையாக அகரம் என்கிற ஊரும், மேற்கே கொந்தகை எனும் அவ்வூரின் கண்மாயும் மேற்குப்புற எல்லையாக அமைந்துள்ளன. 

இந்த பண்பாட்டு மேட்டினைச் சுற்றி இயற்கையாக அமையப்பெற்றுள்ள ஊர்களும், நீர் வளம் பெறும் கண்மாய்களும் எழில்மிகு எல்லைகளாக அமையப்பெற்றுள்ளமை பண்டைய ஊர் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களாக கருதலாம்.

இதற்கு முன்னர், இப்பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரூ அகழாய்வுப் பிரிவு 2014-2015, 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதன்தொடர்ச்சியாக, இப்பகுதியில் மறைந்திருந்த அரும்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை வெளிக்கொணரும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது மத்திய ஆலோசனைக் குழுவிடம் அனுமதி பெற்று அகழாய்வுப் பணிகளை 2017-2018 –ஆம் ஆண்டு அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், அகழாய்வுப் பணியானது அகழாய்வு இயக்குநர், தொல்லியல் அலுவலர்கள், காப்பாட்சியர்கள், கல்வெட்டாய்வாளர்கள், தொழில்நுட்ப அலுவலர், இரசாயனர், வரைபட வரைவாளர் மற்றும் இதர அலுவலர்களைக்கொண்ட குழுவினரால் தமிழக அரசு தொல்லியல் துறையின் முதற்கட்ட அகழாய்வினை தொடங்க நிலவரையறை செய்து பணி தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க: கீழடி ஸ்பெஷல்: வைகை ஆறும், மதுரையின் தொன்மையும்!

2017-2018ஆம் ஆண்டு முதல் பருவத்தில் அகழாய்வுப் பணியினை செய்திட 11 அகழாய்வுப் பகுதிகளை (குழிகள்) நில அளவு வரையறை செய்யப்பெற்று, இவற்றில் 7 அகழாய்வுக் குழிகள் (Trenches) ஓரிடத்திலும் மற்ற 4 அகழாய்வுக் குழிகள் வேறொரு இடத்திலும் அமைக்கப்பட்டன. அகழாய்வினை ஆழமாகவும் பக்கவாட்டிலும் குறுக்காகவும் அகழ்ந்து எடுக்கப்படும் கட்டடப்பகுதியின் நீட்சியினை அறியும் வண்ணம் ஒவ்வொரு அகழாய்வுப் பகுதியும் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அகழாய்வுப் பகுதிகளுக்கிடையே (மேல், கீழ் மற்றும் பக்கவாட்டம்) ஒரு மீட்டர் அகலம் கொண்ட பாதை அமைக்கப்பட்டன. அதேப்போன்று, ஒவ்வாரு அகழாய்வுப் பகுதியின் நடுவில் குறுக்கு நெடுக்காக 50 செ.மீ. அகலம் கொண்ட நடைபாதை விடப்பட்டு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டன.

முதலாவது இடஅமைவில் அமைக்கப்பட்ட அகழாய்வுப் பகுதிகள்(குழி) X--அச்சில் A1, A2, A3, A4, A5, A6, A7 என்று எண்ணிடப்பட்டன. அதேப்போன்று இரண்டாவது இடஅமைவில் Y அச்சின் கிழக்கே YP10, YP9, YP8, YP7என்று எண்ணிடப்பட்டன. X-அச்சின் தென்மேற்குப் பகுதியின் இறுதியில் உள்ள அகழாய்வுப் பகுதிக்கு XA7என்று எண் அளிக்கப்பட்டது.

அகழாய்வுப் பணியினை அகழாய்வு இயக்குநர் முனைவர் இரா.சிவானந்தம், அகழாய்வாளர்கள், பயிற்சிபெற்ற மேற்பார்வையாளர்கள் ஆகியோர் துவக்கினர். அகழாய்வில் ஒவ்வொரு நிலை ஆழத்திற்கு செல்லும்போது துல்லியமாக கூர்ந்துநோக்கி வெளிப்படும் தொல்பொருட்கள், பானைஓடுகள், பொதிந்த பொருட்கள், மண்ணடுக்குகள், மண்ணின் நிறம், அமைப்பு, மிருது மற்றும் கடினத் தன்மை குறித்தும் கவனத்துடன் குறிப்பெடுக்க அறிவுறுத்தப்பட்டன. அகழாய்வு மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழாய்வுப் பணியானது முறையாகவும், அறிவியல் அடிப்படையில் சீராகவும் நடைபெறுவதற்கு தொடக்க நிலையில் தினக்கூலி அடிப்படையில் உள்ளூர் மக்கள் 170 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

இவ்விதம் தொடங்கப்பட்ட பணியில் சில அகழாய்வுக் குழிகளில் கட்டுமானப் பொருட்களும், சில குழிகளின் மண் அடுக்குகளில் இடையூறாக கருதப்பெறும் பள்ளங்களும் குவியல்களும் கண்டறியப்பட்டன. ஏனையவற்றில் எவ்வித இடர்பாடுகள் இன்றி வெவ்வேறு மண் அடுக்குகளை ஒன்றன்கீழ் ஒன்றாக அமையப்பெற்று பல கால நிலைகளையுடைய பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைக்கின்ற வண்ணம் உள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுக் கூறுகளை நேர்த்தியான முறையில் விளக்கும் வகையில், ஒவ்வொரு அகழாய்வுக் குழிகளிலும் வெளிப்பட்ட மற்றும் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களை காலக் கணிப்போடு பின்வருமாறு விளக்கப்படுகிறது.

தொடரும்……
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com