கீழடி ஸ்பெஷல்: வைகை ஆறும், மதுரையின் தொன்மையும்!

தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் த. உதயச்சந்திரன், அவர்களின் சீரிய முயற்சியில் வெளிவந்துள்ளது கீழடி அகழாய்வறிக்கை.
கீழடி அகழாய்வில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட தானியம் சேகரிக்கும் மண்பானை.
கீழடி அகழாய்வில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட தானியம் சேகரிக்கும் மண்பானை.

தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் த. உதயச்சந்திரன், அவர்களின் சீரிய முயற்சியில் வெளிவந்துள்ளது கீழடி அகழாய்வறிக்கை.

அதைப்பற்றிப் பார்ப்போம்,

மும்பையிலுள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம். அண்ணா பல்கலைகழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு துறை போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தரை ஊடுருவல் தொலையுணர்வி மதிப்பாய்வு (Ground Penetrating Radar), காந்த அளவி மதிப்பாய்வு (Magnetometer Survey), ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு (Unmanned Aerial Vehicle  Survey)போன்ற பல்வகையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலம் தொல்லியல் இடத்தை அடையாளம் காண்பது மற்றும் முறையான தொல்லியல் தளங்கள் மற்றும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வது என சீரிய நடவடிக்கைகளில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களில் தொல்லியல் சான்றுகளைக் கொண்டும், கள ஆய்வுகள் செய்தும் அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்துறையானது 40 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டு பழைமையான பல்வேறு காலகட்டங்களின் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வகையில் பரிக்குளம், திருத்தங்கல், மாங்குடி, மோதூர், கோவலன்பொட்டல், ஆனைமலை, பல்லவமேடு, போளுவாம்பட்டி, பேரூர், பனையகுளம், குரும்பன்மேடு, கண்ணணூர், திருக்கோவிலூர், வசவசமுத்திரம், பூம்புகார், தொண்டி, கொற்கை, அழகன்குளம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்றுத் தொன்மைமிக்க இடங்களில் அகழாய்வுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகழாய்வுகள் வாயிலாக, பண்டையத் தலைநகரங்கள், வணிக மையங்கள் போன்றவை அக்காலத்தில் உரோமாபுரி மற்றும் பிற நாடுகளுடனும், இந்தியாவின் பிறபகுதிகளுடனும் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 

வைகை ஆறு (Vaigai River)
 


வைகை ஆறும் அதனின் கிளை ஆறான சுருளி ஆறும் சுருளி மலையில் இருந்து வளைந்து நெளிந்து சின்னமனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடி, இடைக்கால நகரங்களான திருப்புவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி ஆகிய ஊர்களைக் கடந்து பின்னர் இராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம் பெரும் கண்மாய்களை நிரப்பி இறுதியில் அழகன்குளம் அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது. இப்பகுதியானது, தென்மேற்கு பருவ மழையாலும், வடகிழக்கு பருவ கனமழையாலும் நீர்வளம் பெற்று இரு போக விளைச்சல்களையும், வாழை, கமுகு போன்ற சமவெளிப்பகுதி பயிர்களையும், மலைச்சரிவுகளில் ஏலக்காய் போன்ற பயிர்களையும் அளித்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருகிறது. வைகை சமவெளியின் தலைப்பகுதி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் நறுமணப்பொருட்களை கிழக்குப் பகுதியிலுள்ள நகரங்களுக்குகொண்டு செல்லும் ஒரு வணிகப்பெருவழியாக திகழ்ந்திருக்கின்றது. சங்க இலக்கிய நூல் தொகுப்புகளில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எட்டு செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. அதுபோன்று மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கிய நூலும் மதுரை நகரத்தின் மேன்மையினை விரித்துரைக்கிறது.

மதுரையின் தொன்மை வரலாறு (Early History of Madurai)
இந்தியாவிலுள்ள பழம்பெரும் நகரங்களுள் ஒன்று மதுரை. இந்நகரம் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தொடரும் பெருமை கொண்டது. பழம்பெரும் பண்பாட்டு மேன்மையினால் மதுரை நகரம் ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று போற்றப்படுகிறது. மிக நெடுங்காலமாக இந்நகரம் கல்வி வளர்க்கும் பெரும் மையமாக விளங்கி வந்தது யாவரும் நன்கு அறிந்ததே. சங்க இலக்கியத்தில் கூறப்படும் சங்கம் இங்கு தான் அமைக்கப்பட்டிருந்தது. போற்றத் தக்கவகையில் ஆட்சி செய்த தொன்மைக்குமிகு பாண்டியர் ஆட்சிக்காலத்தில் மதுரை மாநகரம் அயல்நாடுகளுடன் வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை பெற்றிருந்தது.
 

பண்டைய கிரேக்க ரோமானியர்கள் பாண்டிய மன்னர்களையும் அவர்களின் பாண்டியர் தலைநகரான மதுரை பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். கி.மு. 320-இல் ஆட்சிசெய்த சந்திரகுப்த மௌரியர் அரசவையில் கிரேக்க நாட்டு மன்னன் செலுக்கஸ் நிகேதர் அவையில் அரசு தூதுவராக இடம்பெற்றிருந்தவர் மெகஸ்தனீஸ். இவர் தென்னகத்தில் நிலைபெற்றிருந்த அரசுகள் பற்றி மிகவிரிவாக தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.

ஸ்டிரோபா எனும் ரோமானிய பயணி தன் நூற்குறிப்பில் ரோமாபுரியில் அகஸ்டஸ் பேரரசுக்கு பாண்டிய மன்னன் தூதுவர் ஒருவரை அனுப்பிய செய்தியினை குறிப்பிடுகிறார். இதே போன்று பிளினி (கி.பி. 75) பாண்டி மன்னன் மற்றும் பாண்டியரின் தலைநகர் மதுரைக் குறித்து குறிப்பெழுதியுள்ளார். மேலும், கி.பி. 130-ஆம் ஆண்டில் தாலமி என்பவரும் மதுரையை பாண்டியர்களின் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவில் நிலவிய வணிக பரிமாற்றம் பற்றி கூறுகையில் பாண்டிய நாட்டில் விளையும் நன்முத்துகள் குறித்தும், மஸ்லின் என்றழைக்கப்படும் ஆடை குறித்தும் எழுதியுள்ளார். இதுபோலவே, வானவியல் அறிஞர் வராகமிகிரர் தனது பிருகத்சம்கிதையில் பாண்டிய அரசை பற்றி கூறியுள்ளார். புகழ்பெற்ற வடமொழி கவிஞர் காளிதாசர் தன் காப்பியத்தில் மன்னன் ரகுவால் ஆட்சி செய்யப்பட்ட ஒரு பகுதியாக பாண்டிய அரசு விளங்கிற்று என்று குறிப்பிட்டுள்ளார்.

அசோகரின் 2 மற்றும் 13-ஆம் பாறைக் கல்வெட்டுகள் தென்னகத்தில் சோழ, பாண்டிய, சத்யபுத்ர மற்றும் கேரளபுத்ர அரசுகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றன. இதே கால கட்டத்தைச் சார்ந்த மதுரைப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ள தமிழிக் கல்வெட்டுகளில் மதுரை மற்றும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.

மதுரையில் சமணம்


கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளை தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக்குகை பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி.300 வரையிலான எழுத்தமைதியில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவைகளுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக்கொண்டு திகழும் மாங்குளம் ஆகும். தொல்லியல் கள ஆய்வுகள் மதுரைக்கு வடக்கே சில கற்கால கற்கருவிகளும், 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஆவியூர் என்ற ஊரில் பழங்கற்காலக்கருவி ஒன்றும் இராபர்ட் புரூஸ்புட் அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக முனைவர் கே.வி. ராமன் பணியாற்றிய போது 1950களின் பிற்பகுதியில் மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய வட்டங்களில் கிராமம் கிராமமாக கள ஆய்வுகள் மேற்கொண்டு பல தொல்லியல் இடங்களையும், தொன்மைச் சின்னங்களையும் கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டில் முனைவர் கே.இராஜன் மற்றும் அவரது மாணவர்கள் வைகைநதிப் படுகையின் மேற்பிடிப்புப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாதகப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை ஆகிய ஊர்களில் பொது ஆண்டின் தொடக்க நூற்றாண்டுகளைச் சேர்ந்த நடுகற்களை கண்டறிந்து வெளிக்கொணர்ந்தனர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வைகை நதிக்கரையில் 1987-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் உத்தமபாளையம் வட்டத்திலுள்ள எல்லப்பட்டி என்ற ஊரில் இரும்பு உருக்கும் தொழிற்கூடப் பகுதி வெளிக்கொணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் மத்திய தொல்லியல் துறையால் வைகை நதிக் கரையின் இருமருங்கிலும் உள்ள 293 ஊர்களில் களஆய்வு மேற்கொண்டு பெருங்கற்காலத்தாழிகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், நடுகற்கள், பண்டைய வாழ்விடப்பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு முறையாக ஆவணப்படுத்தப்பட்டன.

அண்மைக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஏற்கனவே கள ஆய்வு நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மறு ஆய்வுகளின் முடிவுகளை உள்ளடக்கிய இது, இதுவரை அறியப்படாத புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com