பெரியகுளம் டூ அறிவாலயம்! ஓபிஎஸ் கடந்துவந்த பாதை..
திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் பற்றி...

ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்
தமிழக அரசியலில், விசுவாசம்தான் எப்போதும் போற்றப்பட்டு வருகிறது. ஆனால், அத்தகைய விசுவாசம் நீண்ட காலத்துக்கு நீடிப்பதில்லை.
இதனால்தான், ஓ. பன்னீர்செல்வத்தின் திமுக வருகையானது குறிப்பிடத்தக்கதாய் உள்ளது. இவரின் அரசியல் வாழ்வு - எழுச்சி அல்லது வீழ்ச்சியான கதையாக மட்டுமின்றி, மாறாக சக்திவாய்ந்த ஓர் அரசியல் தலைவரின் சகாப்தம் முடிந்தால், நிகழ்த்தப்படும் நடைமுறை அரசியலையும் காட்டுகிறது.
நம்பகமான ஓர் அமைப்பில் (அதிமுக) ஓபிஎஸ் உயர்ந்தார். அதிமுகவில் நம்பகமானவராகவும், மரியாதைக்குரியவராகவும், நிச்சயமற்ற தருணங்களில்கூட பாதுகாப்புடனும் அவர் வலம் வந்தார். இதனை வைத்தே அவர் பலமுறை உச்சமும் சென்றிருக்கிறார்.
ஆனால், 2016-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது அரசியல் வாழ்வு தலைகீழாக மாறியது.
அரசியல் வாழ்வில், அவருக்கான நிலைத்தன்மையை வழங்கவில்லை. மாறாக - வேகம், உரிமை மற்றும் சொந்த அதிகார அமைப்பை உருவாக்கும் திறனைக் கோரியது. ஆனால், அங்குதான் ஓபிஎஸ் தடுமாறினார்.
அவரது வீழ்ச்சியை எளிதாக விவரிக்க வேண்டுமென்றால், அவர் முடிவெடுக்க முடியாதவராக இருந்தார் என்பதுதான். ஆனால், அதுதான் உண்மை. சாதகமான அரசியல் மாறும்வரையில் அவர் காத்திருப்பதுபோல் தோன்றியது.
சரியான தருணத்தில், அவரது விசுவாசம், அனுபவம், அவரின் நன்னடத்தை ஆகியவை இறுதியில் அவரை சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்று அவர் நம்பியதாகத் தெரிகிறது.
ஆனால், அரசியலில் காத்திருப்புக்கு வெகுமதி அளிக்கப்படுவதில்லை. அரசியலில் செயல்படுபவர்களுக்கு மட்டுமே வெகுமதி அளிக்கப்படுகிறது. இளம் அரசியல் தலைவர்களுக்கு, ஓபிஎஸின் காத்திருப்பு ஒரு மிகப்பெரிய பாடம்.
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு என்றிருக்கும் கனவுகளை, வெற்றிகளை தன்வசப்படுத்தியவர் ஓபிஎஸ். அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால், அரசியலில் மிகவும் அரிதான ஒரு குழப்பத்தில் இருந்தார். இவ்வாறான குழப்பங்கள்தான், பலவற்றைத் தீர்மானிக்கின்றன.
அரசியலில் கவனம், ஆதரவாளர்களைத் திரட்டுவது என்பது ஒருபுறம். ஆனால், அதன் பின்னர்தான் கடினமான பகுதி வருகிறது.
நீடிக்கக் கூடிய அரசியல் இயந்திரத்தை உருவாக்குவது, மாவட்ட வரியாக வலையமைப்பு, விசுவாசமான இரண்டாம்நிலைத் தலைவர்கள், தெளிவான புலன், தலைவர் தான் இறுதியான முடிவு என்ற ஆதரவாளர்கள் - இவைதான் கடினமான பகுதி. இதனிடையே, உண்மையான நல்லெண்ணம் மெலிந்து போகவும் கூடும்.
ஓபிஎஸ் அரசியலில் இது கண்கூடாய்த் தெரிந்தது. ஒரு வலுவான எழுச்சி, பின்னர் நிச்சயமற்ற தன்மை. சக்திவாய்ந்த அரசியல் சமிக்ஞை, பின்னர் சறுக்கல். மீண்டுமொரு அரசியல் புலன், பின்னர் தெளிவான ஒருங்கிணைப்பு இல்லை.
ஆதரவாளர்களாலும் பின்தொடர்பவர்களாலும் தோல்வியை மன்னிக்க முடியும். ஆனால், தெளிவின்மையை மன்னிக்க முடியாது. மக்களை அணிதிரளச் சொல்லும் ஒரு தலைவர், போராட்டத்தின் முழுச் சுமையையும் சுமக்கத் தயாராக இருப்பதைக் காட்ட வேண்டும்.
தலைவர் என்பவர் முன்கூட்டிய விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும்; களம் சென்ற பிறகு அல்ல. இதன் பொருள், சரியான காலம் வருமென்று காத்திராமல், ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதுவும் ஓபிஎஸின் ஒரு பிரச்னையாகும்.
ஓபிஎஸ் இரண்டு வேடங்களுக்குள் சிக்கிக் கொண்டவர்போலத் தோன்றினார். அவரால் இனி விசுவாசமான துணைத் தலைவராக (அதிமுக) இருக்கவும் முடியவில்லை; கட்டளையிடும் போட்டியாளராக முழுமையாக மாறவும் முடியவில்லை. இந்த இடைப்பட்ட நிலை, அரசியல் ரீதியாக ஆபத்தானதாக அமையலாம். இதுவே ஓபிஎஸின் அரசியல் வாழ்வில் நடந்துள்ளது.
ஒரு தலைவர் தெளிவான முடிவில் இல்லாதபோது, அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தொடங்குவார்கள்.
இதனால், லட்சியங்கள் மட்டும் கூர்மையாகி, அமைப்புகள் நிலையற்றவையாகின்றன. அமைப்பின் மோதல்கள், தார்மீக மோதல்களாக மாறுகின்றன. ஒவ்வொரு தலைவரும் தார்மீக ரீதியான மோதலுக்காக உருவாக்கப்படுவதில்லை. ஆனால், அதுதான் குறிக்கோளாக ஆகிறது.
ஒரு தலைமையின் உதவியின் மூலம் உயர்ந்து விடலாம் என்று எண்ணுகிற இளம் தலைவர்கள், அந்த தலைமை சென்ற பிறகு, நீங்கள் உயரவோ இருக்கவோ முடியாது என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய தமிழக அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
தமிழக அரசியலில் அதிகமான தலைவர்கள் மாற்றங்களைச் சந்திப்பார்கள். பெரும்பாலான கட்சிகள், வாரிசுரிமை மற்றும் சட்டப்பூர்வமான கட்டுப்பாடு போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும்.
மக்களின் ஆதரவும் அமைப்பின் நிர்வாக அதிகாரமும் ஒன்றல்ல என்பதை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் உணருவர்.
ஒரு தலைவரை, கண்ணியம் எவ்வளவு தொலைவுக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும், கண்ணியம் மட்டுமே போதுமானதா என்பதையும் ஓபிஎஸின் அரசியல் வாழ்வு காட்டுகிறது.
துரோகம் மற்றும் தோல்வியால் மட்டுமல்ல; தாமதத்தாலும் அரசியலில் மூலதனத்தை இழக்க நேரிடும்.
ஓபிஎஸின் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு லட்சிய அரசியல் தலைவரும் கவனிக்க வேண்டியது
நல்லெண்ணம் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது, உங்களின் அடையாளம் உங்களுக்கான தருணத்தை வழங்குகிறது.
ஆனால், உங்களின் செயல் மட்டுமே உங்களுக்கு எதிர்காலத்தைத் தரும்.
ஓபிஎஸ் கடந்துவந்த பாதை...
1973-இல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அதிமுகவில் அடிமட்டத் தொண்டராக தனது அரசியலைத் தொடங்கினார் ஓபிஎஸ்.
1996 முதல் 2001 இடையிலான காலகட்டத்தில் பெரியகுளம் நகரச் செயலாளர், தேனி மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளால் நம்பகமான தலைவராக பிம்பத்தை உருவாக்கினார்.
2001-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றதால், முதன்முறையாக ஓபிஎஸ் முதல்வரானார். ஜெயலலிதாவின் நம்பகமான பாதுகாவலராகவும் அறியப்பட்டார்.
2014-இல் ஜெயலலிதாவின் மீண்டும் சிறை சென்றதால், இரண்டாவது முறையாகவும் ஓபிஎஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
2016-இல் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு, மூன்றாவது முறையாக ஓபிஎஸ் முதல்வரானார். ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான் அரசியல் வாரிசுப் போர்.
2017-இல் ஓபிஎஸின் தர்ம யுத்தம், அவருக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், கட்சி இயந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் அளிக்கவில்லை.
2017 ஆகஸ்ட் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், துணை முதல்வராக ஓபிஎஸும் பதவியேற்றனர்.
2020 - 2022 இடையிலான காலகட்டம், அதிமுகவின் ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்ந்தது. இதனைத் தொடர்ந்துதான், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டமும் ஓபிஎஸ்ஸுக்கு பலனளிக்கவில்லை.
இங்கிருந்துதான், அவரது அரசியல் இருப்பு சுருங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியின்போது, அவரது ஆதரவாளர்கள் விலகிச் செல்லத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மூன்றுமுறை முதல்வராக பதவி வகித்த ஒருவர், வேறொரு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...