கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி ஒற்றுமை மற்றும் வெளியிடப்படாத ஆய்வறிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு.
கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி ஒற்றுமை மற்றும் வெளியிடப்படாத ஆய்வறிக்கை!

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் துவக்க காலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு. இந்த இடத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர் பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாகர். 1876ஆம் ஆண்டில் இந்த இடத்தை அவர் கண்டுபிடித்தார். இங்கு அவர் விரிவாக ஆய்வுகளை நடத்தினாலும் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறையின் தெற்கு வட்டத்தின் கண்காணிப்பாளராக இருந்த அலெக்ஸாண்டர் ரீ (Alexander rea )1903-04ஆம் ஆண்டுகளில் இங்கு ஒரு மிகப் பெரிய ஆகழாய்வை மேற்கொண்டார். அவர் தாமிரபரணிக் கரையை ஆராய்ந்து, அங்கு 38 ஆராயப்பட வேண்டிய இடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆதிச்சநல்லூர் மேடு சுமார் 60 ஏக்கர் பரப்புக்கு விரிந்து பரந்திருக்கிறது. இதன் மையத்தில் அலெக்ஸாண்டர் ரீ தனது அகழாய்வைத் துவங்கினார். இங்கு முதுமக்கள் புதைக்கப்பட்டிருக்கும் "பானைகள் ஒரு மீட்டர் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் ஆழத்தில்" புதைக்கப்பட்டிருப்பதாகவும் அப்படியான ஆயிரக்கணக்கான பானைகள் அப்பகுதியில் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆய்வில் எத்தனை பானைகள் எடுக்கப்பட்டன என்பதை அலெக்ஸாண்டர் ரீ தெரிவிக்கவில்லை. இந்த ஆய்வின்போது அலெக்ஸாண்டர் ரீக்கு இரும்புப் பொருட்கள், ஆயுதங்கள், விளக்குகள் ஆகியவை கிடைத்தன. வெண்கலத்தில் செய்யப்பட்ட பல வடிவங்கள், பல அளவுகளிலான கிண்ணங்களும் இங்கே கிடைத்தன. சுடுமண் காதணிகள், தாலி, பட்டை தீட்டப்பட்ட கற்கள் ஆகியவையும் கிடைத்தன.

அலெக்ஸாண்டர் ரீ மேற்கொண்ட இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் அகழாய்வு இடத்தில், பெரும் எண்ணிக்கையில் பொருட்கள் கிடைத்தது இங்குமட்டும்தான். அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தவிர, பல வடிவங்களில் பெரும் எண்ணிக்கையில் பானைகள், இரும்பு ஆயுதங்கள், கிண்ணங்கள், வெண்கலத்தில் அணிகலன்கள், தங்கத்தாலான தலைப்பட்டிகள் ஆகியவை இங்கிருந்து அலெக்ஸாண்டர் ரீயால் கண்டெடுக்கப்பட்டன. தட்சசீலம் (Taxila), ரைர் (Rairh) போன்ற அகழாய்வுத் தலங்களில் கிடைத்ததைப் போன்ற உலோகத்தாலான முகம்பார்க்கும் பொருட்கள் (metal mirror) இங்கேயும் கிடைத்தன.

அலெக்ஸாண்டர் ரீ நடத்திய அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரீ காலத்திற்குப் பிறகு, பெரிதாக யாரும் ஆதிச்சநல்லூர் மீது ஆர்வம் காட்டவில்லை. இந்தியத் தொல்லியல் துறையின் ஆர்வம் பெருங்கற்கால இடங்களை நோக்கித் திரும்பியது.

இதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆதிச்சநல்லூர் பகுதி அகழாய்வாளர்களால் கண்டுகொள்ளப்படாத பகுதியாகவே இருந்ததது. இருந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு இந்தியத் தொல்லியல் துறை அதனைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தது.

ஆதிச்சநல்லூர்: ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு
அலெக்ஸாண்டர் ரீ தன் ஆய்வை முடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2004-2005ல் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஒரு அகழாய்வு துவங்கப்பட்டது. சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார்.

600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்தன. "அலெக்ஸாண்டர் ரீ ஆய்வை மேற்கொண்டபோது, கார்பன் டேட்டிங் முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை வந்துவிட்ட நிலையில், ஆதிச்சநல்லூரின் காலத்தைக் கணிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் ஆதிச்சநல்லூரில் ஆய்வைத் துவங்கினார். ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது தனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கமாக இருந்திருக்க வேண்டும். அங்கு வாழ்ந்த மனிதர்கள், தனிமங்கள் வெட்டப்பட்ட பள்ளத்தில் இறந்தவர்களைப் புதைக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.

முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் புதைமேடாக இருந்தாலும் மனிதர்கள் வசித்த சிறிய இடமும் இந்த ஆய்வின்போது சத்தியமூர்த்தி குழுவினருக்குக் கிடைத்தது. துளையிடுவதற்கு மிகக் கடினமான சில அரிய மணிகள் ஆயிரக்கணக்காக அவர்களுக்குக் கிடைத்தன. பானையைச் சுடும் சூளை போன்றவையும் இந்த ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டன.

இங்கு கிடைத்த பொருட்களை சில ஆய்வுகளுக்கு உட்படுத்தினார் சத்யமூர்த்தி. இந்த இடத்தின் காலத்தைக் கணிக்க ஆப்டிகலி ஸ்டிமுலேட்டட் லுமினிசென்ஸ் (Optically stimulated luminescence) முறை பயன்படுத்தப்பட்டது. அதில், இந்த இடத்தின் காலம் கி.மு. 700 எனக் கணிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரிலிருந்து எடுக்கப்பட்ட 24 எலும்புக்கூடுகள் உடல்சார் மானுடவியல் (physical anthropology) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராகவன் இதில் உதவ முன்வந்தார்.

அந்த ஆய்வில், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்கள் ஒரே மானுடவியல் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இல்லை என்பதும் பல்வேறு இன மக்கள் அங்கு வாழ்ந்துவந்ததும் தெரியவந்தது. ஆஸ்திரலாய்டுகள், மங்கலாய்டுகள் உள்ளிட்ட குறைந்தது மூன்று இனக்குழுக்கள் அங்கு இருந்திருக்கலாம் என சத்யமூர்த்தி தன் ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய காலத்தில் உள்ள இனக்குழுவினர் அங்கு மிகக் குறைவு என்பது அவருடைய கருத்து. ஆதிச்சநல்லூர் அதனுடைய காலத்தில் ஒரு பெருநகரமாக இருந்திருப்பதாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில மண்டை ஓடுகள் கச்சிதமாக வெட்டப்பட்டவையாகவோ, துளையிடப்பட்டவையாகவோ இருந்தன. இது அந்தக் காலத்தில் டிரப்பனேஷன் (trepanation) எனப்படும் தலையில் துளையிட்டு சிகிச்சை அளிக்கும் பழக்கம் அங்கு இருந்ததையே காட்டுகிறது . அலெக்ஸாண்டர் ரீ ஆய்வுசெய்தபோது இங்கு பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறுவிதமான பொருட்கள் இங்கே கிடைத்ததைப்போல, உலோகப் பொருட்களோ வேறு பொருட்களோ சத்யமூர்த்தி மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கவில்லை. "காரணம், அலெக்ஸாண்டர் ரீ மிகப் பெரிய இடத்தில் ஆய்வை மேற்கொண்டார். 

ஆதிச்சநல்லூர் - சிந்துச் சமவெளி நாகரீகம் தொடர்புகள்?
ஆதிச்சநல்லூரில் தான் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து Indus to Tamaraparani என்றொரு நீண்ட கட்டுரையைப் பதிப்பித்திருக்கிறார் சத்யமூர்த்தி. ஆனால், மொஹஞ்சதாரோ - ஹரப்பா நாகரீகத்துடன் ஆதிச்சநல்லூரை ஒப்பிடுவதில் பல பிரச்னைகள் இருந்தன. ஹரப்பாவோடு ஒப்பிடும்போது ஆதிச்சநல்லூர் காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஹரப்பா கலாச்சாரத்தில் பெரும்பாலும் தாமிரத்தையே பயன்படுத்தினர். ஆனால், ஆதிச்சநல்லூரில் பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ஹரப்பா - மொஹஞ்சதாரோவுடன் ஒப்பிடக்கூடிய ஒரு விஷயம் ஆதிச்சநல்லூரில் இருந்தது. உலோகக் கலவைதான் அந்த அம்சம். ஹரப்பாவில் இருந்த உலோகப் பொருட்கள் அனைத்திலும் துத்தநாகம் ஆறு சதவீதமாக இருந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த உலோகப் பொருட்களிலும் துத்தநாகம் அதே ஆறு சதவீதமாக இருந்தது.

தென்னிந்தியாவில் கிடைத்த வேறு உலோகப் பொருட்கள் எதிலும் இதே விகிதத்தில் துத்தநாகம் கலக்கப்பட்டிருக்கவில்லை. கொடுமணல், சங்கமகே போன்ற இடங்களில் கிடைத்த காசுகளிலும் துத்தநாகம் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் எங்கிலுமே செப்புக்காலத்தில் (Chalcolithic) உலோகக் கலவையில் துத்தநாகம் கலக்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவை ஹரப்பா -மொஹஞ்சதாரோ மற்றும் ஆதிச்சநல்லூருக்கு மட்டுமே உரியதாக இருந்தது.

மற்றொரு ஒற்றுமை இங்கிருந்த பானைகளின் கனம். ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் கிடைத்த பானைகள் உயரமாக இருந்தாலும் அவற்றின் ஓடுகள் கனமற்று, மெலிதாக இருந்தன. ஆதிச்சநல்லூரில் உள்ள பானைகளும் மிக மெலிதாக இருந்தன. இந்தியாவின் பிற பெருங்கற்கால நினைவிடங்களில் கிடைத்த பானைகள் கனமான பக்கங்களை உடையவையாக இருந்தன.

"இவ்விதமான பானைகளைச் செய்வது மிக அரிது. ஈரமான களிமண்ணில் மெலிதான கனத்தில் மூன்றரையடி உயரத்திற்கு பானைகள் செய்யப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல. ஹரப்பாவிலும் ஆதிச்சநல்லூரிலும் இதைச் செய்திருந்தார்கள்".

ஆனால், இறந்தவர்களைப் புதைக்கும்விதத்தில் ஹரப்பா - மொஹஞ்சதாரோவுக்கும் ஆதிச்சநல்லூருக்கும் மிக முக்கியமான வேறுபாடு இருந்தது. சிந்துசமவெளி நாகரீகத்தில் இறந்தவர்களை படுத்தவாக்கில் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், ஆதிச்சநல்லூரில் இறந்தவர்கள் பானைக்குள் வைத்து புதைக்கப்பட்டனர்.

ஹரப்பா - மொஹஞ்சதாரோவிலும் மத சின்னங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூரிலும் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண் நடனமாடுவதைப்போன்ற காட்சி ஒன்று கிடைத்தது. அருகில் ஒரு மரமும் மானும் இருந்தன. இதுபோன்ற நடனமாடும் பெண்ணின் உருவம் மொஹஞ்சதரோவிலும் கிடைத்துள்ளது.

இரு இடங்களிலும் கிடைத்த பாத்திரங்கள் வெவ்வேறு விதமாக இருந்ததையும் சத்யமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார். ஆதிச்சநல்லூரில் கிடைத்த பாத்திரங்கள் எல்லாமே கிண்ணங்களைப் போன்றவையாகவே இருந்தன. ஆனால், ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் தற்போது நாம் பயன்படுத்தும் தட்டுகள் போன்றவையும் கிடைத்தன. "இதைவைத்து அவர்களது உணவுப் பழக்கத்தை ஒருவாறு யூகிக்கலாம். இங்கே வசித்தவர்கள் நீர்ம நிலையில் இருந்த உணவுகளை சாப்பிட்டிருக்கக்கூடும். சிந்துவெளியில் இருந்தவர்கள் காய்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும்".

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பற்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்று கூறும் சத்யமூர்த்தி, அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் அந்தக் கால மனிதர்களின் முழுத் தோற்றத்தையே பெற முடியும் என்கிறார். அதேபோல அவர்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறியமுடியும் என்கிறார் அவர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த 'பற்கள்' தேயாத நிலையில் இருந்தவை என்கிறார் அவர்.

ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?
2004-2005ல் செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. என்ன காரணம்? "நான் 2006ல் ஓய்வுபெற்றுவிட்டேன். 2003ல் மத்திய தொல்லியல் துறை ஒரு உறுதியை அளித்தது. அதாவது தற்போதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் சுமார் 50 முடிவுகளையும் வெளியிட்ட பிறகுதான் அடுத்த கட்ட ஆய்வுகளும் முடிவுகளும் வெளியிடப்படும் என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தனர். இதனால், 2003க்கு பிறகு முடிக்கப்பட்ட ஆய்வுகளின் மீது கவனம் திரும்பவில்லை. 2004-05ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இரண்டாவது பகுதிதான் மிக முக்கியமானது. அதில்தான் எலும்புக்கூடுகளை வைத்து பெறப்பட்ட மானுடவியல் தொடர்பான முடிவுகள் இருக்கின்றன. அதை 2013லேயே முடித்துக் கொடுத்துவிட்டார் சத்தியமூர்த்தி.

ஆனால், இந்த ஆய்வறிக்கையின் முதல் பாகம் இன்னும் தயாராகவில்லை. "இந்த முதல் பாகத்தை துறையைச் சேர்ந்தவர்களே எழுதலாம். அகழாய்வு செய்யப்பட்ட இடம் பற்றிய விவரங்கள், பானைகள், கிடைத்த பொருட்களை வைத்து கலாச்சார ரீதியான முடிவுக்கு வருவது அந்த அறிக்கையில் இருக்கும். தொல்லியல் துறை முயற்சி எடுத்து இரண்டாம் பகுதியை வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை கால நிர்ணயம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது? 

"C14 கால நிர்ணயம் செய்யும் வகையில் ஒதிஷாவில் ஒரு நிறுவனம் இருந்தது. அவர்கள் இதைச் செய்து தருவதாகச் சொன்னார்கள். அவர்களிடம் சில மாதிரிகளை அனுப்பினேன். அதற்குப் பிறகு நான் ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் அந்த மாதிரிகளைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இப்போது நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த மாதிரிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு காலம் அறுதியிடப்பட்டிருக்கிறது. கி.மு. 900 என கணிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் சத்யமூர்த்தி. அதாவது இது காலத்தால் 2,900 ஆண்டுகள் பழமையானது.

இது தவிர, ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு ஆந்த்ரபாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. "அது ஏன் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பது தெரியவில்லை".

கீழடி - ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் சொல்வதென்ன?
"கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்திருக்கும் காலம் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆய்வுமுடிவுகளை முழுமையாகப் பார்க்க வேண்டும். ஆனால், ஆதிச்சநல்லூரின் காலம் இன்னும் பழமையானது" என்கிறார் சத்யமூர்த்தி. கீழடியில் கிடைத்த செங்கல்களின் அளவைப் பார்க்கும்போது அவை சங்ககாலத்தைச் சேர்ந்தவை என்று சொல்ல முடியும் .

ஆனால், கீழடியில் கிடைத்திருப்பதைப்போல பெரும் எண்ணிக்கையிலான பானைக் கீறல்கள் ஆதிச்சநல்லூரில் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பானையின் உட்புறத்தில் மட்டும் கீறல்கள் இருந்தன. மேலும் கீழடியில் கிடைத்ததுபோன்ற கட்டடத் தொகுதிகள் ஏதும் ஆதிச்சநல்லூரில் கிடைக்கவில்லை.

விரைவில் ஆதிச்ச நல்லூர் இரண்டாவது அகழாய்வு அறிக்கையும், அடுத்த கட்ட ஆதிச்ச நல்லூர் அகழாய்வும் மக்கள் அதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com