ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடங்க வேண்டும்: பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் வலியுறுத்தல்

ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடங்க வேண்டும் என பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான கே.ஏ. மணிக்குமார் வலியுறுத்தினார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடங்க வேண்டும்: பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் வலியுறுத்தல்

ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடங்க வேண்டும் என பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான கே.ஏ. மணிக்குமார் வலியுறுத்தினார்.
பாளையங்கோட்டையில் ஆக.19ஆம் தேதி நடைபெறவுள்ள தென்மண்டல தமிழர் உரிமை மாநாட்டின் தொடக்கமாக வியாழக்கிழமை நடைபெற்ற பிடிமண் எடுக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வுகளுக்கெல்லாம் முன்னால் இந்தியாவில் நடைபெற்ற முதல் அகழாய்வு ஆதிச்சநல்லூர் அகழாய்வு.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜாகோர் 1876இல் இந்தத் தொல்லியல் மேட்டைக் கண்டுபிடித்தார். இறந்தவர்களைப் புதைத்த முதுமக்கள் தாழிகளும், அவற்றில் தானியங்களும் இரும்பிலான பொருள்களும், செம்பில் செய்யப்பட்ட பொருள்களும் கிடைத்தன. இவற்றை அவர் பெர்லின் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார்.
பின்னர், கிழக்கிந்திய கம்பெனி மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அலெக்ஸாண்டர் ரீ தலைமையில் 1899 முதல் நீண்ட ஆய்வு மேற்கொண்டது. 1903இல் லூயி லேப்பிக்யூ தலைமையிலும், 1915இல் ஆர்.ஹெண்டர்சன் தலைமையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரும்பு, தாமிரம், தங்கம் ஆகியவற்றை உருக்கி கருவிகள், ஆபரணங்கள் செய்யும் நிலையில் அந்த நாகரிகம் இருந்ததும், தமிழ்-பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தும் அறிவைக் கொண்டு நெல்,சாமை போன்ற தானியங்களை விளைவித்த சமூகமாக அது இருந்ததும் தெரியவந்தது.
மீண்டும் 2004இல் மத்திய தொல்லியல்துறை சார்பாக சத்யமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
எல்லோரும் நினைப்பதுபோல ஆதிச்சநல்லூர் வெறும் இடுகாடு அல்ல. இரும்பு, தாமிரம் தங்கம் போன்ற மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய உலைகளும், மக்கள் பயிர் செய்த இடங்களும் அடங்கியதாகும்.
நதி தன் திசையை மாற்றிக்கொண்டதால் துல்லியமாக அன்றைய மக்களின் வாழிடங்களைக் கண்டறிய முடியாமல் இருக்கலாம். 2004இல் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. அப்பொருள்கள் கார்பன் தேதி ஆய்வுக்குள்படுத்தப்பட்டதா இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை.
ஆதிச்சநல்லூரைப்போலவே கடம்பூர், சாயர்புரம் போன்ற இடங்களில் காணப்படும் தொல்லியல் மேடுகளும் இன்றுவரை அகழாய்வுக்குள்படுத்தப்படாமல் உள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த ஆய்வுகள் உண்மையான வரலாற்றைச் சொல்லும் முக்கியமான சான்றுகளாக அமையும் என்றார் அவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் கூறியது:
உண்மை வரலாறுகளைத் திரித்தும் அழித்தும், தாம் நினைக்கும் இந்து ராஷ்ட்ர வரலாற்றை மக்கள் மனங்களில் திணிக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆரியர்கள்தாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்ற ஒரு பொய்யான வரலாற்றைக் கல்விப்புலத்துக்குள்ளும் அறிவுலகத்தினுள்ளும் திணிக்க நெடுங்காலமாக முயன்று வருகின்றனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வும், கீழடி அகழாய்வும் கொண்டுவந்து கொட்டியுள்ள தொல்லியல் ஆதாரங்கள் அவர்களின் கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்குகின்றன. எனவே, இந்த அகழாய்வுகளை முடக்க முடிந்ததை எல்லாம் செய்கின்றனர்.
நம் வரலாற்றுரிமையைப் பாதுகாக்கவும் மொழியுரிமையைப் பாதுகாக்கவும் அனைத்துப் பகுதி மக்களையும் அணி திரட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com