Enable Javscript for better performance
கீழடி ஸ்பெஷல் : ஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம் | Keezhadi Special: Aadhi Kudigal Pallavaram Special- Dinamani

சுடச்சுட

  

  கீழடி ஸ்பெஷல் : ஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம்

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 11th November 2019 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pallavaram special

  ஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம்


  கீழடியைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கும் போது, ஆதிக் குடிகள் பற்றி எதற்கு என்ற கேள்வி எழலாம், எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைப் பற்றி ஒப்பாய்வை செய்வதற்கே……….

  Robert bruce foot

  மே 30, 1863 - இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நன்னாள். அன்று தான், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை (Father of Indian Pre-history) ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள். அதில் பல்லாவரம் முக்கியமான இடம். 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

   

  1863ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ்ட் என்ற பிரிட்டிஷ் அறிஞர் பல்லாவரத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கல்லினால் செய்யப்பட்ட கை கோடாரி இந்தியாவில் முதன்முறையாகக் கிடைக்கப்பெற்றது. அதுவே இந்தியாவில் ஆதிமனிதன் வாழ்ந்தான் என்பதற்கான முதல் சான்றாகும். அதைத் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் சென்னையைச் சுற்றி அகழாய்வு செய்யும்போது அதிகளவிலான பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைத்துள்ளன. அதில் பல்லாவரம் முக்கியமான இடம்.

  மேலும் படிக்க.. கீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம்  

  1888ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ரியா என்பவர் பல்லாவரத்தில் கள ஆய்வு செய்தார். கள ஆய்வைத் தொடர்ந்து அகழாய்வும் செய்ய அப்போது ஐந்து ஈமப் பேழைகள் கிடைத்தன. அந்தப் பேழையுடன் எலும்புகளோ, மண்பாண்டங்களோ, இரும்புப் பொருள்களோ கிடைக்கவில்லை. அத்தகைய பொருள்கள் தனியாகக் கிடைக்கப் பெற்றனவே ஒழிய ஈமப் பேழையுடன் கிடைக்கவில்லை. அவை சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
   

  1946ஆம் ஆண்டு தொல்லியல் துறை இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி டிஜிஏஎஸ்ஐயால் ஒரு குழு அமைக்கப்பட்டு இன்னும் எந்த இடங்களிலெல்லாம் பொருள்கள் உள்ளன என்பது குறித்துக் கள ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கள ஆய்வில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தொல்லியல் கண்காணிப்பாளர் அ.மு.வெ.சுப்ரமணியம் தலைமையிலான குழு கடந்த டிசம்பர் மாதம் ஈமப் பேழை ஒன்றினை அகழாய்வு செய்து எடுத்துள்ளனர்.

  மண் மூடிக் கிடந்த ஈமப் பேழை
  வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ள பல்லாவரத்தில் உள்ள அந்தப் பகுதி இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாகப் பல இடங்களில் சுற்றிக் குடியிருப்புகள் வந்துள்ளன. கள ஆய்வோ, அகழாய்வோ நடத்துவதற்குக் கடும் நெருக்கடி நிலவும் நிலையில் காவல் துறையின் பாதுகாப்போடு தான் இந்த அகழாய்வை நடத்தி முடித்தனர்.

  கீழடி ஸ்பெஷல்: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான அத்திரம்பாக்கம்

  உருவத்துக்கு உயிர்கொடுத்தவர்
  நூற்றைம்பது சிறிய, பெரிய துண்டுகளாக நொறுங்கிய நிலையில் கிடைக்கப்பெற்றாலும் அதற்கு உயிர் கொடுத்து பழைய உருவத்தைத் திரும்ப கொண்டுவந்துள்ளார் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த கன்னியப்பன். “பன்னிரண்டு கால்கள் உடைய இந்த ஈமப் பேழையில் எந்தக் கால்கள் எந்தப் பக்கம் வரும் என்று கண்டுபிடித்து அதை ஒன்று சேர்ப்பது சவாலான விஷயமாக இருந்தது. கால்கள் உள்ளீடற்றவாறு அமைந்துள்ளன. ஒவ்வொரு காலிலும் ஒரு துளை இடப்பட்டுள்ளது. முதலில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு, பின் கால்கள் மேல் வைத்து அதன் உள்ளே படுக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்தி உருவாக்கியுள்ளனர். அந்தத் தொட்டி போன்ற அமைப்பிலும் மூன்று துளைகள் உள்ளன. இதை மூடுவதற்குப் பயன்படுத்தியிருந்த அமைப்பு கிடைக்கவில்லையாம்.”

  கிட்டதட்ட ஒரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிப்பது போன்ற பணியைத்தான் கன்னியப்பன் மேற்கொண்டுள்ளார். “கிடைத்த நூற்றைம்பது துண்டுகளில் எதை எதோடு இணைப்பது என்பது கடினமானதாக இருந்தது. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியை மறு சீராக்கும் பணியில் எனக்கு இவ்வளவு சவால்கள் இல்லை. பானையின் அமைப்பு காரணமாக அடுத்தடுத்த பாகங்களை எளிதில் அடையாளம் கண்டறிந்து ஒட்டலாம். ஆனால், இதில் பாகங்களை கண்டறிவது சவாலாக இருந்தது. மண்ணினால் சுடப்பட்டு இந்தப் பேழை உருவாக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சுடப்பட்ட பகுதிகள் நொறுங்கிப்போகாமல் கிடைத்துள்ளன. மற்ற பாகங்கள் நொறுங்கி மண்ணாகியுள்ளன. கிடைக்காத பகுதிகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் நானே உருவாக்கினேன். எப்போது வேண்டுமானாலும் அவற்றை நீக்குவதற்கு ஏற்ற வகையிலே இதைக் கொண்டு உருவாக்குவது வழக்கம்” என்கிறார்.

  கீழடி ஸ்பெஷல்: இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி! அதுவும் ஒரு பெண்ணின் பெயர்!!

  தாழிக்கும் ஈமப் பேழைக்குமான வித்தியாசம்
  இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தாழிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், ஈமப் பேழைகள் மாறுபட்டவை. தாழிக்கும் பெரும்பாலும் எங்கு கற்கள் அதிகளவில் இல்லையோ அங்கு தாழிகள் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் தாழி, ஈமப் பேழை இரண்டும் கிடைத்துள்ளன. தாழியில் எலும்புக் கூடுகள் நிறைய கிடைத்துள்ளன. ஆனால் ஈமப் பேழையில் எலும்புக் கூடுகள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் எரியூட்டிய பின் சாம்பலை இதில் வைத்துப் புதைத்துள்ளனர்” .சில நேரங்களில் சாம்பல்கூட இல்லாமல் வெறும் பேழையை மட்டும் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

  விலங்குகள் உருவத்தில் ஈமப் பேழைகள்
  “சிமிட்ரி ஹெச் கலாசாரத்திலும், சால்கோலித்திக் கலாசாரத்திலும் மயில் போன்ற உருவத்திலும் விலங்குகள் போன்ற உருவத்திலும் பேழைகள் கிடைத்துள்ளன. தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஆடு போன்ற உருவம் கொண்ட ஈமப் பேழைகள் கிடைத்துள்ளன. இப்போது நமக்குக் கிடைத்த ஈமப் பேழையும் விலங்குகள் போன்ற கால்களைக் கொண்டுள்ளது. ஏன் ஈமப் பேழைகள் விலங்குகளின் உருவம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது. இறந்த பின் மனிதனின் ஆன்மா தனியே சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது, அந்த ஆன்மா பயணம் செய்ய ஓர் உடல் தேவைப்படுகிறது என்பதற்காகவே இது போன்ற உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நம்பப்படுகிறது” என்று கூறினார்.

  ஈமப் பேழையின் காலம்
  “தற்போது கிடைத்த ஈமப் பேழையை இதற்கு முன் அகழாய்வு செய்த சாணுர், பையம்பள்ளி ஆகிய இடங்களோடு ஒப்பிடும்போது கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஈமப் பேழை மண்ணினால் சுட்டுச் செய்யப்பட்டுள்ளதால் இதன் சில பாகத்தை ‘டிஎல் டேட்டிங்’ என்று சொல்லப்படும் தெர்மோ லூமினஸ் டேட்டிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சோதனைகள் அதன் முடிவுகள் இதன் காலத்தை இன்னும் துல்லியமாகக் கணிக்கும். 

  Robert cemetery

  ராபர்ட் புருஸ்ஃபூட் சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஐவி காட்டேஜ் என்னும் வீட்டில் வாழ்ந்தார். இவர் டிசம்பர் 29, 1912ம் ஆண்டு இறந்தார். இவரின் கல்லறை ஏற்காட்டில் ஹோலி டிரினட்டி சர்ச்சில் உள்ளது.

  உலகின் மூத்த குடி தமிழ் குடி என மார் தட்டிக்கொண்டாலும் நமது வரலாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வும் விருப்பமும் போதுமான அளவு இங்கு இல்லை என்பதே யதார்த்தம். பல்லாவரம் என்ற தொல்லியல் சான்றுகள் நிறைந்த நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பே அதற்கான சான்று. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai