மழலைவீணை
மஞ்சக் குருவி பிஞ்சு மரத்தில்
ஊஞ்சல் ஆடுது- பாப்பா
ஊஞ்சல் ஆடுது!
வஞ்சமில்லா நெஞ்சத்துக்கு
வட்டம் போடுது- பாப்பா
வட்டம் போடுது!
சிறகு முழுதும் கோதிக் கோதி
இறகை உலர்த்தது- பாப்பா
இறகை உலர்த்துது!
பறப்பதற்கு அங்குமிங்கும்
பார்த்து எழும்புது- பாப்பா
பார்த்து எழும்புது!
குஞ்சுக் குருவி வாயைப் பிளந்து
உணவு கேக்குது!- பாப்பா
உணவு கேக்குது!
நெஞ்சுக்குள்ளே பாசத் தோடு
அம்மா ஊட்டுது- பாப்பா
அம்மா ஊட்டுது!
கூடு விட்டுக் குஞ்சு வெளியில்
பறக்கப் பார்க்குது- பாப்பா
பறக்கப் பார்க்குது!
ஆடிக் கொண்டே அம்மாவுக்கு
தடவிக் கொடுக்குது- பாப்பா
தடவிக் கொடுக்குது!
குருவி போல அம்மா மேலே
பாசம் கொள்ளனும்- பாப்பா
பாசம் கொள்ளனும்!
-முனைவர் பொன்னியின் செல்வன்
குழந்தை உலகம்...
குழந்தைகளே பள்ளிக்கு வாருங்கள்
குதூகலமாய் சிரித்து விளையாடுங்கள்
நாளைய உலகம் நீங்கள்தான்
நல்லோர் ஆகவே வளருங்கள்!
கல்வி உங்கள் கண்ணாகும்
கற்றால் வாழ்க்கை உயர்வாகும்
பெற்றோர் சொல்லே சொத்தாகும்
பெரியோர் வழியே வித்தாகும்!
அறிவின் வழியில் செல்லுங்கள்
அறத்தின் வழியில் நில்லுங்கள்
அன்பின் மொழியில் பேசுங்கள்
அறிந்ததை ஆய்ந்து தெளியுங்கள்!
நட்பால் வாழ்க்கை எளிதாகும்
நல்லன செய்தலே இனிதாகும்
குழந்தை உலகம் புனிதமாகும்
குவலயம் எங்கும் மகிழ்வாகும்!
-வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.