ஓர் அடர்ந்த காடு. அங்கு ஓர் ஆறு. அதன் அருகில் பெரிய, பழைமையான மரத்தின் கீழே உள்ள பொந்தில் குல்பி ஆமை ஒன்று வசித்து வந்தது. அதற்குக் குஷி முயலும், ரிஷி முள்ளம் பன்றியும், புஷி குரங்கும் நண்பர்களாக இருந்தன.
குல்பி ஆமை பொந்திலிருந்து ஆற்றுக்குச் செல்வதற்கு வெளியே வரும்போது பக்கத்துப் புதரில் இருக்கும் செங்கை என்னும் ஓநாய் ஒன்று குல்பி ஆமையை அழைத்து, அதட்டி, தலையை வெளியே நீட்டச் சொல்லி ஓங்கி ஒரு குட்டு வைக்கும். வலியால் ஆமை துடிக்கும். இதை ஓநாய் ரசித்து மகிழும்.
பல நாள் இப்படி நடந்தது. குல்பி ஆமை தன் நண்பர்கள் மூவரிடமும் இதுபற்றி வருத்தத்துடன் சொன்னது. உடனே குஷி, ரிஷி, புஷி மூன்றும் ஓநாயிடம் சென்று பணிவுடன், "நீ என் நண்பன் தலையில் தினமும் குட்டி, அதை வலியால் வருந்தச் செய்வது நியாயமா?' என்றன.
"வலி என்று ஒன்று இருந்தால் என் கண் எதிரே காட்டுங்கள் பார்க்கலாம்... வலியைப் பார்த்த பின்பு எனது இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன்'' என்று செங்கை ஓநாய் செருக்குடன் கூறிச் சிரித்தது.
"வலியை எப்படிக் காட்ட முடியும்? நீ செய்வது சரியில்லை... இது ரொம்பப் பாவம்?'' என்றன மூன்றும். அதற்கு ஓநாய், "ஓஹோ.. நீங்கள் பெரிய மனிதர்கள்போல அறிவுரை சொல்ல வந்துவிட்டீர்களா? என் இடுப்பு அளவுகூட இல்லை... எனக்கு நீங்கள் புத்திமதி சொல்கிறீர்களா? உடனே இங்கிருந்து போய் விடுங்கள். இல்லையென்றால் உங்களைக் கடித்துக் குதறிவிடுவேன்'' என்று முயலைக் கடிக்கப் பாய்ந்து சென்றது.
குஷி முயல் பயந்து ஓடி புதருக்குள் ஒளிந்து கொண்டது. ரிஷி முள்ளம்பன்றியைக் கடித்தால் முட்கள் தன் முகத்தில் குத்திவிடும் என்று நினைத்து, புஷி குரங்கை துரத்த ஆரம்பித்தது.
குரங்கு பெரிய மரத்தின் மேலே தாவியது. பழைமையான மரம் என்பதால், தாவிய வேகத்தில் அந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து கீழே இருந்த ஓநாயின் தலையில் "பொத்' தென்று விழுந்தது. வலியால் ஆ...ஊ... என்று அலறியது ஓநாய். அடிபட்ட இடத்தில் அதற்கு ரத்தமும் வந்தது. இதைப் பார்த்த குல்பி ஆமை அங்கிருந்த பச்சிலைகளைப் பறிந்து அதற்குக் கட்டுப் போட்டது.
குஷி, ரிஷி, புஷி மூன்றும் ஓநாயிடம் சென்று, "இப்போது உனது வலியை ஆமையின் கண் எதிரே காட்டு பார்க்கலாம்'' என்று கேட்டன. அப்போது ரிஷி, "இந்த ஓநாயிடம் இவ்வளவு குட்டு பட்டும் நீ இதற்குப்போய் உதவி செய்கிறாயே...'' என்றது கோபமாக.
அதற்குக் குல்பி ஆமை, "கெட்டதை சட்டென மற என்று என் அம்மா சொல்லியிருக்காங்க..'' என்றது.
"ஆமாம்... திருவள்ளுவர்கூட கெட்டதை செய்த ஒருத்தர் வெட்கப்படும்படி அவருக்கு நாம் நன்மை செய்யணுன்னு சொல்லியிருக்காரே'' என்றது புஷி.
"பலே பலே... நீகூட அதை நினைவு வெச்சிருக்கியே...'' என்று கூறி சிரித்தது குல்பி ஆமை. ஓநாயின் செருக்கும் அன்றோடு அழிந்தது.
A moral story that children should know.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

