குடக்கூத்து 

பழந்தமிழர் கலைவடிவங்களை நன்கு இனங்காட்டும்  இலக்கியம் சிலப்பதிகாரம். அரங்கேற்றுகாதை, கானல்வரி, ஊர் காண்காதை, ஆய்ச்சியர்
தஞ்சாவூர் ராஜராஜீஸ்வரம்
தஞ்சாவூர் ராஜராஜீஸ்வரம்


பழந்தமிழர் கலைவடிவங்களை நன்கு இனங்காட்டும்  இலக்கியம் சிலப்பதிகாரம். அரங்கேற்றுகாதை, கானல்வரி, ஊர் காண்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைச் செய்திகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 

சிலம்பில் குடக்கூத்து
‘பதினோராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ அரங்கேற்றம் நிகழ்த்திய மாதவி வழியே பதிவாகும் பதினொரு வகை ஆடல்களைக் கடலாடுகாதையே விளங்க உரைக்கிறது. நின்றாடல், வீழ்ந்தாடல் என்று இரண்டு நிலைகளில் ஆடப்பட்ட இவ்வாடல் வடிவங்களுள் குடக்கூத்து நின்றாடல் வகையைச் சேர்ந்தது. ‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலமளந்தோன் ஆடிய குடமும்’ எனும் சிலம்பின் அடிகள், குடக்கூத்து நிகழ்ந்த இடத்தையும் நிகழ்த்தியவர் பெயரையும் தருகின்றன.

கூத்தின் பின்னணி
வாணன் என்னும் அசுரன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகன் அநிருத்தனைப் பிடித்து, ‘சோ’ என்னும் தன் தலைநகரில் சிறை வைக்கிறார்.1 நெடிய இந்நானிலத்தைத் தம் திருவடிகளால் அளந்த திருமால், சிறைப்பட்ட அநிருத்தனை மீட்பதற்காகச் சோநகர வீதிகளில் குடங்களைக் கொண்டு நிகழ்த்திய திருக்கூத்தே குடக்கூத்து. இக்கூத்தை, ‘குடத்தை எடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே’ என்று கொண்டாடுகிறார் ஆண்டாள்.2 ‘குடமாடு கூத்தா’ என்றழைக்கும் பெரியாழ்வாரும் ‘குடங்கள் எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே’ என்று பல குடங்களுடன் கண்ணன் கூத்தாடியதைப் பதிவு செய்துள்ளார்.3  விநோதக்கூத்து வகையைச் சேர்ந்த இதன் உறுப்புகள் ஐந்தென்பர்.4

குடக்கூத்தும் கோயிற் சிற்பங்களும் சிலப்பதிகாரம் அடையாளம் காட்டும் பதினோராடல்களில் இக்குடக்கூத்தே தமிழ்ச் சமூகத்தால் போற்றிக் கொண்டாடப்பட்ட கலைவடிவமாகத் திகழ்ந்தது என்பதைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்களைக் கொண்டு அறியமுடிகிறது. பிற்பல்லவர் காலந் தொட்டுப் பிற்சோழர் காலம்வரை குடக்கூத்துச் சிற்பங்களைக் கோயில்களில் காணமுடிகிறது என்றாலும், அவை மிகுதியாக வெளிப்பட்டிருப்பது முற்சோழர் கட்டுமானங்களில்தான்.   

கண்ணன் ஆடிய கூத்து

கண்ணன் ஆடிய கூத்தாக அபிதான சிந்தாமணி முன்னிருத்தும்5 இக்குடக்கூத்தைக் கண்ணன் நிகழ்த்துமாறு போலவும் மானுடர் ஆடுமாறு போலவும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணக்கிடைக்கும் முப்பத்தாறு சிற்பங்களை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் களஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.6 இச்சிற்பங்களின் ஒப்பீட்டாய்வு சிற்பிகளின் கலையுணர்வு, வரலாற்றுநோக்கு, கற்பனையாற்றல் காட்டுவதுடன், பிற்பல்லவர், முற்சோழர் காலத்தில் பரவலாக நிகழ்த்தப்பட்ட கலைவடிவங்களுள் ஒன்றாய்க் குடக்கூத்து திகழ்ந்ததையும் வெளிப்படுத்துகிறது. 

தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், சிவகங்கை, அரியலூர், தருமபுரி ஆகிய ஏழு மாவட்டங்களில்7 பல்லவர், பாண்டியர், முற்சோழர், பழுவேட்டரையர், நுளம்பர் காலப் பதிவுகளாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்களுள், அதன் இலக்கணப்படி நின்றாடல்நிலையில் முப்பதும் அமர்ந்தாடல் நிலையில் ஆறும் உள்ளன. அமர்ந்தாடும் ஆறு சிற்பங்களில், கண்ணன் பல குடங்களுடன் ஆடுமாறு போலக் காட்சிதரும் கருடாசனப் பதிவு விழுப்புரம் மாவட்டம் கிராமம் சிவலோகநாதர் கோயில் கண்டபாதத்தில் செதுக்கப்பட்டுள்ளது. பல குடங்களுடன் கூத்து நிகழ்த்தும் கண்ணனைத் தமிழ்நாட்டளவில் இங்கு மட்டுமே காணமுடிகிறது. இதே கருடா சனத்தில் ஒரு குடம் ஏந்திக் கூத்திடும் பூதம் தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயில் முகமண்டபத் தெற்கு வலபியில் காட்சி தர, சிவலோகநாதர், வடவாயில் ஸ்ரீகோயில், திருத்தொண்டீசுவரம், திருமூலநாதர் வலபிப் பூதங்கள் குத்துக்கால் வைத்துக் குடக்கூத்து நிகழ்த்துகின்றன.

திருவையாறு வடகைலாயம்

குடம்
ஆடலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் குடம் பெரும்பாலான சிற்பங்களில் வாய், கழுத்து, உடல் என மூன்று பிரிவுகளாய் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடத்தின் உடற்பகுதி பெரும்பாலும் உருண்டையாகவும் ஒன்றிரண்டில் நீள்உருளையாகவும் காட்சிதர, வாய்ப்பகுதி பெரும்பாலும் இயல்பான அளவிலும் சிலவற்றில் அகலமாகவும் உள்ளது. மிகுதியான வேறு பாட்டைக் கழுத்துப்பகுதியிலேயே காணமுடிகிறது. சிறியதாய், நீண்டதாய், அகன்றதாய், ஒன்றிரண்டில் அறவே இல்லாதது போலவும் காட்டப்பட்டிருக்கும் கழுத்துப்பகுதியே குடத்தின் அமைப்பை வடிவமைப்பதாகக் கூறலாம்.

கூத்தில் குடத்தின் நிலை
குடத்தை ஏந்தியிருக்கும் கை வலம், இடம் எதுவாக இருந்தபோதும் மூன்று நிலைகளிலேயே காட்டப்பட்டுள்ளது. தோளுக்கு இணையான நீட்டலாகவும் தோள் அளவிலிருந்து சற்றே இறக்கமாகவும் அல்லது உயர்த்தலாகவும் காட்டப்பட்டிருக்கும் கையில், குடம் நிற்கும் இடமும் சிற்பத்திற்குச் சிற்பம் மாறுபட்டுள்ளது. தோளில், கையின் மேற்பகுதியில் அல்லது முழங்கை மீது அமரும் குடம், கையின் மேற்பகுதியில்கூட மேலே, இடையில், முழங்கை அருகே என மூன்று நிலைகளில் காட்சிதருகிறது. திருமால்பூரில் மட்டும் மணிக்கட்டருகே குடத்தைக் காணமுடிகிறது. குடமேந்திய கையின் நிலையும் குடத்தின் இருப்பும் ஆடுபவரின் காலமைப்பு, குடமேந்தாத கையின் அசைவு, தலைச்சாய்வு, முகத்திருப்பம் உடல்நிலை எனும் ஐந்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதைச் சிற்பக்காட்சிகள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. 

கூத்து நிகழ்த்து முறை

இக்குடக்கூத்து உலோகத்தாலும் மண்ணாலும் ஆன குடங்களைக் கொண்டு ஆடப்பட்டதாகச் சிலம்பின் உரை தெரிவிக்கிறதே தவிர, குடங்கள் உடலின் எப்பகுதியில் கொள்ளப்பட்டன, குடங்களைக் கையிலோ, உடலின் பிற பகுதிகளிலோ, மேலும் கீழுமாக உருட்டி இக்கூத்து நிகழ்த்தப்பட்டதா, ஆடும் காலம் முழுவதும் குடங்கள் உடலோடு ஒட்டியிருந்தனவா அல்லது தூக்கி எறியப்பட்டு மீண்டும் கொள்ளப்பட்டனவா என்பதற்கான விளக்கங்களை உரைச் செய்திகளில் பார்க்கமுடியவில்லை. இக்கூத்து எவ்வாறு நிகழ்ந்திருக்கமுடியும் என்பதைத் திருக்கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின் ஒப்பீட்டாய்வே கண்முன் காட்சியாய்ப் படம்பிடிக்கிறது. 

ஐயாறு சுற்றுமாளிகைத் தூண் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் குடக்கூத்துச் சிற்பத்தில், குடம், ஆடுநரின் கைமீது இல்லாமல், உயர்த்தி எறியப்பட்டுக் கைக்கு மீளும் நிலையில் காட்டப்பட்டுள்ளமை கருத்தைக் கவர்கிறது. கிராமம் சிற்பம் இதற்கு ஒத்திசைவாய் ஆடுநரை கருடாசனத்தில் காட்டுவதோடு, குடங்களை இரண்டு கால்களிலும் கைகளிலும் தாங்கியுள்ளாற் போல் பதிவுசெய்திருப்பதும் கருதத்தக்கது. ஓர் ஆட்டநிகழ்வின் பல்வேறு நிலைகளைப் படம்பிடித்திருக்கும் காட்சியாக இதைக் கொள்ளமுடியும். இவற்றின் வழிக் குடங்கள் மேலும் கீழுமாக உருட்டியும் எறிந்து கொள்ளப்பட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்பட்டதாகக் கருதலாம். திருமால்பூர் கோனார்கோயில் கூத்தர் இருகைகளிலும் குடமேந்தியிருப்பது இக்கருத்துக்கு வலிமை சேர்க்கும்.

சிற்பங்களின் இடஅமைவு
ஆய்வுக்குக் கொள்ளப்பட்டிருக்கும் 36 சிற்பங்களும் கோயில் கட்டுமானத்தின் பல்வேறு உறுப்புகளில் செதுக்கப்பட்டுள்ளன. கண்டபாதத்தில் எட்டும் தூண்சதுரம், மகரதோரணம் ஆகியவற்றில் இடத்திற்கு ஐந்தும் கபோதக்கூடு, வேதிபாதம், தூண்தொங்கல் இவற்றில் இடத்திற்கு மூன்றும் வலபியில் ஆறும் பஞ்சரகிரீவம், தூண் வளையம் இவற்றில் இடத்திற்கு ஒன்றும் என 35 சிற்பங்கள் அமைய, கண்டராதித்தக் குடக்கூத்து, பலகைச் சிற்பமாகப் பொருந்தாத இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கோட்டங்களைச் சமயஞ் சார்ந்த இறைவடிவங்களுக்கு ஒதுக்கிய சிற்பிகள் கட்டுமானத்தின் பிறபகுதிகளைச் சமூகப் படப்பிடிப்புகளுக்குக் களமாக்கிக் கொண்டமை குடக்கூத்துச் சிற்பங்களின் இடஅமைவு நோக்கியும் உணரப்படும்.

ஆடியவர் 
குடக்கூத்து பெரும்பாலும் ஆடவர்களால் நிகழ்த்தப்பட்டமையை 36இல் 27 ஆடவர் சிற்பங்களாக அமைந்துள்ளமை கொண்டு தெளியலாம். நான்கு சிற்பங்கள் இக்கூத்தைக் கூத்திகளும் நிகழ்த்தியமை காட்ட, இது சிவபெருமானின் பூதப்படையாலும் கொள்ளப்பட்ட கூத்து என்பதை நிறுவுமாறு 5 கோயில்களின் வலபிச்சிற்பங்கள் அமைந்துள்ளன. குடக்கூத்து பெரும்பாலும் இசையற்ற கூத்தாகவே நிகழ்த்தப்பட்டமை சுட்டுமாறு போல 27 சிற்பங்கள் கூத்தர் அல்லது கூத்தியை மட்டுமே படம்பிடிக்க, 9 சிற்பங்களில் மட்டுமே இசைக்கலைஞர்களை உடன்கூட்டமாகக் காணமுடிகிறது. இத்தகு உடன் கூட்டச் சிற்பங்களுள் இசைக்கலைஞரும் ஆடல்நிலையில் உள்ளமையைச் சில இடங்களில் காணமுடிந்தாலும் எறும்பியூர் இணையின் ஒருங்கிணைவும் ஆடற்கோலமும் இணையற்ற பதிவுகளாய்ப் பொலிகின்றன.

சமன்நிலை
குடக்கூத்து, பிற கூத்துகள் போல் அல்லாமல் உடலின் சமன்நிலையை அடிப்படையாகக் கொண்டு, தாங்கியிருக்கும் குடம் கீழே விழுந்து விடாமல், அதே போழ்து அசைவுகளுக்குக் குறைவில்லாமலும் உரிய அவிநயங்களோடும் நிகழ்த்தப்பட்டதால் கை, கால், உடல் மூன்றும் திறம்பட ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் அமைந்தமையைச் சிற்பங்கள் நன்கு விளக்குகின்றன. 36 கூத்தர்களில் 20 பேர் குடத்தை வலக்கையில் தாங்கி ஆட, 13 கூத்தர்கள் அதை இடக்கைக்கு மாற்றியுள்ளனர். திருமால்பூர் கூத்தர் இருகைகளிலும் குடமேந்த, கிராமம் கோயில் கூத்தர் வலக்கை, இடக்கை, கால்கள் என அனைத் திடங்களிலும் குடங்கொண்டாடிப் புதிய காட்சி படைத்துள்ளார். சத்திமுற்றத்துப் பெண்மணி இந்நாளைய கரகம் போல் குடங்களைத் தலையில் அடுக்கி ஆடும் கோலம் குடக்கூத்து கரகமாக மாறிய காலப் பின்னணியில் அமைந்ததாகலாம். 

குடமேந்திய கையமைவு
பெரும்பாலான கூத்தர்களின் குடமேந்திய கை, முழங்கை அருகே மடிந்து விரல்கள் விரிந்த அல்லது சற்றே குவிந்தநிலையில் கீழிறக்கப்பட்டுள்ளது. சில சிற்பங்களில் இந்தக் கையின் விரல்கள் வயிற்றருகே காணப்படும் அளவிற்கு முழங்கை மடக்கம் அமைந்திருப்பினும் பெரும்பாலான சிற்பங்களில் விரல்கள் மார்பருகே மடங்கி அல்லது நீண்டிருப்பதையே காணமுடிகிறது. மிகச் சிலவற்றில் இந்த விரல்கள் இடுப்பருகே காட்டப்பட்டுள்ளமையும் ஒன்றிரண்டில் அவை தொடையளவு தொய்ந்தும் முழங்காலின் மேல் உள்ளமையையும் பார்க்கமுடிவதால் ஆட்டத்திற்கேற்ப, குடமேந்திய கை மேலும் கீழுமாக ஏற்ற, இறக்கமான நிலைகளிலும் அமைந்தமையை அறியமுடிகிறது. உலகபுரக் கூத்தர் குடக்கையை மடித்துக் குடமொட்டி நிறுத்தி உள்ளமையும் ஆட்டத்தின் ஒரு நிலையாகலாம்.

குடமேந்தாக் கையின் அமைவு

குடக்கூத்தர்களின் குடமேந்தாத கையின் அமைப்பும் ஆட்டத்தின் சமன்நிலையைத் தீர்மானிக்கிறது. அதை உறுதிப்படுத்துமாறு போல 22 சிற்பங்களில் குடமேந்தாத கை நெகிழ்கையாகவும் 8இல் அர்த்தரேசிதமாகவும் 2இல் லதாவாகவும் அமைய, 3 சிற்பங்கள் மட்டுமே மார்பருகே மடிந்த பதாக முத்திரை காட்டுகின்றன. நெகிழ் கை, அர்த்தரேசிதம், லதா எனும் இம்மூன்று கையமைப்புகளுமே பரதரால் நிருத்தக்கைகளாகச் சுட்டப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. இவை, உடலின் ஒருபுற அசைவுகளுக்கேற்ப, அதன் மறுபுறத்தைச் சமன்நிலையில் கட்டுப்படுத்த ஆடுநருக்கு உதவும் கையமைவுகளாகும். திருமால்பூரார் இருகைகளிலும் குடமேந்தியுள்ளார்.

கால்நிலை
கால்நிலைகளுள் பெரும்பாலன மண் சார்ந்தே அமைய, சிலவே விண் சார்ந்துள்ளன. 36 கூத்தர்களில் வலக்கால் பதினெழுவருக்குப் பார்சுவமாகவும் எண்மருக்கு அக்ரதலசஞ்சாரமாகவும் அமைய, இருவர் வலமுழங்காலை உயர்த்தி ஊர்த்வஜாநுவாக்கியுள்ளனர். இடக்கால் 18 பேருக்குப் பார்சுவமாகவும் நால்வருக்கு அக்ரதலசஞ்சாரமாகவும் ஒருவருக்குத் திரயச்ரமாகவும் அமைய, மூவர் அதை ஊர்த்வஜாநுவாக்கியுள்ளனர். ஒரு சிற்பத்தில் இடக்கால் சிதைந்துள்ளது. குத்தாலம், வெள்ளறை, சென்னம்பூண்டிக் கூத்தர்கள் கால்களை ஸ்வஸ்திகமாக்கிட, இருவர் கருடாசனத்திலும் நால்வர் குத்துக்காலிட்டும் குடக்கூத்து நிகழ்த்துகின்றனர்.

தலைச்சாய்வு 
எந்த ஓர் ஆடலிலும் தலையின் நிலை இன்றியமையாதது. அது பெரும்பாலும் ஆடலின் நிகழ்நிலைக்கேற்ப உடல் சமன்பாட்டைக் கருதியே அமைகிறது. கரணச்சிற்பங்களில் பரவலாகக் காணக்கூடிய தலைச்சாய்வுகளைக் குடக்கூத்துச் சிற்பங்களும் கொண்டுள்ளன. 17 கூத்தர்களின் தலை வலச்சாய்வில் அமைய, 12 பேர் அதை இடச்சாய்வில் கொண்டுள்ளனர்.  எழுவர் நேர்ப்பார்வையில் காட்சிதருகின்றனர். எச்சாய்வில் தலையிருந்தபோதும், பார்வையின் வீச்சு, சாய்விற்கான எதிர்நிலையில் மட்டும் அமையாமல் பல்நோக்குப் பார்வையாய் மேல், கீழ், இடை என மூன்று கோணங்களிலும் சுழன்றுள்ளமை ஆடலியக்கத்தின் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. 

ஆடை
ஒப்பனையில்லாமல் கூத்தில்லை. குடக்கூத்தர்களின் ஆடை, அணிகலன்கள் எளிமையானவையாக இருந்தபோதும் வேறுபாடுகளைக் காணமுடிகிறது. கொற்றமங்கலம், சத்திமுற்றக் கூத்திகள் தவிர்த்த பிறஅனைத்துக் கூத்தர்களும் முழங்காலுக்கு மேல் வரையிலான இடுப்புச் சிற்றாடையே அணிந்துள்ளனர். எழுவர் சிற்றாடை மட்டும் கொள்ள, பதினைவர் அதனோடு இடைத்தொங்கல் ஒன்றும் கட்டியுள்ளனர். இது சிலருக்கு முக்கோண மடிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நால்வர் சிற்றாடையோடு இடைக்கட்டு அணிந்துள்ளமை அவர்தம் பெருமிதம் காட்டுவதாகக் கொள்ளலாம். பட்டாடை கட்டியுள்ள மூன்று கூத்திகளும் இடைக்கட்டோ, தொங்கலோ பெற்றுள்ளனர். தருமபுரியார் மரவுரிஆடை கொள்ள, நான்கு கூத்தர்களின் ஆடையமைப்பை அறியக்கூடவில்லை. இரண்டு சிற்பங்களில் சிற்றாடையின் கீழ்ப்பகுதி விசிறிமடிப்புக்களுடன் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. 

தலையலங்காரம்
காண்பார் கண்முன் கூத்தரின் தோற்றத்தை நிலைநிறுத்துவதில் தலையலங்காரத்திற்குப் பெரும் பங்குண்டு. 36 கூத்தர்களில் கண்டராதித்தக் கூத்தர் மட்டுமே தலையின் சடைகளை மகுடமாகக் கட்டியுள்ளார். ஏனையர் முடிகளைச் சுருட்டித்  தலையின் பின்புறத்தோ, பக்கவாட்டிலோ பெருங்கொண்டையாக முடிந்துள்ளனர். சிலருக்கு இக்கொண்டை வலப்புறத்தும் சிலருக்கு இடப்புறத்துமாக அமைந்துள்ளது. சில கொண்டைகள் குந்தள அமைப்பிலும் சில தமிழம் போலவும் முடியப்பட்டுள்ளன. எறும்பியூர்ப் பஞ்சரக் கூத்தரின் தலைப்பட்டியிலிருந்து வலப்புறத்தே பறக்கும் துணிக்கீற்றுகள் அவரது ஆட்டத்தின் தன்மையைப் புலப்படுத்துவதோடு திருமுகப் பொலிவையும் பன்மடங்கு கூட்டுகின்றன. திருநாவலூர்க் கூத்தர் பல இறகுகள் பொருத்திய தலையலங்காரமும் திருமால்பூரார் தலைப்பாகை போன்ற முடியலங்காரமும் கொண்டுள்ளனர். 

அணிகள்
பெரும்பாலான கூத்தர்கள் கைவளைகளும் சிலர் கை வளைகளுடன் கடகவளைகளும் அணிந்துள்ளனர். கால்களில் சதங்கை, சிலம்பு, தாள்செறி ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ பெற்றவர்களே மிகுதி. ஒரு சிலர் வெறுங் காலினராய் ஆடுவதையும் காணமுடிகிறது. சத்திமுற்றப் பெண் முத்துமாலையும் தருமபுரி, பழுவூர், பெருமுடிக் கூத்தர்கள் சவடியும் கண்டராதித்தம், திருமால்பூர், வெள்ளறைக் கூத்தர்கள் சரப்பளியும் அணிந்துள்ளனர். தருமபுரி, தவத்துறைக் கூத்தர்கள் அருமையான நெற்றிப்பட்டம் கொள்ள, கண்டராதித்தம், தஞ்சாவூர் உள்ளிட்ட கூத்தர் சிலர் உதரபந்தம் பெற்றுள்ளனர். சன்னவீரம் ஐவர் மார்பில் அமைய, ஸ்வர்ணவைகாக்ஷம் அணிந்தவர்களும் உள்ளனர். தஞ்சாவூர் வலபியார் முப்புரிநூலினர். செவிகளில் குதம்பை அணிந்தவர்கள் ஒன்பதின்மராய்க் காட்சிதர, பதின்மர் பனையோலைக் குண்டலங்கள் பெற, தருமபுரியில் பூட்டுக்குண்டலமும் பிறஇடங்களில் இனங்காண முடியாத செவியணியும் காணப்படுகிறது. ஒரு சிலர் அணிகலன் ஏதுமின்றியே குடக்கூத்து நிகழ்த்துகின்றனர்.

இசைக்குழு
36 கூத்தர்களில் இசைக்கலைஞர்கள் கொண்டுள்ளவர் ஒன்பதின்மரே. இடக்கை, மத்தளம், உடுக்கை, ஒருமுக முழவு முதலிய தோல்கருவிகளும் செண்டுதாளமும் குடக்கூத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை காணமுடிகிறது. பொதுவாக ஆடல் சிற்பங்களில் மிகுதியும் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவியாகப் பதிவாகியிருக்கும் புல்லாங்குழல், ஒரு குடக்கூத்துச் சிற்பத்திலும் இடம்பெறாமையும் நரம்புக்கருவிகளின் பயன்பாட்டைக் குடக்கூத்துக் கொள்ளாமையும் அக்கூத்து வலிய வீச்சுக்களுடன் அமைந்தமையினால் ஆகலாம். எறும்பியூர்க் கூத்தருக்குச் செண்டுதாள இசை தரும் கலைஞரும் ஆடலில் ஈடுபட்டுள்ளமை சிறப்பாகும். 

சென்னம்பூண்டிக் குடக்கூத்துச் சிற்பத்தில் கூத்தரின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக நிற்கும் ஆடவர்கள் தோளில் சாய்த்துப் பிடித்திருக்கும் பொருளை இன்னதென அடையாளப்படுத்தக்கூடவில்லை. இடப்புறத்துள்ளவரின் இடக்கை அந்தப் பொருளைப் பிடித்திருக்க, வலக்கை கூத்தைப் போற்றி மகிழுமாறு அமைந்துள்ளது. வலப்புறத்தார் வலக்கைப் பொருளைத் தோளில் சாய்த்து, இடக்கையை இடையருகே கொண்டுள்ளார். 

முடிவுரை 
தமிழ்நாட்டுக் கோயில்களில் கண்டறியப்பட்ட 36 குடக்கூத்துச் சிற்பங்களின் ஆய்வு வழிச் சிலம்பு அறிமுகப்படுத்தும் பதினோராடல்களில் ஒன்று தமிழ்நாட்டுச் சமூகத்தில் முற்சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கை அறியமுடிவதுடன், அக்கூத்தின் நிகழ்முறை, அதை நிகழ்த்திக் காட்டிய கலைஞர்களின் புனைவு, கண்ணன் தொடர்பான தொன்மங்கள் மக்களிடையே பரவியிருந்த வகைமை, தமிழ்நாட்டுச் சிற்பிகள் கலைவடிவங்களுக்கு அளித்த சிறப்பிடம், குடக்கூத்திற்குப் பயன்பட்ட இசைக்கருவிகள் ஆகியவற்றையும் தெரிந்துணர இயல்கிறது. கண்ணனோடு தொடர்புடைய இக்கூத்துத் தமிழ்நாட்டின் சைவக் கோயில்களிலேயே பெருமளவிற்காய்ப் படம்பிடிக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்க சிறப்புக் கூறாகும்.

குறிப்புகள்
1.    இத்தொன்மம் பற்றிய விரிவான தரவுகளுக்குக் காண்க: ஸ்ரீகூர்ம புராணம், வாசு பிரசுரம், சென்னை, 1969, பக். 244-247, ஸ்ரீவிஷ்ணு புராணம், பிரேமா பிரசுரம், சென்னை, 1969, பக். 413-418.

2.    நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு, 1981, ப. 141.

3.    மேலது, பக். 50, 44. கண்ணன் வாணனை அழித்தமை குறித்துப் பாடும் பெரியாழ்வார் ‘மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதிபாய சுழற்றிய ஆழிவல்லான்’ என்கிறார். மேலது, ப. 3.

4.    சிலப்பதிகாரம், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு, 1985,          ப. 191.

5.    அபிதான சிந்தாமணி மூன்று இடங்களில் இத்தொன்மம் பற்றிய தரவுகளைத் தருகிறது. அநிருத்தனைக் கண்ணனின் பெயரனாகவும் பிரத்யும்நனின் மகனாகவும் சுட்டி பாணாசுரன் மகளை உஷை என்று ஓரிடத்தில் (ப. 55) குறிப்பிடும் இந்நூல், மற்றோர் இடத்தில் (ப. 448) கண்ணன் அநிருத்தன் பொருட்டு பாணாசுரனை கர்வபங்கம் செய்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. முற்பிறப்பில் மன்மதனாக இருந்தவனே மறுபிறப்பில் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் பிரத்யும்நனாகப் பிறந்ததாகப் பிறிதோரிடத்தில் (ப. 1122) பதிவுசெய்யும் இந்நூல் பாணாசுரனை வாணாசுரன் என்றும் குறிப்பிடுகிறது. சிலம்பின் உரை சோ என்ற பெயரில் சுட்டும் பாணாசுரன் தலைநகரை இந்நூல் சோணிதபுரம் என்றழைக்கிறது. 

6.     இரா. கலைக்கோவன், குடக்கூத்தும் குழு நடனமும், தினமணி கதிர், 19. 3. 1989, பக். 4-6; சிலம்பின் வரிகளுக்குச் சிற்பச் சான்றுகள், தினமணிகதிர், 19. 8. 1990, பக். 28-29. மு. வீராசாமி, சோழமண்டலக் குடக்கூத்து, தினமணி கதிர், 30. 9. 1990. திருமால்பூர், பேரங்கியூர், திருநாவலூர், கீழுர்க் கோயில்களின் குடக்கூத்துச் சிற்பங்களை அறியச்செய்த ஆய்வாளர்கள் திரு. சு. சீதாராமன், செல்வி க. இலட்சுமி இருவரும் நன்றிக்குரியவர்கள்.  

7.    தஞ்சாவூர்: ஐயாறப்பர் கோயில் - ஐயாறு, ஆபத்சகாயேசுவரர் கோயில் - ஆடுதுறை, சடையாரிக்கோயில் - திருச்சென்னம்பூண்டி, சிவன்கோயில் - கூகூர், உமாமகேசுவரர் கோயில் - கோனேரிராஜபுரம், சொன்னவாறு அறிவார் கோயில் - குத்தாலம், சக்திவனேசுவரர் கோயில் - திருச்சத்திமுற்றம், இராஜராஜீசுவரம் - தஞ்சாவூர், கோடீசுவரர் - திருக்கோடிக்கா, கல்யாணசுந்தரேசுவரர் - நல்லூர்.

    திருச்சிராப்பள்ளி: விஷமங்களேசுவரர் கோயில் - துடையூர், சப்தரிஷீசுவரர் கோயில் - தவத்துறை, விஷ்ணு கோயில் - கொற்றமங்கலம், பெருமுடிஈசுவரர் கோயில் - பெருமுடி, அமலீசுவரர் கோயில் - கோபுரப்பட்டி, தாமரைக்கண்ணர் கோயில் - திருவெள்ளறை, எறும்பீசுவரம் - எறும்பியூர். எறும்பியூர்க் கோயிலில் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாக் காட்சியாக நான்கு குடக்கூத்துச் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாகின்றன.

    பிறமாவட்டங்கள்: விழுப்புரம்: சிவன்கோயில் - உலகபுரம், சிவலோகநாதர் கோயில் - கிராமம், திருமூலநாதர் கோயில் - பேரங்கியூர், திருத்தொண்டீசுவரம் - திருநாமநல்லூர், வீரட்டானேசுவரம் - கீழையூர். வேலூர்: வில்வநாதேசுவரர் கோயில் - திருவல்லம், கோனார்கோயில் - திருமால்பூர். சிவகங்கை: திருத்தளிநாதர் கோயில் - திருப்புத்தூர். அரியலூர்: அவனிகந்தர்ப்ப ஈசுவரகிருகம் - கீழையூர், ஆலந்துறையார் கோயில் - சிறுபழுவூர், சிவன்கோயில் - கண்டராதித்தம். தருமபுரி: மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில் - தருமபுரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com