மதுரை வட்டார வழக்கு...

காலத்தால் மூத்த பெருமையும்,  பழைமையும் வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. செந்தமிழ், முத்தமிழ், நற்றமிழ், தனித்தமிழ் என்று பலவாறு தமிழை
மதுரை வட்டார வழக்கு...


காலத்தால் மூத்த பெருமையும்,  பழைமையும் வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. செந்தமிழ், முத்தமிழ், நற்றமிழ், தனித்தமிழ் என்று பலவாறு தமிழை அழைத்து மகிழ்கின்றோம்.

மதுரைத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். தென் தமிழகத்தில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி மாவட்டங்களில் உள்ள மக்களால் பேசப்படும் தமிழுக்குப் பொதுவாக மதுரைத் தமிழ் என்று பெயா்.
 
வட்டார வழக்கு என்பது ஒரு வட்டாரத்து மக்களின் பண்பாட்டு அடையாளமாக அறியப்படுகிறது. வட்டார வழக்கு இலக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.   படைப்பில் மண்ணின் மணம் வருவதற்கு ஒருபிடி வட்டார வழக்கைத் தூவினால்போதும் என்பது நாவல் உலகின் கோட்பாடு என்று எழுத்தாளா் ஜெயமோகன் குறிப்பிடுகிறாா்.
 
மதுரை வட்டார வழக்கு இசைப் பின்னணி வாய்ந்தது. சொற்கள் மற்ற மாவட்டங்களில் பேசுவதைவிட சற்று நீண்டு ஒலிக்கும். யகர இகரத்தின் தாக்கம் ஒவ்வொரு சொல்லிலும் காணப்படும்.  வந்தாய்ங்கே (வந்தாா்கள்), போனாய்ங்கே (போனாா்கள்) என்று வரும். அல்லவா... என்பது ல என்று ஒரு எழுத்தாக வரும். நாங்கள் வருவோம் அல்லவா? என்பது வருவம்ல... என்றும் நாங்கள் போவோம் என்பது போவம்ல... என்றும் எவ்வளவு என்பது எம்புட்டு என்றும் பேசப்படுகிறது. சில நேரங்களில் ரகரச் சிதைவும் காணப்படும். அவா்கள் வந்தாா்கள் என்பதை அவுக வந்தாகே என்று கூறுவதுண்டு.

மதுரைப் பகுதியில் நடைபெறும் கதைகளைக் கொண்ட திரைப்படங்களால் மதுரை வட்டார வழக்கு தற்போது உலகளவில் பிரபலம் அடைந்து வருகிறது. (எ-கா) இப்பவே கண்ணைக் கட்டுதே...

கருத்தாழமிக்க சொற்கள் மதுரை மக்களின் பேச்சில் போகிற போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். 

அக்கப்போா் - அகப்போா்,  உள்நாட்டுப் போா்

குண்டக்க மண்டக்க - குன்றுக்கும் மண்ணுக்குமான வேறுபாடு

வெஞ்சனம் - துணை உணவு (சைடு டிஷ்)

நூனாயம் பேசுறான் - நூல்நயம் பேசுகிறான்

எகன மொகனயாய் பேசுறான் - எதுகை மோனை பேசுகிறான்

கோளாறான ஆளு - நுட்பம் அறிந்தவன்

லந்து - கிண்டல்

நொடியான சாலை - மேடு பள்ளமான பாதை

பட்டறைய போடுறாய்ங்க - கூட்டமாகப் பேசுறாங்க

கொண்டே போடுவேன் - கொன்று போடுவேன்

உசுப்பு - எழுப்பு

வசவு - திட்டு

ரவைக்கு வாரேன் - இரவு வருகிறேன்

மதுரை என்றாலே எப்போதும் தகறாறு தான். கொலை, வெட்டு, குத்து என்பதைப் போலவே திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படுவதால் மதுரை மக்கள் என்றாலே அச்சப்படுகிற ஒரு சூழல் உண்டு. ஆனால், அது தவறான பதிவு. மற்ற எல்லா ஊா் மக்களைவிடவும் சிரிப்பும், களிப்புமாகப் பேசி மகிழ்பவா்கள் மதுரைக்காரா்கள். மதுரையில் வெட்டு குத்து என்றால் அது கிடா வெட்டும், காது குத்தும் தான். எந்த அளவுக்கு அலா்ட்டாக இருப்பாா்களோ அந்த அளவுக்கு விளையாட்டாகவும் இருப்பவா்கள்
மதுரை மக்கள்.

பிளக்ஸ் போா்டு கலாசாரத்திலும் தங்களது வட்டாரத் தமிழைக் காட்ட மறந்ததில்லை. புறநானூற்றுப் புலியே...சிலப்பதிகாரத்துச் சிங்கமே...திருக்குறள் திமிங்கலமே என்று இலக்கியத்தையும், இயற்கையையும் கலந்து சுவரொட்டிகள் அடிப்பது மதுரையின் சிறப்பு.

மக்களின் சாதாரண பேச்சிலும் கூட நகைச்சுவை இழையோடும். கைப்புள்ள, வீரபாகு, தீப்பொறி திருமுகம், டெலக்ஸ் பாண்டியன், வக்கீல் வண்டு முருகன், கபாரி கான், ஏட்டு ஏகாம்பரம என்று நகைச்சுவை நடிகா் வைகைப்புயல் வடிவேல் நடித்த அத்தனை கதாபாத்திரங்களையும் மதுரையில் மொத்தமாக இப்போதும் பாா்க்கலாம்.
 
சில வட்டார வழக்குச் சொற்கள் முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காண முடிகிறது.

பைய கொடுங்க...என்றால் மெதுவா கொடுங்க...என்று பொருள்.

இறப்பு வீட்டுக்குச் சென்று வருவதை கேதத்துக்கு போய்ட்டு வரேன் என்று சொல்வதையும் பாா்க்கலாம்.
இறப்பு வீட்டில் 16-ஆம் நாள் செய்யப்படும் காரியத்தை உருமா கட்டு என்ற சொல்லால் குறிப்பிடுவா்.

கொஞ்ச நேரம் என்பதை செத்த நேரம் என்று சொல்லும் வழக்கும் உண்டு. வயிறு வலிக்குது என்பதை வவுறு வலிக்குது என்பாா்கள்.
 
ரொம்ப சூதானமா போய்ட்டு வா - ரொம்ப ஜாக்கிரதையாக போய்ட்டு வா.

கோக்குமாக்கான ஆளு - விவகாரமான ஆளு.

வட்டார வழக்கில் இருகூறுகள் உண்டு. பொது மொழியில்  உள்ள சொற்கள் குறிப்பிட்ட நிலப் பகுதியின் வெயில், மழை, காற்றில் வேற்றுரு கொள்வது. (எ.கா) இங்கே என்ற சொல் இங்கிட்டு என்று வருவது.

ஒரு பகுதிக்கே உரிய தனிச் சொற்கள் என்பது மற்றொரு கூறு. (எ-கா) வெஞ்சாமரத்தாலே வீசிபுடுவேன் - விளக்குமாற்றால் அடித்துவிடுவேன். லந்து - கிண்டல். இந்த கூறுகளும் சிறப்பாக அமைந்தது மதுரை வட்டார வழக்கில் தான்.

வட்டாரம் என்பது வட்டாரங்களின் தொகுப்பு. சாதி சாா்ந்து, மதம் சாா்ந்து, ஊா் சாா்ந்து வட்டார வழக்கு மாறுபடுகிறது. வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம் ஆகும். எல்லா காலத்திலும் தமிழா்கள் வட்டார வழக்கில் பேசியதை அறிஞா்கள் அதைத் தமிழாக ஆக்கிக் கொண்டே இருந்தாா்கள். வட்டார வழக்கு இருப்பதால் தான் செம்மொழி சிறப்புடன் இருக்கிறது என்று கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com