பழந்தமிழ் எழுத்துகள் -  மீளாய்வு

பழந்தமிழ் ஆய்வுக்குத் தமிழ், இலக்கணம், வரலாறு சார்ந்த ஆய்வாளர்கள் பொதுவாக சான்று காட்டுவது ஈரோடு மாவட்டம், பெருந்துறை
பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள்
பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள்

இந்திய நாட்டின் தொன்மை எழுத்துகள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் மீதான ஆய்வுகளும் ஐரோப்பியர்களால் முன்னெடுக்கப்பட்டு, தொடர்ந்து 150 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.            

மதுரை மாவட்டத்தைச்  சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை கிடைக்கப்பெற்ற பழந்தமிழ்க் கல்வெட்டுகளும்,  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புள்ளிமான்கோம்பை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனித்துவம் பெற்ற தமிழ்க்  கல்வெட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பொருந்தல் அகழாய்வுக் கண்டுபிடிப்புகளும்,  சிவகங்கை  மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அகழாய்வுகளின் வாயிலாக அண்மையில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் கண்டுபிடிப்புகளும் தமிழர்களின் பண்பாட்டுடன் அவர்கள் பழக்கப்படுத்திக்கொண்ட  எழுத்துகளின் தொன்மையினைப் பறைசாற்றுவதாக அமைகின்றன.  தமிழ் 2500 ஆண்டுகள் பழமையானது என்பதால்  செம்மொழியானது.  எனினும்,  பழந்தமிழ் எழுத்து அல்லது தமிழ்-பிராமி எழுத்தின் பிறப்பு அல்லது தோற்றம் குறித்து ஆய்வாளர்களால் இருவேறு கருத்துக்கள் இன்றளவும் நிலவுவது தொடர்கிறது.  ஒருசாரார் இவ்வெழுத்துகள் வட இந்தியாவிற்கு உரியது எனவும், மற்றொரு சாரார் இவை தென்னிந்தியாவைச் சார்ந்தது எனவும், தமிழகத்திற்கே உரியது என்றொரு சாராரும் விவாதம் கொண்டுள்ளதை யாவரும் அறிந்ததே. ஒருவழியாக தமிழகத்தில் காணப்படும் பிராமி எழுத்துக்கள், தமிழ்-பிராமி, தமிழி, தமிழ் எழுத்து என ஒருமித்த கருத்தினை எட்டிய நிலையில் இவ்வெழுத்து தமிழகத்துக்கு உரித்தானது என்றாலும் கூட இதனைத் தமிழர்களுக்குப் பழக்கப்படுத்தியவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த  பிராகிருத மொழிப் புலமைப் பெற்றிருந்த வட இந்திய வணிகர்களே என்னும் கருத்து ஒன்றும் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதற்கு மாற்றுக் கருத்துகளும் ஆய்வாளர்களிடையே இருந்து வருவதை அறிகிறோம்.  தமிழ்நாட்டின் தொன்மை எழுத்துகளின்  ஆய்வில் ஐராவதம் மகாதேவன், எ. சுப்பராயலு, நடன. காசிநாதன், எம்.டி. சம்பத், இரா. மதிவாணன், கா. ராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள் ஆவர்.  மேலும் கொடுமணல் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்களின் கட்டுரைகளும் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. 

பழந்தமிழ் ஆய்வுக்குத் தமிழ், இலக்கணம், வரலாறு சார்ந்த ஆய்வாளர்கள் பொதுவாக சான்று காட்டுவது ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கி.மு.3 - கி.பி.2ஆம்  காலத்திய  பழந்தமிழ் எழுத்துப்பொறித்த மண்கலச்சில்லுகள் ஆகும்.  தென்னிந்தியாவிலும்  பிராகிருத மொழி சிறப்பாக பேசப்பட்ட வடஇந்தியாவிலும்  இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெறாத அளவில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணலில் கிடைத்திருப்பது தனிச்சிறப்பு (கட்டுரையாளர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கொடுமணல் அகழாய்வுகளில் முழுவதுமாகப்  பங்கு பெற்றவர்).  இவ்வெழுத்துப் பொறிப்புகளைக் கொண்டு தமிழகத்தில் அக்காலத்தில் எழுத்தறிவு, கல்வியறிவு சிறப்பாக இருந்தது எனக் கருதப்படுகிறது.  எனினும்,  இவ்வெழுத்துகள் தமிழர்களுக்குரியதா? என்பதில் ஒருமித்த கருத்து இன்று வரை நிலவவில்லை.  இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது ஆய்வாளர்களின் கடமையாகும். 

மண்கல எழுத்துகளில் பிராகிருத மொழிக் கலப்பு இருப்பதானல் மட்டுமே இதனைப் பிராகிருத மொழி பேசுபவர்கள் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர் என்பது ஏற்கக்கூடிய வாதமாகாது.  அவ்வாறாயின் சங்க இலக்கியங்களைப் பிராகிருத மொழிப் புலமை பெற்றவர்களே படைத்திருக்க வேண்டும்.   இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.  மேலும், தமிழர்கள் பிற்காலங்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் களைந்துவிட்டனர் என்பதும் ஏற்கத்தக்கதல்ல.  ஒரு மொழியுடன் முழுமனதுடன் ஒட்டி உறவாடிவிட்டு உடனடியாக அதை மனப் பயன்பாட்டிலிருந்து அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. 

தமிழர்கள் செய்த மண்பானைகள் சுடப்பட்ட பின்பு அவற்றில் பிராகிருத மொழிக்குரிய வட இந்திய வணிகர்கள் பிராமி எழுத்துக்களில் உரியவர்களின் பெயர்களை எழுதி வைத்தனர் என்ற வாதமும் ஏற்கக்கூடியதல்ல.  காரணம், மட்பாண்டத் தொழில்நுட்பத்தை வட இந்திய வணிகர்கள் தெரிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.  ஆனால், வணிகர்களான அவர்கள் மட்பாண்டத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களல்ல.  அவ்வாறு  பயிற்சி பெற்றிருந்தால் அவர்களது தாய் பூமியில் மண்கல எழுத்துப் பொறிப்புகள் தமிழகத்தைக் காட்டிலும் ஏராளமாகக் கிடைத்திருக்க வேண்டும்.   ஆகவே,  வட இந்திய வணிகர்கள் கொடுமணலுக்கு அரிய கல்வகைகளைக் கொண்டு வந்து தருபவர்களாகவும் கல்மணிகள் தயாரிக்கும் தொழில்  சார்ந்த கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்பவர்களாகவும் மட்டுமே செயல்பட்டுள்ளனர் எனக் கொள்வதே சிறப்பு.  அவ்வாறு கொடுமணல் வந்துசென்ற (ஒரு சிலர் இங்கேயே தொடர்ந்தும் தங்கியிருந்திருக்கலாம்)  வணிகர்கள் உள்ளூர் மட்பாண்டத் தொழிலார்களுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தமையால் இவர்களது பிராகிருதப் பெயர்களும் சொற்களும் கலந்திருக்கிறது என்பதும்,  தமிழகத்தில் சாதாரண மக்களும் அக்காலத்தில் எழுத்தாற்றல் கொண்டு விளங்கினர் என்பதும் ஏற்கவேண்டிய நிலையாகும்.  எனவே, உறவின் வாயிலாகவே பிராகிருதம் தமிழ் எழுத்துகளோடு கலந்துள்ளன என்பதில் ஐயமில்லை.

கொடுமணலில் கிடைத்துள்ள மண்கலங்களில் நீண்ட வாசகங்களைக் கொண்ட பொறிப்புகளும் காணப்படுகின்றன.   இவற்றில் வட இந்தியப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்றவை (Mahalingam, 1967) கொடுமணல் மண்கலப் பொறிப்புகளில் காணப்படுவதால் இத்தகைய சிறப்பு எழுத்துகளை எவ்வாறு வட இந்திய வணிகர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருக்க முடியும்.  எனவே,  பழந்தமிழ்  எழுத்துகள் தமிழர்க்கே உரியவை என்பது தெளிவு.

மண்கலப் பொறிப்புகளில் காணப்படும் பல பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன என்பதும், எகிப்து, செங்கடல் பகுதியிலுள்ள பெரநிகே என்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற மண்கலப் பொறிப்புகளான “கொற்பூமான்” (Steven  Sidebotham, 1996) மற்றும் காசிர் அல் கதிம்   என்ற இடத்தில்  கிடைக்கப்பெற்ற மண்கல எழுத்துக்கலான “பனைஓறி”,  தாய்லாந்தில் ஃபுகாவ் தங் என்ற இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்கலப் பொறிப்புகளான “துறஓ(ன்)”  போன்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாகக் கிடைத்திருப்பதும் இவை கொடுமணல் எழுத்துகளின் காலத்தைச் சேர்ந்தவை என்பதும் இங்கு சுட்டத்தக்கதாகும்.

தேனி மாவட்டம், புள்ளிமான்கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்தமைதியைக் கொண்டு கி.மு. 4ஆம் நூற்றாண்டினைச் (கொடுமணல் மண்கல எழுத்துகளைக் காட்டிலும் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முந்தையது) சேர்ந்த கல்வெட்டுகளில் எவ்வித மொழிக்கலப்பும் இல்லாத சொற்கள் காணப்படுவதிலிருந்து, இந்தியாவில் அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழன் தனக்கென சுயமாக எழுத்துக்களைப் பெற்றிருந்தான் என்பதும் அதுவே பழந்தமிழ் எழுத்து என்பதும் மிகத்தெளிவு. பிற்காலங்களில் தமிழகப் பகுதிக்கு வந்துசென்ற பிற மொழியாளர்களால் தமிழ் மொழிக் கலப்பு கண்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.

மண்கல எழுத்துப் பொறிப்புகளிலும் பாறை எழுத்துப் பொறிப்புகளிலும் ஒரே மாதிரியான சில பிராகிருதப் பெயர்கள் காணப்படுகின்றன என்பதையும் கல்வெட்டுகளில் மட்டும் அப்பிராகிருதப் பெயர்கள் தமிழ் மயமாக்கப்பட்டுள்ளன என்பதையும் ஏற்க முடியாது.  கல்வெட்டுகள் பொதுவாக அரசு/அரசனின் கட்டுப்பாட்டில் வெளியிடப்படுபவை.  அதனால் வணிகர்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதில்லை.  அதேவேளையில் மண்கலப் பொறிப்புகள் சாதாரண மக்களுடன் தொடர்புடையதால் பிரகிருத ஆதிக்கம் மேலோங்கி  இருக்கிறது. 

பானைகளில் எழுதும் பழக்கத்தை வட இந்திய வணிகர்கள் கற்றுத் தந்தார்கள் எனில்,  அகழாய்வு மண்ணடுக்குகளில் காணப்படும் எழுத்துகளுக்கு முந்தைய நிலையான குறியீடுகளைப் பானைகளில் பொறித்துள்ளதைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்?  மேலும், மண்கலப் பொறிப்புகளாகக் காணப்படும் குறியீடுகளை இரா.  மதிவாணன் (2010) சிந்துவெளிக் குறியீட்டு எழுத்துகளாகப் பார்ப்பதும் இங்குச் சிறப்பாகச் சுட்டத்தக்கதாகும்.  சில மண்கலச் சில்லுகளில் குறியீடுகளுடன் தமிழ் எழுத்துக்கள் சேர்ந்து வருவதும் நோக்கத்தக்கதாகும்.  காட்டாக,  கொடுமணல் மண்கலச் சில்லு ஒன்றில் “கோன்” என்பதுடன் குறியீடு வருவதைப்  பார்க்கலாம்.  மேலும் பழனிக்கு அருகிலுள்ள பொருந்தல் அகழாய்வில் (ராஜன், 2009) கிடைக்கப்பெற்ற கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்ணினாலான பிரிமனையில் (ring stand - பானை சாயமால் இருக்கப் பயன்படுத்தப்படுவது)  ‘வய்ர’  என்றும் அருகில் மணி (பாசி) கீறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  இது குறியீடாக இருக்கலாம் என்பது ஒருசிலர் கருத்து.  எனினும் பிரிமனையை நோக்கும்போது இது ஒரு விவரக்குறிப்பாக (label) இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  அதாவது, இப்பிரிமனையின் மேல் வைக்கப்பட்டுள்ள பானையில் உள்ளது வைரமணிகள் (வைரக் கற்களால் செய்யப்பட்ட பாசிகள்) என்பதை வாங்குபவர்களுக்கு உணர்த்துவதற்காகவே மணி குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது மேலும் ‘வய்ர’ என்பதின் முதல் எழுத்தான ‘வ’  குறியீடு போல கலைநயத்துடன் கீரப்பட்டுள்ளமை வைரம் என்பதை உணர்த்துவதற்காகவே.  குறிப்பாக பிராகிருத மொழி பேசும் அல்லது தமிழ் தெரியாத வணிகர்கள் படித்தறிந்து புரிதலில் சிக்கல் இருந்ததால்தான் எழுத்துகளுடன் கீறல் உருவங்களும் காணப்படுகின்றன.  வைரமணிகள் கிடைக்கப்பெறாது வைரம் போன்ற கண்ணாடி மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்தமை  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மண்கலங்களில் அல்லது பாறைகளில் எழுத்துகளைப் பொறிக்கத் தமிழர்களுக்கு வேறு  யாரும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதும் தமிழ் தனக்கெனத் தனியாக எழுத்து முறைகளைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகும்.

துணை  நூற்கள்:
Kasinathan, Natana. (2010), “The Origin of Prakrit Language and its usage in early Tamil Epigraphs”, Paper presented in the National Seminar on  The Origin and Development of writing systems in India: Recent Archaeological Discoveries and New Perspectives,  Jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur and CICT, Chennai, Feb. 22-24,2010.

Mahadevan, I. (2003), Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D.,Cre – A, Chennai.

Mahalingam, T.V. (1967), Early South Indian Palaeography, University of Madras, Madras.

Mathivanan, R. (2010), “Tamil Script of Pre-Sangam Period – Recent Findings”, Paper presented in the National Seminar of  The Origin and Development of writing systems in India:  Recent Archaeological Discoveries and New Perspectives, Jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology,  Tamil University, Thanjavur and CICT, Chennai, Feb.  22-24,2010.

Sampth, M.D. (2010), “Brahmi and Megalithic Culture”, Paper presented in the National Seminar on The Origin and Development of writing systems in India :  Recent Archaeological Disccveries and New Perspectives, jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur, Thanjavur and CICT, Chennai, Feb.22 – 24, 2010.

Steven Sidebotham and Willemina Wendrich (1996), Berenike 95: Preliminary Report on the Excavation of Berenike, Leiden.

சுப்பராயலு, எ.  (2008), “ மண்கல தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள்”,  ஆவணம் – 19, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.

ராஜன், கா. (2009), “பொருந்தல் அகழாய்வு – செய்திக்குறிப்பு”, ஆவணம் – 20, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com