வாய்மொழியில் உள்ளது தாய்மொழி வளர்ச்சி

அரிசியில், பருப்பில் கலப்படத்தை விரும்பாத நாம், நம் தமிழ்மொழியில் பிறமொழிகளின் கலப்படத்தை எப்படியோ ஏற்றுக்கொள்கிறோம். தமிழுக்குத்
வாய்மொழியில் உள்ளது தாய்மொழி வளர்ச்சி

அகரம் கற்றுத் தந்தபோதே அறத்தைக் கற்றுத் தந்த மொழி நம்மருமைத் தமிழ்மொழி. தமிழ் என்றால் இனிமை! தமிழ் என்றால் அழகு! பேசவும் கேட்கவும் இனிமையான மொழி நம்மருமைத் தமிழ்மொழி! தமிழ் என்றால் தனித்தன்மை வாய்ந்த செம்மொழி எனும் பொருள் உண்டு. 

தமிழ் மொழியில் வரும் ‘ழ’ கரம் அழகான உச்சரிப்பு தரும் தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாகும்.  தமிழ்மொழி என்று சொன்னவுடன் நம் மனமெங்கும் மகிழ்வலைகள்.  

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி நம் தமிழ்க்குடி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய இலக்கண நூல்களை உடைய மிகப்பழைய குடியும் நம் தமிழ்க்குடிதான். வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பரந்துவிரிந்த நிலப்பரப்பு தமிழர்களுடையது.  

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும், கீழடி அகழ்வாராய்ச்சியும் தமிழர்களின் ஆதி நாகரிகத்தை, பண்பட்ட மூத்த நாகரிகத்தை இன்றும் உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.  ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கு உதவி செய்யும் மொழி, பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. 

மொழி பழைமையான ஓர் இனத்தின் வாழும் அடையாளமாகவும் திகழ்கிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக்காட்டும் பேச்சு மொழியால் நிகழ்கிறது. ஓர் இனத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினம் பேசும் மொழியை அழித்தால் போதும். மொழியிழத்தலும் விழியிழத்தலும் ஒன்றுதான். ஓர் இனத்தை வளர்க்க வேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியைக் காக்கவேண்டும். 

உலகில் ஏழாயிரம் மொழிகள் இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள மொழிகள் ஏழுமொழிகள்தான், அதில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி எனும் சிறப்பிடம் பெறுகிறது. மலையாளம், தெலுங்கு, துளு, கன்னடம் போன்ற மொழிகளின் தாயாக அமையும் தமிழ், என்று பிறந்த மொழி என்று சொல்லமுடியா அளவு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது. 

தமிழால் தமிழர்களை ஒன்றிணைக்கவேண்டும் என்று விரும்பிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சொல்லி , நாம் தமிழர் எனும் இயக்கத்தைத் தொடங்கித் தமிழுணர்வை ஊட்டினார்.

திருக்குறள் மூலம் தமிழர்களுக்கு அறநெறியும் மொழியுணர்வும் உருவாக்கலாம் என்று எண்ணி, தமிழக சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றபின் தினமும் திருக்குறளை வாசித்து அவை அலுவல்களைத் தொடங்கினார். குறளின் குரல் இன்று உலகம் முழுக்க ஓங்கி ஒலிக்க அன்றே வழி செய்தார். இன்று உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் திருக்குறள், சீன மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழியின் விழியில் நம் வாழ்வின் எதிர்காலம் உள்ளது.  

சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ்ச்சங்கங்களை உருவாக்கித் தமிழ் வளர்த்தனர். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இலங்கையிலும் கனடாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகளைத் தொடங்கித் தங்கள் தாய்மொழியான தமிழ்மொழியைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகின்றனர்.  தங்கள் தாய்மொழியின் தொடர்பு, தங்கள் பிள்ளைகளுக்கு அறுந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் தமிழ்ச் சங்கங்களையும் தமிழமைப்புகளையும் தொடங்கி தனிப் பாடத்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகின்றனர். தமிழ் மொழி காக்கத் தங்கள் இன்னுயிர் தந்த மொழிப்போர்த் தியாகிகளால் நம் தாய்மொழி இன்னும் உயிர்ப்போடிருக்கிறது. 

அரிசியில், பருப்பில் கலப்படத்தை விரும்பாத நாம், நம் தமிழ்மொழியில் பிறமொழிகளின் கலப்படத்தை எப்படியோ ஏற்றுக்கொள்கிறோம். தமிழுக்குத் தரவேண்டிய இடத்தை நாம் ஏன் வேறு மொழிகளுக்குத் தரவேண்டும்? தாய்ப்பாலாகத் நம் தமிழ்மொழி இருக்க, புட்டிப்பாலை நோக்கித் தமிழ்க் குழந்தைகள் ஏன் நகரவேண்டும்? தமிழ்மொழியை நாங்கள் கற்க விரும்புகிறோம் என்று சீன மாணவர்கள், தொல்காப்பியத்தையும் நன்னூலையும் படித்துக்கொண்டிருக்க, நாமோ ‘இந்த வளாகத்தில் தமிழில் பேச அனுமதி இல்லை’ என்கிற அறிவிப்புப் பலகையைத் தமிழ்நாட்டில் அனுமதித்திருக்கிறோம். நம் வாய்மொழியில்தான் உள்ளது தாய்மொழியின் வளர்ச்சி. அதனால்தான் ‘செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம்’ என்றார்கள் நம் முன்னோர்கள். என் மொழி செம்மொழி! , என் மொழி நன்மொழி! அதை எந்தநாளும் காத்திடுவேன் என்கிற உணர்வு வந்துவிட்டால் தாய்மொழி காக்கும் வல்லமையை நாம் பெறுவோம். 

தமிழே எங்கள் அடையாளம், அடையாளத்தை அழித்தல் நம்மையே அழிப்பதைப் போன்றதுதான். மொழியின் வழியில் நாளும் நடக்கும் பணியை நம்மிடமிருந்தே தொடங்குவோம்! நம் குழந்தைகளுக்குத் தமிழின் சிறப்பை ஆழமாக உணர்த்துவோம், நல்ல தமிழ்ச் சொற்பொழிவுகளைக் கேட்க வைப்போம். நல்ல தமிழில் பேசச்சொல்லிப் பிழைகளைத் திருத்துவோம். நாம் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கவேண்டும். எல்லோரிடமும் தமிழிலேயே பேசுவோம். நல்ல தமிழ் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தை வீடுகளில் தொடங்கி, நாமும் படித்து நம் குழந்தைகளுக்கும் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவோம். தினமும் ஒருபக்கமாவது தமிழில் எழுதுவோம். அதனால்தான் ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே’ என்று பாவேந்தர் பாடினார். அவர் கண்ட கனவு, “ எளியநடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று அமைந்தது. 

உலகில் புதிதுபுதிதாய்  உருவாகும் துறைகள் குறித்த தமிழ்நூல்கள் உடனுக்குடன் எழுதப்படவேண்டும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே பேருதவி புரிகிறது. தமிழ்வழிக் கல்வி தமிழகம் முழுக்கப் பரவவேண்டும்.  தாய்மொழியைப் போற்றிய நாடு வீழ்ந்ததில்லை, தமிழ்மொழியைக் கற்றதாலே வீழ்ச்சியில்லை.  

தேன்தமிழென்றும், இன்பத்தமிழென்றும், அன்னைத் தமிழென்றும், அருந்தமிழென்றும், ஞானத் தமிழென்றும், தீந்தமிழென்றும் என்றும் நற்றமிழென்றும் போற்றப்படும் நம் அன்புத் தமிழைக் கற்றால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சில் தூய்மை  உண்டாகிவிடும்! வீரம் வரும்” என்று பாவேந்தர் கூறியது நடந்தே தீரும். அன்னைத் தமிழை நேசிப்போம், அருந்தமிழ் மொழியைச் சுவாசிப்போம். தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் பரப்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com