மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல்: ராமதாஸ் கண்டனம்
By | Published On : 05th March 2010 02:48 PM | Last Updated : 20th September 2012 01:17 PM | அ+அ அ- |

சென்னை, மார்ச் 5- மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதலில், தொலைக்காட்சியின் அலுவலகம் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. விலை உயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதமடைந்துள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுக்கப்பட்டன. தொலைக்காட்சியின் பெண் ஊழியர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பல ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து மற்றவர்களை விட அதிகம் பேசி வருபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதற்கு மாறாக இன்று அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கியிருப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் நடத்தி வருகிற வன்முறை கலாச்சாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயக ரீதியில் மறுப்பு அறிக்கை வெளியிடலாம்.
சம்பந்தப்பட்ட செய்தி வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மக்கள் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு, மறுப்பு அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவ்வாறு மறுப்பு அறிக்கை வெளியிட்டால் அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக தொலைக்காட்சியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகை சுதந்திரத்திலும், கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் இந்த தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.