தூத்துக்குடி, நவ. 3: இந்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இச்சங்கத்தின் பொதுச்செயலர் க. நேருபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு கடன்களுக்கான வட்டியை சமீபத்தில் 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும். இந்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை இந்த ஆண்டில் 13-வது முறையாக உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி விகித உயர்வினால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியும் தடைபட்டுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதில் பின்னடைவு ஏற்படும். மூலப்பொருள்களின் விலையேற்றம், மின் வெட்டு, பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏற்கனவே சிறு தொழில்கள் தடுமாறி வருகின்றன.
இந்நிலையில் வட்டி உயர்வினால் சிறு தொழில்களின் உற்பத்தி திறன் குறைந்துள்ளன. சிறு தொழில்களின் உற்பத்தி திறனை ஊக்குவித்து சலுகைகள் வழங்க வேண்டிய இந்த காலகட்டத்தில் வட்டியை உயர்த்துவது விந்தையாக உள்ளது. இது எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். மேலம், கிராமப்புற தொழில்களை மூடும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது.
உற்பத்தி திறன் இல்லாத வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதுவே பணவீக்கம் உயர்வதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறகு. சிறுசேமிப்புக்கு வட்டியை உயர்த்துவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என கருதுகிறோம். நாட்டின் உற்பத்தி திறனில் 40 சதவீதத்தை சிறுதொழில்கள் நிரப்பி வருவது அனைவரும் அறிந்ததே. மேலும், வேலைவாய்ப்பிலும் 40 சதவீதத்தை சிறுதொழில்கள் தான் வழங்கி வருகின்றன.
புதிய பொருளாதார கொள்கை காரணமாக சீனா போன்ற நாடுகளில் இருந்து மிக குறைந்த விலைக்கு பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றோடு சிறுதொழில்கள் போட்டி போட முடியாத நிலையில் உள்ளன. வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் சிறுதொழில்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்பது அத்தியாவசியமாகும். அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.