தினமணி செய்தி எதிரொலி: ஓராண்டாக தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை அகற்ற ஈரோடு மேயர் உடனடி நடவடிக்கை

ஓராண்டாக தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை அகற்ற ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தார்.
தினமணி செய்தி எதிரொலி: ஓராண்டாக தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை அகற்ற ஈரோடு மேயர் உடனடி நடவடிக்கை
Updated on
1 min read

ஓராண்டாக தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை அகற்ற ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தார்.
 ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 35-வது வார்டு சுத்தானந்தன் நகர் மேற்கு பகுதி இந்திராகாந்தி வீதியில் 5.2.2011-ல் கட்டப்பட்ட சாக்கடை கால்வாயில் ஓராண்டுக்கு மேலாக தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
 இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொடர்ந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசுவதுடன் ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலை உருவானது.
 எனவே, ஓராண்டுக்கும் மேலாக தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டினால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
 இது குறித்து தகவல் அறிந்த மேயர் மல்லிகா பரமசிவம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை உடனடியாக அகற்றினர்.
 இருப்பினும் ஒரு சில இடங்களில் மேடும், பள்ளமுமாக இருந்ததால் பொக்லைன் உதவியுடன் சனிக்கிழமை அகற்றுவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை சம்பவ இடத்துக்கு மீண்டும் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் சாக்கடை நீரை முற்றிலும் அகற்றினர்.
 ஓராண்டுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை  எடுத்த மேயர் மல்லிகா பரமசிவத்துக்கு, 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கவேல் மற்றும் சுத்தானந்தன்நகர் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com