இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்: கொமுக பொதுச்செயலர்

இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கொங்குநாடு முன்னேற்ற கழகப் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
Updated on
1 min read

இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கொங்குநாடு முன்னேற்ற கழகப் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

 சுதந்திரத்தின் போது பின்தங்கிய நிலையில் இருந்த சமூகத்தினரை முன்னேற்றுவதற்காக இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இந்த முறையை 50 ஆண்டுகளுக்குள் தளர்த்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. ஆனால், சுந்திரத்துக்குப்பின்னர் 65 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையிலும் இடஒதுக்கீடு முறையை கைவிட முடியவில்லை.

 வாக்குவங்கியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் கட்சிகள் இடஒதுக்கீடு முறைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்கள் இப்போது வலியுறுத்தி வருகின்றனர்.

 பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கினால் மாற்று சமுதாயங்களை சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

 எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பிளஸ் 2 வரை அனைத்து சலுகைகளும் வழங்கலாம். கல்லூரி படிப்பில் இருந்து திறமைக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து சென்னையில் டிச.22-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

 இக்கூட்டத்தில் கட்டாய கலப்புத் திருமணம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

 பேட்டியின்போது கட்சியின் அவைத் தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன், பொருளாளர் கே.கே.சி.பாலு, தலைமை நிலையச்செயலர் எஸ்.சூரியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com