திருநள்ளாறு அருகே நல்லம்பல் ஏரி மேம்படுத்தும் பணி துவக்கம்

திருநள்ளாறு அருகே நல்லம்பல் ஏரியை ரூ.5 கோடியில் மேம்படுத்தும் திட்டம் இன்று தொடங்கியது.
Published on

திருநள்ளாறு அருகே நல்லம்பல் ஏரியை ரூ.5 கோடியில் மேம்படுத்தும் திட்டம் இன்று தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே உள்ள நல்லம்பல் ஏரி சீர்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்க மத்திய சுற்றுலாத்துறை ரூ.4.98 கோடியை அனுமதித்தது. புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை மூலமாக இத்திட்டம் செயல்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

திட்டம் குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் சுவாமிநாதன் கூறியது:   நல்லம்பல் ஏரி காரைக்காலில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருநள்ளாறு முதல் 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. 31.42 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சுற்றிலும் கரை உள்ளது. இதன் அருகில் நூலாறு உள்ளது.

திருநள்ளாறு வரும் பக்தர்கள், சுற்றுலாவினர் பயன்பாட்டிற்கும், காரைக்காலை சேர்ந்தோர் விடுமுறை நாள்களில் ஏரியை பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஏரியின் நடுவே 70 -க்கு 70 மீட்டர் அளவிற்கு அழகான ஒரு தளம் அமைக்கப்படுகிறது. சுற்றுப்புற சாலை 3.75 மீட்டர் அகலத்திற்கும், இருபுற நடைபாதை 2 மீட்டர் அளவிற்கும் ஏரியை சுற்றிவருவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்தவும், சாலை மற்றும் மின்சார  வசதி உள்ளிட்டவை உருவாக்கப்படுகிறது. இந்த திட்டப்பணி 12 மாதத்தில் செய்து முடிக்கப்படும். குழந்தைகள் பயன்பாட்டிற்கும், ஏரியில் படகுகள் விடுவது உள்ளிட்ட பிற வசதிகளும் அடுத்தகட்டமாக நிதி கிடைத்ததும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com