அரசுப் பேருந்தால் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படாததால் நாமக்கல்லில் கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மசகாலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(30) லாரி ஓட்டுநர். கடந்த 2005 செப்டம்பர் 27-ம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயலமங்கலம் அருகே லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையிலிருந்து ஈரோடு நோக்கி வந்த கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, தனது குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி முருகேசனின் மனைவி சித்ரா, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு ரூ.3.86 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்துக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட செய்த மேல்முறையீடு வழக்கில், நஷ்டஈட்டுத் தொகையை உயர்த்தி ரூ.6.28 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசனின் குடும்பத்துக்கு வழங்கிட வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2011 ஜூலை 11-ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும், நஷ்டஈட்டுத்தொகையை வழங்க போக்குவரத்துக் கழகம் இழுத்தடி செய்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சித்ரா தரப்பில் அண்மையில் நிறைவேற்ற மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.வேலு, கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்துக்கு நஷ்டஈட்டுத் தொகையை வழங்கிட கடந்த டிசம்பர் 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், வெள்ளிக்கிழமை நாமக்கல்லிருந்து ஈரோடு செல்ல நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்தனர். அரசு பேருந்து திடீரென ஜப்தி செய்யப்பட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.