மரணச் சாலைகளாக மாறும் சென்னை பெருநகர சாலைகள்

சென்னை பெருநகரத்தில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்தும்,  அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த
மரணச் சாலைகளாக மாறும் சென்னை பெருநகர சாலைகள்
Updated on
2 min read

சென்னை பெருநகரத்தில் சாலைகளில் கடந்த காலங்களை விட விபத்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகரத்தில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்தும்,  அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு சாலை விபத்தில் 1,505 பேர் இறந்துள்ளனர், 8,197 பேர் காயமடைந்துள்ளனர். இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 1,325 பேர் இறந்துள்ளனர், 7,956 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்தாண்டு இறுதிக்குள் சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கையும், காயமடைந்தோரின் மேலும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

அதற்கு ஏற்றார்போல கடந்த சில நாள்களாக ஏற்படும் சாலை விபத்துகளினால் தினமும் 2 பேர் இறந்து வருகின்றனர். சாலை விபத்துகளுக்கு அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டுவது,  மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக செல்வது, சாலை விதிமுறைகளை மீறுவது ஆகியவை மட்டும் காரணமாக கொள்ள முடியாது, பெருகி வரும் வாகன நெரிசலுக்கு ஏற்றப்படி சாலை வசதியை மேம்படுத்தாமலும்,  புதிய சாலைகளை அமைக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை பொருத்தவரையில் அதிக விபத்துகள் ஜி.எஸ்.டி. சாலையில் நடைபெறுகிறது. இந்த சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகள் மூலம் 124 பேர் இறந்துள்ளனர், 707 பேர் காயமடைந்துள்ளனர். இந்தாண்டு நவம்பர் வரை 91 பேர் இறந்துள்ளனர், 475 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பூந்தமல்லி சாலையில் இந்தாண்டு 57 பேர் இறந்துள்ளனர், 344 பேர் காயமடைந்துள்ளனர்.நகரின் பிரதான சாலைகளாக இருக்கும் இந்த சாலைகளில் தினமும் பல லட்சகணக்கான வாகனங்கள் கடந்துச் செல்கின்றன. வாகன நெரிசலும்,   சாலை விதிமுறைகளை மீறலும் இங்கு ஏற்படும் விபத்துகளுக்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன.  40 ஆண்டுகளாக முன்பு வடிவமைக்கப்பட்ட இந்த சாலைகள், அதன் பின்னர் பல லட்சம் வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இன்னும் அதே அகலத்துடனே இருப்பதால் வாகன நெரிசலும், விபத்துகளும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

ஒரு காலத்தில் பைபாஸ் சாலைகளிலே விபத்துகள் அதிகமாக ஏற்பட்ட சூழ்நிலை மறைந்து,  நகருக்குள் இருக்கும் சாலைகளிலும் அதிகமாக விபத்து நடைபெறுகின்றன. இந்த விபத்துகளுக்கு சாலையின் அகலம் குறுகி கொண்டே செல்வதும் ஒரு காரணமாக உள்ளது போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரிய கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்து பொருள்கள்,  நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களினால் பாதசாரிகள் சாலையில் செல்ல வேண்டியுள்ளது.  இதன் விளைவாக ஏற்கனவே நெரிசலுடன் வாகனங்கள்,  மேலும்  நெரிசலில் சிக்குகின்றன.இதில் வாகன ஓட்டிகள் சிறிது கவனக்குறைவாக செயல்பட்டாலும்,  விபத்தும்,  இறப்பும் எளிதாக ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாகவே அண்மைகாலமாக போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும் விபத்துகள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 விபத்துகளை குறைப்பதற்கு காவல்துறை மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது கிடையாது.  மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை என சாலை போக்குவரத்து தொடர்புடைய அனைத்து துறைகளிலும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டும் நகருக்குள் ஏற்படும் விபத்தையாவது தடுக்க முடியும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் நகருக்குள் ஏற்படும் விபத்துகளும், அதன் விளைவாக விலை மதிப்பில்லாத உயிர் இழப்புகள் ஏற்படுவதையும் தடுக்க முடியாததாகவே இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com