வானுமாமலை சுட்டுக்கொலை: 30-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம்

ஜூலை 24-ந்தேதி நான்குநேரி வட்டம், மறுகால் குறிச்சி கிராமத்தில் வானுமாமலை எனும் ஏழைக் குடும்பத்து வாலிபரை காவல்துறை ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்ததை கண்டித்து
வானுமாமலை சுட்டுக்கொலை: 30-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம்
Updated on
1 min read

சென்னை, ஜூலை. 28: ஜூலை 24-ந்தேதி நான்குநேரி வட்டம், மறுகால் குறிச்சி கிராமத்தில் வானுமாமலை எனும் ஏழைக் குடும்பத்து வாலிபரை காவல்துறை ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்ததை கண்டித்து ஜூலை 30-ஆம் தேதி நான்குநேரியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஜூலை 24-ந்தேதி நான்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி கிராமத்தில் வானுமாமலை எனும் ஏழைக் குடும்பத்து இளைஞனைக் காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் ஈவு இரக்கமின்றி நெஞ்சுக்கு நேராகத் தம் கைத் துப்பாக்கியால் சுட்டதில், அந்த இடத்திலேயே வானுமாமலை துடிதுடித்து மாண்டார். அந்த இளைஞர் இதுவரை ஊரில் எந்தவொரு அடாவடி நடவடிக்கையிலும் ஈடுபட்ட தில்லை. எவருடனும் சண்டை இட்டதும் இல்லை. பிறர் சண்டை போட்டாலும் தலையிட்டு சமாதானம் செய்து வைக்கும் நல்ல குணம் கொண்டவர் என்றும், இதுவரை அவர்மீது சிறு வழக்கும் கிடையாது என்றும் அந்த ஊரைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

''உன் புருசனை சுட்டுக் கொன்று விடுவேன்'' என்று காவல் துறை ஆய்வாளர் மிரட்டிவிட்டுச் சென்றதால் வானுமாமலையின் மனைவி 23 வயதே ஆன மஞ்சுளா போலீஸ் இன்ஸ்பெக்ட ரின் சுமோ காருக்குப் பின்னாலேயே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே வானுமாமலையை சுட்டுக் கொன்று விட்டார்.

வானுமாமலையினுடைய இளம் மனைவி அபலைப் பெண் மஞ்சுளாவின் கதறல் கல் மனதையும் கரையச் செய்யும். அவருக்கு இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகள். இப்போது கர்ப்பிணி. தன் வாழ்வே நிர்மூலமாகி விட்ட தாகக் கலங்கி அழுகிற அந்த ஏழைப் பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் ஆகியும் வானுமாமலையைக் கொன்ற அதிகாரி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எதையும் தமிழக காவல் துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வில்லை. இத்தகைய சம்பவங்கள் மொத்த காவல்துறையின் நற் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

எனவே தான் வானுமாமலையின் கொலைக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், துன்பத்தில் துடிதுடிக்கும் அந்தக் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் நீதி நிலை நாட்டப்படவும் வருகிற 30-ந்தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நானகுநேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறுகால்குறிச்சி கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பில் சாதி, மத, கட்சி சார்பற்ற முறையில் அமைதியான அறவழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். அதில் நானும் பங்கேற்கிறேன்.

இந்த அறப்போர் நிகழ்ச்சியில் கட்சி கொடிகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், நீதியின் மேல் தாகம் உள்ளவர்கள் அனைவரும் திரண்டு வருமாறும் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com