இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைக் காப்பற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறு தா.பாண்டியன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில், உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது எக்ஸ்ரே பிலிம், புரோமைட் பேப்பர், சினிமா பிலிம் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. 1965-ல் இந்நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியது. இதற்காக மத்திய அரசு முதலீடு செய்த தொகை வெறும் ரூ.18 கோடி தான். ஆனால் மத்திய அரசுக்கு பங்கு தொகையாகவும், வட்டியாகவும் ரூ.700 கோடிக்கு மேற்பட்ட தொகையை இந்நிறுவனம் தந்துள்ளது.
1992-ல் இந்நிறுவனம் நஷ்டமடையத் துவங்கியது. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்ட நேரம் அது. ரூ.163 கோடியில் போடப்பட்ட விரிவாக்கத்திட்டம், ரூபாய் மதிப்புக்குறைப்பால் ரூ .470 கோடியாக உயர்ந்து, நிறுவனத்தின் ஒட்டு மொத்த இயங்குதிறன் பாதிக்கப்பட்டது. மேலும் பிலிம் துறையில் ஏராளமான வெளிநாட்டுக் கம்பெனிகள் அனுமதிக்கப்பட்டு, கடும் போட்டியையும் நிறுவனம் சமாளிக்க நேர்ந்தது. இன்னும் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் எச்.பிஎஃப்-ஐ மறு சீரமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், உள்ள ஒரே ஒரு பிலிம் உற்பத்தி செய்யும் பொதுத்துறைத் தொழிற்சாலை காப்பற்றப்படுவது அவசியமானதாகும். எனவே காலதாமதமின்றி மறுசீரமைப்புத் துவங்க நிதியளித்து, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைக் காப்பற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.