பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதற்காக பாஜகவின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் அவர் வீட்டுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவைக் கோரி வரும் பாஜக தலைவர் நிதின் கட்கரியும் அத்வானிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்து, தனக்கு ஆதரவை அளிக்கக் கோரிக்கை விடுத்தார்.
முன்னர் கட்கரிக்கு ஆதரவு அளித்து வந்த அத்வானி, கட்கரியின் விவேகானந்தர் - தாவூத் இப்ராகிம் ஒப்பீடுப் பேச்சு வெளியானவுடன் தனது முடிவை மாற்றிக் கொண்டாராம். நேற்று முன் தினம் கட்கரி விவகாரம் குறித்து முடிவெடுக்கக் கூடிய பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். எனவே, கட்கரியின் மீது அத்வானி கோபத்தில் உள்ளதாகவும், அவரை நிராகரிப்பதாகவும் செய்திகள் வந்தன. இதை அடுத்து, அத்வானியை சமாதானப் படுத்தவும், அவரது ஆதரவைக் கோரவும் கட்கரி அத்வானியைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரைச் சேர்ந்த கட்கரியின் விவகாரத்தில் நேரடியாக ஈடுபட அந்த அமைப்பு தயங்கியது. இது பாஜகவே தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என்று கூறி ஒதுங்கிக் கொண்டது. இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியை இந்த விவகாரத்தில் ஈடுபட வழிகாட்டியது.
இந்த விவகாரத்தில் பல்வேறு விவரங்களையும் ஆராய்ந்த எஸ்.குருமூர்த்தி, கட்கரி சட்டரீதியாக எந்தத் தவறையும் செய்யவில்லை என்று கூறினார். மேலும், அவருடைய புர்தி சுகர் அன் பவர் நிறுவனம், பொருளாதார முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த சமாதானத் தூதுகளும் சந்திப்புகளும் எந்த அளவுக்கு பாஜகவில் வீசும் புயலைத் தணிக்கும் என்பதை காலம்தான் சொல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.