பெருந்துறை அருகே சாலையில் இறந்து கிடந்த ஈமு கோழியால் பரபரப்பு

 ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஈமு கோழி நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் எழுந்தன. இதையடுத்து இம்மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 35 ஈமு கோழி, நாட்டுக்கோழி உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
Updated on
1 min read

பெருந்துறையில் சாலையில் இறந்து கிடந்த ஈமு கோழியால் புதன்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஈமு கோழி நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் எழுந்தன. இதையடுத்து இம்மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 35 ஈமு கோழி, நாட்டுக்கோழி உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
 தலைமறைவான உரிமையாளர்களில் பெரும்பாலானோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துவிட்டனர். இன்னும் ஒரு சிலரை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பண்ணைகளில் பராமரிப்பு இல்லாமல் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட ஈமு கோழிகளை அரசு சார்பில் கால்நடை துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையே ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்து ஏமாந்த பலரும் தங்கள் சொந்த செலவிலேயே ஈமு கோழிகளை பராமரித்து வருகின்றனர்.
 இதில் சிலர் முறையாக பராமரிக்க போதிய வசதி இல்லாமல் ஈமு கோழிகளை பட்டினிபோடுவதும், யாரும் இல்லாத நேரத்தில் காடு, மற்றும் தோட்டங்களில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர் கதையாக நடக்கிறது.
 சில தினங்களுக்கு முன்பு கோபியில் 10 ஈமுகோழிகளை சாலையில் சிலர் விட்டுச் சென்றனர். இந்நிலையில் யாரோ சிலர் சாலையில் விட்டுச்சென்ற ஈமு கோழி ஒன்று பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதன்கிழமை சுற்றி திரிந்தது. இந்த கோழியை அந்த வழியாக சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்துவிட்டது.
 இதுதொடர்பாக பொதுமக்கள் பெருந்துறை பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இறந்த ஈமு கோழியினை குப்பைகள் அள்ளும் டிராக்டரில் எடுத்து சென்று ஒதுக்குப்புறமான பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
 சில மாதங்களுக்கு முன்பு வரை பண்ணைகளில் ராஜ உபசரிப்புடன் வாழ்ந்த ஈமு கோழிகள் இப்போது யாருடைய பராமரிப்பும் இன்றி வீதியில் சுற்றித்திரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதே என பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com