பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா அரிசி வழங்கல்: உணவு அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
By | Published On : 07th December 2012 06:51 PM | Last Updated : 07th December 2012 06:51 PM | அ+அ அ- |

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான புழுங்கலரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியன போதுமான அளவு இருப்பு வைப்பதை உறுதி செய்வது குறித்த மண்டல மேலாளர்களின் ஆய்வுக்கூட்டம் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் 07.12.2012 அன்று சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் தற்போது 31,211 மெ.டன் பச்சரிசி கிடங்குகளில் கையிருப்பு உள்ளதாகவும், 30,000 மெ.டன் பச்சரிசி இரயில் வேகன்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருப்பதாகவும் மேலும் 1,75,000 மெ.டன் பச்சரிசி பஞ்சாப் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டின் பொது விநியோகத்திட்டம் மற்றும் பொங்கல் பண்டிகை தேவைக்காக இந்திய உணவுக் கழகம் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருள்களை முன்னேற்பாடாக விரைந்து நகர்வு செய்து கிடங்குகளில் தேவையான அளவிற்கு இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென 26.11.2012 அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியதனைத் தொடர்ந்து, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் 34,400 குவிண்டால் துவரம்பருப்பு, 66,080 குவிண்டால் உளுத்தம்பருப்பு மற்றும் 32.67 இலட்சம் செறிவூட்டப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள், கிடங்கில் இருப்பு உள்ளன. மேலும் 31,000 மெ.டன் துவரம்பருப்பு 11,000 மெ.டன் உளுத்தம்பருப்பு ஆகியவை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் பாமாயில் தேவைக்கு, சென்னை துறைமுகத்திற்கு 07.12.2012 அன்று கப்பல் மூலமாக 8,500 மெ.டன்னும், (ஒரு இலட்சம் பாக்கெட்டுகள்) 10.12.2012 அன்று 13,000 மெ.டன்னும் (1.40 இலட்சம் பாக்கெட்டுகள்) வந்து சேரும். இத்துடன் ஜனவரி 2013 மாத ஒதுக்கீட்டிற்கு 8,500 மெ.டன் (ஒரு இலட்சம் பாக்கெட்டுகள்) பாமாயிலை 31.12.2012க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையின் பொழுது வழங்கப்படும் விலையில்லா அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தரமானதாக, விநியோகம் செய்யப்படுவதை அனைத்து மண்டல மேலாளர்களும், தரக்கட்டுப்பாடு அலுவலர்களும், தினசரி பொது விநியோகத் திட்ட கிடங்களில் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 2013 மாதத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் 05.01.2013க்குள் கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பி.எம்.பஷீர் அஹமது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குநர் ராஜேஷ்லக்கானி, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் கூடுதல் இயக்குநர் கே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.