தலித் மாணவர் கொலை வழக்கு: காதலித்த மாணவியின் பாட்டி கைது
By ஜி.சுந்தர்ராஜன் | Published On : 20th December 2012 07:24 PM | Last Updated : 20th December 2012 07:24 PM | அ+அ அ- |

சிதம்பரம் தலித் கல்லூரி மாணவர் கொலை வழக்கில், காதலித்த மாணவியின் பாட்டியை ஒரத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரியில் பயிலும் தலித் மாணவர் கோபாலகிருஷ்ணன் (18). தலித் மாணவர் கோபாலகிருஷ்ணனும், பரதூர் சாவடியைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி துர்காதேவியும் (19) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை மாயகிருஷ்ணன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் மாணவரை காணவில்லை என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கன்னிவாய்க்காலில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது சடலம் டிச.18-ம் தேதி புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் மாணவர் காணவில்லை என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முக்கிய குற்றவாளியான பரதூர் சாவடியைச் சேர்ந்த மாணவி துர்காதேவியின் பாட்டி கனகவள்ளியை (வயது 70) போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இக்கொலை வழக்கில் 4 பேரை தேடி வருவதாக டிஎஸ்பி ஆறுமுகசாமி தெரிவித்தார்.