திருப்பரங்குன்றம் மலை மேல் வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு: மதுரையில் அதிர்ச்சி!
By மது | Published On : 01st November 2012 07:21 PM | Last Updated : 02nd November 2012 02:15 PM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் மலை மேல்(உச்சியில்)சக்தி வாய்ந்த வெடி குண்டுகள்(டைம் பாம்) செய்யப் பயன்படும் மூலப் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் வெடி குண்டுகள் இருப்பதாக வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடைப்படையில் திருமங்கலம் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், சிறப்பு புலனாய்வு மற்றும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் உள்ளிட்டோர் மலை மீது சென்று அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் வாளியை கைப்பற்றினார்கள்.
அதில் நிப்போ 9 வோல்ட் பேட்டரிகள்- 16, சிறிய ரக பென்டார்ச் பேட்டரிகள் 6, சுவிட்ச் 8, டைமர் 4, அலுமினியப் பவுடர் 1 கிலோ, வயர் 2 ரோல், பிவிசி பைப் (5 இன்ச் அகலத்தில்) 3, அதற்கான பைப் மூடிகள் 6, பெட்ரோல் 600 மிலி, சணல் பந்து 2, வெடி பொருள் சுற்றப்பட்ட நிலையில் சணல் பந்து 2, செல் போன்கள் 2 ஆகிய பொருட்கள் இருந்தன.
போலீசார் இவற்றை கைப்பற்றி உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே எஸ்.பி பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி மயில்வாகணன் மற்றும் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி ரவிச்சந்திரன் கூறுகையில்:
மலை உச்சியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மலை மீது சென்று பார்க்கையில் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலிருந்து 250 மீட்டர் மேலே, அங்குள்ள தர்காவுக்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடைப்பட்ட இடத்தில் ஒரு பள்ளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.
மலையில் நிரந்தரப் பாதுகாப்பு தேவை:
கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நவீன முறையில் செல் போன் மூலம் வெடிக்க வைக்கவும், அதன் மீது பெட்ரோல் கலந்து செய்கையில் அதனால் உண்டாகும் பாதிப்பு சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் வகையிலும் இவை தயாராக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் வருகின்ற நவம்பர் 27ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, இங்கே மலை மேல் தீபம் ஏற்றி வந்த விழா, மதப் பிரச்னைகளைக் காரணம் காட்டி பெரும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்து இயக்கங்கள் மலை மேல் தீபம் ஏற்றும் தங்கள் உரிமையை வெளிப்படுத்துகிறோம் என்ற பேரில் தீபம் ஏற்றி வருகின்றன. அப்போதெல்லாம் பெரும் பதற்றமே ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், மலை மேல் தீபம் ஏற்றிக் கொண்டாடும் கார்த்திகை நேரத்தில் இதுபோன்ற வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மலைக்குச் செல்லும் இரண்டு பாதைகளிலும் செல்பவர்களைக் கண்காணிக்க நிரந்தரமாக இந்தப் பகுதியில் போலீசாரை பாதுகாப்புக்காக அமர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
தனிப்படை அமைப்பு:
இதனிடையே இன்று காலை முதல் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு பொருட்கள் கண்டெடுத்தது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளைத் தேடவும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.