அன்னிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவு: காரணங்களை அடுக்கினார் கருணாநிதி
By | Published On : 27th November 2012 12:14 PM | Last Updated : 27th November 2012 04:54 PM | அ+அ அ- |

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க. உறுதியான தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அதற்கான காரணங்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும்கூட;
பாராளுமன்றத்தில் 184வது விதியின்கீழ் இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்த வரை; அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால் - இன்று மத்தியிலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதன் விளைவுகளைச் சிந்திக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, அதன் காரணமாக இமயம் முதல் குமரி வரை பெரும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய கூட்டுச் சதி அம்பலமாகி; “ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்” அரசுக்கு இழப்பு என்றெல்லாம் இல்லாத புகார்களைக் கற்பனையாகக் கூறி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா..ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுக்குத் தான் ஆதாயம் என்ற நிலையை எண்ணிப் பார்க்கும்போது,
மத்தியில் அதே பா.ஜ.க.வினுடைய ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு வருமேயானால்; இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள்; பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து,
அத்தகைய மதவாத அரசோ - ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்கவைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக் கூடாது என்ற நிலைப்பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.
இதையெல்லாம் சிந்திக்கும்போது இந்தப் பிரச்சினையில் மத்திய ஆளுங் கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை.
மாநிலங்களைப் பொறுத்தவரையில், மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப் படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால்
- தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எத்தகைய இடைஞ்சலும் வராது என்ற நம்பிக்கை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள ஒரு ஆட்சி நிலையான ஆட்சியாகவும்; நிலைகுலையாத ஆட்சியாகவும் இருந்தால்தான், பொது அமைதியும், பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலையும், அவற்றின் காரணமாக மக்களின் நல்வாழ்வும் உறுதிப்படும்.
இவற்றையெல்லாம் யோசித்து, இந்தப் பிரச்சினைக்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தர முடிவு செய்கிறது.